படு கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படு
கான்
ஷாஹின்ஷா
ஜார்[1]
தங்க நாடோடிக் கூட்டத்தின் அரியணையில் படு கான்
ஆட்சி1227–1255
முடிசூட்டு விழா1224/1225 அல்லது 1227
முன்னிருந்தவர்சூச்சி
பின்வந்தவர்சர்தக்
அரசிபோரோக்சின் கதுன்
மரபுபோர்சிசின்
அரச குலம்தங்க நாடோடிக் கூட்டம்
தந்தைசூச்சி
தாய்கொங்கிராத்தின் உகா உஜின்
பிறப்பு1207 (1207)
மங்கோலியா
இறப்பு1255 (அகவை 47–48)
சரை படு

படு கான் [2] என்பவர் ஒரு மங்கோலிய ஆட்சியாளர் மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் (மங்கோலியப் பேரரசின் ஒரு பகுதி) தோற்றுவிப்பாளரும் ஆவார். இவர் சூச்சியின் மகனும், செங்கிஸ் கானின் பேரனும் ஆவார். கீவிய ருஸ், வோல்கா பல்கேரியா, குமனியா மற்றும் காக்கேசியாவை சுமார் 250 ஆண்டுகளுக்கு ஆண்ட இவரது உளூஸ் தங்க நாடோடிக் கூட்டத்தின் தலைமைப் பகுதியாகும். செங்கிஸ் கானின் மகன்களின் இறப்பிற்குப் பிறகு இவர் மங்கோலியப் பேரரசில் பெரிதும் மதிக்கப்பட்டார். இவர் அகா (அண்ணன்) என்று மங்கோலியப் பேரரசில் அழைக்கப்பட்டார்.

படு கானின் ஆரம்ப காலங்கள்[தொகு]

தனது மகன் சூச்சியின் இறப்பிற்குப் பிறகு செங்கிஸ் கான் சூச்சியின் நிலப்பரப்புகளை அவரது மகன்களுக்குக் கொடுத்தார். ஆனால் படுவைத் தங்க நாடோடிக் கூட்டத்தின் (இது சூச்சியின் உளூஸ் அல்லது கிப்சாக் கானேடு என்று அறியப்படுகிறது) கானாக நியமித்தார். சூச்சியின் மூத்த மகனான ஓர்டா கானும் படு தான் தன் தந்தைக்குப் பிறகு ஆட்சி செய்ய வேண்டும் என்று ஒத்துக்கொண்டார். செங்கிஸ் கானின் கடைசித் தம்பி தெமுகே முடிசூட்டு விழாவில் செங்கிஸ் கானின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார்.[3] 1227 இல் செங்கிஸ்கான் இறந்த போது அவர் 4000 மங்கோலிய வீரர்களை சூச்சியின் குடும்பத்திற்குக் கொடுத்தார். சூச்சியின் நிலப்பரப்புகள் படுவிற்கும் அவரது அண்ணன் ஓர்டாவிற்கும் இடையே பிரித்துக் கொள்ளப்பட்டன. ஓர்டாவின் அரசு வெள்ளை நாடோடிக் கூட்டம் என்று அழைக்கப்பட்டது. அவரது ஆளும் பகுதியானது தோராயமாக வோல்கா ஆறு மற்றும் பல்காஷ் ஏரிக்கு இடையே அமைந்திருந்தது. அதே நேரத்தில் படுவின் நாடோடிக் கூட்டமானது வோல்காவுக்கு மேற்கில் இருந்த பகுதிகளை ஆண்டது.

