திருவுடையான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவுடையான் என்பவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலராகவும், பொதுவுடமைக் கட்சியின் கொள்கை விளக்கப் பாடகராகவும் இருந்தவர். இவர் சில திரைப்படங்களுக்கும் பாடல்கள் பாடியுள்ளார்.

வாழ்க்கை[தொகு]

இவர் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர். இவரின் தந்தை பெயர் பழனிச்சாமி. வறுமை காரணமாக எட்டாம் வகுப்போடு படிப்பை பாதியில் நிறுத்தி தன் தந்தையுடன் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவந்தார். திருவுடையானுக்கு சங்கர ஆவுடையம்மாள் என்ற மனைவியும் இரு மகள்களும், ஒரு மகன் உள்ளனர். விசைத்தறி தொழிலாளியாக இருந்த திருவுடையான் ஓவியக்கலை மீது ஆர்வம் கொண்டதால். ஆரம்பத்தில் விளம்பர தட்டிகளில் எழுதிவந்தார்.

பாடகராக[தொகு]

பொதுவுடமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அதில் இணைந்து பணியாற்றியபோது தொழிலாளர்களைப் பற்றிய கிராமியப் பாடல்களை எழுதி, தானே இசையமைத்து பாடத் தொடங்கினார். திருநெல்வேலி ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 1993 இல் முதன்முதலாக, கலை இரவு மேடையில் பாடத் தொடங்கினார். விரைவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அவரது குரல் ஒலிக்கத் தொடங்கியது. பெரும்பாலான பொதுவுடமைக் கட்சி மாநாட்டு, கட்சி நிகழ்ச்சிகளில் இவரது பாடலுடன் விழா தொடங்கும். இவ்வாறு சமூகம் மீதும், பொதுவுடமை இயக்கம் மீதும் ஆர்வம் கொண்டு பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். காசி ஆனந்தன், ஏகாதசி, நவகவி, ரமணன் போன்றவர்கள் எழுதிய பாடல்களை முழுமையாக உள்வாங்கி, உணர்வுடன் பாடுவார்.[1] தானே மிருதங்கம், தபேலா போன்ற இசைக்கருவிகளை இசைத்து கிராமியப் பாடல்களை பாடிவந்தார்.

திரைப்படங்களில்[தொகு]

இவர் திரைப்படங்களிலும் பாடியுள்ளார். விருமாண்டி, மத யானைக் கூட்டம், மயில், களவாடிய பொழுதுகள் போன்ற திரைப்படங்களில் பாடியுள்ளார்.

இறப்பு[தொகு]

2016 ஆகத்து 28 இரவு சேலத்தில் இருந்து மகிழுந்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த நேர்ச்சியின் காரணமாக உயிரிழந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. இரா. நாறும்பூ நாதன் (30 ஆகத்து 2016). "மக்கள் பாடகன்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2016.
  2. "மதுரை அருகே லாரி - கார் மோதல் மக்கள் பாடகர் திருவுடையான் பலி". செய்தி. தி இந்து. 30 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 30 ஆகத்து 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவுடையான்&oldid=3577514" இலிருந்து மீள்விக்கப்பட்டது