கோய்சான் மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோய்சான்
Khoesaan
புவியியல்
பரம்பல்:
கலகாரி பாலைவனம், மத்திய தான்சானியா
மொழி வகைப்பாடு: (வசதிக்காக)
துணைப்பிரிவு:
குவாடி–கோ
க்சா
தூ
சாந்தாவே
ISO 639-2 and 639-5: khi

கோய்சான் மொழிகளின் பரம்பலைக் காட்டும் நிலப்படம் (மஞ்சள்)

கோய்சான் மொழிகள் (Khoisan languages) என்பவை முன்னர் யோசேப் கிரீன்பர்க்கினால் ஒன்றாக வகைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க மொழிகளின் தொகுதி ஆகும்.[1][2] பிற ஆப்பிரிக்க மொழிக் குடும்பங்களில் காணப்படாத "கிளிக்" மெய்யொலிகளைக் கோய்சான் மொழிக்குடும்பத்தில் காணலாம். 20 ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியிலும், இம்மொழிகள் ஒன்றுக்கொன்று மரபுவழித் தொடர்புகளைக் கொண்டவையாகக் கருதப்பட்டன. ஆனால், இப்போது இக்கருத்தை அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவை இப்போது வேறுவேறான மூன்று மொழிக் குடும்பங்களையும், இரண்டு தனி மொழிகளையும் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.

இக்குடும்பத்தில் உள்ள இரண்டு மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகள் அனைத்தும் தெற்கு ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டவை. இவற்றை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். கோய் குடும்பம், பான்டு விரிவாக்கத்துக்குக் குறுகிய காலத்துக்கு முன்னரே தெற்கு ஆப்பிரிக்காவுக்குள் வந்ததாகத் தெரிகிறது.[3] இன அடிப்படையில் இக்குடும்ப மொழிகளைப் பேசுவோர் கோய்கோய், சான் (புசுமன்) ஆகிய இனங்களைச் சேர்ந்தோராவர். கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு மொழிகளான சந்தாவே, அட்சா என்பற்றை முன்னர் கோய்சான் மொழிக் குடுப்பத்துள் வகைப்படுத்தியிருந்தனர். ஆனால், இம்மொழிகளைப் பேசுவோர் கோய்கோய் இனத்தவரோ சான் இனத்தவரோ அல்ல.

பான்டு விரிவாக்கத்துக்கு முன்னர் கோய்சான் மொழிகளும், அவை போன்ற மொழிகளும் தெற்கு ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்காவிலும் முழுவதுமாகப் பரவி இருந்திருக்கக்கூடும். அவர்கள் இப்போது முக்கியமாக நமீபியாவையும் பொட்சுவானாவையும் சேர்ந்த கலகாரி பாலைவனப் பகுதியிலும், மத்திய தான்சானியாவில் உள்ள பிளவுப் பள்ளத்தாக்குப் பகுதியிலும் அடங்கி விட்டனர்.[2]

பெரும்பாலான மொழிகள் அருகும் நிலையில் (endangered) உள்ளவை. பல அழியும் நிலையில் உள்ளன அல்லது ஏற்கெனவே அழிந்துவிட்டன. பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்தாவணங்கள் கிடையா. பரவலாகக் காணப்படும் ஒரே மொழி நமீபியாவில் உள்ள கோய்கோய் (அல்லது நாமா) மொழியாகும். ஏறத்தாழக் கால் மில்லியன் மக்கள் இந்த மொழியைப் பேசுகின்றனர். 40 - 80,000 மக்களைக் கொண்ட, தான்சானியாவில் உள்ள சாந்தாவே மொழி எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய மொழி. இம்மொழி பேசுவோரில் சிலர் ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர்கள். வடக்கு கலகாரியில் உள்ள 16,000 அளவிலான மக்கள் குங் மொழியைப் பேசுகின்றனர். நரோ மொழியைப் பேசும் 20,000 பேர் மத்தியில் மொழிப் பயன்பாடு வலுவாகவே உள்ளது. இவர்களில் அரைப் பங்கினர் இம்மொழியை இரண்டாம் மொழியாகவே பேசுகின்றனர்.