1229 இல் ஒக்தாயி 3 தியுமன் வீரர்களை குக்டே மற்றும் சன்டேயின் தலைமையின் கீழ் உரல் ஆற்றின் கீழ் பகுதிகளில் இருந்த பழங்குடியினரை வெல்ல அனுப்பினார். அபுல்கசி என்பவரது கூற்றுப்படி படு கான் ஒக்தாயியின் தலைமையில் வடக்கு சீனாவில் நடைபெற்ற சின் வம்ச படையெடுப்பில் கலந்து கொண்டார். அதே நேரத்தில் அவரது தம்பி பஷ்கிர்கள், கியுமன்கள் மற்றும் ஆலன்கள் ஆகியவர்களுடன் மேற்கில் போரிட்டுக் கொண்டிருந்தார். எதிரிகள் எதிர்ப்பைக் காட்டிய போதும் மங்கோலியர்கள் சுரசன்களின் முக்கிய நகரங்களை வென்றனர். பஷ்கிர்களைத் தங்களது கூட்டாளிகளாக ஆக்கினர். 1230களில் ஒக்தாயி சீனாவின் ஷான்க்ஷியில் உள்ள நிலப்பகுதிகளை படு மற்றும் சூச்சியின் குடும்பத்தினருக்கு பிரித்துக் கொடுத்தார். ஆனால் பாரசீகத்தின் குராசான் பகுதியைப் போலவே தனது அதிகாரிகளை ஒரு ஏகாதிபத்திய ஆளுநரின் கீழ் நியமித்தார்.[4]

ருஸ் படையெடுப்பு[தொகு]

மங்கோலிய ஜின் போரின் முடிவில் மங்கோலியாவில் நடந்த குறுல்த்தாயில் பெரிய கானான ஒக்தாயி மேற்கு நாடுகளின் மீது படையெடுக்குமாறு படுவிற்கு ஆணையிட்டார். 1235ல் இதற்கு முன்னர் கிரிமிய தீபகற்ப படையெடுப்பை நடத்திய படுவிடம் சாத்தியக்கூறாக 1,30,000 படைவீரர்களைக் கொண்ட ராணுவத்தைக் கொண்டு ஐரோப்பா மீது படையெடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இவரது உறவினர்களான குயுக், புரி, மோங்கே, குல்கேன், கதான், பைதர் மற்றும் குறிப்பிடத்தக்க மங்கோலியத் தளபதிகளான சுபுதை, போரோல்டை மற்றும் மெங்குசர் ஆகியோர் இவரது சித்தப்பா ஒக்தாயியின் ஆணைப்படி இவருடன் இணைந்தனர். உண்மையில் சுபுதை இந்த ராணுவத்தை வழிநடத்தினார். இந்த இராணுவமானது வோல்கா ஆற்றைக் கடந்து 1236ல் வோல்கா பல்கேரியா மீது படையெடுத்தது. வோல்கா பல்கேரியர்கள், கிப்சாக்குகள் மற்றும் ஆலன்கள் ஆகியவர்களது எதிர்ப்பை முறியடிக்க மங்கோலியர்களுக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது.

மங்கோலிய ராணுவத்தால் விளாடிமிர்-சுஸ்டாலின் தலைநகரம் அழிக்கப்படுதல் - நடுக்கால உருசிய நூல்களிலிருந்து

நவம்பர் 1237ல் படு கான் தனது தூதர்களை விளாடிமிர்-சுஸ்டாலின் இரண்டாம் யூரியின் அவைக்கு அனுப்பி அவர்களது ஆதரவைக் கேட்டார். யூரி சரணடைய மறுத்த போது மங்கோலியர்கள் ரியாசானை முற்றுகையிட்டனர். ஆறு நாட்கள் நடந்த ரத்தம் தோய்ந்த போருக்குப்பிறகு நகரம் முழுவதுமாக அழிக்கப்பட்டது. இத்தாக்குதலுக்குப் பிறகு நகரத்தால் அதன் முந்தைய நிலையை எப்போதும் அடைய முடியவில்லை. இந்த செய்தியை அறிந்த இரண்டாம் யூரி நாடோடிக்கு கூட்டத்தை பிடிப்பதற்காகத் தனது மகன்களை அனுப்பினார். ஆனால் அவர்கள் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டனர். கோலோம்னா மற்றும் மாஸ்கோவை எரித்த பிறகு நாடோடிக் கூட்டமானது பிப்ரவரி 4, 1238ல் விளாடிமிர்-சுஸ்டாலின் தலைநகரத்தை முற்றுகையிட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு அந்நகர் கைப்பற்றப்பட்டு எரித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. மன்னர் குடும்பம் நெருப்பில் அழிந்து போனது. இளவரசர் வடக்கு நோக்கிப் பின்வாங்கி ஓடினார். வோல்கா ஆற்றைக் கடந்து அவர் ஒரு புது ராணுவத்தைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் போரிட வந்தார். ஆனால் மார்ச் 4-ஆம் தேதி சிட் ஆற்றின் கரையில் நடந்த போரில் அவர்கள் மங்கோலியர்களால் மொத்தமாக அழிக்கப்பட்டனர்.

