ஹயாம் வுரூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹயாம் வுரூக்
மயபாகித் பேரரசர்
ஆட்சிமயபாகித் பேரரசு: 1350–1389
முன்னிருந்தவர்திரிபுவன விஜயதுங்கதேவி
பின்வந்தவர்விக்கிரமவர்தனன்
அரசிபதுகா சாரி
(Paduka Sori)
துணைவர்இற்பரத்தை (வீரபூமியின் தாய்)
இராயசநகரன் செயவிசுணு வர்த்தனன்
அரச குலம்இராயச வம்சம்
தந்தைசக்கரதாரன்
தாய்திரிபுவன விஜயதுங்கதேவி
பிறப்பு1334
மயபாகித் பேரரசு
இறப்பு1389 (அகவை 54–55)
சமயம்சைவம்
இராயச வம்சத்தின் வம்ச வரிப்படம், சிங்கசாரி மற்றும் மயபாகித் பேரரசுகளின் மன்னர்கள்.

ஹயாம் வுரூக் அல்லது ஆயாம் உரூக் (ஆங்கிலம்: Hayam Wuruk அல்லது Pa-ta-na-pa-na-wu; சமசுகிருதம்: हयम् वुरुक्; காவி மொழி:ꦲꦪꦩ꧀ꦮꦸꦫꦸꦏ꧀); (பிறப்பு: 1334; மறைவு: 1389); என்பவர் மயபாகித்தை ஆட்சி செய்த ஒரு சாவக இந்து மன்னார் ஆவார். இவரின் அசல் பெயர் இராயசநகரன் (Rajasanagara) அல்லது பதாரா பிரபு (Bhatara Prabhu).

மயபாகித்தின் நான்காவது பேரரசரான இவர், தன் பிரதமர் கஜ மதன் என்பவரின் உதவியுடன், மயபாகித் பேரரசின் உன்னதமான ஒரு காலக் கட்டத்தில் ஆட்சி புரிந்தார். தன் தாயார் திரிபுவன விஜயதுங்கதேவிக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஹயாம் வுரூக்கிற்குப் பின், அவரின் மருமகன் விக்கிரமவர்தனன் ஆட்சி புரிந்தார்.[1]:234

வாழ்க்கை[தொகு]

இம்பு பிரபஞ்சன் (Mpu Prapanca) எனும் ஜாவானியக் கவிஞர் எழுதிய நகரகிரேதாகமம் (Nagarakretagama) எனும் சாவக நூலின் படி, ஹயாம் வுரூக், கெலுட் எரிமலை (Mount Kelud) குமுற ஆரம்பித்த கி.பி. 1334-ஆம் ஆண்டில் பிறந்தார். சாவக மன்னனாக, இறைவன் பதாரா குருநாதன் (ஆங்கிலம்: (Batara Gurunata); காவி மொழி: Shiva Mahadewa) அவதரித்ததன் தெய்விக முன்னறிவிப்பே இந்த எரிமலை வெடிப்பு என்கிறது நகரகிரேதாகமம்.

அதே ஆண்டிலேயே கஜ மதன் (Gajah Mada) , தன் புகழ்பெற்ற பலாப சபதத்தை (Sumpah Palapa) சூளுரைத்ததாகவும் சொல்லப் படுகின்றது. மயபாகித் பேரரசி திரிபுவன விஜயதுங்கதேவிக்கும் (Tribhuwana Tunggadewi) கர்த்தவர்த்தனன் (Sri Kertawardhana) எனும் சிங்கசாரிப் பேரரசு (Singhasari) இளவரசனுக்கும் பிறந்தவர் ஹயாம் வுரூக்.

பரராத்தன்[தொகு]

ஹயாம் வுரூக் என்ற பெயர் சாவக மொழியில் "பேரறிவு நிறைந்த சேவல்" எனப் பொருள்படும். நகரகிரேதாகமமும் பரராத்தன் (Pararaton) எனும் இன்னொரு சாவக வரலாற்று நூலும், ஹயாம் வுரூக்கின் கட்டழகையும், வாள்வீச்சு, வில்வித்தை என்பவற்றில் அவர் காட்டிய பெருவீரத்தையும், அரசுசூழ்கை, கலைகள், நுண்மதி என்பவற்றில் நிகரற்று விளங்கியதையும் கூறி மகிழ்கின்றன.

"தோபெங்" எனும் சாவக மரபுவழி நடனத்தை ஆடக் கூடிய தலைசிறந்த ஆடல் கலைஞனாகவும் அவர் திகழ்ந்ததாக அவை மேலும் சொல்கின்றன.

ஆட்சி[தொகு]

1350-இல், மயபாகித் பேரரசை அமைத்த ராடன் விஜயனின் (Raden Wijaya) அரசியும், ஹயாம் வுரூக்கின் பாட்டியும் ஆன இராசமாதா காயத்திரி (Gayatri Rajapatni) பிக்குணியாகவே, தன் பௌத்த மடத்தில் மரித்துப் போனார். அவரின் கட்டளைகளுக்கு ஏற்றவாறு நாட்டை ஆண்டுவந்த விஜயதுங்கதேவி (Tribhuwana Wijayatunggadewi), அரச பதவியை விட்டு விலகவேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது.

