டகேர் ஒளிப்பட முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1844ல் ஜான் பப்டிஸ் சபேட்டியேர் பிலோ என்பவரால் டகேர் முறையில் படம்பிடிக்கப்பட்ட லூயி டகேரின் ஒளிப்படம்

டகேர் ஒளிப்பட முறை அல்லது டாகுவேரியோ வகை ஒளிப்பட முறை (பிரெஞ்சு மொழி: daguerréotype) என்பது பொதுப் பயன்பாட்டிற்கு வந்த முதல் ஒளிப்படப்பிடிப்பு முறை ஆகும். ஏறத்தாழ 20 வருடங்கள் இம்முறையில் ஒளிப்படமெடுப்பது பிரபலமாகவிருந்தது.

லூயி ஜாக் மாண்டே டகேர் கண்டுபிடித்த இம்முறை 1839ம்[1][2][3] ஆண்டு உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டு 1960ம் ஆண்டளவில் பல புதிய, ஆக்கச் செலவு குறைந்த, காலவிரயம் குறைந்த ஒளிப்பட பிடிப்பு முறைகளின் வருகையால்  வழக்கொழிந்தது. மீண்டும் 20ம் நூற்றண்டின் இறுதி வருடங்களில் இம்முறை பழைய ஒளிப்படக் கலைகளில் ஆர்வமுள்ள சிலரால் மீட்டெடுக்கப்பட்டது.

டகேர் முறையில் ஒளிப்படமெடுக்க படப்பிடிப்பாளர் வெள்ளி பூசிய செப்புத் தகடொன்றை ஆடி போல் பளிச்சிட செய்து பின் அதை ஒளி உணர் தகடாக மாற்ற சில இரசாயனங்களின் ஆவியை அத்தகட்டின் மீது படிய விடுவார். பின் ஒளி உணர் திறன் கொண்ட அத்தகட்டை ஒரு ஒளிப்படக் கருவியினுள் செலுத்தி ஒளியின் முன் வெளிப்படுத்துவார். சுற்று சூழல் வெளிச்சத்தின் அளைவைப் பொறுத்து தகடு வெளிப்படுத்தப்படும் கால அளவு வேறுபடும். பிரகாசமான ஒளிக்கு சில நொடிகளும் குறைந்தளவு ஒளிக்கு சற்று கூடுதல் நொடிகளும் ஒதுக்கப்படும். இப்படிமுறைகள் மூலம் தகட்டில் பதியப்படும் படம் கண்களுக்குப் புலப்படாது. பாதரச ஆவி மூலம் தகடு சூடாக்கப்பட்டதும் படம் கண்களுக்குப் புலப்படும். பின் அத்தகட்டின் மேல் சில இரசாயனத் திரவங்கள் ஊற்றி அதன் ஒளி உணர் திறனை செயலிழக்கச் செய்து நீரில் கழுவி காய விடுவார். தகட்டிலிருந்து நன்றாக நீர் அகன்ற பின் படம் பதிந்த அத்தகட்டை ஒரு கண்ணாடி சட்டமிட்டு அல்லது வேறு முறைகளில் பாதுகாப்பார்.

டகேர் முறையில் படம் பிடிக்கும் போது காட்சியின் கோணம், படம்பிடிக்கப்படும் காட்சி அல்லது நபர்களின் மேல் விழும் ஒளியின் அளவு, சுற்று சூழல் ஒளியின் அளவு போன்றவைகளின் பாதிப்பால் நேர்முறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஒளிப்படங்கள் கிடைக்கப்பெறலாம். நேர்முறை ஒளிப்படங்களில் அதன் வண்ணங்கள் படம்பிடித்த காட்சியை ஒத்திருக்கும். எதிர் மறை அல்லது படல மறை ஒளிப்படங்களில் அதன் பிரகாசமான பகுதிகள் இருண்டதாகவும் இருண்ட பகுதிகள் பிரகாசமாகவும் இருக்கும். டகேர் ஒளிப்படங்களின் இருண்ட பகுதிகள் வெள்ளியாக இருப்பதோடு பிரகாசமான பகுதிகள் நுண்ணிய ஒளி தெறிக்கும் இழைகளைக் கொண்டிருக்கும். இவ்வொளிப்படத் தகடு மென்மையான மேற்பரப்பைக் கொண்டதாக இருக்கும். இலேசாக தேய்த்தால் கூட நிரந்தரமான கீறல் மேற்பரப்பில் விழும். ஆகையினாலேதான் இவ்வொளிப்படத் தகட்டை ஒரு கண்ணாடி சட்டத்தினுள் இட்டு பாதுகாக்கப்படுகிறது.

