இளம்பிள்ளை வாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளம்பிள்ளை வாதம்
இளம்பிள்ளை வாத நோயினால் வலது கால் பாதிக்கப்பட்ட மனிதன்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases, நரம்பியல், முடவியல்
ஐ.சி.டி.-10A80., B91.
ஐ.சி.டி.-9045, 138
நோய்களின் தரவுத்தளம்10209
மெரிசின்பிளசு001402
ஈமெடிசின்ped/1843 pmr/6
ம.பா.தC02.182.600.700

இளம்பிள்ளை வாதம் பாதிக்கப்பட்டவரின் மலத்தின் வழியாகப் பரவும் தீநுண்மத் தொற்றுநோய் ஆகும். மலத் துகள்களினால் மாசடைந்த நீர், அல்லது உணவு வாய்வழியாக உட்கொள்ளப்படும்போது இந்நோய் தொற்றுகிறது. இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.

இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்துப் பலவகையான வாத (paralysis) நிலைமைகள் ஏற்படலாம். முள்ளந்தண்டோடு தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது. போலியோவைரசால் உண்டாகும் இந்நோய் முடமாக்கக் கூடியதும் மரணத்தை வரவழைப்பதுமான தொற்று நோய். மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவுகிறது. இது மூளையையும், தண்டுவடத்தையும் தாக்குவதால் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. போலியோ வைரசுக்கு அறியப்பட்ட ஒரே புகலிடம் மனிதனே. தொற்று உள்ள ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது.

போலியோ தொற்றில் இரு அடிப்படை வடிவங்கள் உள்ளன நடுநரம்பு மண்டலத்தைத் தாக்காத குறும்நோய். இது சில சமயம் குறை இளம்பிள்ளைவாதம் என அழைக்கப்படும். நடுநரம்பு மண்டலத்தைத் தாக்கும் பெரும்நோய். இதில் பக்கவாதம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

நோய் அறிகுறிகள்[தொகு]

குழந்தைகளில் 72% போலியோ தொற்று அறிகுறிகளைக் காட்டுவதில்லை. ஆனால் போலியோ வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மலம் மூலமாக, நோய்த்தொற்று பிறருக்குப் பரவும் அபாயம் உள்ளது.[1]

ஏறக்குறைய 4-8% போலியோ தொற்று, குறும்நோயாக மாறுகிறது. மருத்துவ மற்றும் ஆய்வகச் சோதனைகளில் நடுநரம்பு மண்டலத்தைப் பாதித்ததற்கான தடயங்கள் இருப்பதில்லை. இது குறை இளம்பிள்ளை வாதம் எனப்படுகிறது. ஒரு வாரத்தில் முற்றிலும் குணமடைவது இதன் இயல்பு. இத்தகைய போலியோவைரஸ் தொற்றில் மூன்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன: மேல் மூச்சுப்பாதைத் தொற்று (தொண்டைவலியும் காய்ச்சலும்), இரைப்பைக்குடல் உபாதைகள் (குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு) மற்றும் இன்ஃபுளுயன்சா போன்ற நோய்கள். 1-2 % தொற்று, வாதமற்ற பரவாத மூளைக்காய்ச்சலாக (கழுத்து, முதுகு மற்றும்/அல்லது கால் விறைப்பு அறிகுறி) உருவாகிறது. இந்த அறிகுறிகள் சிறு நோய் போல பல நாட்கள் தொடரும். அதிக அல்லது அசாதாரண உணர்வுகள் ஏற்படும். 2-10 நாட்கள் வரை இவ்வறிகுறிகள் நீடித்துப் பின் முற்றிலும் மறைந்து போகும். ஒட்டுமொத்தப் போலியோ தொற்றில், 1% விட குறைவானவையே தசை மெலிந்த வாதமாக வெளிப்படுகிறது. ஒரு சிறு நோயைத் தொடர்ந்து 1-10 நாட்களில் இளம்பிள்ளை வாத அறிகுறிகள் பொதுவாகத் தொடங்குகின்றன. காய்ச்சல் இயல்பு நிலைக்கு வந்த பின் மேலும் வாதம் ஏற்படாது. தொடக்கத்தில் தசைநாண் செயல்பாடு அதிகரிப்பும், கடும் தசை வலியும், அவயவ அல்லது முதுகு பிடிப்போடும் கூடிய மேலோட்டமான அனிச்சை செயல் இழப்பு அறிகுறியில் அடங்கும். ஆழ்தசைநாண் அனிச்சை செயல்கள் குறைந்து இந்நோய் தொய்வு வாதமாக மாறும். பலநாட்கள் அல்லது வாரங்களுக்கு மாற்றமின்றி அவ்வாறே இருக்கும். இந்நிலையில் இது சமச்சீரற்றுக் காணப்படும். பின் வலிமை திரும்பத் தொடங்கும். நோயாளிக்கு உணர்விழப்போ அறிவாற்றல் மாற்றமோ இருக்காது.உடம்பிலுள்ள முக்கிய அங்கமான கை, கால் மற்றும் முதுகுதண்டு வடம் பகுதிகளை அசைக்க முடியாமல் பலவீனம் அடையும். ஒரு சில நாட்களில் வெப்பகாய்ச்சல் ஏற்பட்டு பேதி ஏற்படும்; தலை பாரமாக இருக்கும்; உடல் முழுதும் தீராத வலி இருக்கும்.[2]

