ஈக்குசெட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈக்குசெட்டம்
கூம்புகள்

ஈக்குசெட்டம் (Equisetum) என்பது மிகவும் பழங்காலத் தாவரம் ஆகும். இது சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிகளவில் வாழ்ந்தன. இது ஈக்குசெட்டேசி (Equisetaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சில இனங்கள் 30 மீட்டர் உயரம் கொண்ட மரங்களாகவும் இருந்தன. அவை அழிந்து விட்டன. சில மட்டும் இன்று வரை உள்ளன. ஆகவே இதை உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் புதை படிவத் தாவரம் ( Living Fossil) என்கின்றனர்.

வளரியல்பு[தொகு]

நீர் நிலைகள், சதுப்பு பகுதிகள் போன்ற இடங்களில் வளர்கின்றன. இது 10 செ.மீ முதல் 15 அடி உயரம் வரை வளரும். இதன் தண்டானது கணு கணுவாக இருக்கும். ஒவ்வொரு கணுவும் 2 செ.மீ முதல் 30 செ.மீ நீளம் கொண்டது. கணுக்களில் பல சிறு கிளைகள் தோன்றும்.இதைப் பார்க்கும் போது குதிரையின் வால் போல் காட்சித் தரும்.ஆகவேதான் இவைகளுக்கு குதிரைவால்(Horsetail) செடி என பெயர் வைத்துள்ளனர்.

சிற்றினம்[தொகு]

ஈக்குசெட்டம் என்னும் பேரினத்தில் 23 சிற்றினங்கள் உள்ளன .இவை உலகின் பல பகுதிகளில் வளர்கின்றன.இவற்றில் ஈக்குசெட்டம் ஹைமலே,ஈக்குசெட்டம் புளுவிடைல்,ஈக்குசெட்டம் மைரியோசெட்டம் மற்றும் ஈக்குசெட்டம் ஆர்வன்ஸ் ஆகியவை முக்கியமானவை ஆகும்.

ஈக்குசெட்டம் ஹைமலே[தொகு]

ஈக்குசெட்டம் ஹைமலே(Equisetum hyemale) என்கிற தாவரம் வட அமெரிக்கா,ஐரோப்பா ,வடக்கத்திய ஆசியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.இதை கரடு முரடான குதிரைவாலி ,பாம்பு புல் என் அழைக்கின்றனர்.கடல் மடத்தில் இருந்து 2530 மீட்டர் உயரத்திலும் வளர்கின்றன.ஏரி ,குளம் மற்றும் நீரோடைகளைச் சுற்றி இது வளர்ந்து இருப்பதைக் காணலாம்.இவை 3 அடி உயரம் வரை வளரும்.நாணல் போன்ற தண்டு உடையது.தண்டிலிருந்து இசைக் கருவிகள் செய்கின்றனர்.

ஈக்குசெட்டம் புளுவிடைல்[தொகு]

ஈக்குசெட்டம் புளுவிடைல் (Equisetum fluviatile) என்கிற தாவரம் மிகவும் பழங்காலத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும்.இதை நீர் குதிரைவாலி என்கின்றனர்.இதன் தண்டு தடிமனனாது .இது அடர் பச்சை நிறமும்,80 சதவீதம் வெற்றிடமும் கொண்டது.இத்தாவரம் 2-3 அடி உயரம் வரை வளரும்.ஆண்,பெண் தண்டுகள் தனித்தனியானவை.ஆனால் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தெரியும்.

ஈக்குசெட்டம் மைரியோசெட்டம்[தொகு]

ஈக்குசெட்டம் மைரியோசெட்டம்(Equisetum myriochaetum) என்கிற தாவரம் மெக்சிகோவைத் தாயகமாகக் கொண்டுள்ளது .இது புல் போன்றது.15 அடி உயரம் வரை வளரும்.சில சமயங்களில் 24 அடி உயரம் வரை வளரக்கூடியது.உயிருள்ள குதிரைவாலிகளில் மிகப் பெரியது.ஆகவே மிகப் குதிரைவாலி (Giant horesetail)என இதற்குப் பெயர்.