இதன்பிறகு படு கான் தனது ராணுவத்தை சிறு குழுக்களாகப் பிரித்தார். அக்குழுக்கள் 14 ருஸ் நகரங்களைச் சூறையாடின. அந்நகரங்கள்: ரோஸ்டோவ், உக்லிச், யரோஸ்லாவ், கோஸ்ட்ரோமா, கஷின், கிசின்யடின், கோரோடெட்ஸ், ஹலிச், பெரெஸ்லவ்ல்-சலெஸ்கி, யுரியேவ்-போல்ஸ்கி, டிமிட்ரோவ், வோலோகோலம்ஸ்க், ட்வெர், மற்றும் டோர்ஜோக். இதில் மங்கோலியர்களுக்குக் கடினமாக இருந்தது சிறு பட்டணமான கோசெல்ஸ்க் ஆகும். இளவரசச் சிறுவன் டைடஸ் மற்றும் வாசிகள் 7 வாரங்களுக்கு மங்கோலியர்களின் தாக்குதலைத் தாக்குப் பிடித்தனர். கதையின்படி மங்கோலியர்கள் வருகிற செய்தி அறிந்த உடனே கிடெஸ் நகரம் அனைத்து வாசிகளுடன் ஏரியில் மூழ்கியது. அதை நாம் இன்றும் காண முடியும். படு உடன் இணைந்த கதன் மற்றும் புரி மூன்றே நாட்களில் நகருக்குள் புகுந்தனர். அழிவில் இருந்து தப்பிய முக்கியமான நகரங்கள் ஸ்மோலென்ஸ்க், நோவ்கோரோட் மற்றும் பிஸ்கோ ஆகும். இதில் ஸ்மோலென்ஸ்க் மங்கோலியர்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்ட ஒப்புக்கொண்டது. மங்கோலியர்களால் பிஸ்கோ நகரத்தை அடைய முடியவில்லை. ஏனெனில் அது வெகு தொலைவில் இருந்தது மற்றும் இடையில் சதுப்பு நிலங்களும் இருந்தன.

தங்க நாடோடிக் கூட்டத்தின் வீரர்கள் சுஸ்டாலை முற்றுகையிடுகின்றனர்.

வெற்றி விருந்தில் படு ஒரு கிண்ண ஒயினை மற்றவர்களுக்கு முன்னதாகவே குடிக்கிறார். படு பரந்த மற்றும் வளமான புல்வெளியை பெற்றுக் கொண்டதாக புரி குற்றம் சாட்டுகிறார். குயுக் மற்றும் பிறர் சேர்ந்த மங்கோலிய ராணுவம் படுவை "தாடி உடைய வயதான பெண்மணி" என்று கூறுகின்றனர். பின்னர் விருந்தில் இருந்து வெளியேறுகின்றனர். படு தனது சித்தப்பா ஒக்தாயிக்குத் தூதுவர்களை அனுப்பி தன் உறவினர்களின் முரட்டுத்தனமான நடத்தையை தெரிவிக்கின்றார். இச்செய்தியைக் கேட்ட ஒக்தாயி கோபம் அடைகிறார். புரி மற்றும் குயுக்கைத் திரும்ப அழைக்கின்றார். சில ஆதாரங்களின்படி புரி தன் தாத்தா ஜகாடேயிடம் அனுப்பப்படுகிறார். மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பில் அவர் மீண்டும் கலந்து கொள்ளவே இல்லை. தந்தை ஒக்தாயி கடுமையாகக் கண்டித்த பிறகு குயுக் உருசியப் புல்வெளிக்குத் திரும்புகிறார்.