சிக்கல்கள்[தொகு]

நிரந்தரமான தசை வாதமும், இடுப்பு, கணுக்கால், மற்றும் பாதங்களின் குறைபாடுகளும், ஊனமும், இளம்பிள்ளை வாதத்தினால் உண்டாகலாம். பல குறைபாடுகளை அறுவை மருத்துவத்தின் மூலமும் உடலியல் சிகிச்சை மூலமும் சரிசெய்ய முடியும் என்றாலும், வளர்ந்து வரும் நாடுகளில் இந்த சிகிச்சை முறைகள் சாத்தியமில்லை. இதன் காரணமாக இளம்பிள்ளை வாதத்திற்குத் தப்பிப் பிழைக்கும் குழந்தைகள் கடுமையான குறைபாடுகளுடன் வாழவேண்டியுள்ளது. கீழ்க்காணும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

  • நுரையீரல் அழற்சி
  • இதயக்கீழறை மிகுவழுத்தம்
  • அசைவின்மை
  • நுரையீரல் பிரச்சினைகள்
  • நுரையீரல் வீக்கம்
  • அதிர்ச்சி
  • நிரந்தரத் தசை வாதம்
  • சிறுநீர்ப்பாதைத் தொற்று

நோய்கண்டறிதல்[தொகு]

வைரசைத் தனிமைப்படுத்தல்[தொகு]

இளம்பிள்ளை வாதமுடைய ஒருவரின் மலம் அல்லது தொண்டையில் இருந்து போலியோவைரஸ் எடுக்கப்படுகிறது. மூளைத்தண்டுவட பாய்மத்தில் இருந்து வைரசைப் பிரித்து எடுப்பதே நோய்கண்டறிதல். ஆனால் அது அபூர்வமாகவே முடியக்கூடியது ஆகும். கடும் தளர் வாதம் உடைய ஒருவரிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட வைரஸ் மேலும் சோதிக்கப்பட வேண்டும். ஒலிகோநியூக்ளியோடைட் படமிடல் (oligonucleotidemapping) அல்லது மரபணு வரிசைப்படுத்துதல் (genomic sequencing) மூலம் அந்த வைரசு இயற்கையானதா (“wild type”) அல்லது தடுப்புமருந்து வகையா (தடுப்பு மருந்து திரிபில் இருந்து பெறப்பட்டது) என்று தீர்மானிக்கப்படும்.

