திரிபுரசுந்தரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லலிதா திரிபுரசுந்தரி
துணைகாமேசுவரன்
குழந்தைகள்பிள்ளையார், முருகன்

திரிபுரசுந்தரி (சமஸ்கிருதம்: त्रिपुरा सुन्दरी, IAST: Tripura Sundarī) சக்தி வழிபாட்டு முறையின் முதன்மைக் கடவுள். இலலிதை, இராசராசேசுவரி முதலான பெயர்களிலும் அழைக்கப்படுபவள், பத்து மகாவித்யாக்களில் ஒருத்தியாவாள். ஸ்ரீவித்யா என்றழைக்கப்படும் இவளது முடிந்த முடிவே ஏனைய மகாவித்யாக்கள் ஆகும். ஆதிசக்தியின் மிகவுயர் அம்சமான லலிதையே பார்வதியாகத் திகழ்கின்றாள். தாய் குழந்தையுடன் விளையாடுவது போல, லலிதை தன் அடியவர்களுடன் விளையாடுகின்றாள். மாயையின் வடிவமானதால், அவளே, மகாமாயையும் ஆகின்றாள்.

வேர்ப்பெயரியல்[தொகு]

திரிபுரசுந்தரி என்பது, மூவுலகிலும் பேரழகி என்றும், லலிதா என்ற அவள் பெயர், அவள் திருவிளையாடல்கள் புரிபவள்[1] என்றும், இராசராசேசுவரி என்பது, அரசர்க்கெல்லாம் அரசி என்றும் பொருள்படும்.[2] பதினாறு பேறுகளையும் அருளும் இவள், பதினாறு வயது இளமடந்தையாக விளங்குவதால், சோடசி ஆகின்றாள். வடமொழியில் ஷோடசீ (षोडसी) என்பது பதினாறாகும்.

தொன்மம்[தொகு]

சிவனால் எரிக்கப்பட்ட காமனின் சாம்பலிலிருந்து தோன்றிய பண்டன் எனும் அரக்கன் சோணிதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பூவுலகை ஆண்டதுடன், தேவர்களையும் துன்புறுத்தி வந்தான். தேவர்களின் கோரிக்கைக்கிணங்க, தேவியும் ஈசனும், மகா காமேசுவரனாகவும், திரிபுரசுந்தரியாகவும் தேவர்கள் வளர்த்த சிதக்னி குண்டத்தில் தோன்றினர். காமனின் ஆயுதங்களான கரும்பு வில்லும் மலர்ப்பாணமும் தாங்கி தேவி தனது சேனை புடை சூழ பண்டனையும் அவனது படையையும் கொன்றொழித்தாள்.[3]

வழிபாட்டியல்[தொகு]

பேரழகின் இலக்கணமாக இலலிதையை சித்தரிப்பது வழக்கு. பாசம், அங்குசம், கரும்புவில், ஐம்மலர் அம்புகள் என்பன நாற்கரங்களில் தாங்கியவளாக, பிரமன், திருமால், உருத்திரன், மகேசுவரன் ஆகியோர் கட்டில் கால்களாக விளங்கும் அரியாசனத்தில், மகாகாமேசுவரனாகிய சதாசிவனின் மடியில் அமர்ந்து, அலைமகள், கலைமகள் கவரி வீச வீற்றிருப்பாள். அம்ருதகடலின் மத்தியிலுள்ள ஸ்ரீபுரம் எனும் ஸ்ரீசக்கர வடிவில் அமைந்த நகரில், இலலிதை வீற்றிருக்கின்றாள். அவளைச் சூழ அவளது அமைச்சரான மாதங்கி, படைத்தளபதியான அஸ்வாரூடை, வராகி முதலான சப்தமாதர், ஏனைய மகாவித்யாக்கள் போன்றோர் அமர்ந்திருக்கின்றனர். ஸ்ரீபுரத்தின் வடிவமாகத் திகழ்வதால், இலலிதையின் வழிபாட்டில், ஸ்ரீசக்கரம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. முப்பரிமாண வடிவில் ஸ்ரீசக்கரம் அமைக்கப்படும்போது அது "மகாமேரு" என்று அழைக்கப்படுகின்றது.

இலலிதையின் பேராயிரம் (லலிதா சகஸ்ரநாமம்) எனும் வடமொழி நூல், இலலிதையின் ஆயிரம் திருநாமங்களைச் சொல்லித் துதிக்கின்றது. இதை அன்றாடம் செபிக்கும்போது, அடியவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் அன்னையவள் நிறைவேற்றுவாள் என்பது நம்பிக்கை.[4]

தமிழகத்திலுள்ள காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில், இலலிதையின் முக்கியமான ஆலயங்களில் ஒன்றாகும். திரிபுராவிலுள்ள ராதாகிஷோர்பூர், மத்திய பிரதேசத்தின் காரியா முதலான இடங்களிலும் இத்தேவியின் ஆலயங்கள் அமைந்துள்ளன.

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  1. Frawley, David: "Tantric Yoga and the Wisdom Goddesses", page 89. Motilal Banarsidass Publishers, reprint 2005
  2. Danielou, Alain (1991). The Myths and Gods of India. Rochester, Vermont: Inner Traditions International. பக். 278. 
  3. D. R. Rajeswari (1989) "Sakti iconography - Page 31
  4. Dalal, Roshen (2010). The Religions of India: A Concise Guide to Nine Major Faiths. Penguin Books India. பக். 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-341517-6. http://books.google.com/books?id=pNmfdAKFpkQC&pg=PA207. 

நூலாதாரங்கள்[தொகு]

  • Brooks, Douglas R. (1990), The Secret of the Three Cities: An Introduction to Hindu Sakta Tantrism, Chicago & London: University of Chicago Press
  • Brooks, Douglas R. (1992), Auspicious Wisdom, Albany: State University of New York Press
  • Kinsley, David (1997), Tantric Visions of the Divine Feminine: The Ten Mahavidyas, New Delhi: Motilal Banarsidass, ISBN 978-0-520-20499-7
  • Kinsley, David. Hindu Goddesses: Vision of the Divine Feminine in the Hindu Religious Traditions. Berkeley: University of California Press, 1998.
  • Dikshitar, V.R. Ramachandra. The Lalita Cult. Delhi: Motilal Banarsidass Publishers Pvt Ltd, 1991.

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுரசுந்தரி&oldid=3601562" இலிருந்து மீள்விக்கப்பட்டது