இரண்டாம் புலிகேசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் புலிகேசியின் காலத்தில் சாளுக்கியப் பேரரசின் எல்லைகள் பொ.ஊ. 640

இரண்டாம் புலிகேசி (பொ.ஊ. 610–642) சாளுக்கிய மரபின் மிகவும் புகழ் பெற்ற மன்னனாவான். இவனுடைய காலத்தில் சாளுக்கியப் பேரரசு தக்காணத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக விளங்கியது.

தொடக்க காலமும், அரியணை ஏறலும்[தொகு]

இவனது இயற்பெயர் எறெயா (இறையா). முடி சூட்டிக்கொண்டபோது புலிகேசி என்னும் பெயர் பெற்றான். இவர் சாளுக்கிய மன்னன் முதலாம் கீர்த்திவர்மனின் மகன் ஆவான். பொ.ஊ. 597 ஆம் ஆண்டில் இவனது தந்தை கீர்த்திவர்மன் கட்டி அரசன் இறந்தபோது இவன் மிகவும் இளம் வயதினனாக இருந்தான். இதனால் இவனது சிற்றப்பனார் மங்களேசன் பகர ஆளுனராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வந்தான்.[1] மங்களேசனும் திறமையான ஆட்சியாளனாகவே இருந்தான். அவனது காலத்திலும் சாளுக்கிய அரசின் எல்லைகள் விரிவடைந்தன. பதவி ஆசை காரணமாக, எரேயா (இறையா) பருவமடைந்த பின்னரும் அவனுக்கு உரிய அரசுரிமையைக் கொடுக்காமல் தனது வழியில் அரசுரிமையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தனது மகனை முடிக்குரியவனாக மங்களேசன் அறிவித்தான்.

எரேயா (இறையா) வாதபியை விட்டுச் சென்று வானவப் (கோலார்) பகுதியில் மறைந்திருந்து கொண்டு தனது கூட்டாளிகளின் உதவியுடன் படை திரட்டி மங்களேசன் மீது போர் தொடுத்தான். வேட்டவடக்கூர் கல்வெட்டுக் கூறுவதன்படி எலப்பட்டு சிம்பிகே (இளப்பட்டு சிம்பிகை) என்னும் இடத்தில் இடம்பெற்ற போரில் மங்களேசன் தோல்வியடைந்து கொல்லப்பட்டான். எரேயா (இறையா) இரண்டாம் புலிகேசி என்னும் பெயருடன் சாளுக்கிய அரியணையில் அமர்ந்தான்.

போர்கள்[தொகு]

வானவாசி கடம்பர்கள், தலைக்காடு கங்கர்கள், கொங்கண் மண்டலத்தை ஆண்ட மயிலர்கள் ஆகியோரை போரில் வெற்றி கொண்டார். என்றாலும், ஹர்ஷவர்தனரை போரில் தோற்கடித்து நர்மதைக்கு அப்பால் ஹர்ஷவர்தனரின் ஆட்சி விரிவாகா வண்ணம் தடுத்து நிறுத்தியது வரலாற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முதலாம் நரசிம்மவர்மர் சாளுக்கிய நாட்டின் மீது நடத்திய போரில் இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டார்.[2] இரண்டாம் புலிகேசியின் பொ.ஊ. 634-635 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆய்ஹோளே (அய்யாபாளைய) கல்வெட்டில் இவர் வெங்கி நாட்டை வென்று, பின்பு பல்லவ நாட்டைத் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.[3]

சமயம்[தொகு]

இரண்டாம் புலிகேசி இந்து அரசராக இருந்தபோதிலும், நூறு புத்தவிகாரைகள் இவரது ஆட்சியிலிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Singh, Upinder (2009). A history of ancient and early medieval India : from the Stone Age to the 12th century (3rd impr. ). New Delhi: Pearson Longman. பக். 553–555. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131716779. https://books.google.co.in/books?id=GW5Gx0HSXKUC. 
  2. Introduction (1992). Encyclopedia of the Hindu World. Volume 1 (A-Aj): Concept Publishing Company, New Delhi. பக். 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7022-374-1. 
  3. 9. மகேந்திரவர்மன் கி.பி. 615-634 (2015 (E-Book)). பல்லவர் வரலாறு. Mukil E Publishing and Solutions Private Limited. 
  4. The Silk Road Journey with Xuanzang by Sally Hovey Wriggins: p.146
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_புலிகேசி&oldid=3519866" இலிருந்து மீள்விக்கப்பட்டது