பாரசீகப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருவர் பாரசீகப் பூங்கா ஒன்றில் இருக்கும் காட்சியைக் காட்டும் படம்

பாரசீகப் பூங்காஎன்பது, பண்டைய பாரசீகப் பகுதியில் தோன்றி வளர்ந்த பூங்கா அமைப்பு மரபு முறையில் வடிவமைக்கப்பட்ட பூங்காவைக் குறிக்கும். இப் பூங்காக்கள் அந்தாலூசியா முதல் இந்தியா வரையான பரந்த பகுதியின் பூங்கா அமைப்பில் தாக்கத்தை விளைவித்துள்ளன. தாஜ்மகாலைச் சுற்றியுள்ள பூங்கா பாரசீக மரபு வழியில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்று. அல்கம்பிராவில் உள்ள பூங்கா பாரசீகச் செல்வாக்கு உள்ள சிறிய அளவிலான பூங்கா ஆகும்.

புமியின் சுவர்க்கம்[தொகு]

அக்காமானியர்களின் காலத்தில் இருந்து புவியின் சுவர்க்கம் என்னும் எண்ணக்கரு பாரசீக இலக்கியங்கள் மூலம் பிற பண்பாடுகளுக்கும் பரவியது. பாரசீகத்தில் புனித மொழியாகக் கருதப்பட்ட அவெஸ்தான் மொழியில் பரிடீசா என்னும் சொல் "சுற்றிச் சுவர் கட்டப்பட்டது" என்னும் பொருள் கொண்டது. இது சுவரால் சூழப்பட்ட ஒரு பூங்காவைக் குறித்தது. இச் சொல்லே கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, செருமன் போன்ற மொழிகளூடாக ஆங்கிலத்தில் சுவர்க்கம் என்னும் பொருள் படும் "பாரடைஸ்" என்னும் சொல்லாகப் பயின்று வருகிறது.

இச் சொல் குறிப்பது போல பாரசீகப் பூங்காக்கள் சுவரால் சுவரால் சூழப்பட்டிருந்தது. இத்தகைய பூங்காக்களின் நோக்கம் பல் வேறு வழிகளில் பாதுகாப்பான ஆறுதல் தருவதாகும். இதனால் இது புவியில் உள்ள சுவர்க்கமாகக் கருதப்பட்டது. கிறித்தவ இறையியலிலும் புவியில் உள்ள சுவர்க்கமான ஈடன் பூங்காவைக் குறிக்க இச் சொல் பயன்பட்டது.

வரலாறு[தொகு]

ஹபீஸியே தோட்டம், சீராசு, ஈரான்.

பாரசீகப் பூங்காக்களின் தோற்றம் கிமு 4000 ஆண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அக்காலத்து அழகுபடுத்தப்பட்ட மட்பாண்டம் ஒன்றில் பாரசீகப் பூங்காக்களின் சிலுவை போன்ற தளத்தோற்றம் வரையப்பட்டுள்ளது. கிமு 500ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட பேரரசன் சைரசின் பூங்காவின் புறக்கோட்டு வடிவம் இன்றும் காணத்தக்கதாக உள்ளது.

கிபி 3 ஆம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் சாசானியர்களின் ஆட்சிக் காலத்தில், சரதுசத்தின் செல்வாக்குக் காரணமாக கலைத்துறையில் நீரின் முக்கியத்துவம் கூடுதலாகக் காணப்பட்டது. இதன் தாக்கம் பூங்கா வடிவமைப்பிலும் வெளிப்பட்டது. நீரூற்றுக்களும், தடாகங்களும் பூங்காக்களில் இடம்பிடிக்கலாயின.

அராபியர்கள் இப்பகுதிகளைக் கைப்பற்றி வைத்திருந்தபோது பூங்காக்களின் பயன்பாட்டு அம்சங்களிலும் அவற்றில் அழகியல் அம்சங்களுக்கே சிறப்பிடம் வழங்கப்பட்டது. இக் காலத்தில் பூங்கா வடிவமைப்பை கட்டுப்படுத்திய விதி முறைகள் முக்கியத்துவம் பெற்றன. இதற்கு எடுத்துக்காட்டு, உலகத்தின் குறியீடாகக் கருதப்பட்ட நான்கு ஆறுகளைக் கொண்டு நான்கு துண்டுகளாக அமைந்த ஈடன் பூங்காவைப் போன்ற "சார்பாக்" வடிவம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரசீகப்_பூங்கா&oldid=3162148" இலிருந்து மீள்விக்கப்பட்டது