ஜேம்ஸ் லவ்லாக்
இயேம்சு எப்ரைம் லவ்லாக்கு (James Ephraim Lovelock) இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியாவார். சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் எதிர்காலவாதியாகவும் இவர் செயல்பட்டார். 1919 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதியன்று பிறந்தார். 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதி வரை வாழ்ந்தார்.[1] உயிரினங்கள் பூமியில் உள்ள தங்கள் கனிம சுற்றுச்சூழலுடன் தொடர்புகொள்வதை மையமாகக் கொண்ட கையா கருதுகோளை முன்மொழிந்து மிகவும் பிரபலமானார். இக்கருதுகோள் பூமி ஒரு சுய-ஒழுங்குபடுத்தும் அமைப்பாக செயல்படுகிறது என்று கூறுகிறது.[2]
அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் பிற கோள்களை தேடும் ஆராய்ச்சிக்கான கருவிகளை இவர் வடிவமைத்து அளித்தார். அச்சமயம் இவர் பூமியின் வளி மண்டலத்தின் தன்மை அதிலிருக்கும் உயிர் கோளத்தால் மாறுபட்டுள்ளதை கவனித்தார். இதன் அடிப்படையில் வளிமண்டலம் உயிர்கோளத்துடன் ஒருங்கிணைந்து ஒரு முழுமையான அமைப்பாக இருப்பதை இவர் அறிந்தார். இதன் அடிப்படையில் இவர் 1960களில் பூமி ஒரு அதி உயிரி எனும் கருதுகோளை முன்வைத்தார். இதற்கு பண்டைய கிரேக்க தொன்மத்தின் பூமி தெய்வமாகிய கையா எனும் பெயரை அளித்தார். இக்கருதுகோள் சர்ச்சையையும் விவாதத்தையும் அறிவியல் வட்டாரங்களில் உருவாக்கியது. ஆனால் பரப்புரை தளத்தில் சூழலியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு முக்கிய படிமமாக மாறியது. மானுட செயல்பாடுகளை பூமியின் சூழலியல் வரலாறு சார்ந்து அறிந்து கொள்ள ஒரு வலிமையான சட்டகமாக கையா கருதுகோள் திகழ்கிறது. இக்கருதுகோளை லவ்லாக்குடன் இணைந்து உருவாக்கிய மற்றொரு ஆராய்ச்சியாளர் லின் மர்குலிஸ். இவர் ஒரு நுண்ணுயிரியியலாளர். லவ்லாக்கின் கருதுகோள் பரிணாம அறிவியலையும் சூழலியலையும் இணைக்கிறது.
எழுதியுள்ள நூல்கள்
[தொகு]- 1979 Gaia: A New Look at Life on Earth : கையா பூமியின் உயிர்கள் குறித்ததோர் புதிய பார்வை
- 1983 Great Extinction. பெரும் உயிரழிவு (மைக்கேல் ஆலபையுடன் இணைந்து எழுதியது)
- 1988 Ages of Gaia.கையாவின் காலங்கள்
- 1991 Gaia: The Practical Science of Planetary Medicine. கையா: உலகளாவிய மருந்துக்கான செயல்முறை அறிவியல்
- 1991: Scientists on Gaia. கையா குறித்து அறிவியலாளர்கள்
- 2000: Homage to Gaia: The Life of an Independent Scientist : கையாவிற்கோர் வணக்கம்: ஒரு சுதந்திரமான அறிவியலாளனின் வாழ்க்கை (சுயசரிதை)
- 2006: Gaia: Medicine for an Ailing Planet. நோயுற்ற உலகுக்கோர் மருந்து: கையா
- 2006: The Revenge of Gaia: Why the Earth Is Fighting Back – and How We Can Still Save Humanity. பழிவாங்கும் கையா: திருப்பியடிக்கும் பூமியும் இப்போதும் நம்மால் மானுடத்தை காப்பாற்ற வழிகளும்
- 2009: The Vanishing Face of Gaia: A Final Warning: Enjoy It While You Can. கையாவின் மறையும் முகம்:இறுதி எச்சரிக்கை: இருக்கும்வரை சந்தோஷம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.theguardian.com/environment/2022/jul/27/james-lovelock-obituary
- ↑ Ball, P. (2014). "James Lovelock reflects on Gaia's legacy". Nature. doi:10.1038/nature.2014.15017.