முதல் ஒலியாகக் "கிளிக்" மெய்களின் பயன்படுத்துவதனால் கோசிய மொழிகள் பெரிதும் அறியப்பட்டவையாக உள்ளன. இவை பொதுவாக ǃ, ǂ ஆகியவற்றால் குறித்துக் காட்டப்படுகின்றன. நாக்கை இரண்டு விதங்களாக அசைத்து கிளிக் ஒலிகளை எழுப்பக்கூடியதாக இருப்பதால் கிளிக்குகள் பல்வேறு மெய்யொலிகளைக் கொடுக்கக்கூடியவையாக உள்ளன. இதன் விளைவாக கோய்சான் மொழிகளே உலகில் அதிக எண்ணிக்கையான மெய்யொலிகளைக் கொண்டவையாக உள்ளன. சுஓவான் மொழியில் (Juǀʼhoan) 48 கிளிக் மெய்யொலிகளும் ஏறத்தாழ அதே எண்ணிக்கையான கிளிக் அல்லாத மெய்யொலிகளும் உள்ளன. ǃXóõ, ǂHõã ஆகிய மொழிகள் கூடுதல் சிக்கல் தன்மை கொண்டவை.

இலக்கண அடிப்படையில் தெற்கு கோய்சான் மொழிகள், பல உட்பிணைப்பு உருபன்களைக் கொண்ட பிரிநிலை மொழிகள். ஆனால், இவை தான்சானியாவில் உள்ள கிளிக் மொழிகளில் உள்ள அளவுக்கு இல்லை.

ஏற்புடைமை[தொகு]

யோசேப் கிரீன்பர்க்கின் வகைப்பாட்டில் (1949–1954, திருத்தம் 1963) கோய்சான் ஆப்பிரிக்க மொழிக்குடும்பங்கள் நான்கில் ஒன்றாக முன்மொழியப்பட்டது. ஆனால், கோய்சான் மொழிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளவர்கள் இக்குடும்ப மொழிகளிடையே ஒருமைப்பாடு இருப்பதை மறுக்கின்றனர். அத்துடன், மொழியியல் ஏற்புடைமை எதுவும் இன்றி, வசதிக்காக மட்டுமே கோய்சான் என்னும் சொல் அவர்களால் பயன்படுத்தப்படுகின்றது.[4][5] தூ (Tuu), க்சா (Kx'a) ஆகிய மொழிக் குடும்பங்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் மரபியல் தொடர்புகள் அன்றித் தெற்கு ஆப்பிரிக்கப் பிரதேசம் சார்ந்த புவியியல் நெருக்கத்தால் ஏற்பட்டவை ஆகும். அதேவேளை கோ குடும்பம் இப்பகுதிக்கு அண்மையில் வந்தது. இக்குடும்பம் கிழக்கு ஆப்பிரிக்காவின் சாந்தாவே மொழியுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Greenberg, Joseph H. 1955. ''Studies in African Linguistic Classification.'' New Haven: Compass Publishing Company. (Reprints, with minor corrections, a series of eight articles published in the ''Southwestern Journal of Anthropology'' from 1949 to 1954.)
  2. 2.0 2.1 Barnard, A. (1988) 'Kinship, language and production: a conjectural history of Khoisan social structure', Africa: Journal of the International African Institute 58 (1), 29–50.
  3. 3.0 3.1 Güldemann, Tom and Edward D. Elderkin (forthcoming) 'On external genealogical relationships of the Khoe family. பரணிடப்பட்டது 2009-03-25 at the வந்தவழி இயந்திரம்' In Brenzinger, Matthias and Christa König (eds.), Khoisan Languages and Linguistics: the Riezlern Symposium 2003. Quellen zur Khoisan-Forschung 17. Köln: Rüdiger Köppe.
  4. Bonny Sands (1998) Eastern and Southern African Khoisan: Evaluating Claims of Distant Linguistic Relationships. Rüdiger Köppe Verlag, Cologne
  5. Gerrit Dimmendaal (2008) "Language Ecology and Linguistic Diversity on the African Continent", in Language and Linguistics Compass 2(5)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோய்சான்_மொழிகள்&oldid=2749667" இலிருந்து மீள்விக்கப்பட்டது