பண்பாட்டு மானிடவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமூக பண்பாட்டு மானிடவியல் எனவும் அழைக்கப்படும் பண்பாட்டு மானிடவியல் (Cultural anthropology), பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட நான்கு மானிடவியல் துறைகளுள் ஒன்றாகும். ஓரளவுக்கு இது, "பண்பாடு" "இயற்கை" என்னும் இரண்டுக்குமிடையிலான எதிர்த் தன்மையை அடிப்படையாகக் கொண்டு முன்னர் எழுந்த மேலை நாட்டு எழுத்தாக்கங்களுக்கு எதிரான விளைவு எனலாம். மேற்சொன்ன அடிப்படையில் சில மனிதர்கள் "இயற்கை நிலையில்" வாழ்வதாகக் கொள்ளப்பட்டது. மானிடவியலாளர்களோ பண்பாடு என்பது "மனித இயற்கை" என வாதிடுகின்றனர். அத்துடன், எல்லா மக்களும் தங்கள் அனுபவங்களை வகைப்படுத்தவும், அவ் வகைப்பாடுகளைக் குறியீட்டு அடிப்படையில் ஆக்கிக்கொள்ளவும், அத்தகைய குறியீட்டு வடிவங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் தகுதி உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்கின்றனர் அவர்கள். பண்பாடு என்பது கற்றுக்கொள்ளப்படுவதால் வெவ்வேறு இடங்களில் வாழ்பவர்கள் வெவ்வேறு பண்பாடுகளை உடையவர்களாக இருக்கிறார்கள். பண்பாட்டினூடாகப் பரம்பரையியல் முறைகளுக்குப் புறம்பாக மக்கள் தாங்கள் வாழுமிடங்களுக்கு ஏற்புடையவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள் என்றும் அதனால் வெவ்வேறு சூழல்களில் வாழுகின்ற மக்கள் மாறுபட்ட பண்பாடுகளை உடையவர்களாக உள்ளார்கள் என்றும் மனிதவியலாளர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். பெரும்பாலான மனிதவியற் கோட்பாடுகள் "இடஞ்சார்ந்த" மற்றும் "உலகம் தழுவிய" நிலைப்பாடுகளுக்கிடையேயான இழுநிலைபற்றிய மதிப்பீடு மற்றும் ஆர்வம் காரணமாகத் தூண்டப்பட்டவையே.

சுருக்க வரலாறு[தொகு]

நவீன சமூக-பண்பாட்டு மனிதவியல் 19 ஆம் நூற்றாண்டின் "இன ஒப்பாய்விய"லிலிருந்து தோற்றம் பெற்றதே. இன ஒப்பாய்வியல் (Ethnology) மனித சமூகங்களின் ஒழுங்கமைந்த ஒப்பீட்டில் ஈடுபாடு கொண்டுள்ளது. ஈ. பி. டெய்லர், ஜே. ஜி. பிரேசர் போன்ற அறிஞர்கள், சமயப் பரப்புக் குழுவினர், பயணிகள் அல்லது குடியேற்ற நாட்டு அலுவலர்கள் திரட்டிய தகவல்களின் அடிப்படையிலேயே தங்கள் ஆய்வுகளை நடத்தினர். உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழுகின்ற மக்கள் சில சமயம் ஒரே மாதிரியான நம்பிக்கைகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருப்பது ஏன் என்று அறிவதில் இன ஒப்பாய்வியலாளர் விசேட ஆர்வம் காட்டினர். 19 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பாய்வியலாளர் கருத்து அடிப்படையில் இரு பிரிவினராகப் பிரிந்து இருந்தனர். கிராப்டன் எலியட் சிமித் (Grafton Elliot Smith) போன்றவர்கள், வெவ்வேறு குழுக்கள் மறைமுகமாகவேனும் ஏதோவொரு வகையில் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொண்டுள்ளனர், அதாவது பண்பாட்டுக் கூறுகள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் பரவுகின்றன என்று வாதிட்டனர். வெவ்வேறு குழுவினருக்கு ஒரே மாதிரியான நம்பிக்கைகளையும் செயற்பாடுகளையும் சுதந்திரமாக உருவாக்கிக்கொள்ளக்கூடிய தகுதி உண்டு என்று மற்றவர்கள் கூறினர். மேற்படி "சுதந்திரமான புத்தாக்கம்" என்பதற்கு ஆதரவான லூயிஸ் ஹென்றி மோர்கன் போன்ற சிலர் இன்னும் மேலே சென்று பண்பாட்டுப் படிமலர்ச்சியில் (cultural evolution) வெவ்வேறு குழுக்கள் ஒரே கட்டங்களினூடு செல்வதாலேயே இம்மாதிரியான ஒரே மாதிரித் தன்மை காணப்படுகின்றது என்றனர்.