பல முற்கால ஒளிப்படங்கள், தாளில் அச்சிடப்பட்ட புகைப்படங்கள் போன்றவை டகேர் முறை ஒளிப்படங்கள் எனத் தவறாக அடையாளப்படுத்தப்படுகின்றன. டகேர் முறை எனும் சொல் 1840களின் ஆரம்பத்திலும் 1850களின் இறுதியிலும் பயன்படுத்தப்பட்டத் தொழில்நுட்பத்தையும் அதன் தனித்தன்மை வாய்ந்த ஒளிப்பட வகை, ஊடகம் ஆகியவற்றையும் குறிக்கிறது.

வரலாறு[தொகு]

இருட்படப்பெட்டி, 17ம் நூற்றாண்டு

ஐரோப்பிய மறுமலர்ச்சி காலம்தொட்டே பல கலைஞர்கள் காட்சிகளைத் தொழில்நுட்ப கருவிகளின் மூலம் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வந்தனர். அக்காலத்தில் படப்பிடிப்பு கருவியாக இருட்படப்பெட்டி இருந்தது. காட்சிகளின் மீது பட்டுத் தெறிப்படையும் ஒளியை இருட்படப்பெட்டியூடாக செலுத்தி மறுபுறம் ஒரு திரையிலோ அல்லது சுவற்றிலோ அக்காட்சியின் விம்பத்தை விழச் செய்வதன் மூலம் படம் பெறப்பட்டது. திரையில் அல்லது சுவரில் விழுந்த அப்படத்தைப் பார்த்து ஓவியக் கலைஞர்கள் படியெடுத்தனர். இவ்வாறு படியெடுப்பதன் மூலம் இருபரிமாண ஓவியமொன்றில் நீளம், அகலம், காட்சிக் கோணம் போன்றவற்றைத் தெளிவாகக் காட்ட முடியும். அத்தோடு ஓவியத்திற்குத் தேவையான சரியான துல்லியமான வண்ணங்களையும் இதன் மூலம் வழங்க முடியும். இவ்வுத்தி மேற்கத்தைய ஓவியங்களில் பிரபலமடந்ததால் தங்களது ஓவியங்களை மேம்பட்ட நாகரிகப் படைப்புகளாகக் கருதினர். எனினும் பிற்காலத்தில் ஓவியத்துறையில் நவீனத்துவம் புகுந்ததால் கீழைத்தேய ஓவியங்கள் மீண்டும் செல்வாக்கு பெற்றன. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இத்தாலிய வேதியியலாளரான ஏஞ்சலோ சாலா வெள்ளி நைத்திரேற்றுத் தூள் சூரிய ஒளியினால் கருகியதாக எழுதியிருந்தார். எனினும் அது பற்றி அவர் மேலதிக ஆராய்ச்சி செய்ததாகத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

அயோடின், புரோமின், குளோரின் ஆகிய தனிமங்களின் கண்டுபிடிப்பு வெள்ளி வேதியியல் சேர்வைகளை அடிப்படையாகக் கொண்ட ஒளிப்படப்பிடிப்பில் முக்கிய பங்கு வகித்தது.

படங்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]


  1. வெள்ளித்திரை (ஆங்கிலம்) 1998, பக்கம் 12, பேட்ஸ் லோரி & இசபெல் பெரட் லோரி கெட்டி பதிப்பகம். ISBN 0-89236-536-6.
  2. Encyclopedia of Nineteenth-Century Photography (2013) பக்கம் 365, ஆசிரியர் ஜோன் ஹன்னவி, ரூட்லெட்ஜ் பதிப்பகம், ISBN 1-135-87326-7
  3. The 100 Most Influential Inventors of All Time (The Britannica Guide to the World's Most Influential People) (100 சிறந்த கண்டுபிடிப்பாளர்கள்) (2009) பக்கம் 77, ஆசிரியர் ராபர்ட் கர்ட்லி, பிரிட்டானிக்கா கல்விப் பதிப்பகம், ISBN 1-61530-003-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=டகேர்_ஒளிப்பட_முறை&oldid=2948648" இலிருந்து மீள்விக்கப்பட்டது