பதிற்றுப்பத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
நெடுநல்வாடை குறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலை மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள் சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள் சங்ககால மலர்கள்

பதிற்றுப்பத்து[1] எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூலில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை . ஏனைய எட்டுப் பத்துகளும் கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்களும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்களான மூன்று சேர மன்னர்களும் ஆக மொத்தம் எட்டு பேர் பற்றிய வரலாறு நமக்கு பதிற்றுப்பத்தின் 80 பாடல்கள் வாயிலாக கிடைக்கப் பெற்றுள்ளது. இந்நூல் சேரரின் வலிமையை முழுமையாக எடுத்து வைப்பதால் இரும்புக் கடல் என்று அழைக்கப்படுகிறது.

வகை[தொகு]

இந்நூல் பாக்கள் அகவாழ்வோடு இணைந்த புறவாழ்க்கையோடு தொடர்புடைய புறப்பொருள் பற்றிவை ஆகின்றன. சேர மன்னர்களின் குடியோம்பல் முறை, படை வன்மை, போர்த்திறம், பகையரசர்பால் பரிவு, காதற்சிறப்பு, கல்வித் திறம், மனத் திண்மை, புகழ் நோக்கு, ஈகைத் திறம், கலைஞர் காக்கும் பெற்றி ஆகிய பண்புகளையும், கவிஞரைக் காக்கும் பண்பு, பெண்களை மதிக்கும் மாண்பு ஆகிய ஆட்சித் திறன்களையும் சித்திரிக்கின்றன.

காலம்[தொகு]

இந்நூலின் காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவோரும் உண்டு. ஆயினும் அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் என்று கூறுவதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க வாய்ப்பில்லை எனலாம்.

பதிற்றுப்பத்துப் பதிகங்கள்[தொகு]

பதிற்றுப்பத்தின் பதிகங்கள் காலத்தால் பிற்பட்டன. இவை ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் நூலின் காலத்துக்குப் பிற்பட்டனவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. இந்நூலின் 10 பதிகங்களில் எட்டு பதிகங்கள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. இப்பதிகங்களுக்குக் கட்டமைப்புச் சிறப்பு உண்டு. பதிகத்தின் முதற்பகுதி கவிதையாகவும் இரண்டாம் பகுதி உரைநடையாகவும் (colophon) உள்ளன. கவிதைப் பகுதி நூலின் பாக்களைப் போன்று ஆசிரியப்பா நடையில் உள்ளது. இந்தப் பதிகங்களின் முதற்பகுதி சீர்மை மிக்க கவிதைகளாக உள்ளதால் இவற்றை எழுதி நூலைப் பதிப்பித்தவர் கவிஞராக இருந்திருக்கிறார் என்பது புலனாகிறது.

இப்பதிகங்கள் சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டையங்களிலும் முதலில் காணப்படும் மெய்கீர்த்திகளை ஒத்துள்ளன.முதன்முதலாக பொ.ஊ. 989-இல் கல்வெட்டு அமைத்த சோழ மன்னன் முதலாம் இராசராசசோழன் என்று டி.வி சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.[2] பதிற்றுப்பத்துப் பதிகங்கள் இதற்கு முன்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவைகள் கல்வெட்டு மெய்கீர்த்திகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் அடிக்குறிப்பில் கண்ட கட்டுரையில் பண்டாரத்தார் அவர்கள் குறிப்பிடுகிறார்.

பதிற்றுப்பத்துப் பதிகங்களைக் கூர்ந்து நோக்கினால் சேர நாட்டை கடைச்சங்க காலத்தில் உதியஞ்சேரலாதன், அந்துவன் சேரலிரும்பொறை ஆகிய இரு சேர மரபினர் இரு இடங்களில் இருந்து ஆட்சி செய்தனர் என்பது தெளிவாகிறது. இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியன் சேரலின் மகன் நெடுஞ்சேரலாதன் என்பதும் மூன்றாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ்சேரலின் இரண்டாவது மகன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பதும் நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பத்துகளின் பாட்டுடைத்தலைவர்களான களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் ஆகிய மூவரும் உதியஞ்சேரலின் பெயரர்கள் என்பதுவும் தெளிவாகின்றன. காணாமல் போன முதல் பத்தின் பாட்டுடைத்தலைவன் உதியஞ் சேரலாக இருக்கலாம் என்று ஊகிக்கவும் முடிகிறது. ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் அந்துவன் சேரலிரும்பொறையின் மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன், எட்டாம் பத்தின் தலைவன் செல்வக்கடுங்கோவின் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, ஒன்பதாம் பத்தின் தலைவன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்பன புலனாகின்றன. காணாமல் போன பத்தாம் பத்தின் தலைவன் யானைகட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை மீது பாடப்பட்டிருக்கலாம் என்றும் சதாசிவ பண்டாரத்தார் குறிப்பிடுகிறார்.

பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் பதிகம் என்னும் பெயரால் தொகுப்புச் செய்திகளைத் தருகிறார். 10 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளனவும் அவர் அறிந்தனவும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. 10, 10 பாடல்களாகத் தொகுக்கப்பட்ட முறைமை இந்த நூலிலும், ஐங்குறுநூறு நூலிலும் காணப்படுகிறது. கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், [[முதுமொழிக்காஞ்சி, முதுமொழிக்காஞ்சி, ஐந்திணை ஐம்பது போன்றவற்றிலும் காணப்படுகின்றன. அவை தொகுப்பில் வேறுபடும் பாங்கினை அந்தந்த நூல்களில் காணலாம். பதிற்றுப்பத்து நூலில் ஒவ்வொரு பாடலுக்கும் தலைப்பு, ஐங்குறுநூறு நூலிலும், திருக்குறள் நூலிலும் 10 பாடல்களுக்கு ஒரு தலைப்பு என்று அமைக்கப்பட்டுள்ளது.

நான்காம் பத்தின் பாடல்கள் அந்தாதிப்பாடல்களாய் அமைந்துள்ளன.ஒரு பாட்டின் கடைசி அடி அடுத்த பாட்டின் முதல் அடியாக வருவதே அந்தாதியாகும். எடுத்துக்காட்டாக நான்காம் பத்தின் முதற்பாடல் கடைசி அடி போர்மிகு குருசில் நீ மாண்டனை பலவே. இப்பத்தின் அடுத்த பாடல் அதாவது 32-ஆவது பாடல் முதல் அடி மாண்டனை பலவே போர்மிகு குருசில் நீ. மேற்கண்டவாறு விளக்கப்பட்டுள்ள அந்தாதித்தொடை இப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது.

பாடல் தொகுதிகளின் பட்டியல்[தொகு]

பகுதி பாடியவர் பாடப்பட்ட சேர மன்னன் பாடியவர் பெற்ற பரிசுகள்[3]
முதல் பத்து

-

-

இரண்டாம் பத்து குமட்டூர்க் கண்ணனார் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் உம்பற்காடு, 500 ஊர்கள்
மூன்றாம் பத்து பாலைக் கௌதமனார் இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழுகுட்டுவன் வேள்விகள் செய்ய உதவி வழங்கப்பட்டது
நான்காம் பத்து காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் 40 நூறாயிரம் பொன், சேர நாட்டின் ஒரு பகுதி
ஐந்தாம் பத்து பரணர் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் உம்பற்காட்டு வாரி
ஆறாம் பத்து காக்கைபாடினியார் (நச்செள்ளையார்) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் 9 துலாம் பொன், நூறாயிரம் பொன்
ஏழாம் பத்து கபிலர் செல்வக் கடுங்கோ வாழியாதன் நூறாயிரம் பொன்
எட்டாம் பத்து அரிசில் கிழார் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை ஒன்பது நூறாயிரம் காணம்
ஒன்பதாம் பத்து பெருங்குன்றூர் கிழார் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை முப்பத்தேழாயிரம் பொன்
பத்தாம் பத்து

-

-

அரசர்களும் ஆட்சிக்காலமும் (ஆண்டுகள்)[தொகு]

வஞ்சி நகரில் இருந்து ஆண்டவர்கள்[தொகு]

  • இமையவரம்பன் (58)
  • இவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் (25)
  • இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த மூத்தமகன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் (25)
  • இமையவரம்பனுக்கும் சோழன் மணக்கிள்ளி மகளுக்கும் பிறந்த மகன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் (55)
  • இமயவரம்பனுக்கும் வேள் ஆவிக் கோமான் பதுமன் மகளுக்கும் பிறந்த இளையமகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் (38)

