வாசிலி பாவ்லோவிச் எங்கல்கார்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாசிலி பாவ்லோவிச் எங்கல்கார்த் (Vasily Pavlovich Engelhardt, உருசியம்: Василий Павлович Энгельгардт, சூலை 17, 1828 - மே 6, 1915) ஓர் உருசிய வானியலாளரும் பொது ஆளுமையும் ஆவார்.

இளம்பருவம்e[தொகு]

வசீலி எங்கல்கார்த் உருசியப் பேரரசு, கிரத்னோ வட்டாரம், குசுதோவிச்சி நகரில் (இப்போது பெலாருசு) செல்வமும் செல்வாக்கும் மிக்க எங்கல்கார்த் குடும்ப உறுப்பினர் ஆவார். இவர் 1847 இல் புனித பீட்டர்சுபர்கு சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றார். பின்னர் சட்டப் பேரவையில் முதலாம், ஐந்தாம் துறைகளில் பணிபுரிந்தார். இவர் 1853 இல் அரசு வேலையைத் துறந்து வானியல் கற்கலானார்.

இவரது பல பண்பாட்டு ஆளுமைகளுடனான (கிளின்கா, சுதாசோவ், பிரான்சு இலிசுசித் ஆகியோருடனான) மடல்தொடர்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.

வானியல்[தொகு]

இவர் 1875 இல் திரெசுதெனில் வாழலானார். அங்கு இவர் தன் சொந்த செலவில் ஒரு வான்காணகத்தை நிறுவி, யாருடைய உதவியுமின்றி 1897 வரை ஆய்வில் ஈடுபட்டார். இவர் வால்வெள்ளிகள், குறுங்கோள்கள், ஒண்முகில்கள், விண்மீன் கொத்துகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

இவர் 1870இல் 50 வால்வெள்ளிகளையும் 70 குறுங்கோள்களையும் கண்டு முடித்து 1883 இல் விண்மீன் கொத்துகளின் ஆய்வைத் தொடங்கினார். கிட்டதட்ட 400 ஒண்முகில்கள் அடங்கிய அட்டவணையை முடித்தார். 1886 இல் விண்மீன்களை நோக்கத் தொடங்கி, ஜேம்சு பிராட்லே அட்டவணையில் உள்ள 829 விண்மீன்களுக்கு இணைவிண்மீன்கள் அமைகின்றனவா என ஆய்வு செய்தார்.

பிந்தைய 1890 களில் இவரது உடல்நலம் குன்றியதால், தன் வானியல் நோக்கீட்டை நிறுத்திவிட்டு தனது கருவிகள் அனைத்தையும் கசான் பல்கலைக்கழகத்துக்கு வழங்கிவிட்டார். அங்கே இவரது நண்பரும் ஒருசாலை வானியலாளரும் ஆகிய திமித்ரி துப்யாகோ வானியல் துறையின் காப்பாளராக இருந்தார். பல்கலைக்கழகம் இக்கருவிகளை வைக்க, ஒரு புதிய வான்காணகத்தைக் கட்டியது. இது 1901 இல் திறக்கப்பட்டது. இது 1903 இல் எங்கல்கார்த் பெயரிடப்பட்டது. இப்பெயர் 1931 வரை நிலவியது. தன் வாழ்நாள் முடியும் வரை எங்கல்கார்த் புதிய வான்காணகத்தைக் கட்டுவதிலும் ஒருங்கமைப்பதிலும் ஈடுபட்டதோடு, தன் செல்வம் முழுவதும் கசான் பல்கலைக்கழகத்துக்கே வான்காணக வளர்ச்சிக்காகவும் அதைக் கட்டிக்காக்கவும் வழங்கினார்.

இவருக்கு 1889 இல் கசான் பல்கலைக்கழகம் தகைமை முனைவர் பட்டம் வழங்கியது. இவர் 1890 இல் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் இணை உறுப்பினர் ஆனார்.

பண்பாட்டுச் செயல்பாடுகள்[தொகு]

இவர் தன் வாழ்நாள் முழுவதும் உருசிய வரலாற்று ஆர்வம்கொண்டு வரலாற்றுத் தகவல்களைத் திரட்டி உருசிய வரலாற்றுத் திரட்டுக்குக் கொடையாக வழங்கினார்.

இவர் பாடகர் மீகைல் கிளின்காவின் நெருங்கிய நண்பர் ஆவார். கிளின்கா பெர்லினில் 1857 இல் இறந்ததும், அவரது எச்சங்களை திக்வினில் உள்ள அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தார். இவர் கிளின்காவின் கையெழுத்துப் படிகளையும் கிளின்கா பொது நூலகம் நிறுவப்பட்ட புனித பீட்டர்சுபர்குக்கு அனுப்பினார். அது கிளின்காவின் இசைநாடகங்களையும் இசைப்பணிகளையும் வெளியிட்டது. பின்னர், இவர் விளாதிமிர் சுதாசோவின் (சட்டக் கல்லூrரியில் வகுப்புத் தோழர்) வேண்டுகோளுக்கு இணங்கி கிளின்கா, அலெக்சாந்தர் தர்கோமிழ்சுகி ஆகிய பாடகர்களின் மலரும் நினைவுகளை வெளியிட்டார்.

பிந்தைய 1890 களில், இவர் வானியல் ஆய்வை விட்டுவிலகி, சுவரோவின் இத்தாலிய, சுவிட்சர்லாந்துத் தேட்டங்களைப் (1799–1800) பற்றிய தகவல்களை அதாவது, சுவிட்சர்லாந்து பரப்புரை பற்றிய தகவல்களைத் திரட்டலானார். இந்தத் தகவல்திரட்டை இவர் புனித பீட்டர்சுபர்கில் இருந்த சுவரோவின் அருங்காட்சியகத்துக்கு உருசியப் பிரெஞ்சு முற்றுகையின் நூறாம் ஆண்டு நினைவாக அளித்தார். இவரது இந்தப் பங்களிப்பு சுவிட்சர்லாந்தில் உருசியா நிகழ்த்திய பரப்புரையின் நீங்காத நினைவுக்குப் பெருந்தொண்டாற்றியது.

இவரது பல பண்பாட்டு ஆளுமைகளுடனான (கிளின்கா, சுதாசோவ், பிரான்சு இலிசுசித் ஆகியோருடனான) மடல்தொடர்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.

தகைமைப் பெயர்[தொகு]

பன்னாட்டு வானியல் ஒன்றியப் பதினான்காம் பேராயத்தால் இவர் நினைவாக நிலாவின் குழிப்பள்ளம் ஒன்று எங்கல்கார்த் குழிப்பள்ளம் எனப் பெயர் இடப்பட்டுள்ளது.

வெளியீடுகள்[தொகு]

  • Observations astronomiques, faites par V. d' Engelhardt a son Observatoire a Dresde (Dresden, 1886-1895)
  • Memories of Mikhail Glinka

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Vasily Engelhardt - on his 175th birthday". Smolensk Regional Universal Library. 17 July 2003. Archived from the original on 7 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 8-10-2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  • "Engelhardt, Vasily Pavlovich". Russian Academy of Sciences. 2-12-2002. பார்க்கப்பட்ட நாள் 8-10-2010. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  • "ESBE / Engelhardt, Vasily Pavlovich". Brockhaus Konversations Lexikon, via Russian WikiSource. 1890–1907. பார்க்கப்பட்ட நாள் 3 April 2014.
  •  "Engelhardt, Vassili Pavlovich, Baron". Encyclopedia Americana. 1920.