சர்காசோக் கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்காசோக் கடலின் மேற்கில் வளைகுடா நீரோட்டம், வடக்கில் வட அத்திலாந்திக் நீரோட்டம், கிழக்கில் கனரி நீரோட்டம், தெற்கில் வட அத்திலாந்திக் நிலநடுக்கோட்டு நீரோட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

சர்காசோக் கடல் (Sargasso Sea) என்பது நான்கு நீரோட்டங்களால் சூழப்பட்டு பெருங்கடற் சுழலோட்டமாக உருவான, வட அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பகுதி ஆகும்.[1] கடல் என்று அழைக்கப்படும் பிறவற்றைப் போலன்றி இதற்கு நில எல்லைகள் கிடையாது.[2][3][4] தனித்துவமான மண்ணிறமான சர்காசம் கடற்களைகளும், பெரும்பாலும் அமைதியான நீல நிறமான நீரும் இக்கடலை அத்திலாந்திக் பெருங்கடலின் பிற பகுதிகளில் இருந்து வேறுபடுத்துகின்றன.[1]

இக்கடலின் மேற்கில் வளைகுடா நீரோட்டம், வடக்கில் வட அத்திலாந்திக் நீரோட்டம், கிழக்கில் கனரி நீரோட்டம், தெற்கில் வட அத்திலாந்திக் நிலநடுக்கோட்டு நீரோட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன. மேற்படி நீரோட்டங்களால் உருவான மணிக்கூட்டுத் திசைச் சுழற்சியுடன் கூடிய பெருங்கடல் நீரோட்டத் தொகுதி வட அத்திலாந்திக் சுழலோட்டம் என அழைக்கப்படுகின்றது. இது மேற்கில் 70° க்கும் 40° க்கும் இடையிலும், வடக்கில் 20° க்கும் 35° க்கும் இடையிலும் பரந்துள்ளதுடன், இது ஏறத்தாழ 1,100 கிமீ (700 மைல்) அகலமும், 3,200 கிமீ (2,000 மைல்) நீளமும் கொண்டுள்ளது.[5][6] பேர்முடா இக்கடலின் மேற்கு எல்லையை அண்டி அமைந்துள்ளது.[7]

மேற்குறித்த எல்லா நீரோட்டங்களும் தாம் கொண்டுவரும் கடற் தாவரங்களையும், குப்பைகளையும் இக்கடலுக்குள் விடுகின்றன. ஆனாலும், சர்காசோக் கடல் நீர் ஆழமான நீல நிறத்தை உடையதாகவும், விதிவிலக்காகத் தெளிவானதாகவும் காணப்படுகின்றது. இதனால் இதன் நீரடிப் பார்வைத் தன்மை 61 மீ (200 அடி) வரை உள்ளது.[8] இக்கடல் மக்களின் கற்பனையையும் தன்பால் ஈர்த்துள்ளது. இதனால், பலவகையான இலக்கிய ஆக்கங்களிலும், கலைப் படைப்புக்களிலும், பரந்த பொதுமக்கள் பண்பாட்டிலும் இக்கடல் இடம் பிடித்துள்ளது.[9]

வரலாறு[தொகு]

15 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அசோரசுத் தீவுகளிலும், வட அத்திலாந்திக் சுழலோட்டப் பகுதியிலும், கடற்களைகள் அதிகமாகக் காணப்படும் தீவுக்கூட்டத்தைச் சூழவும் அதன் மேற்கிலும் போர்த்துக்கேயரின் நடவடிக்கைகள் தொடங்கின.[10] அக்காலத்திலேயே சர்காசம் கடற்களைகளின் பெயரைத் தழுவி சர்காசோ கடலுக்கு அப்பெயர் வழங்கப்பட்டது. இருந்தாலும், இக்கடல் முந்திய காலக் கடலோடிகளுக்கும் தெரிந்திருக்கக்கூடும். தற்போது கிடைக்காத கிமு ஐந்தாம் நூற்றாண்டில் கார்த்தேசு நகரைச் சேர்ந்த கடலோடி இமில்க்கோ எழுதிய ஆக்கம் ஒன்றைச் சான்றுகாட்டி, அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பகுதியைக் கடற்களைகள் மூடியிருந்ததாக நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ரூஃபுசு ஃபெசுட்டசு ஏவியெனசு என்பவர் தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.[11]

சூழலியல்[தொகு]

சர்காசம் என்னும் பேரினத்தைச் சேர்ந்த கடற்களைகள் சர்காசோக் கடலில் காணப்படுகின்றன. இவை பெருமளவில் கடல் மேற்பரப்பில் மிதந்துகொண்டு இருக்கின்றன. இவை கப்பற் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதில்லை. பாய்க் கப்பல்கள் இப்பகுதியில் மாட்டிக்கொண்டது குறித்த நிகழ்வுகள் வடகோடி அமைதிப் பகுதியில் காற்றுக் குறைவாக இருந்ததால் ஏற்பட்டவை.[12]

ஐரோப்பிய விலாங்கு, அமெரிக்க விலாங்கு போன்ற விலாங்கு இனங்கள் முட்டையிடுவதற்காகப் புலம் பெயர்வதில் சர்காசோக் கடலுக்கு ஒரு பங்கு உண்டு. இவை சர்காசோக் கடலில் குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் வளர்ந்ததும் அவை ஐரோப்பாவுக்கோ, வட அமெரிக்காவின் கிழக்குக் கரைக்கோ செல்கின்றன. முதிர்ச்சியடைந்த விலாங்குகள் முட்டையிடுவதற்காக மீண்டும் சர்காசோக் கடலை நோக்கி வருகின்றன. முட்டையில் இருந்து வெளிவந்ததும், இளம் பெருந்தலைக் கடலாமைகள் வளைகுடா நீரோட்டம் போன்ற நீரோட்டங்களைப் பயன்படுத்திச் சர்காசோக் கடலுக்குப் பயணம் செய்கின்றன என்றும், கொன்றுண்ணிகளிடம் இருந்து தப்புவதற்காக, முதிச்சி அடையும்வரை கடற்களைகளிடையே மறைந்து வாழ்கின்றன என்றும் நம்புகின்றனர்.[13][14]

