பதேசிங் (சீக்கியத் தலைவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதே சிங்
பிறப்பு(1911-10-27)அக்டோபர் 27, 1911
பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா)
இறப்புஅக்டோபர் 30, 1972(1972-10-30) (அகவை 61)
அம்ரித்சர், பஞ்சாப் (இந்தியா)
தேசியம்இந்தியர்
இனம்பஞ்சாபியர்
அறியப்படுவதுபஞ்சாப் சுபா இயக்கத்தின் முதன்மைத் தலைவர்
பட்டம்சாந்த்
அரசியல் கட்சிஅகாலி தளம்

பதே சிங் (Fateh Singh, அக்டோபர் 27, 1911 - அக்டோபர் 30, 1972) இந்திய சீக்கிய சமய, அரசியல் தலைவர் ஆவார்; பஞ்சாப் சுபா இயக்கத்தின் முதன்மைத் தலைவராக இருந்தார்.[1] இவரைப் பின்பற்றியவர்களால் மரியாதையுடன் சாந்த் பதே சிங் எனப்பட்டார்.

துவக்க காலங்கள்[தொகு]

பஞ்சாபில் பட்டிண்டா மாவட்டத்திலுள்ள படியாலாவின் சன்னன் சிங்கிற்கு மகனாகப் பிறந்தார். இளமையில் முறையான கல்வி கற்காத போதும் 13ஆம் அகவையில் பஞ்சாபி மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார். சீக்கிய புனிதநூல்களில் ஆர்வம் கொண்டிருந்ததால் பதேசிங்கின் தந்தை அவரை இசார் சிங் என்ற சீக்கிய அறிஞரிடம் பயில அனுப்பினார். பின்னர் பதேசிங் பிகானேர் இராச்சியத்திலிருந்து கங்காநகருக்கு (தற்போது இராசத்தான்) குடிபெயர்ந்தார். அருகிலிருந்த சிற்றூர்களுக்குச் சென்று சீக்கியத்தை போதித்து வந்தார். குடிகளிடையே கல்வியின் இன்றியமையாமையைவலியுறுத்திய பதேசிங் பல குருத்துவார்களையும் பள்ளிக்கூடங்களையும் அனாதை இல்லங்களையும் கட்டினார்.

பஞ்சாபி சுபா இயக்கம்[தொகு]

1950களில் அரசியலில் நுழைந்த பதேசிங் இந்தியாவில் பஞ்சாபி பேசுவோருக்கான தனிமாநிலக் கோரிக்கையை ஏற்று "பஞ்சாபி சுபா இயக்கத்திற்கு" ஆதரவளித்தார். 1950களின் பிற்பகுதியில் பதேசிங் சிரோமணி அகாலிதளத்தின் மூத்த உதவித் தலைவர் ஆனார். பஞ்சாபி சுபா இயக்கத்திற்கான பல பேரணிகளுக்குத் தலைமையேற்றார். திசம்பர்18, 1960இல், தனது கோரிக்கையை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்கினார். பல இந்தியத் தலைவர்கள் இவரது உண்ணாநோன்பு போராட்டத்தை கைவிட கோரிக்கை விடுத்தனர். இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு பஞ்சாபி சுபா (மாநிலம்) ஏற்படுத்த உடன்படுவதாக அறிக்கை விட்டபிறகே, சனவரி 9, 1961இல் தனது உண்ணாநோன்பை முடித்துக் கொண்டார். இந்தப் போராட்டத்தின்போது புதிய மாநிலம் சீக்கிய அடையாளத்தைத் தக்கவைத்துகொள்ள உதவும் என்றபோதும் பதேசிங் மொழிவாரி கோரிக்கையையே வலியுறுத்தினார் என வாசிங்டன் பல்கலைகழகப் பேராசிரியர் பவுல் ஆர். பிராசு குறிப்பிடுகின்றார்.[2]

சூலை 1962இல் அகாலிதளத்தின் முக்கியத் தலைவர் மாஸ்டர் தாரா சிங்குடன் முரண்பட்ட பதேசிங் பிரிந்துசென்று புதிய அகாலிதளம் கட்சியைத் துவக்கினார். அக்டோபர் 2, 1962இல் அவரது கட்சி சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுத் தேர்தல்களில் வெற்றிபெற்று அதன் கட்டுப்பாட்டை பெற்றது. சனவரி 17, 1965இல் நடந்த தேர்தல்களில் தாராசிங்கின் கட்சி 45 இடங்களில் மட்டுமே வெற்றிபெற, பதேசிங்கின் கட்சி 90 இடங்களைப் பெற்றது.

