போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எரியும் போட்டி என்றால் ஒன்றுக்கு ஆள்கள், குழுக்கள், நாடுகள் போன்றவை நிலம், பதவி, வளங்கள் போன்றவற்றை அடைவதற்காகத் தமக்குள் எதிரிடைப்பட்டுப் போராடுவதைக் குறிக்கும். அழகுப் போட்டி, ஆயுதப் போட்டி, விளையாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, பாடல் போட்டி, அரசியல் போட்டி, என்று எல்லாத் துறைகளிலுமே போட்டி புகுந்துவிட்டது.

போட்டியினால் நன்மை விளைகிறதா தீமை விளைகிறதா என்னும் கேள்வி இன்று விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஆல்ஃபி கோன் (Alfie) என்னும் அறிஞர் இப்பொருள் பற்றி ஆய்வு நிகழ்த்தி, முற்போக்குச் சிந்தனை முயன்றுள்ளார் [1] ஆய்வின் அடிப்படையில் கீழ்வரும் கட்டுரை அமைகிறது. ஆல்ஃபி கோன்[2] ஆய்வுகளின் சுருக்கத்தை இரா. மேரி ஜாண் முறையில் தமிழில் ஆக்கித் தந்துள்ளார் [3]

போட்டியை ஆதரிப்போர் கூறும் காரணங்கள்[தொகு]

போட்டி வேண்டும் என்று வாதாடுவோர் அதை ஆதரிப்பதற்குக் கீழ்வரும் காரணங்களைக் காட்டுகிறார்கள்:

  • போட்டி ஆற்றல்களை வளர்க்கிறது
  • போட்டி தன்வளர்ச்சிக்கு உந்துதல் தருகிறது
  • போட்டி நிறைவளர்ச்சிக்குத் துணையாகிறது
  • போட்டி செயல்பாட்டைத் தூண்டுகிறது
  • போட்டி வெற்றி-தோல்விக்குப் பயிற்சியளிக்கிறது

என்பவையே போட்டியை ஆதரிப்போர் காட்டும் காரணங்கள்.

  • போட்டி ஆற்றல்களை வளர்க்கிறதா?

ஆற்றல்களை வளர்க்க போட்டிதான் சிறந்த வழி என்போர், குறிப்பாக சிறுவர்களின் ஆற்றலை வளர்க்க வேறு வழியில்லை என நினைக்கின்றனர். போட்டியின் மூலமாக ஒரு சிலருடைய ஆற்றல்கள் வளர்கின்றன என்பதே உண்மை. ஆனால், போட்டியில் கலந்துகொள்ளாமல் விலகுவோருடைய ஆற்றல் வளர வேண்டாமா? போட்டி என்பது ஒரு சிலருடைய ஆற்றல்களை வளர்த்து உலகுக்கு அறிமுகப்படுத்துகின்ற அதே வேளையில் வேறு பலர் அந்த ஆற்றல்கள் இல்லாதவர்கள் என்பதையும் வெளிச்சமிட்டுக் காட்டுவது ஒரு பெரிய குறைபாடுதான்.

பாடல் போட்டிக்கு வருகின்ற சிறார்கள் தங்களால் பாட இயலும் என்ற நம்பிக்கையோடுதான் போட்டியில் கலந்துகொள்கிறார்கள். ஓரிருவரை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டு எஞ்சியோரைத் திருப்பி அனுப்பும்போது அவர்கள் தாம் ஆற்றல் குன்றியவர்கள் என்னும் உணர்வோடு வீடு செல்கிறார்கள். போட்டியினால் ஆற்றல் வளர்கிறது என்பதற்குப் பதிலாக, ஆற்றல் வளர்ந்தவர்கள் போட்டியில் கலந்து கொள்கிறார்கள் என்பதே அதிகப் பொருத்தமாகும். அப்படியென்றால் ஆற்றல்களை வளர்க்க வேறு வழிகளைத் தேட வேண்டும்.

  • போட்டி தன்வளர்ச்சிக்கு உந்துதல் தருகிறதா?

