மனித வள மேலாண்மை முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித வள மேலாண் முறைமை (மனித வளத் தகவல் முறைமை, மனித வளத் தொழில்நுட்பம் அல்லது மனித வள நிரல்கூறுகள்) என்பது மனித வள மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரு துறைகளின் கூட்டு நிகழ்முறை ஆகும் [1].

மனித வள மேலாண்மைத் துறையின் பல்வேறு செயல்பாடுகளும், நிகழ்முறைகளும் தகவல் தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது. தரவு செயலாக்க முறைகள் நிறுவன ஆதாரவள திட்டமிடல் மென்பொருளின் பாகங்களுக்குள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பல்வேறு பயன்பாடுகளை ஒரு பொதுவான தரவுத்தளத்திற்குள் இம்மென்பொருள் ஒன்றுசேர்க்கிறது.

நோக்கம்[தொகு]

மனித வளத் துறையின் செயல்பாடு பொதுவாக நிர்வாகங்களைச் சார்ந்ததாகவே இருக்கும். அனைத்து நிறுவனங்களுக்கும் இடையே இது மாறுபடும். நிறுவனங்கள் தமக்கென வெவ்வேறு முறைசார்ந்த தேர்வுகள், மதிப்பாய்வு மற்றும் சம்பளப் பட்டியல் செயல்பாட்டு முறைகளைக் கொண்டிருக்கலாம். "மனித மூலதன"த்தை திறம்படக் கையாளுவது தவிர்க்கவியலாத மற்றும் சிக்கலான நிகழ்முறையாக இருக்கிறது.

பணியாளரின் வரலாறுகள், திறமைகள், செயலாக்கத் திறன்கள், சாதனைகள் மற்றும் ஊதியம் ஆகிய தரவுகளை அறிந்து வைத்திருப்பது மனித வள நிர்வாகத்தின் முதன்மையான வேலையாகும். இந்த நிருவாக வேலைகளை எளிமையாக வகைப்படுத்தி வேலைப் பளுவைக் குறைக்க, நிறுவனங்கள் பல நடைமுறைகளை மின்னணு முறைக்கு மாற்றி விட்டன. [2] HRIS enable improvement in traditional processes and enhance strategic decision making.[2]

ஒருங்கிணைந்த மனித வள மேலாண்மை முறைமையை உருவாக்க மனித வளத் துறை நிருவாகப் பணியாளர்கள் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனர்களை சார்ந்துள்ளனர். 1980களில் "சேவை-பயனர்" பயன்பாட்டு முறை உருவாகும் வரை, பெரிய அளவில் தரவுகள் காகிதக் கோப்புகள் மூலமும், செயலாக்கங்களைக் கையாளும் மெயின்பிரேம் (மூலப்பரப்பற்சட்டம்) கணினி மூலமும் பல மனித வள செயல்பாடுகள் இணைக்கப் பெற்றன. ஆனால் இதற்கு பெரும் மூலனத்தை நிறுவனங்கள் செலவிடக் கூடிய சூழல் இருந்தது. அதன்பின் வாங்கி-வழங்கன் (Client-Server), பயன்பாட்டு சேவை வழங்குநர் (Application Service Provider), சேவையாக மென்பொருள் (SaS - Software as a Service) ஆகிய மென்பொருட்களின் வருகைக்குப் பின் இத்தகைய முறைமைகளின் பயன்பாடு பெருமளவு அதிகரித்தது.

மனித வள மேலாண்மைத் துறை ஒரு நிறுவனத்தில் பணியாளர்களை புதிதாக தேர்ந்தெடுத்தல், நியமித்தல், மதிப்பாய்வு, சம்பளப் பட்டுவாடா மற்றும் அவர்களின் தொழில் முன்னேற்றத்தை கவனித்தல் ஆகிய செயல்பாடுகளை நிர்வகிக்கிறது. தொடக்கத்தில், நிறுவனங்கள் கணினியை அடிப்படையாகக் கொண்ட தகவல் முறைமைகளை கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தனர்:

  • சம்பளப் பட்டுவாடா அறிக்கைகள் தயாரித்தல்
  • பணியாளர்களின் ஆவணங்களை பதிவு செய்து பராமரித்தல்
  • திறன் மேலாண்மை