கருவூர் நகரில் இருந்து ஆண்டவர்கள்[தொகு]

  • செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் (25)
  • தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை (17)
  • குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை (16)

பதிற்றுப்பத்து - பதிகம் தரும் செய்திகள்[தொகு]

பதிற்றுப்பத்து நூலில் 10 பத்துகள் உள்ளன. ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் சேர்த்த பாடல். ஒரு அரசன் மீது பாடப்பட்ட 10 பாடல்களில் உள்ள செய்திகளைத் தொகுத்து அந்தப் பத்தின் இறுதியில் உள்ள இந்தப் பதிகத்தில் கூறியுள்ளார். அத்துடன் அந்தச் செய்திகளோடு தொடர்படையனவாகத் தாம் அறிந்த செய்திகளையும் அப்பதிகப் பாடலில் இணைத்துள்ளார். இந்தப் பதிகங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் இவை.

இரண்டாம் பத்து[தொகு]

  • இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் பாடியது
    • இமையத்தில் வில் பொறித்தான். இச்செய்தியைப் பத்துப்பாட்டு நூல்களுல் மூன்றவதான சிறுபாணாற்றுப்படையில் அதன் ஆசிரியர் அடிக்குறிப்பில் கண்டவாறு[4] புகழ்ந்து கூறுகிறார்.
    • ஆரியரை அடக்கினான்
    • யவனரை அரண்மனைத் தொழிலாளியாக்கிக் கட்டுப்படுத்தினான்
    • பகைநாட்டுச் செல்வங்களைக் கொண்டுவந்து தன் நாட்டுமக்களுக்கு வழங்கினான்

மூன்றாம் பத்து[தொகு]

  • பல்யானைச் செல்கெழு குட்டுவனை பாலைக்கோதமனார் பாடியது
    • உம்பற் காட்டைக் கைப்பற்றினான்
    • அகப்பா நகரின் கோட்டையை அழித்தான்
    • முதியர் குடிமக்களைத் தழுவித் தோழமையாக்கிக் கொண்டான்
    • அயிரை தெய்வத்துக்கு விழா எடுத்தான்
    • நெடும்பார தாயனாருடன் துறவு மேற்கொண்டான்

நான்காம் பத்து[தொகு]

  • களங்காய்ப் கண்ணி நார்முடிச் சேரலை காப்பியாற்றுக்காப்பியனார் பாடியது
    • பூழி நாட்டை வென்றான்
    • நன்னனை வென்றான்

ஐந்தாம் பத்து[தொகு]

  • கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனை பரணர் பாடியது
    • ஆரியரை அடக்கினான்
    • கண்ணகி கோட்டம் அமைத்தான்
    • கவர்ந்துவந்த ஆனிரைகளைத் தன் இடும்பில் நகர மக்களுக்குப் பகிர்ந்து அளித்தான்
    • வியலூரை அழித்து வெற்றி கண்டான்
    • கொடுகூரை எறிந்தான்
    • மோகூர் மன்னன் பழையனை வென்று அவனது காவல்மரம் வேம்பினை வெட்டிச் சாய்த்தான்
    • கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டினான்
    • சோழர் ஒன்பதின்மரை வென்றான்
    • படை நடத்திக் கடல் பிறக்கு ஓட்டினான்

ஆறாம் பத்து[தொகு]

  • ஆடு கோட்பாட்டுச் சேரலாதனை காககை பாடினியார் நச்செள்ளையார் பாடியது
    • தண்டாரணித்தில் பிடிபட்ட வருடை ஆடுகளைக் கொண்டுவந்து தன் தொண்டி நகர மக்களுக்கு வழங்கினான்.
    • பார்ப்பார்க்குக் குட்ட நாட்டிலிருந்த ஓர் ஊரை அதிலிருந்த கபிலைப் பசுக்களோடு வழங்கினான்.
    • வானவரம்பன் என்னும் பெயர் தனக்கு விளங்கும்படி செய்தான்
    • மழவர் பகையை எண்ணிக்கையில் சுருங்கும்படி செய்தான்
    • கைக்குழந்தையைப் போல் தன் நாட்டைப் பேணிவந்தான்.

