பழனி பாபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழனி பாபா
பிறப்புஅகமது அலி
(1950-11-14)14 நவம்பர் 1950
இறப்புசனவரி 28, 1997(1997-01-28) (அகவை 46)
பொள்ளாச்சி, தமிழ்நாடு
தேசியம்தமிழர்
அறியப்படுவதுமுஸ்லீம் செயற்பாட்டாளர், மேடைப் பேச்சாளர், அரசியல்வாதி
சமயம்முஸ்லீம்
பெற்றோர்வி. எம். முஹம்மது அலி, கதீஜாபீவி

பழனி பாபா (Pazhani Baba; 14 நவம்பர் 1950 – 28 சனவரி 1997) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லீம் செயற்பாட்டாளரும் அரசியல்வாதியும் ஆவார்.

இளமைப்பருவம்

பழனி பாபாவின் தந்தை பெயர் குன்னூரை சேர்ந்த காப்பிக்கொட்டை ராவுத்தர் என அழைக்கப்படும் வி. எம். முஹம்மது அலி, தாயார் பெயர் கதீஜாபீவி. இவரது இயற்பெயர் அஹமதுஅலி ஆகும். இவரது சொந்த ஊர் பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ள புதுஆயக்குடி என்னும் கிராமம். இவரது தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர். பாபா குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் கான்வென்ட்டில் கல்வி பயின்றார். பெற்றோர்களின் மறைவுக்குப்பின் புதுஆயக்குடியில் உள்ள முதலாளி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் சின்னத்தம்பி ராவுத்தர் என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில் பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடங்கினார். படிக்கும் காலத்திலேயே தொடங்கிய துணிச்சலான பொதுவாழ்க்கை நடவடிக்கைகளால் குடும்பத்தார்களுக்கு சங்கடம் என்பதால் இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை.

பொதுவாழ்க்கை

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் அறிமுகம் ஆனார்.[1] எம்.ஜி.ஆரை எதிர்த்த இவருக்கு திமுக ஆதரவு அளித்தது. தி.மு.க. அரசுக்கும் இவருக்கும் இடையில் பின்னர் பிளவு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் கேரளா, மும்பை உட்பட இந்தியாவின் பிற பகுதிகளிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமூகத்தின் பிரச்சனைகளை பேசினார். அரசியல் கலந்த சமுதாயப்பேச்சு தமிழகமெங்கும் அவருக்கு ஆதரவாளர்களை பெற்றுத் தந்தது. அவரது நடவடிக்கைகள் அவரை பல வழக்குகளில் சிக்கவைத்தது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), தடா சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களின் பதவிக்காலத்தில் அரசு பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

முஸ்லிம் சமூகத்தில் பரவலாக இருந்த வரதட்சணை, வட்டி போன்ற பழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்தார். சந்தன கூடு, தர்கா வழிபாடு போன்ற பழக்கங்களை கடுமையாக சாடினார் பாபா. இதனால் முஸ்லிம்களின் ஒரு பிரிவினரின் கோபத்தை சம்பாதித்தார். பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்களுடன் நட்புறவு பேணி முஸ்லிம் மற்றும் இந்து சமுதாய ஒருங்கிணைப்புக்கு வழி வகுத்தார். பல மனித உரிமை போராளிகளோடு இணைந்து போராட்ட களங்கள் கண்டார். பேரா. கல்யாணி, டாக்டர் சேப்பன் போன்றவர்களோடும் மக்கள் குடியியல் உரிமைக் குழு (PUCL) போன்ற மனித உரிமை அமைப்புகளோடும் இணைந்து செயல்பட்டார். இஸ்லாமிய மார்க்க விளக்கத்திலும் சிறந்த அறிவு பெற்றிருந்தார் பாபா. பல இஸ்லாமிய கொள்கை விளக்க கூட்டங்களில் பேசினார். சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் தனது இஸ்லாமிய கருத்துகளை எடுத்து வைத்தார்.

இறுதிக்காலம்

தனது இறுதிக்காலம் வரையிலும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், கட்சியின் தலைவர்களுடனும் இணைந்து ஜிஹாத் கமிட்டியை அரசியல் ஈடுபாட்டோடு வழி நடத்திச் சென்றார். ஆரவாரமான மேடை பேச்சுக்களை விட்டு அமைதியான முறையில் ஆக்கபூர்வமான வேலைகளை கவனிக்க திட்டமிட்ட பாபா முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதற்கான வேலைகளை ஆரம்பித்தார். தமிழகம் முழுவதும் ஜமாத்துகளை சந்திக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கி விட்டார். இந்நிலையில் பொள்ளாச்சியில் தனது குடும்ப நண்பர் பசவராஜ் தனபால் என்பவர் வீட்டுக்கு வந்த பாபா அவரிடம் பேசி முடித்து விட்டு வெளியில் நின்ற தனது ஜீப்பில் ஏற முற்படும்போது தான் 1997 சனவரி 28 ஆம் நாள் இரவு பழனிபாபா 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்

  1. வேங்கை.சு.செ.இப்ராஹீம். "பழனிபாபா - வாசிக்கப்படவேண்டிய வரலாறு". பார்க்கப்பட்ட நாள் 15 திசம்பர் 2015.
  2. "PALANI BABA MURDER CASE". பார்க்கப்பட்ட நாள் 15 திசம்பர் 2015.
  3. "Five acquitted in Palani Baba case". 5 ஆகத்து 2005. பார்க்கப்பட்ட நாள் 15 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_பாபா&oldid=3893865" இலிருந்து மீள்விக்கப்பட்டது