பட்டம் (கல்வி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிக்குச் செல்லும் பொழுது அவர்கள் விரும்பும் துறையில் கல்வி கற்க முடிகிறது. இந்தக் கல்லூரிப் படிப்பில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பட்டம் அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டங்கள் அந்தக் கல்லூரி இணைக்கப்பட்டுள்ள பல்கலைக் கழகங்கள் வழியாக அளிக்கப்படுகிறது. பல்கலைக் கழகங்கள் அளிக்கும் பட்டங்கள் முக்கியமாக ஐந்து நிலையில் உள்ளது.

  1. இளம்நிலைப் பட்டம்
  2. முதுநிலைப் பட்டம்
  3. ஆய்வியல் நிறைஞர் பட்டம்
  4. முனைவர் பட்டம்
  5. மதிப்புறு முனைவர் பட்டம்

இளம்நிலைப் பட்டம்[தொகு]

பள்ளிப் படிப்பை நிறைவு செய்தவர்கள் கல்லூரிக்குச் சென்று முதலில் படித்துத் தேர்ச்சி அடையும் படிப்புகளுக்கு இளம்நிலைப் பட்டம் அளிக்கப்படுகிறது. இவை அவர்கள் படித்துத் தேர்ச்சி அடைந்த பாடங்களின் துறைப் பெயரைப் பின்னால் இணைத்து வழங்கப்பட்டு வருகிறது.

  • கலைப் பாடங்கள் - இளங்கலைப் பட்டம்
  • அறிவியல் பாடங்கள் - இளம் அறிவியல் பட்டம்
  • மருத்துவம் - இளம்நிலை மருத்துவம் பட்டம்
  • பொறியியல் - இளம்நிலை பொறியியல் பட்டம்
  • கால்நடை பராமரிப்பு - இளம்நிலை கால்நடை அறிவியல் பட்டம்
  • விவசாயம் - இளம்நிலை விவசாயம் பட்டம்
  • மீன் வளம் - இளம்நிலை மீன் வளர்ப்பு அறிவியல் பட்டம்
  • விளையாட்டு - இளம்நிலை உடற்பயிற்சிக் கல்வி பட்டம்

- இதுபோன்று ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக இளம்நிலைப் பட்டங்கள் அளிக்கப்படுகின்றன.

முதுநிலைப் பட்டம்[தொகு]

கல்லூரிப்படிப்பில் இளம்நிலைப் பட்டம் முடித்து மேற்படிப்பு படிப்பவர்கள் அந்நிலையில் தேர்ச்சி அடையும் போது முதுநிலை பட்டம் அளிக்கப்படுகிறது. இவையும் அவர்கள் படித்துத் தேர்ச்சி அடைந்த பாடங்களின் துறைப் பெயரைப் பின்னால் இணைத்தே வழங்கப்பட்டு வருகிறது.

  • கலைப் பாடங்கள் - முதுகலைப் பட்டம்
  • அறிவியல் பாடங்கள் - முதுநிலை அறிவியல் பட்டம்
  • மருத்துவம் - முதுநிலை மருத்துவம் பட்டம்
  • பொறியியல் - முதுநிலைப் பொறியியல் பட்டம்
  • கால்நடை பராமரிப்பு - முதுநிலை கால்நடை அறிவியல் பட்டம்
  • விவசாயம் - முதுநிலை விவசாயம் பட்டம்
  • மீன் வளம் - முதுநிலை மீன் வளர்ப்பு அறிவியல் பட்டம்
  • விளையாட்டு - முதுநிலை உடற்பயிற்சிக் கல்வி பட்டம்

- இதுபோன்று ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக முதுநிலைப் பட்டங்கள் அளிக்கப்படுகின்றன.

ஆய்வியல் நிறைஞர் பட்டம்[தொகு]

ஒவ்வொரு துறையிலும் முதல்நிலை ஆய்வுப் படிப்புகளில் சேர்ந்து அதில் தேர்ச்சி அடையும் போது ஆய்வியல் நிறைஞர் பட்டம் அளிக்கப்படுகிறது. இந்த ஆய்வியல் நிறைஞர் பட்டம் இளம் முனைவர் என்றும் சிலரால் குறிப்பிடப்படுகிறது.

முனைவர் பட்டம்[தொகு]

ஒவ்வொரு துறையிலும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் அதற்கு மேல்நிலைப் படிப்பாக முனைவர் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி அடையும் நிலையில் அவருக்கு முனைவர் பட்டம் அளிக்கப்படுகிறது. இப்படிப்புகளுக்கு ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெறாமல் முதுகலைப் பட்டம் பெற்று நேரடியாகச் சேரும் வாய்ப்பும் உள்ளது.

மதிப்புறு முனைவர்[தொகு]

ஒவ்வொரு துறையிலும் முனைவர் பட்டம் பெற்றவர் மேலும் அத்துறையில் விரிவான ஆய்வு செய்து அதில் வெற்றி பெறும் நிலையில் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் அளிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டம்_(கல்வி)&oldid=2213530" இலிருந்து மீள்விக்கப்பட்டது