ஏழாம் பத்து[தொகு]

கல்வெட்டு - புகழூர் தாமிழி (பிராமி)

  • செல்வக் கடுங்கோ வாழியாதனை கபிலர் பாடியது
    • பல போர்களில் வென்றான்
    • வேள்வி செய்தான்
    • மாய வண்ணன் என்பவனை நண்பனாக மனத்தால் பெற்றான்
    • அந்த மாயவண்ணன் கல்விச் செலவுக்காக ஒகந்தூர் என்னும் ஊரையே நல்கினான்
    • பின்னர் அந்த மாயவண்ணனை அமைச்சனாக்கிக் கொண்டான்

எட்டாம் பத்து[தொகு]

  • பெருஞ்சேரல் இரும்பொறையை அரிசில்கிழார் பாடியது
    • கொல்லிக் கூற்றத்துப் போரில் அதிகமானையும், இருபெரு வேந்தரையும் வென்றான்
    • தகடூர்க் கோட்டையை அழித்தான்

ஒன்பதாம் பத்து[தொகு]

  • இளஞ்சேரல் இரும்பொறையை பெருங்குன்றூர்க்கிழார் பாடியது
    • கல்லகப் போரில் இருபெரு வேந்தரையும் விச்சிக்கோவையும் வீழ்த்தினான். அவர்களின் 'ஐந்தெயில்' கோட்டையைத் துகளாக்கினான்.
    • பொத்தியாரின் நண்பன் கோப்பெருஞ்சோழனை வென்றான்.
    • வித்தை ஆண்ட இளம்பழையன் மாறனை வென்றான்
    • வென்ற இடங்களிலிருந்து கொண்டுவந்த வளத்தை வஞ்சி நகர மக்களுக்கு வழங்கினான்.
    • மந்திரம் சொல்லித் தெய்வம் பேணச்செய்தான்
    • தன் மாமனார் மையூர் கிழானைப் புரோசு மயக்கினான்
    • சதுக்கப் பூதர் தெய்வங்களைத் தன் ஊருக்குக் கொண்டுவந்து நிலைகொள்ளச் செய்தான்
    • அந்தப் பூதங்களுக்குச் சாந்திவிழா நடத்தினான்

பாடல் தலைப்புகள்[தொகு]

இந்நூலிலுள்ள பாடல்களின் தலைப்பாக விளங்குவன அப்பாடல்களிலேயே காணப்படும் அழகான சொற்றொடர்களேயாவன. இரண்டாம் பத்திலுள்ள முதற்பாடலின் தலைப்பு புண்ணுமிழ் குருதியாகும். இத்தொடர் இப்பாட்டின் எட்டாம் அடியில் உள்ளது. பாடல் எண் பன்னிரண்டினுடைய, அடுத்த பாடலின், தலைப்பு மறம் வீங்கு பல்புகழ் என்பதாகும். இத்தொடர் இப்பாடலின் எட்டாவது அடியில் காணப்படுகிறது. இது போன்று இந்நூல் முழுவதும் ஆங்காங்கே காணப்படும் அருஞ் சொற்றொடர்கள் பாக்களின் தலைப்பாக விளங்குவது இதன் தனிச்சிறப்பாகும். அதற்கு அடுத்த பாடலின் தலைப்பு பூத்த நெய்தல் ஆகும். இத்தொடர் பதின்மூன்றாம் பாடலின் மூன்றாம் அடியில் காணப்படுகிறது. 14ம் பாட்டின் தலைப்பு சான்றோர் மெய்ம்மறை. இதற்கு அடுத்த பாடலின் தலைப்பு நிரைய வெள்ளம். இத்தகைய அழகான தலைப்புகள் ஒவ்வொன்றும் கண்ணைக் கவரும் வண்ணம் தீட்டிய சித்திரம் போல் கருத்தின் முத்தாய்ப்பாக விளங்குகின்றன.