2000 ஆவது ஆண்டுத் தொடக்கத்தில், கடலின் நுண்ணுயிர்ப் பல்வகைமை பற்றி மதிப்பீடு செய்வதற்காகச் செய்யப்பட்ட உலகப் பெருங்கடல் மாதிரிமுறை ஆய்வின் ஒரு பகுதியாக சர்காசோக் கடலும் ஒரு மாதிரியாகக் கொள்ளப்பட்டது. முன்னைய கோட்பாடுகளுக்கு மாறாக இக்கடலில் பலவகையான முதல்நிலை உயிரினங்கள் வாழ்வது கண்டறியப்பட்டது.[15]

மாசடைவு[தொகு]

மேற்பரப்பு நீரோட்டம் காரணமாகச் சர்காசோக் கடலில் ஏராளமான மக்கி அழியாத நெகிழிக் கழிவுகள் குவிகின்றன.[16][17] இந்தப் பகுதியில் மிகப் பெரிய வட அத்திலாந்திக் குப்பைத் திட்டு உருவாகியுள்ளது.[18] பல நாடுகளும், அரசு சார்பற்ற நிறுவனங்களும் சர்காசோக் கடலைப் பாதுகாப்பதற்காக இணைந்துள்ளன.[19] இந்த நோக்கத்துக்காக, அசோரசு (போர்த்துக்கல்), பேர்முடா (ஐக்கிய இராச்சியம்), மொனாக்கோ, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் இணைந்து, 2014 மார்ச் 11 அன்று சர்காசோக் கடல் ஆணையகம்[20] ஒன்றை நிறுவியுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Stow, Dorrik A.V. (2004). Encyclopedia of the Oceans. Oxford University Press. பக். 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0198606871. https://books.google.com/books?isbn=0198606877. பார்த்த நாள்: 27 June 2017. 
  2. NGS Staff (27 September 2011). "Sea". nationalgeographic.org. National Geographic Society. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017. ...a sea is a division of the ocean that is enclosed or partly enclosed by land...
  3. Karleskint, George (2009). Introduction to Marine Biology. Boston MA: Cengage Learning. பக். 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780495561972. https://books.google.com/?id=0JkKOFIj5pgC&pg=PA47. பார்த்த நாள்: 7 January 2017. 
  4. NOS Staff (25 March 2014). "What's the Difference between an Ocean and a Sea?". Ocean Facts. Silver Spring MD: National Ocean Service (NOS), National Oceanic and Atmospheric Administration (NOAA). பார்க்கப்பட்ட நாள் 7 January 2017 – via OceanService.NOAA.gov.
  5. "Sargasso Sea". oceanfdn.org. The Ocean Foundation. 14 September 2015. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.
  6. Weatheritt, Les (2000). Your First Atlantic Crossing: A Planning Guide for Passagemakers (4th ). London: Adlard Coles Nautical. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781408188088. https://books.google.com/books?isbn=1408188082. பார்த்த நாள்: 27 June 2017. 
  7. Webster, George (31 May 2011). "Mysterious waters: from the Bermuda Triangle to the Devil's Sea". CNN. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.
  8. "Sargasso Sea". World Book 15. Field Enterprises Educational Corp.. 
  9. Heller, Ruth (2000). A Sea Within a Sea: Secrets of the Sargasso. Price Stern Sloan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-448-42417-0. https://archive.org/details/seawithinseasecr00hell. 
  10. "The Sargasso Sea". BBC - Homepage. BBC. Archived from the original on 19 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 6 June 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  11. Various Authors (2016). The Historians' History of the World in Twenty-Five Volumes: Israel, India, Persia, Phoenicia, Minor Nations of Western Asia, Vol. II. Library of Alexandria. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781465608017. https://books.google.com/books?id=sPFADAAAQBAJ. 
  12. "Sargasso". Straight Dope. August 2002. Archived from the original on 2008-08-29. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.
  13. "Turtles return home after UK stay". BBC News. 30 June 2008. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7477519.stm. பார்த்த நாள்: 23 May 2010. 
  14. "Satellites track turtle 'lost years'". BBC News. 5 March 2014. https://www.bbc.com/news/science-environment-26435342. பார்த்த நாள்: 5 March 2014. 
  15. Venter, JC; Remington, K; Heidelberg, JF (April 2004). "Environmental genome shotgun sequencing of the Sargasso Sea". Science 304 (5667): 66–74. doi:10.1126/science.1093857. பப்மெட்:15001713. 
  16. "The Trash Vortex (2008)". Greenpeace. Archived from the original on 11 ஜனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 20 April 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  17. "The trash vortex (2014)". Greenpeace.
  18. Wilson, Stiv J. (16 June 2010). "Atlantic Garbage Patch". Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 27 June 2017.
  19. Shaw, David (27 May 2014). "Protecting the Sargasso Sea". Science & Diplomacy 3 (2). http://www.sciencediplomacy.org/letter-field/2014/protecting-sargasso-sea. 
  20. "Sargasso Sea Commission". sargassoalliance.org. Archived from the original on 31 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்காசோக்_கடல்&oldid=3537638" இலிருந்து மீள்விக்கப்பட்டது