போட்டி என்பது தன்வளர்ச்சியை ஊக்குவிக்க இயல்பாகவே மனிதரிடத்தில் உள்ள இயக்குசக்தி என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. தன் வளர்ச்சிக்கான ஓர் இயற்கை உந்துதல் உள்ளது என்பதை நாம் மறுக்கவியலாது. ஆனால் அதற்குப் போட்டி வேண்டுமா என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது. உண்ணுதல், உடுத்தல், ஓய்வெடுத்தல் போன்ற செயல்களைப் புரிவதற்கு யாரும் போட்டியில் ஈடுபடுவதில்லை. சில வேளைகளில் அதிலும் கூட போட்டி புகுத்தப்படுகிறது. 5 நிமிடங்களில் யார் அதிக எண்ணிக்கையிலான இட்லிகளை விழுங்குகிறார்கள் என்றொரு போட்டி வைத்தால் அப்போது இயற்கைக்கு முரணான விதத்தில்தான் அப்போட்டி நிகழ்கிறது.

விலங்குகளிடையே உணவுக்காகப் போட்டி ஏற்படக் கூடும். ஆனால் அது மனிதரிடையே நடப்பதுபோல் திட்டமிட்டு நிகழ்வதன்று.

  • போட்டி நிறைவளர்ச்சிக்குத் துணையாகிறதா?

ஒரு குறிப்பிட்ட துறையில் ஒருவருக்கு ஏற்கனவே இருக்கின்ற திறமையை நிறைவுசெய்ய போட்டி உதவுகிறது என்பது இன்னொரு வாதம். இங்கேயும் சிலரின் வளர்ச்சி பிறரின் தளர்ச்சி என்றே அமைகிறது.

  • போட்டி செயல்பாட்டைத் தூண்டுகிறதா?

போட்டி செயல்பாட்டைத் தூண்டுகிறது, எனவே நல்லது என்பது இன்னொரு வாதம். இதற்கு மறுப்பாக, மனிதர் செய்யும் முக்கிய செயல்பாடுகள் போட்டியின்றியே நிகழ்கின்றன என்பதைக் காட்டலாம். செயல்பாட்டைத் தூண்டி வளர்ச்சிக்கு உதவிட வேறு வழிகள் இல்லையா என்பது எதிர்வாதம்.

  • போட்டி வெற்றி-தோல்விக்குப் பயிற்சியளிக்கிறதா?

போட்டிகள் வெற்றி-தோல்வி அனுபவங்களை வாழ்க்கையில் ஏற்பதற்குப் பயிற்சியாக அமைகின்றன என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, தோல்விகள் ஏற்படும்போது அவற்றை மன உறுதியோடு ஏற்பதற்கு போட்டிகள் பயிற்சி அளிக்கின்றன என்பர் சிலர். இதற்கு மறுப்பாக, அன்றாட வாழ்வில் சிறுவர்க்கும் பிறருக்கும் ஏற்படுகின்ற தோல்விகள் ஏற்கனவே பல இருக்கும்போது, செயற்கையாக வேறு தோல்வி அனுபவங்களை உருவாக்கி அவர்கள் வாழ்க்கையை இன்னும் அதிய இன்னலுக்கு உட்படுத்த வேண்டுமா என்னும் வாதம் எழுப்பப்படுகிறது.

போட்டிகள் வேண்டாம் என்போர் முன்வைக்கும் மாற்று வழிகள்[தொகு]

ஆல்ஃபி கோன் என்பவர் போட்டியின்றி மனித ஆற்றல்களை வளர்க்க முடியும் என்னும் கொள்கையை அழுத்தமாக எடுத்துக் கூறுகிறார். அவர் கருத்துப்படி, வளர்ச்சி, சாதனை என்பவை மூன்று வழிகளில் நிகழ வாய்ப்பு உண்டு:

  • தனியாக, யாருடைய தொடர்புமின்றி சாதனை நிகழ்த்தலாம்
  • பிறரைப் போட்டியாளராக எதிர்கொண்டு சாதனை நிகழ்த்தலாம்
  • பிறரை ஒத்துழைப்பாளராக ஏற்றுக்கொண்டு சாதனை நிகழ்த்தலாம்

பெரும்பாலான செயல்களை மனிதர் பிற மனிதரின் தொடர்பின்றி, தாமாகவே செய்கின்றனர். பிறரோடு தொடர்புகொண்டு செய்யப்படும் செயல்களைப் போட்டி மூலமாகச் செய்வதைவிட ஒத்துழைப்பு மூலமாகச் செய்வதே அதிகப் பலன் நல்குவதும், தீய பின்விளைவுகளை ஏற்படுத்தாமலும் அமையும். இங்கு, "நான் முதலில் வர வேண்டும்" என்னும் தன்னல வேட்கை மாறி, "நாம் சேர்ந்து வளர்வோம்" என்னும் பொதுநல எண்ணம் தோன்றும்.