உரையாசிரியர்கள்[தொகு]

  • பதிற்றுப்பத்துக்கு பழைய உரை ஒன்று உண்டு. இந்த உரையாசிரியர் யார் என்பதை அறிய இயலவில்லை. இவ்வுரையாசிரியர் நேமிநாதம் இயற்றிய குணவீர பாண்டியருக்கு காலத்தால் பிற்பட்டவர் என்பது இவ்வுரையில் காணப்படும் குறிப்பிலிருந்து தெரிகிறது. இந்த பழையவுரை குறிப்புரைக்கும் பொழிப்புரைக்கும் அளவில் இடைப்பட்டதாக கருதப்படுகிறது. இவ்வுரை பாடல்களின் தலைப்புப் பொருத்தம் குறித்து பேசுகின்றது. முக்கியமான இலக்கணக் குறிப்புகளும் இதில் காணப்படுகின்றன்.[5]
  • ஔவை துரைசாமிப்பிள்ளை உரை[6]
  • யாழ்ப்பாணம் அருளம்பலவாணர் உரை[7]
  • புலியூர் கேசிகன் உரை[8]
  • பரிமளம் உரை[9]

நடை[தொகு]

பதிற்றுப்பத்து பாடல்களில் சில சொற்களின் பயன்பாடுகள்:

  • கசடு = சேறு, வஞ்சகம் 'கசடு இல் நெஞ்சம்'[10]
  • காணியர் காணலியரோ = பார்க்கட்டும் அல்லது பார்க்காமல் போகட்டும் 'ஆடுநடை அண்ணல் நிற் பாடுமகள் காணியர் காணலியரோ நிற் புகழ்ந்த யாக்கை'[11]
  • துளங்கு = ஆடு, துள்ளிக் குதித்து ஆடும் நீர், அலைமோது. 'துளங்குநீர் வியலகம்'[12]
  • நுடங்கல் = ஆடல், 'கொடி நுடங்கல்'[13]
  • மேவரு = விரும்பும்(நம்பும் மேவும் நசை யாகுமே-தொல்காப்பியம்) \ மேவு + வரு \ மேவு = விரும்பு \ வரு - துணைவினை \ 'மேவரு சுற்றம்'[14]

பதிப்பு வரலாறு[தொகு]

சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1904ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்."[15]

அடிக்குறிப்பு[தொகு]

  1. பத்து + பத்து = பதிற்றுப்பத்து
  2. பதிற்றுப்பத்து மூலமும் விளக்க உரையும், ஔவை சு. துரைசாமிபிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை -600 018, 1950 (பதிற்றுப்பத்தும் பதிகங்களும், டி.வி. சதாசிவ பண்டாரத்தார்)மேற்கோள்,
  3. மது.ச. விமலானந்தம் (2020) (in தமிழ்). தமிழ் இலக்கிய வரலாறு. தி-நகர், சென்னை.: முல்லை நிலையம். பக். பக்க எண். 49. 
  4. வடபுல விமயத்து வாங்கு விற் பொறித்த/ வெறுவுறழ் திணிதோ ளியரேர்க் குட்டுவன் சிறுபாணாற்றுப்படை 46-47
  5. உ.வே சாமிநாதையர் பழைய உரையுடன் தனது ஆரய்ச்சிக்குறிப்புகளையும் சேர்த்து 1904 ல் ஒரு உரை நூலை வெளியிட்டார்.
  6. 1950 ல் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் ஔவை சு துரைசாமிப்பிள்ளை உரையுடன் இந்நூலை வெளியிட்டது.
  7. 1960ல் யாழ்ப்பாணத்தில் சு. அருளம்பலவாணரின் பழைய உரையுடன் உள்ள இந்நூலை அ. சிவானந்தநாதன் என்பார் வெளியிட்டார்.
  8. சென்னை பாரி நிலையத்தார் 1974 ல் புலியூர்க்கேசிகனின் உரையுடன் பதிற்றுப்பத்தை வெளியிட்டனர்.
  9. காரைக்குடிக்கு அருகில் உள்ள கோவிலூர் மடாலயம் அ.மா. பரிமணத்தின் உரையுடன் பதிற்றுப்பத்தை மக்கள் பதிப்பாக 2003 ல் வெளியிட்டுள்ளது.
  10. பதிற்றுப்பத்து 44-6
  11. பதிற்றுப்பத்து 44-7
  12. பதிற்றுப்பத்து 44-21
  13. பதிற்றுப்பத்து 44-2
  14. பதிற்றுப்பத்து 48-16
  15. சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 192

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிற்றுப்பத்து&oldid=3823383" இலிருந்து மீள்விக்கப்பட்டது