20 ஆம் நூற்றாண்டு மனிதவியலாளர், எல்லா மனித சமூகங்களும் ஒரே கட்டங்களினூடாக அதே ஒழுங்கில் வளர்ச்சியடைகின்றன என்னும் கருத்தைப் பெரும்பாலும் நிராகரிக்கின்றனர். ஜூலியன் ஸ்டெவார்ட் (Julian Steward) போன்ற சில 20 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பாய்வியலாளர், ஒரே மாதிரியான சூழலில் ஒரேமாதிரியாகப் பழக்கப்படுவதாலேயே இவ்வாறான ஒருமைத் தன்மை உண்டாகின்றது என்கின்றனர். குளோட் லெவி-ஸ்ட்ராவுஸ் (Claude Lévi-Strauss) போன்ற வேறு சிலர், மேற்படி ஒரே மாதிரித் தன்மை மனித சிந்தனை அமைப்பின் அடிப்படை ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக வாதிட்டனர்(structuralismபார்க்கவும்).

20 ஆம் நூற்றாண்டளவில் பெரும்பாலான சமூக-பண்பாட்டு மானிடவியலாளர்கள் இனவரைவியல் (ethnography) ஆய்வில் ஈடுபடலாயினர். இதில் மானிடவியலாளர் இன்னொரு சமூகத்தவர் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவு காலம் வாழ்ந்து அக்குழுவின் சமூக பண்பாட்டு வாழ்வில் பங்குபற்றி அவதானித்தனர். இந்த முறை துரோபிரியண்ட் தீவுகளில் கள ஆய்வு நடத்தியவரும், இங்கிலாந்தில் கற்பித்தவருமான புரோனிஸ்லா மனிலோவ்ஸ்கி (Bronislaw Malinowski) என்பவரால் உருவாக்கப்பட்டு, பாபின் தீவுகளில் (Baffin Island) கள் ஆய்வுகளையும் ஐக்கிய அமெரிக்காவில் கற்பித்தல் தொழிலையும் செய்துவந்த பிரான்ஸ் போவாஸ் (Baffin Island) என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பியலாய்வாளர்கள் "பரவுகை" மற்றும் "சுதந்திரப் புத்தாக்கம்" என்பவற்றை பரஸ்பர தவிர்ப்புத் தன்மையையும், எதிர்ப்புத் தன்மையும் கொண்ட கோட்பாடுகளாகப் பார்த்த போதிலும், பெரும்பாலான இனவரைவியலாளர், இரண்டு நடைமுறைகளுமே நடைபெறுகின்றனவென்றும், இரண்டுமே பண்பாட்டிடை ஒற்றுமைத் தன்மைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்களே என்றும் ஒருமித்த கருத்தை எட்டினர். ஆனாலும், இத்தகைய ஒற்றுமைத் தன்மைகள் பெரும்பாலும் மேலோட்டமானவையே என்றும், சுவறுதல் (diffusion) மூலம் பரவும் கூறுகள் விடயத்தில் கூட, ஒரு சமூகத்திலிருந்து இன்னொரு சமூகத்துக்குச் செல்லும்போது அவற்றின் பொருளும் செயற்பாடுகளும் மாறிவிடுகின்றன என்றும் சுட்டிக் காட்டினர். இந்த அடிப்படையில் இம் மானிடவியலாளர் பண்பாடுகளை ஒப்பிடுவதிலும், மனித இயல்புகளைப் பொதுமைப் படுத்துவதிலும், பண்பாடு வளர்ச்சியின் உலகளாவிய விதிகளைக் கண்டுபிடிப்பதிலும் குறைந்த அக்கறை செலுத்தியதுடன், குறிப்பிட்ட பண்பாடுகளை விளங்கிக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தினர். அவர்களும், அவர்களது மாணவர்களும் "பண்பாடுச் சார்புத்தன்மை" (cultural relativism) என்னும் கருத்தைப் பிரபலப் படுத்தினர். இக் கருத்தின்படி, ஒருவரின் நம்பிக்கைகளும், நடத்தைகளும் அவர் வாழும் பண்பாட்டுச் சூழலிலேயே விளங்கிக் கொள்ளப்பட முடியும்.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமூக-பண்பாட்டு மானிடவியல், ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும், இரு வேறு வடிவில் வளர்ந்தன. ஐரோப்பிய "சமூக மானிடவியலாளர்" அவதானிக்கப்பட்ட சமூக நடத்தைகளிலும், சமூக அமைப்புகளிலும், அதாவது, சமூக வகிபாகங்கள் மத்தியிலான தொடர்புகள் (உ.ம்: கணவன் மனைவி அல்லது பெற்றோர் பிள்ளை) மற்றும் சமூக நிறுவனங்கள் (உ.ம்: சமயம், பொருளாதாரம் மற்றும் அரசியல்) போன்றவற்றில் கவனம் செலுத்தினர். அமெரிக்க "பண்பாட்டு மானிடவியலாளர்", மக்கள் தங்களைப் பற்றியும், தங்கள் உலகத்தைப் பற்றியுமான அவர்களுடைய பார்வையை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதுபற்றி, விசேடமாக குறியீட்டு முறையில் (உ.ம்: கலை மற்றும் பழங்கதைகள்) எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றிக் கவனம் செலுத்தினர். இவ்விரு அணுகுமுறைகளும் பல சந்தர்ப்பங்களில் ஓரிடத்தில் குவிவடைந்தன (உ.ம்: உறவுமுறை ஒரு குறியீட்டு முறைமையும், சமூக நிறுவனமும் ஆகும்.) என்பதுடன் பொதுவாக ஒன்றுக்கொன்று --- ஆக அமைந்தன. இன்று பெரும்பாலும் எல்லா சமூக-பண்பாட்டு மானிடதவியலாளரும் இருபகுதி முன்னோடிகளின் ஆய்வுகளையுமே ஏற்றுக்கொள்வதுடன், மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலும், என்ன சொல்கிறார்கள் என்பதிலும் சம அளவு ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர்.