கல்வித் துறையில் போட்டி தவிர்த்தல்[தொகு]

கல்வியை எடுத்துக்கொண்டால், தற்போது பல நிறுவனங்களில் போட்டியுணர்வை ஏற்படுத்தும் மதிப்பெண் அடிப்படையிலான தர எண் வரிசை முறை (rank system) மாற்றப்பட்டு, தரநிலை முறை (grade system) அறிமுகமாகியுள்ளது. இது ஒரு நல்ல மாற்றமாகும். எந்த வகையான கல்வியாக இருந்தாலும் தேர்வு மற்றும் மதிப்பெண்களைத் தரம் பிரிப்பதற்கு தரநிலை முறையைப் பயன்படுத்தலாம்.

தர எண் வரிசை முறையில் முதல் எண் ஒருவருக்குத்தான் கிடைக்க வாய்ப்புள்ளது. அதைப் பெறுவதற்குப் போட்டி இருக்கும். ஆனால், தரநிலை முறையில் எல்லாரும் முதல் நிலைக்கு வரும் வாய்ப்பு உள்ளதால் போட்டிகள் குறைந்து, ஒருவர் ஒருவருக்கு உதவும் நிலை தோன்றும்.

கலைவிழாக்களில் போட்டி தவிர்த்தல்[தொகு]

பாடல், சொற்பொழிவு போன்ற பிற நிகழ்வுகளிலும் பெறும் மதிப்பெண்களைத் தரநிலையில் வரிசைப்படுத்தி அதிகமானோர்க்குப் பரிசுகள் வழங்கினால் போட்டியுணர்வு குறையும்.

போட்டி என்ற பெயரையே பயன்படுத்தாமல், கலைவிழா போன்ற பெயரில் பல சிறுவர்களைப் பங்கேற்கச் செய்யலாம். இயன்றால் பங்கேற்போர் அனைவருக்கும் பரிசுகள் தரலாம். பரிசுகள் இல்லையென்றாலும், மாணவர்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புக்காகவும், ஆற்றலை வளர்ப்பதற்காகவும், அதைவிட மேலாகப் பிறரை மகிழ வைக்கவும், அந்த நிகழ்ச்சி நல்ல குறிக்கோளை மனதில் பதிய வைத்தால் அது சிறார்க்குச் சிறந்த பயிற்சியாக அமையும். பரிசு பெறுவதைவிட பங்கேற்பு நல்லது என்னும் உணர்வை ஊட்ட அது மிகவும் உதவும்.

ஆல்ஃபி கோன் கருத்துப்படி, பிறரோடு தொடர்பின்றி தானே செய்யும் செயல்கள் உண்மையிலே "போட்டி" (competition) என்று கருதப்பட மாட்டா. போட்டி என்பது இரு சாராருக்கிடையே திட்டமிட்டு ஏற்படுத்திய ஓர் எதிரிடைச் செயலாகும் என்றும், தனியாகச் செய்யும் செயல்கள் போட்டி வகை சேராமல், தன்னையே "முன்னேற்றும்" செயலாகும் எனவும் அவர் கருத்துத் தெரிவிக்கிறார். இன்று எனக்கு இருக்கின்ற எழுத்துத் திறமையைவிட அடுத்த ஆண்டுக்குள் அத்திறனை இன்னும் அதிகமாக வளர்க்கவேண்டும் என்று நான் முயன்று செயல்பட்டால் அது எனது முன்னேற்றத்திற்கு வழியாகும். அதற்காக நான் யாரோடும் போட்டிக்குப் போக வேண்டியதில்லை என்று கோன் கூறுவார்.

போட்டியில்லாத உலகம் எப்படி இருக்கும்?[தொகு]

ஒருவருடைய சாதனையை வேறு யாரும் முறியடிக்கத் தேவையில்லை. தானே அதற்கு ஒரு படி மேலே செல்லலாம். மற்றவர்களுடைய சாதனையை முறியடிப்பதைவிட தன் சொந்த சாதனையைத் தாண்டி முன்னேறுவது உண்மையான, நேர்மையான மகிழ்ச்சியைத் தரும். வெறும் 30 விழுக்காடு மதிப்பெண் பெற்று, தனக்குத் தான் வகுப்பில் முதல் மதிப்பெண் என்று பெருமைப்படுவதைவிட, சென்ற முறை பெற்ற மதிப்பெண்ணைவிட இந்த முறை 5 மதிப்பெண் அதிகமாக வாங்கியுள்ளேன் என்று மகிழ்வதே மேல் எனலாம்.