1238 ஆம் ஆண்டின் கோடை காலத்தில் படு கான் கிரிமியத் தீபகற்பத்தைத் தாக்கிக் கடும் சேதம் விளைவித்தார். மோர்டோவியா மற்றும் கிப்சாக்குகளின் கட்டுப்பாட்டில் இருந்த புல்வெளியை வென்றார். 1239 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் செர்னிகோவ் மற்றும் பெரெயஸ்லாவ் ஆகிய பகுதிகளை முற்றுகையிட்டார். பலநாள் முற்றுகைக்குப் பிறகு மங்கோலியர்கள் டிசம்பர் 1240ல் கீவுக்குள் நுழைகின்றனர். ஹலிச்சின் டானிலோ கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தபோதும் படு அந்த நிலப்பரப்பின் 2 முதன்மைத் தலைநகரங்களான ஹலிச் மற்றும் வோலோடிமிர்-வோலின்ஸ் கியி ஆகியவற்றை வென்றார். ருதேனிய குறுநில மன்னர்கள் மங்கோலியப் பேரரசின் கப்பம் கட்டுபவர்களாக ஆகின்றனர்.

நடு ஐரோப்பிய படையெடுப்பு[தொகு]

குமன் அகதிகள் ஹங்கேரிய ராஜ்ஜியத்தில் தஞ்சம் அடைகின்றனர். ஹங்கேரியின் மன்னர் நான்காம் பெலாவுக்கு குறைந்தது ஐந்து தூதர்களை படு அனுப்புகிறார் ஆனால் அவர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். கடைசியாக பெலாவிடம் குமன்களைத் திருப்பிக் கொடுக்குமாறு படு கேட்கிறார். பின்னர் ஒரு எச்சரிக்கையும் விடுக்கிறார்: "உன்னை விட குமன்கள் தப்பிப்பது எளிது... நீ வீடுகளில் வாழ்கிறாய் மற்றும் நிலையான நகரங்கள் மற்றும் கோட்டைகளை கொண்டுள்ளாய், எனவே எப்படி என்னிடம் இருந்து தப்பிப்பாய்"?[5] பிறகு "எல்லையில் இருக்கும் கடலை" அடைய படு முடிவு செய்கிறார், அதற்கு மேல் மங்கோலியர்களால் செல்ல முடியாது. எதிர்காலத்தில் தனது பகுதிகளுக்கு ஐரோப்பியர்களால் ஆபத்து வரக்கூடாது என படு நினைத்ததாக தற்கால வரலாற்று ஆசிரியர்கள் ஊகிக்கின்றனர். எனவே தான் தனது படைப்புகளை மேலும் விரிவுபடுத்த முடியும் என்று அவர் நினைத்தார். தனது படைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திய பிறகு மற்றும் தனது படைகளுடன் தயாரானவுடன் படு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்ற நினைத்தார் என்று பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர்.