நேருவுடனான சில சந்திப்புகளில் முன்னேற்றம் காணாதநிலையில் ஆகத்து 16, 1965இல் மீண்டும் சாகும்வரை உண்ணாநோன்பு மற்றும் தீக்குளித்தல் போராட்டங்களை அறிவித்தார். இருப்பினும் இந்தியாவிற்கும் பாக்கித்தானிற்கும் போர் மூண்டதால், தனது போராட்டங்களைத் தளிவைத்ததுடன் தனது கட்சியினரை அரசுக்குத் துணை நிற்குமாறு வலியுறுத்தினார்.

போர் முடிவுற்றதும் பஞ்சாபி சுபா கோரிக்கைகளை பரிசீலிக்க இந்திரா காந்தி, மகாவீர் தியாகி, யசுவந்த்ராவ் சவான் அடங்கிய குழுவை இந்திய அரசு நியமித்தது; பதேசிங்கின் கோரிக்கையை ஏற்று மக்களவை அவைத்தலைவர் சர்தார் உக்கம் சிங் தலைமையில் அமைந்த நாடாளுமன்ற கலந்தாய்வுக் குழுவும் அதே கோரிக்கையை பரிசீலிக்க நியமித்தனர். பஞ்சாப் மாநிலத்தை மொழிவாரியாகப் பிரிக்கப் பரிந்துரைத்து உக்கம்சிங்கின் குழு தனது அறிக்கையை சனவரி 18, 1966 அன்று வெளியிட்டது. லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்திற்கு பிறகு பிரதமராகப் பொறுப்பேற்ற இந்திரா காந்தி பஞ்சாபி சுபா கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். செப்டம்பர் 3, 1966 இல் பஞ்சாப் சீரமைப்பு சட்டவரைவு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பஞ்சாப் மாநிலம் நவம்பர் 1, 1966இல் செயற்பாட்டிற்கு வந்தது.

இருப்பினும், சண்டிகரும் ஏனைய சில பஞ்சாபி பேசும் பகுதிகளும் புதிய மாநிலத்தில் சேர்க்கப்படாததால் பதேசிங் ஏமாற்றமடைந்தார். திசம்பர் 17, 1966இல் மீண்டும் உண்ணோநோன்பை துவங்குவதாகவும் திசம்பர் 27, 1966 அன்று தீக்குளிக்கப் போவதாகவும் எச்சரித்தார். உக்கம் சிங்கும் அப்போதைய பஞ்சாப் முதலமைச்சர் கியானி குர்முக் சிங் முசாபிரும் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி அவரது போராட்டத்தைக் கைவிட வைத்தனர்.

1960களில் பஞ்சாப் அரசியலில் பதேசிங்கின் தாக்கம் மங்கத் தொடங்கியது. சண்டிகரை இணைக்க வேண்டி மீண்டும் 1970ஆம் ஆண்டு சனவரி 26 அன்று உண்ணாநோன்பிருக்கத் தொடங்கினார்; சனவரி 30 அன்று போராட்டத்தைக் கைவிட்டார். மார்ச் 25, 1972இல் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

சில மாதங்களில், அக்டோபர் 30, 1972இல், அம்ரித்சரில் இயற்கை எய்தினார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Schermerhorn, Richard Alonzo (1978). Ethnic Plurality in India. University of Arizona Press. பக். 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8165-0612-5. https://archive.org/details/ethnicpluralityi0000sche. 
  2. Brass, Paul R. (2005). Language, Religion and Politics in North India. iUniverse. பக். 326. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-595-34394-2.