ஈக்குசெட்டம் ஆர்வன்ஸ்[தொகு]

ஈக்குசெட்டத்தில் பல்வேறு இனங்கள் உள்ளன.அவற்றில் ஒன்று ஈக்குசெட்டம் ஆர்வன்ஸ் ( Equisetum arvense) என்பதாகும்.இது வட அமெரிக்கா,நார்வே,சுவீடன்,பின்லாந்து,இந்தியா ,ஈரான்,சிலி,பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இயற்கையாக வளர்கின்றன. இதை குதிரைவால் செடி, சூனிய சுல்தான், பாம்பு புல் என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.இது வித்தியாசமான தோற்றம் உடையது.ஆகவே இதை சூனியக்காரச் செடி என்று கூறுவதும் உண்டு.சில இடங்களில் பீடைச் செடி என்கின்றனர்.இந்த இனத்திற்கு 108 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.

இச்செடியின் அடியில் மட்டத்தண்டு கிழங்கு(Rhizomatous stem) உள்ளது.ஒவ்வொரு கணுவிலும் 4-8 செதில் இலைகள் காணப்படுகின்றன.இலையின் கக்கங்களில் இருந்து சிறிய கிளைகள் உண்டாகும்.அதன் குறுகிய தண்டின் நுனிகளில் ஸ்பொராஞ்சியங்கள் உண்டாகின்றன.இந்த அமைப்பிற்கு ஸ்ட்ரோபிலா (Strobila)என்று பெயர். இதன் உள்ளே ஸ்போர்கள் என்னும் விதை துகள்கள் உள்ளன.ஸ்போர்கள் எல்லாம் ஒரே மாதிரியானவை.ஸ்பொராஞ்சியங்கள் வெடித்து ஸ்போர்கள் வெளிவரும்.ஸ்போர்கள் நெடுங்காலம் ஓய்வு நிலையில் இருக்கும்.நீர் மெல்லிய படலமாக இருக்கும் இடங்களில் ஸ்போர்கள் முளைக்கத் தொடங்கும்.

தீ மற்றும் நோய் போன்ற காரணங்களால் தாவரம் பாதிக்கும் போது இதை அப்புறப்படுத்தினால்,உடனே புதிய தாவரம் இதன் மட்டத் தண்டுக் கிழங்கில் இருந்து தோன்றிவிடும்.இதை வீடுகளில் அழகிற்காகவும் வருகின்றனர்.ஈரம் நிறைந்த இடங்களில் இதனை நட்டால் அந்த இடத்தில் உள்ள ஈரத்தை உறிஞ்சிவிடும்.

இதன் கணுக்களில் 10 சதவீதம் சிலிக்கான் உள்ளது. இது தவிர பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன.ஆகவே செடியின் தண்டினைக் கொண்டு உலோகப் பாத்திரங்கள்,சமையல் பாத்திரங்கள்,டின்கள் போன்றவைகளைத் துலக்குவதற்குப் பயன்படுத்துகின்றனர்.ஆகவே இதனைப் பாத்திரம் சுத்தம் செய்யும் தாவரம் என்கின்றனர்.

பயன்[தொகு]

இச்செடியைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் டீ தயாரிக்கின்றனர்.இதன் இளம் குருத்தை ஜப்பான் மற்றும் கொரியாவில் காய்கறியாகச் சமைக்கின்றனர்.இதில் வைட்டமின் A,E,C ஆகியனவும் உள்ளன. நீரில் கொதிக்க வைத்து குளிக்கின்றனர் .இது தோல் வியாதி, சிறுநீரகப் பிரச்சனை போன்றவற்றிற்கு நாட்டு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. களைக்களஞ்சியம் தொகுதி ஆறு ,பக்கம் 594. .

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈக்குசெட்டம்&oldid=2867619" இலிருந்து மீள்விக்கப்பட்டது