எனவே, விஜயதுங்கதேவியின் மகன் ஹயாம் வுரூக், அவரின் பதினாறு வயதிலேயே ஆட்சிப் பீடத்தில் அமர்ந்ததுடன், தானைத் தலைவன் கயா மடாவின் அறிவுரைகளின் கீழ் இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களில் பெரும்பாகத்துக்கு மயபாகித் பேரரசு விரியும் வண்ணம் நல்லாட்சி புரியலானார்.

புபாத் போர்[தொகு]

அரசியல் பலத்தைப் பெருக்குவதற்காக, சுந்தா (Sunda Kingdom) நாட்டு இளவரசியான "தியா பிதாலோக சித்திரரேஸ்மி"யை (Dyah Pitaloka Citraresmi), ஹயாம் வுரூக் மணப்பதாக இருந்தது. எனினும், கயா மடா சுந்தா நாடு, மயபாகித்தின் கீழ் அடங்கி இருக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார். அதனால் திருமணம் நின்றுபோனது.

அத்துடன், "புபாத் போர்" (Bubat incident) என்று அழைக்கப்படும் வரலாற்றுத் துயர்மிகு நிகழ்வில், திருமணத்துக்கு வந்திருந்த சுந்தா அரச குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர், மயபாகித் மண்ணில் கொல்லப்பட்டனர். ஹயாம் வுரூக் மீது காதல் கொண்டிருந்த இளவரசி பிதாலோகாவும் மனம் உடைந்து போய், தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.

இதனால், சுண்டா மற்றும் மயபாகித் நாடுகளுக்கு இடையிலான உறவு முற்றாக சீரழிந்து போனது. இந்த ஈனச் செயலுக்காக, மயபாகித் அரசவை ஆன்றோரால், கயா மடா கடுமையாக விமர்சிக்கப் பட்டார்.

குசுமாவர்த்தனி[தொகு]

பல ஆண்டுகளுக்குப் பின், தன்னிடைய மைத்துனியான படுகா சோரியை, ஹயாம் வுரூக் மணந்து கொண்டார். அரசி சோரிக்குப் பிறந்த "குசுமாவர்த்தனி" எனும் மகளொருத்தி, ஹயாம் வுரூக்கின் வாரிசாக விளங்கினாள். அவள் பிற்காலத்தில் விக்கிரமவர்தனன் எனும் உறவினன் ஒருவனை மணந்து கொண்டாள்.

எனினும் ஹயாம் வுரூக்கின் இற்பரத்தை ஒருத்திக்கு "வீரபூமி" எனும் மகன் ஒருவன் இருந்தான். ஹயாம் வுரூக் மறைந்த 1389-ஆம் ஆண்டிற்குப் பின், வீரபூமிக்கும் விக்கிரமவர்த்தனுக்கும், பலத்த அரியாசனப் போட்டி இடம்பெற்றது. பரெக்ரெக் எனுமிடத்தில் இடம்பெற்ற போரில் வீரபூமி தோற்றதைத் தொடர்ந்து, விக்கிரமவர்தனன் அரசுக் கட்டிலேறினான்.

பொ.பி 1365-இல் இம்பு பிரபஞ்சன் எனும் சாவகக் கவிஞர், ஹயாம் வுரூக்கைக் கௌரவிக்கும் வகையில், அவன் வம்ச வரலாற்றைப் பாடும் "நகரகிரேதாகமம்" எனும் சாவக வரலாற்று நூலை இயற்றினார்.[2] கிழக்கு சாவகத்தில் ஹயாம் வுரூக் மேற்கொண்ட சுற்றுலாக்களையும், ஊர்கள், கோயில்கள், நாடுகள் என்று அவன் மேற்கொண்ட இரம்மியமான பயணங்கள் பற்றியும் அந்த நூல் மேலும் விவரிக்கின்றது. 1370-இல் இருந்து 1381 வரை ஹயாம் வுரூக் சீன அரசுடன் வாணிப உறவைப் பேணியதை அறிய முடிகின்றது.[1]:240

மேலும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Georges Coedès (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780824803681. http://books.google.com.my/books?id=iDyJBFTdiwoC. 
  2. Malkiel-Jirmounsky, Myron (1939). "The Study of The Artistic Antiquities of Dutch India". Harvard Journal of Asiatic Studies (Harvard-Yenching Institute) Vol 4 (Issue 1): pp.59–68. doi:10.2307/2717905. 

உசாத்துணைகள்[தொகு]

முன்னர்
திரிபுவன விஜயதுங்கதேவி
மயபாகித் பேரரசு
1350–1389
பின்னர்
விக்கிரமவர்தனன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹயாம்_வுரூக்&oldid=3862606" இலிருந்து மீள்விக்கப்பட்டது