பல நேரங்களில் பயிற்சியாளர்களின் படைப்பாற்றலின்மையே போட்டிகளில் ஈடுபடத் தூண்டுகிறது. பயிற்சியாளர்கள் தங்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். பங்கேற்பவர்களை முனைப்போடு செயல்பட வைக்கும் பல உத்திகள் உள்ளன. கதைகள், பாடல்கள், குறுநாடகங்கள் முதலியவற்றோடு, குழு வழிமுறைகளான குழு விளையாட்டு, குழு வேலைகள், குழு ஆய்வுகள் போன்றவை மிகுந்த ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் உருவாக்குபவை. இவ்வழிமுறைகள் சிறுவர்க்கு மட்டுமன்றி, பெரியவர்களுக்கும் பொருத்தமானவையே.

பலர் பங்கேற்கும் வாய்ப்பு அளிப்பது, போட்டிகளால் ஏற்படும் மனத்தாங்கல் போன்ற தீய விளைவுகளைத் தவிர்ப்பது பயிற்சியாளரின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தால் நல்விளைவுகள் பல உண்டாகும். பள்ளிகளில் நிகழ்கின்ற போட்டிகளில் ஓராண்டு பங்கெடுத்தவர்களே மீண்டும் மீண்டும் பங்கேற்கும் நிலையைத் தவிர்க்கலாம். கலைவிழாக் கொண்டாட்டத்தின்போது பாடல், சொற்பொழிவு, கவிதை, கட்டுரை, ஓவியம் என்று பல நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பாடல், சொற்பொழிவு போன்றவை மேடையில் நிகழ்த்தப்படலாம். ஓவியங்கள் அரங்கச் சுவரில் கண்காட்சியாக இடம்பெறலாம். கவிதை, கட்டுரை போன்றவை இதழாக வெளியிடப்படலாம். பங்கேற்கும் அனைவருக்கும் பரிசோ சான்றிதழோ வழங்கலாம். அனைவருடைய படைப்புகளுக்கும் வரவேற்பு இருக்கும்போது, முதலிடம் பெற வேண்டும் என்னும் முனைப்பும் இராது, அவ்விடம் பெறவில்லையே என்னும் தோல்வி மனப்பான்மையும் ஏற்படாது.

விளையாட்டுகளில் பங்கேற்கும்போது எப்படியாவது வெற்றிபெற வேண்டுமென்ற குறுகலான நோக்கத்தோடுதான் பங்கேற்க வேண்டும் என்றில்லை. நல்ல விளையாட்டை எல்லாரும் மகிழும் வண்ணம் விளையாடுவதே முக்கியமானது. வெற்றிக்காகவும் பரிசுக்காகவும் மட்டுமல்ல, மனமகிழ்ச்சிக்காகவும் செயல்கள் செய்யப்பட வேண்டும். மனமகிழ்ச்சி என்பது போட்டியிட்டு வெற்றிபெறுவதில் ஏற்படுவதிவிட, ஒரு செயலைச் செவ்வனே செய்துமுடிப்பதில் அடங்கியிருக்கிறது.

குழந்தைகளிடமும் சிறாரிடமும் எந்தச் சூழ்நிலையிலும் பிறரோடு அவர்களை ஒப்பிட்டுப் பேசுவது தவிர்க்கப்பட வேண்டும். அப்படிப் பேசும்போது பிஞ்சு உள்ளங்களில் போட்டி மனப்பான்மை உருவாவதற்கான வித்துக்கள் தூவப்பட்டுவிடுகின்றன.

பிறரை முறியடித்து, அவர்களுக்கு மனவேதனை உண்டாக்கி அதனால் மகிழ்வடைகின்ற மனப்பாங்கு ஒரு மூர்க்க குணம் என்றால் மிகையாகாது.

போட்டியுணர்வையும் தன்னலத்தையும் தவிர்த்து, ஒத்துழைப்பு உணர்வைச் சிறுவர்களுக்கு ஊட்டுகின்ற முயற்சி சிறு பருவத்திலேயே தொடங்கப்பட வேண்டும். போட்டியில்லாப் புதிய சமுதாயம் உருவாகிட அனைவருமே ஒத்துழைக்கலாம், ஒத்துழைக்கவும் வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "போட்டி வேண்டாம்"
  2. ஆல்ஃபி கோன் - போட்டியில்லாப் புதிய சமுதாயம்
  3. இரா. மேரி ஜாண், போட்டியின்றியும் வெற்றி பெறலாம், வைகறை பதிப்பகம், திண்டுக்கல், 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போட்டி&oldid=3519815" இலிருந்து மீள்விக்கப்பட்டது