செம்பனை எண்ணெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர் செம்பனை அல்லது எண்ணெய்ப் பனைத் தோப்பு

செம்பனை எண்ணெய் எனப்படுவது செம்பனை அல்லது எண்ணெய்ப் பனை எனப்படும் ஒரு விதப் பனை மரத்தின் பழங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இது தென்னையைப் போன்று ஒரு மரம். எண்ணெய்ப் பனை என்கின்றனர். மேலும் இம்மரம் பாமாயில் பனை, செம்பனை எனவும் அழைக்கப்படுகிறது.

இரண்டு பனை இனங்களில் இருந்து பாம் ஆயில் கிடைக்கிறது. ஆப்பிரிக்காவின் பாமாயில் என்பது எலியிஸ் குயினென்சிஸ் (Elaeis quineensis) என்கிற இனத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இதை ஆப்பிரிக்கன் எண்ணெய்ப் பனை என்கின்றனர். மற்றொன்று அமெரிக்கன் பாமாயில்.

இது எலியிஸ் ஒலிபெரா (Elaesis oleifera) என்கிற இனத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. இது அமெரிக்கன் எண்ணெய்ப் பனை ஆகும். இது தவிர மாரிபா பனை (Attalea maripa) என்கிற மரத்திலிருந்தும் பாமாயில் எடுக்கப்படுகிறது . இந்த எண்ணெய் சிவந்த நிறத்தில் இருக்கும்.

இப்பனை மரங்கள் இந்தோனேசியா, மலேசியா, நைசீரியா முதலிய நாடுகளில் பெருமளவு பயிர்செய்யப் படுகிறது. இப்பனைப் பயிர்செய்கையினால் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதாகக் கூறப்பட்டாலும் இவை பயிரிடப்படும் நாடுகளில் காடழிப்புக்கு இது ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

தாயகம்[தொகு]

எலியிஸ் குயினென்சிஸ் என்கிற பனையின் தாயகம் மேற்கு ஆப்பிரிக்காவாகும். இப்பனை தற்போது இந்தோனேசியா, மலேசியா, கென்யா, நைஜீரியா, தாய்லாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. எலியிஸ் ஒலிபெரா என்கிற இனத்தின் தாயகம் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவாகும். மேலும் இது ஹோண்டுராஸ் முதல் வடகத்திய பிரேசில் வரை பரவியுள்ளது. இந்த இனங்கள் அரிகேசி (Arecaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த இரண்டு இனங்களையும் இணைத்து புதிய கலப்பினங்களையும் உருவாக்கியுள்ளனர்.

வரலாறு[தொகு]

எலியிஸ் (Elaeis) என்கிற கிரேக்கச் சொல்லுக்கு எண்ணெய் அல்லது நெய் எனப் பொருள். இது மேற்கு மற்றும் தென்மேற்கு ஆப்பிரிக்காவில் இயற்கையாக வளரக் கூடியது. சோயா பீன்ஸ் எண்ணெய்க்கு அடுத்தப்படியாக ஆப்பிரிக்கன் பனை எண்ணெயே உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே பாமாயில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எகிப்து கல்லறையில் பாமாயில் இருப்பதைத் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே பாமாயிலை மனிதன் பயன்படுத்தினான் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது. மேலும் வணிகர்கள் மூலமாக எண்ணெய்ப் பனையை எகிப்திற்கு கொண்டு செல்லப்பட்டது எனத் தெரிகிறது.


மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் இது சமையல் எண்ணெயாகப் பயன்படுகிறது. ஐரோப்பிய வியாபாரிகள் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து பாமாயிலை விலைக்கு வாங்கி ஐரோப்பாவில் விற்பனை செய்தனர். ஐரோப்பாவிலும் சமையலுக்கு இந்த எண்ணெய்யை உபயோகிக்கின்றனர். 1700 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் பாமாயிலை மருந்தாகவும், க்ரீமாகவும் பயன்படுத்தினர்.

இது சமையல் எண்ணெயின் பற்றாக்குறையைத் தீர்த்து வைக்கிறது. விலைக் குறைவாகவும், எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இந்த எண்ணெய் உள்ளது. மேற்கு ஆப்பிரிக்கா, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளின் எண்ணெய் பற்றாக்குறைக்கு தீர்வாக பாமாயில் இருக்கிறது. ஏழை மக்களே பாமாயிலை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

வளரியல்பு[தொகு]

ஆப்பிரிக்க எண்ணெய்ப் பனை மரமானது 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. ஓலைகள் எனப்படும் இலைகள் 3 – 6 மீட்டர் நீளம் இருக்கும். இளம் மரம் வருடத்திற்கு 18 – 30 இலைகளை உருவாக்கும். ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்குப் பிறகு பழுத்து உதிர்ந்து விடும். இது பசுமை மாறா மரம். கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களில் வளரும்.

மரம் நட்ட நான்கு ஆண்டுகளில் பூக்கத் தொடங்குகிறது. ஒரே மரத்தில் ஆண், பெண் பூக்கள் தனித்தனி பாளையில் காணப்படும். ஒரு சில மரங்களில் மட்டும் ஆண், பெண் பூக்கள் ஒரே பாளையில் தோன்றுவதும் உண்டு. ஒரு பாளையில் அல்லது மஞ்சரியில் பல நூறு பூக்கள் மலரும். காய்கள் 5 – 6 மாதத்தில் முதிர்ச்சி அடையும். காய்கள் நெருக்கமாக ஒரு கொத்தாகக் காணப்படும். ஒரு குலையில் 150 முதல் 200 வரை காய்கள் இருக்கும். பழங்கள் சிவப்பு நிறம் கொண்டவை. ஆகவேதான் இதை செம்பனை என்கின்றனர்.