ஊனீரியல்[தொகு]

தொடக்கத்திலேயே சமன்படுத்தும் எதிர்பொருட்கள் தோன்றி, நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அதிக அளவில் பெருகி இருக்கும். இதனால் நான்கு மடங்கு அதிகரிப்பை எதிர்பொருள் வேதியல் வினையூக்கி சோதனையால் காட்ட முடியாது.

மூளைத்தண்டுவடப் பாய்மம்[தொகு]

இளம்பிள்ளைவாதத் தொற்று நோய் இருந்தால் மூளைத் தண்டுவட பாய்மத்தில் பொதுவாக வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கும் (10-20 உயிரணுக்கள்/mm3, பெரும்பாலும் வடிநீரணுக்கள்). மேலும், புரத அளவும் சற்றே அதிகரிக்கும் (40–50 mg/100 mL).

நோய் மேலாண்மை[தொகு]

இளம்பிள்ளைவாதத்தைக் குணப்படுத்த முடியாது. எனவே நோயாளிக்கு ஆதரவு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளி நலமடையும் வரை அறிகுறிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படும். போலியோ அறிகுறிகளுக்கான மருந்துகள், உடற்பயிற்சிகள் மற்றும் சமநிலை உணவு.அளிக்க வேண்டும்.

தடுப்புமுறை[தொகு]

இளம்பிள்ளை வாதம் இதுவரை குணப்படுத்த முடியாத நோயாக இருந்து வருகிறது. எனவே தடுப்பு மருந்து ஒன்றே பாதுகாப்பும் நோயைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியுமாகும்.

இரு வகையான தடுப்பு மருந்துகள் உள்ளன: வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து மற்றும் வாய்வழி இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து . வயதைப் பொறுத்துக் காலிலோ புயத்திலோ வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது. பிற தடுப்பு மருந்துகள் அளிக்கும்போதே போலியோ தடுப்பு மருந்தும் அளிக்கலாம். குழந்தைப் பருவத்திலேயே தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு 4 வேளை வீரியம் அழிக்கப்பட்ட இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து பின்வரும் வயதில் அளிக்கவேண்டும்: 2 வது மாதம், 4 வது மாதம், 6-18 வது மாதம் மற்றும் ஊக்க அளவு 4-6 வயதில்.

வாய்வழி இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்தில், மூன்று போலியோவைரஸ் வகையிலும் உயிருள்ள மற்றும் வீரியம் குறைந்த போலியோ வைரஸ் திரிபுகளின் கலவை இருக்கும். போலியோ சொட்டு மருந்துத் திட்டத்தின் கீழ் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இரு வேளை வாய்வழி தடுப்பு மருந்து கொடுக்கப்படும். குழந்தைகள் காக்கப்படுவதோடு சமூகத்தில் பரவலாக்கப்பட்டு விரிவான பாதுகாப்பையும் அளிக்கிறது. 1952ம் ஆண்டில், 'ஜோனஸ் சால்க்’ (Jonas Salk) என்ற அமெரிக்க மருத்துவர், போலியோ நோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். அவர், தான் கண்டுபிடித்த உயிர்காக்கும் தடுப்பூசிக்கு, காப்புரிமை வேண்டாம் என மறுத்துவிட்டார்.எனது கண்டுபிடிப்பு, சூரியனுக்கு ஒப்பானது. அனைவருக்கும் பயனளிக்க வேண்டியது. சூரியனுக்கு காப்புரிமை கேட்க முடியுமா என்று, அதை மறுத்தவர் சால்க்.