இன்று சமூக-பண்பாட்டு மானிடவியலில் இனவரைவியலே இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. இருந்தும், பல தற்கால சமுக-பண்பாட்டு மானிடவியலாளர், இடஞ்சார் பண்பாடுகளை கட்டுப்பட்டவையாகவும், தனித்தவையாகவும் கொள்ளும், இனவரைவியலின் முன்னைய மாதிரிகளை நிராகரிக்கிறார்கள். இந்த மானிடவியலாளர்கள், எவ்வாறான வழிகளில் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை உணர்கிறார்கள் அல்லது விளங்கிக் கொள்கிறார்கள் என்பதையே இன்னும் கவனத்தில் எடுத்துக்கொண்டாலும், இவ்வாறான வழிகள்பற்றி, இடஞ்சார் சூழல் அடிப்படையில் மட்டும் விளங்கிக்கொள்ள முடியாது என்றும், ஒருவர் இதுபற்றி பிரதேச சூழலில் மட்டுமல்லாமல் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழல் அடிப்படையிலும் ஆராயவேண்டுமென்றும் வாதிடுகிறார்கள். Notable proponents of this approach are அர்ஜுன் அப்பாதுரை, ஜேம்ஸ் கிளிபர்ட், ஜேன் கொமாரோப், ஜோன் கொமாரோப், ஜேம்ஸ் பர்குசன், அகில் குப்தா, ஜோர்ஜ், சிட்னி மிண்ட்ஸ், மைக்கேல் தௌசிக், ஜேன் விண்செண்ட், மற்றும் எரிக் வூல்ப்.

தொடர்புள்ள தலைப்புக்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பாட்டு_மானிடவியல்&oldid=3076795" இலிருந்து மீள்விக்கப்பட்டது