இது தென்னை மரத்தைப் போன்று வருடம் முழுவதும் பலன் தரும். சுமார் 80 – 100 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக வளர்ந்து பலன் தரும். முதல் 25 ஆண்டுகள் அதிக கனிகளைக் கொடுக்கும். கனிகள் உருண்டையாக இருக்கும். கனியினுள் கருநிறத்தில் கொட்டைகள் உள்ளன.

எண்ணெய்[தொகு]

இந்த பனை மரத்தின் கனியில் இருந்து இரண்டு விதமான எண்ணெய் கிடைக்கின்றது . கனியின் சதைப் பகுதியைத் தனியாக பிரித்தெடுத்து அதிலிருந்து கச்சா பாமாயில் எடுக்கின்றனர். இது நிலையான வெண்ணெய் போன்று செம்மஞ்சள் நிறம் உடையது. இது கொழுப்பு எண்ணெய் ஆகும். ஒரு விதமான இனிய மணம் வீசும். இதை சுத்தப்படுத்தி, பக்குவப்படுத்தியப் பின் கிடைப்பதுதான் பாமாயில். இது சமையல் எண்ணெய் மற்றும் தாவர எண்ணெய் ஆகும். இதே எண்ணெயை மீண்டும் சுத்திகரிக்கும் (Refining) போது சிகப்பு நிறம் போய் விடுகிறது. அப்போது அது வெள்ளை நிற பாமாயிலாகக் (White Palmoil) கிடைக்கிறது.

மற்றொரு எண்ணெய் இதன் கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பிலிருந்து எடுக்கப்படுகிறது. பருப்பிலிருந்து எடுக்கும் எண்ணெய் மஞ்சளாகத் தேங்காய் எண்ணெய் போல இருக்கும். இது பருப்பு எண்ணெய் (Kernel) என்று அழைக்கப்படுகிறது. பருப்பில் 18 சதவீதம் எண்ணெய்ச் சத்து உள்ளது.

உற்பத்தி[தொகு]

எண்ணெய்ப் பனையானது ஒரு ஹெக்டேரில் இருந்து வருடத்திற்கு 4 முதல் 6 டன்கள் வரை எண்ணெய் கொடுக்கின்றது . மற்ற எண்ணெய் தரும் வித்துகளை விட பல மடங்கு எண்ணெய் தருகிறது. ஒரு ஹெக்டேரில் பயிரிடப்படும் நிலக்கடலையில் இருந்து 375 கிலோ எண்ணெய் கிடைக்கிறது. கடுகிலிருந்து 560 கிலோவும், சூரிய காந்தியில் இருந்து 545 கிலோவும், எள்ளில் இருந்து 100 கிலோவும், தேங்காயில் இருந்து 970 கிலோ என்கிற அளவுகளில் எண்ணெய் கிடைக்கிறது. ஆனால் எண்ணெய்ப் பனையிலிருந்து 4000 முதல் 6000 கிலோ எண்ணெய் கிடைக்கிறது.

2016 ஆம் ஆண்டில் பாமாயில் உற்பத்தி என்பது உலகளவில் 62.6 மில்லியன் டன்களாகும். இந்தோனேசியாவே உலகளவில் அதிக எண்ணெயை உற்பத்தி செய்கிறது. அதற்கடுத்த இடத்தில் மலேசியா, தாய்லாந்து, கொலம்பியா உள்ளன. 2015 ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி ஒரு மனிதன் ஆண்டிற்கு 7.7 கிலோ பாமாயிலைப் பயன்படுத்துகிறான் எனத் தெரிய வருகிறது.

பயன்கள்[தொகு]

பாமாயிலில் பால்மிட்டிக் அமிலம் (Palmitic acid) உள்ளது. ஆகவேதான் இதற்குப் பாமாயில் எனப் பெயர் வந்தது. இந்த எண்ணெயில் அதிக கரோட்டின், அல்பா கரோட்டின், பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் ஆகியவை உள்ளன. ஆகவேதான் எண்ணெய் அடர்ந்த சிகப்பு நிறத்தில் உள்ளது. இதில் கொழுப்பு அமிலங்கள், கிளைசரால், நிறைவுறாக் கொழுப்பு போன்றவை உள்ளன. இதில் அதிகக் கொழுப்புச் சத்து இருக்கிறது. 100 கிராம் எண்ணெய்யில் 884 கிலோ கலோரி அடங்கியுள்ளது.

இதில் 10 சதவீதம் லினோலியிக் அமிலம் இருப்பதால் கரோட்டின் மிக்கது. இது வைட்டமின் A குறைபாட்டினால் ஏற்படும் நோயைத் தடுக்கிறது. சோப்பு, சாக்கலேட்டு, மருந்து, வாசனைப் பொருள் செய்ய உதவுகிறது. ஐஸ் கிரீம், செயற்கை வெண்ணெய் கொழுப்பு, சமையல் எண்ணெய், இனிப்பு வகைகள் தயாரிக்க பயன்படுகிறது. இதன் புண்ணாக்கு மாட்டுத் தீவனமாகிறது. பாமாயிலில் இருந்து மெத்தில் மற்றும் பயோடீசலும் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

1.கலைக்களஞ்சியம் தொகுதி இரண்டு.

2.அறிவியல் களஞ்சியம்,தொகுதி இரண்டு,பக்கம் 140 முதல் 142 வரை.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பனை_எண்ணெய்&oldid=3666025" இலிருந்து மீள்விக்கப்பட்டது