1957ம் ஆண்டில, 'ஆல்பர்ட் சாபின்’ (Albert Sabin) என்ற மற்றொரு அமெரிக்க மருத்துவர் இதே நோய்க்குத் தடுப்புச் சொட்டு மருந்தைக் கண்டுபிடித்தார். குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசியைப் போடுவதை விட சொட்டு மருந்தைக் கொடுப்பது எளிதாகவும், செலவு குறைவாகவும் இருந்தது. இதனால், இந்திய அரசாங்கம் 'குழந்தைகளுக்கு முறைப்படி போலியோ சொட்டு மருந்து கொடுத்தால், நோயைத் தடுக்கலாம்’ என்னும் விழிப்பு உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியது.[3]

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 16ம் தேதி ‘உலக போலியோ சொட்டு மருந்து தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவை ஒழிக்க 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது.

பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. பாதிக்கப்படும் நரம்புகளைப் பொறுத்துப் பலவகையான வாத (paralysis) நிலைமைகள் ஏற்படலாம். முள்ளந்தண்டோடு தொடர்புள்ள இளம்பிள்ளை வாதமே மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றது. இது பொதுவாகக் கால்களைத் தாக்குகிறது.

இந்தியாவில் இளம்பிள்ளை வாதம்[தொகு]

2009ம் ஆண்டில் இந்தியாவில் 741 இளம்பிள்ளை வாதம் தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் தாக்கிய கடைசி சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 13 2011ல் தெரியவந்தது. அங்கு ஒரு 18 வயது பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகளாக எந்த குழந்தைக்கும் போலியோ நோய் தாக்காததால், இந்தியா தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை 13 சனவரி 2014இல் எட்டியது. இந்திய அரசின் இந்த அறிவிப்பு 13 சனவரி 2014இல் வருகிறது என்றாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கும்.[4] தெலங்கானாவின் தலைநகரான ஐதராபாத்தில் உள்ள அம்பர்பேட்டை கால்வாய் நீரை பரிசோதித்தபோது போலியோ வைரஸ் அதில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது[5]

பாதிப்புகள்[தொகு]

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லை. ஆனால், வடமாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, சண்டிகரில் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை போலியோவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதேபோல் அரியானா, பஞ்சாய், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் 2010ம் ஆண்டில் ஆங்காங்கே போலியோ பாதிப்புகள் இருந்தது.

தடுப்பூசி[தொகு]

இந்தியாவில் குழந்தைகளுக்கு வாய் வழியாக போடப்படும் சொட்டு மருந்து மூலம், நாட்டில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. சொட்டு மருந்து போடப்படும் 1 கோடி குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தடுப்பு மருந்தின் மூலம் போலியோ பாதிப்பு வரவாய்ப்புள்ளது என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே, குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடுவதே சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகளில் தற்போது வாய் வழியாக போலியோ சொட்டு மருந்து போடுவதை நிறுத்தியுள்ளனர். போலியோ தடுப்பூசி மட்டுமே போடுகின்றனர். போலியோ தடுப்பூசி போடுவதால், 100 சதவீதம் போலியோ பாதிப்பை தடுத்துவிடலாம். அதனால், வெளிநாடுகளை போல இந்தியாவிலும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Poliomyelitis". Epidemiology and Prevention of Vaccine-Preventable Diseases. Centres for Disease control and Pevention. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2017.
  2. "நோய்கள் ஜாக்கிரதை: இந்தியாவில் இல்லை இளம்பிள்ளை வாதம்". பார்க்கப்பட்ட நாள் 25 மே 2017.
  3. "போயே போச்சே போலியோ!". பார்க்கப்பட்ட நாள் 25 மே 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "போலியோ அற்ற நாடு என்ற மைல் கல்லை இந்தியா இன்று எட்டுகிறது". பிபிசி. 13 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2014.
  5. "தெலங்கானாவில் போலியோ வைரஸ்!". Archived from the original on 2021-05-13. பார்க்கப்பட்ட நாள் 15 ஜூன் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "சொட்டு மருந்து கொடுப்பதை விட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதே சிறந்தது". Archived from the original on 2019-02-15. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2017.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளம்பிள்ளை_வாதம்&oldid=3723648" இலிருந்து மீள்விக்கப்பட்டது