யுனெஸ்கோ கூரியர் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2017-07/09 (Esperanto)

யுனெஸ்கோ கூரியர் மாத இதழ் ஐக்கிய நாடுகள் அவையின், சகோதர நிறுவனமான யுனெஸ்கோவின் சார்பில் உலகின் பல முன்னணி மொழிகள் பலவற்றில் வெளியிடப்படும் இதழாகும். இப்பன்னாட்டு மாத இதழ் 1967 ஆம் ஆண்டு சூலை மாதம் தமிழில் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து 35 ஆண்டுகள் வெளிவந்தது 2001 ஆண்டு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி நிறுத்தப்பட்டது.

இதழ் துவக்கம்[தொகு]

1966இல் பாரிஸ் நகரில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற யுனெஸ்கோ உதவியது. அப்போது யுனெஸ்கோவின் தலைமை இயக்குநராக இருந்தவர் மால்கம் ஆதிசேசையா. அந்த மாநாட்டைக் கண்டு, 53 நாடுகளில் வாழும் தமிழர்களுக்குக் கூரியரின் சேவை தேவை என்பதை உணர்ந்தார். கூரியர் தமிழிதழ் துவக்கப்பட வேண்டும் என்று உறுதி கொண்டார். அதே ஆண்டில் மால்கம் இந்தியா வந்தார். அவருக்கு நடைமுறை சிக்கல் ஒன்று ஏற்பட்டது. யுனெஸ்கோவில் உறுப்பினராக இருப்பது இந்தியாதான். இந்தியாவில் ஒரு மாநிலம்தான் தமிழகம். எனவே நடுவணரசிடம் பேச்சு நடத்தவேண்டி இருந்தது. தமிழில் இதழ் ஆரம்பிக்க மறுப்பில்லை. ஆனால் இந்தியிலும் கூரியர் வெளியாக வேண்டும் என இந்திய அரசு நிபந்தனை விதித்தது. இந்தி மொழி கூரியருக்கான ஏற்பாடுகளைச் செய்தபின்பு மால்கம் சென்னை திரும்பினார். அன்றைய தமிழக முதல்வரான அண்ணா, கல்வியமைச்சரான நெடுஞ்செழியன் ஆகியோரிடம் பேச்சு நடத்தினார். தமிழ் மொழியில் கூரியர் வெளியிடும் திட்டத்தைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. 1967ஆம் ஆண்டு தமிழில் கூரியர் துவக்கப்பட்டு உலக நாட்டு தமிழர்களுக்குக் கிடைத்தது.[1] ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் தவிர, அரபி, சீனம் ஆகிய செம்மொழிகளில் மட்டுமே வெளிவந்த யுனெஸ்கோ கூரியர் இதழ், தமிழில் வெளிவந்தது என்பது தமிழுக்கான உலகளாவிய நிகழ்வாகப் பதிவு செய்யத்தக்கது. மணவை முஸ்தபா ஆசிரியராக இருந்தபோது தமிழ்ப் பதிப்பு 5 லட்சம் பிரதிகள் விற்று யுனெஸ்கோ இதழ்களில் நான்காம் இடத்தை பிடித்திருந்தது.[2]

யுனெஸ்கோ கூரியரின் சிறப்பு[தொகு]

உலகில் உள்ள அனைத்து விசயங்கள் பற்றியும் யுனெஸ்கோ கூரியரில் படைப்புகள் இடம்பெறும். ஆனால் அரசியல் விசயங்கள் தவிர. மற்ற இதழ்களைப் போலத் தனியொரு நாட்டு வாசகர்களுக்கோ, அல்லது ஒருசில நாட்டு வாசகர்களுக்கோ கூரியர் உருவாக்கப்பட்டதில்லை. மாறாக உலக நாடுகளின் வாசகர்களுக்காக உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு இதழிலும் ஒரு மையக்கருவை அலசி ஆராய்து அதை அடிப்படையாக கொண்டே வெளிவந்தது. ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஒளிப்படங்களுடனும், அவற்றுக்கான விளக்கங்களுடன், உலக அளவில் புகழ்பெற்ற நிபுணர்களால் படைப்புகள் உருவாக்கப்பட்டு மொழிபெயர்த்துத் தரப்பட்டது. பாரீஸ் தலைமையகத்தில் கூரியர் பதிப்புகளின் ஆசிரியர்கள் ஒன்று கூடி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான தலைப்புகளை முடிவு செய்து வருவர்.[3] பல்லாயிரக்கணக்கான புதிய புதிய கலைச் சொற்களைக் கூரியர் இதழ் தமிழுக்கு உருவாக்கித் தந்தது.

யுனெஸ்கோ கூரியரின் ஆசிரியர்கள்[தொகு]

யுனெஸ்கோ கூரியர் தமிழ் இதழின் ஆசிரியர்களாக எஸ். கோவிந்த ராஜூலு, தெ. பொ. மீனாட்சிசுந்தரம், நெ. து. சுந்தரவடிவேலு ஆகியோர் செயல்பட்டதற்குப் பின்னர், மணவை முஸ்தபா ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

தமிழரின் வாழும் பண்பாட்டுச் சிறப்பிதழ்[தொகு]

1984 ஆண்டு மார்ச் கூரியர் இதழ் தமிழ் பண்பாட்டுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இது தமிழ்நாட்டைப் பற்றிய தனிச் சிறப்பிதழ் ஆகும். அந்த இதழ் வெளியாக முக்கியக் காரணமாக இருந்தவர் பிரெஞ்சு-தமிழ் ஆய்வாளர் பிரான்சுவா குரோ ஆவார் இவர் அந்த இதழில், 'சங்க இலக்கியத்தில் நிலக் காட்சி' என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அவருடன் சுந்தர ராமசாமி, அம்பை, எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா) , சு. தியடோர் பாஸ்கரனின் மனைவி திலகா பாஸ்கரன் (தமிழர் உணவு குறித்து) ஆகியோரும் கட்டுரைகள் எழுதியிருந்தனர். தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி சுருக்கமான, அதேநேரம் அழகானதொரு விவரிப்பை அந்த இதழ் உலக மக்கள் மத்தியில் உருவாக்கியது. தமிழ் உள்ளிட்ட 27 உலக மொழிகளில் அந்த இதழ் வெளியாகி இருந்தது.

தமிழ் பதிப்பு நிறுத்தம்[தொகு]

1967இல் துவக்கப்பட்டு பல்வேறு தடைகளைத் தாண்டி 35 ஆண்டுகள் வெளிவந்த தமிழ் பதிப்பு, நிதி நெருக்கடியைக் காட்டி நிறுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "யுனெஸ்கோவின் தமிழ்க் கொடை!". தினமணி. 17 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "மணவை முஸ்தபா: அறிவியல் தமிழின் பிதாமகன்". கட்டுரை. தி இந்து. 7 பெப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. தினமணிக் கதிர் கட்டுரை, அரசியலை ஒதுக்கும் மாத இதழ்,26 ஆகஸ்ட் 1993, பக்கம் 12
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுனெஸ்கோ_கூரியர்_தமிழ்&oldid=3578139" இலிருந்து மீள்விக்கப்பட்டது