பல்வேறு உருசிய இளவரச நாடுகளை அழித்த பிறகு ஐரோப்பாவின் இதய பகுதியை தாக்குவதற்கு தயாராவதற்காக சுபுதை மற்றும் படு ஆகியோர் போலந்து, ஹங்கேரி மற்றும் ஆஸ்திரியா வரை ஒற்றர்களை அனுப்பினர். ஐரோப்பிய சாம்ராஜ்யங்களை பற்றிய ஒரு தெளிவான கண்ணோட்டத்தை பெற்ற பிறகு அவர்கள் தாக்குவதற்கு அற்புதமாய் தயாரானார்கள். அனைத்திற்கும் படு கான் தான் தலைவர் ஆனால் ருஸ்ஸுக்கு எதிரான வடக்கு மற்றும் தெற்கு படையெடுப்புகளை போல சுபுதை தான் உண்மையான போர்க்கள தளபதி. மங்கோலியர்கள் ஐரோப்பாவை மூன்று குழுக்களாக தாக்கினர். ஒரு குழு போலந்தை தாக்கி அழிவை ஏற்படுத்தியது. நல்லோன் இரண்டாம் ஹென்றி, சிலேசியாவின் டியூக் மற்றும் டியூட்டோனிக் வரிசையின் தலைவர் ஆகியோர் தலைமை தாங்கிய ஒன்றிணைந்த படையை லெக்னிகா என்ற இடத்தில் தோற்கடித்தது. இரண்டாவது குழு கார்பேத்திய மலைகளை கடந்தது. மூன்றாவது குழு தன்யூப் ஆற்றை பின்தொடர்ந்தது. ராணுவங்கள் ஹங்கேரியின் சமவெளி பகுதிகளை கோடை காலத்தில் துடைத்தெடுத்தன. 1242 ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் உத்வேகம் பெற்ற அவர்கள் தங்களது கட்டுப்பாட்டை ஆஸ்திரியா மற்றும் டால்மேசியா ஆகிய இடங்களுக்கு நீட்டித்தனர். மேலும் மோரவாவை தாக்கினர்.

ஒக்தாயியின் மகன் கதான் மற்றும் சகதையின் மகன் பைதர் ஆகியோர் தலைமையிலான வடக்கு படையானது லெக்னிகா யுத்தத்தில் வெற்றி பெற்றது. குயுக் அல்லது புரியின் மற்றொரு ராணுவம் திரான்சில்வேனியாவில் வெற்றி பெற்றது. மக்யர்கள், குரோசியர்கள் மற்றும் டெம்ளர்கள் ஆகியோருக்கு எதிராக மற்றொரு வெற்றியை ஹங்கேரிய சமவெளியில் சுபுதை எதிர்பார்த்து காத்திருந்தார். 1241 இல் புஜெக் தலைமையிலான தாதர் (மங்கோலியர்) ராணுவம் காரா உலக் ("கருப்பு விலாச்கள்") ஐ கடந்தது; விலாச்கள் மற்றும் அவர்களுடைய தலைவர்களுள் ஒருவரான மிஸ்லாவ் ஆகியோரை புஜெக் தோற்கடித்தார்.[6] பெஸ்ட் முற்றுகைக்குப் பிறகு படுவின் ராணுவம் சஜோ ஆற்றுக்கு பின்வாங்கியது. ஏப்ரல் 11 ஆம் தேதி யுத்தத்தில் அரசர் நான்காம் பெலா மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு ஒரு பெரும் தோல்வியை கொடுத்தது. கதான், பைதர் மற்றும் ஓர்டா ஆகியோர் ஹங்கேரிக்கு சென்றனர். செல்லும் வழியில் மோராவியாவை தாக்கினர். மங்கோலியர்கள் ஹங்கேரியில் ஒரு தருகச்சியை நியமித்தனர். ககானின் பெயரில் நாணயங்களை அச்சிட்டனர்.[7] பெலாவின் நாடு ஓர்டாவிற்கு படுவால் ஒட்டு நிலமாக வழங்கப்பட்டது; குரோசியாவிற்கு தப்பி ஓடிய பெலாவை துரத்த படு கான் கதானை அனுப்பினார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

படு கான்
இறப்பு: 1255
அரச பட்டங்கள்
முன்னர்
சூச்சி
தங்க நாடோடிக் கூட்டத்தின் கான்
1227–1255
பின்னர்
சர்தக்
முன்னர்
சூச்சி
நீல நாடோடிக் கூட்டத்தின் கான்
1240–1255
பின்னர்
சர்தக்
"https://ta.wikipedia.org/w/index.php?title=படு_கான்&oldid=3727186" இலிருந்து மீள்விக்கப்பட்டது