மனித வள மேலாண்மை முறைமைகளில் பின்வருவன,

  • வேலைக்கு ஆள் சேர்த்தல்
  • சம்பளப் பட்டுவாடா
  • வேலை நேரப் பதிவேடு
  • ஊழியர் நல நிர்வாகம்
  • மனித வள தகவல் முறைமை
  • பயிற்சி/கற்றல் மேலாண் முறைமை
  • செயல்திறன் ஆவணம்
  • பணியாளர் சுய-சேவை

சம்பளப் பட்டுவாடா நிரல்கூறு[தொகு]

பணியாளர் வருகைப் பதிவு, சம்பளப் பிடித்தங்கள் மற்றும் வரிகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு ஊதியம் வழங்கலை நிர்வகிக்கிறது. இதற்கான தரவுகள் மனித வளத் துறை மற்றும் நேரம் பதிவு செய்யும் நிரல்கூறுகளில் இருந்து பெறப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பணியாளரின் சம்பளம் தானியங்கி முறையில் கணக்கிடப்பட்டு அதற்கான காசோலைகளை நிதித் துறை அலுவலர்கள் கணக்கை சரிபார்த்து வழங்குவார்கள். அனைத்து ஊழியர் தொடர்பான பரிவர்த்தனைகளும் இந்த நிரல்கூறில் இருக்கும். அத்துடன் நடப்பு நிதி மேலாண்மை அமைப்புகளுடனும் இது ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும்.

வேலை நேரம்[தொகு]

பணியாளரின் இயல்பான பணி நேரத்தையும் வேலையையும் ஒருங்கிணைக்கிறது. முன்னேறிய நிரல் கூறுகள் ஏராளமான பயன்பாட்டு அம்சங்களைக் கொண்டுள்ளன. செலவு கணக்கிடல் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு இது பிரதானமாகப் பயன்படுகிறது.

ஊழியர் நல நிர்வாக நிரல்கூறு[தொகு]

பணியாளர்களுக்கு உரித்தான பயன்களை நிர்வகிக்கிறது. இவை குறிப்பாக காப்பீடு, இழப்பீடு, இலாப பங்கீடு மற்றும் பணி ஓய்வு நலன்களை உள்ளடக்கியுள்ளன.

==மனித வள மேலாண்மை நிரல்கூறு ஒருவர் வேலையில் சேர்ந்த நாளில் இருந்து அவர் பணியில் இருந்து ஒய்வு பெறும் நாள் வரையிலான அனைத்து மனித வள அம்சங்களையும் அடக்கியதாகும். இந்த முறைமை அடிப்படையாக ஒரு தனி நபரின் புள்ளி விவரங்கள், முகவரி, தேர்வு, பயிற்சி மற்றும் மேம்பாடு, திறமைகள் மற்றும் திறன் மேலாண்மை, சம்பளத் திட்டப் பதிவேடுகள், மற்றும் இது போன்ற இதர செயல்களை ஆவணப்படுத்தியிருக்கும். நூதன கணினி சார்ந்த முறைமைகள் பணியாளர் வழங்கும் விண்ணப்ப படிவங்களைப் படித்து அதில் இருக்கும் தரவுகளை தரவுத்தளங்களில் பதிவேற்றி, அவ்வப்போது உரிமையாளருக்கு தகவல்களை அளித்து, நிலைமைக்கு ஏற்றவாறு பணியாளர்களை நிர்வகித்து கட்டுப்படுத்த உதவும் திறன்களைக் கொண்டுள்ளன.

நிறுவனங்களின் தகுந்த பதவிகளுக்கு திறன் வாய்ந்த நபர்களைத் தேர்ந்தெடுக்க, மனித வள மேலாண்மைத் துறை இப்போது இணையவழி தேர்வுமுறையை முதன்மையான வழிமுறையாகக் கையாள்கிறது. திறமை மேலாண்மை முறைமைகளில் பொதுவாக கீழ்க்காண்பவை அடங்கியிருக்கும்:

  • ஒரு நிறுவனத்திற்குள் ஒரு பணியாளரை எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை பகுத்தாய்வது;
  • திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்களைக் கண்டறிவது;
  • நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பட்டியல்கள் மூலம் பணியாளரை தேர்வு செய்தல்;
  • வேலைவாய்ப்புத் தளங்கள் அல்லது வெளியீடுகள் மூலம் பணியாளர்களைத் தெரிவு செய்தல்.

விண்ணப்பதாரர் தெரிவுக்கான பிரத்யேகமான விண்ணப்பதாரர் பின்தொடர் முறைமை (ATS-Applicant Tracking System) கொண்ட நிரல்கூறு இந்நடவடிக்கைக்கான செலவினை பெருமளவு குறைத்து நிர்வகிக்கிறது.

பயிற்சி நிரல்கூறு[தொகு]

நிறுவனப் பணியாளரின் பயிற்சி மற்றும் முன்னேற்ற முயற்சிகளை நிர்வகிப்பதற்கான ஒரு முறைமையை வழங்குகிறது. இந்த முறைமை (கற்றல்-மேலாண்முறைமை) பணியாளர்களின் கல்வி, தகுதி, மற்றும் திறமைகளை அளவிடுவதற்கும் அவர்களுக்கேற்ற பயிற்சிகள், புத்தகங்கள், குறுவட்டுகள், வலைத்தளம் சார்ந்த பயிற்சிகள் அவசியம் என்பதை மதிப்பிடுவதற்கும் மனித வளத் துறைக்கு உதவுகிறது. இதற்குத் தகுந்தாற்போல், தேதி வாரியான தனிப்பட்ட பயிற்சி முகாம்கள் மற்றும் வகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு, சரியான ஆலோசகர்களைக் கொண்டு பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்து, இந்த முறைமைக்குள்ளேயே பலரின் திறமைகளை நன்கு நிர்வகிக்கலாம். மிகவும் திறம்பட்ட உழைப்பு மேலாண்மை முறைமைகள் மேலாளர்களுக்கு இந்த வேலைகளை நிர்வகிப்பதில் பேருதவி புரிகின்றன.

பணியாளர் சுய சேவை நிரல்கூறு[தொகு]

ஒரு பணியாளருக்கு அவர் குறித்த மனித வளத் துறை தரவுகளை அறிந்து கொள்ளவும், மற்றும் முறைமை மூலமாக சில பரிவர்த்தனைகள் மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்ளவும் வழி வகுக்கிறது. தங்கள் வருகைப் பதிவு குறித்து மனித வளத் துறை அதிகாரிகளிடம் மட்டுமல்லாது இந்த முறைமையிலும் ஊழியர்கள் அறிந்து கொள்ளலாம். மனித வளத் துறையினருக்கு சுமையேற்றாமல், மிகுதி நேரப் பணிக்கு மேற்பார்வையாளர்கள் இந்த நிரல்கூறின் வழி ஒப்புதலளிக்க முடியும்.

பல நிறுவனங்கள் பாரம்பரிய செயல்பாடுகளைக் கடந்து மிகவும் மேம்பட்ட மனித வள மேலாண்மைத் தகவல் முறைமைகளைப் பயன்படுத்துகின்றன. பணியாளர் தெரிவு, வேலைவாய்ப்பு, செயல்திறன் மதிப்பீடு, பணியாளர் நலன் ஆராய்தல், உடல் நலம், பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இந்த முறைமைகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மற்றும் பல நிறுவனங்கள் இந்த அத்தனை அம்சங்களையும் கொண்ட விண்ணப்பதாரர் பின்தொடர் முறைமையை தங்களது முறைமையுடன் சேர்த்து அமர்த்தி பயன்படுத்திக் கொள்கின்றன.

மேலும் காண்க[தொகு]

  • விண்ணப்பதாரர் பின்தொடர் முறைமை
  • மேலாண்மைத் தலைப்புகளின் பட்டியல்
  • மனித வள மேலாண்மைத் தலைப்புகள் பட்டியல்
  • தகவல் தொழில்நுட்ப மேலாண்மைத் தலைப்புகள் பட்டியல்
  • பணிப்பகுப்பாய்வு, வேலை பகுப்பாய்வு
  • பயிற்சி/கற்றல் மேலாண்மை முறைமை
  • சேவைக்கான மென்பொருள்
  • நிறுவன விளக்கவரைபடம்
  • மின் மனித வள மேலாண்மை
  • மனித வள தகவல் மேலாண்மைக்கான சர்வதேசக் கூட்டமைப்பு

உசாத்துணை[தொகு]

  1. http://www.hrpayrollsystems.net/hris/
  2. 2.0 2.1 Chugh, R 2014, ‘Role of Human Resource Information Systems in an Educational Organisation’, Journal of Advanced Management Science, vol. 2, no.2, pp.149-153. doi: 10.12720/joams.2.2.149-153 http://www.joams.com/index.php?m=content&c=index&a=show&catid=37&id=132
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_வள_மேலாண்மை_முறைமை&oldid=3526912" இலிருந்து மீள்விக்கப்பட்டது