இந்திய தேசிய இலச்சினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய தேசிய இலச்சினை
விவரங்கள்
பயன்படுத்துவோர் இந்தியா
உள்வாங்கப்பட்டது26 சனவரி 1950
விருதுமுகம்அசோகரின் தூண்
குறிக்கோளுரைसत्यमेव जयते (சத்தியமேவ ஜயதே):
"வாய்மையே வெல்லும்"

இந்திய தேசிய இலச்சினை என்பது இந்தியக் குடியரசின் தேசியச் சின்னமாகும். இது சாரநாத்தில் அசோகர் எழுப்பிய சிங்கத் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது திசம்பர் 1947 இல் இந்திய மேலாட்சி அரசின் சின்னமாகவும், பின்னர் 26 சனவரி 1950 இல் இந்தியக் குடியரசின் சின்னமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்திய தேசிய இலச்சினை இந்திய அரசின் அதிகாரப்பூர்வ முத்திரையாக பயன்படுத்தப்படுகின்றது. அலுவல்முறை கடித முகப்புகளிலும் இந்திய நாணயங்களிலும், கடவுச்சீட்டுகளிலும் இது பயன்படுத்தப்படுகின்றது.

வரலாறு[தொகு]

1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 ஆம் தேதி பிரித்தானிய ஆட்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிதாக சுதந்திரம் பெற்ற இந்திய அரசு 30 திசம்பர் 1947 அன்று அதிகாரப்பூர்வ அரசு சின்னமாக இந்த அசோக சிங்க சின்னத்தை ஏற்றுக்கொண்டது.[1] இந்திய அரசியலமைப்பின் அசல் கையெழுத்துப் பிரதியை அழகுபடுத்தும் பணியை நந்தலால் போசிடம் (சாந்தி நிகேதன் பள்ளியின் அப்போதைய முதல்வர்) இந்திய தேசிய காங்கிரசால் வழங்கப்பட்டது.[2][3] போசு தனது மாணவர்களின் உதவியுடன் இந்தப் பணியை தொடங்கினார். அப்போது இந்த இலச்சினையில் சிங்கங்கள் தத்ரூபமாக சித்தரிக்கப்பட வேண்டும் என்று விரும்பிய அவர், கல்கத்தா மிருகக்காட்சிசாலையில் சிங்கங்களின் நடத்தையைப் படித்துக்கொண்டிருந்த தீனாநாத் பார்கவாவை இந்த பணிக்காகத் தேர்ந்தெடுத்தார்.[4][5] இது 26 சனவரி 1950 இல் இந்தியக் குடியரசின் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[6]

பயன்பாடு மற்றும் விளக்கம்[தொகு]

அசோகரின் சிங்கத் தூண்

இது சாரநாத்தில் அசோகர் எழுப்பிய சிங்கத் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. முப்பரிமாண வடிவில் இந்த இலச்சினை நான்கு சிங்க உருவங்களை கொண்டிருக்கின்றது. இந்த சிங்கங்கள் சக்தி, தைரியம், தன்னம்பிக்கை மற்றும் நம்பிக்கை ஆகிய நான்கு பண்புகளைக் குறிக்கின்றன. பொதுவாக இலச்சினையில் மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரியும், நான்காவது சிங்கம் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.[7]

இவை ஒரு வட்ட வடிவ பீடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பீடத்தில் (கிழக்கில்) யானை, (மேற்கில்) குதிரை, (தெற்கே) எருது, (வடக்கே) சிங்கம் ஆகிய விலங்குருக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் நடுவே சக்கரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தப் பீடம் ஒரு மலர்ந்த தாமரை வடிவ தளத்தில் அமைந்துள்ளது. மலர்ந்த தாமரை மலரும் வாழ்வையும் படைப்பூக்க அகவெழுச்சியையும் குறிக்கிறது. தூணின் மகுடமாகத் தர்மச் சக்கரம் விளங்குகின்றது. "சத்யமேவ ஜெயதே" ("வாய்மையே வெல்லும்") என்ற பொன்மொழி தேவநாகரி எழுத்தில் இடமிருந்து வலமாக பீடத்தின் கீழே பொறிக்கப்பட்டுள்ளது.[8] இது புனித இந்து வேதங்களின் இறுதிப் பகுதியான முண்டக உபநிடததிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.[9]

இந்தச் சின்னத்தின் பயன்பாடு இந்திய தேசிய இலச்சினை சட்டம், 2005 மற்றும் இந்திய தேசிய இலச்சினை (பயன்பாட்டு ஒழுங்குமுறை) விதிகள், 2007 ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது.

காட்சிப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Press Communique' - State Emblem" (PDF). Press Information Bureau of India - Archive. Archived (PDF) from the original on 8 August 2017.
  2. "Celebrating Nandalal Bose, artist who rejected everything British & designed India's constitution". The Print. 3 December 2018.
  3. Pathak, Yamini (31 March 2016). "Bringing out the kala" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/kids/read-on-to-find-out-how-nandalal-bose-played-an-important-part-in-promoting-modern-indian-art/article8413791.ece. 
  4. "We Know Very Little About The Man Who Designed Our National Emblem. Here Are Some Facts Him". The Times of India (in ஆங்கிலம்). 26 December 2016. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  5. "A Tribute to the Artist who Sketched and Illuminated India's National Emblem". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 26 December 2016. பார்க்கப்பட்ட நாள் 4 September 2019.
  6. "A Tribute to the Artist who Sketched and Illuminated India's National Emblem". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 26 December 2016. பார்க்கப்பட்ட நாள் 15 September 2019.
  7. "The State Emblem Of India (Prohibition Of Improper Use) Act, 2005" (PDF). 20 திசம்பர் 2005. p. 4. Archived from the original (PDF) on 19 மார்ச்சு 2013. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்பிரல் 2012.
  8. Kamal Dey v. Union of India and State of West Bengal (Calcutta High Court 14 July 2011). Text
  9. "Rajya Sabha Parliamentary Standing Committee On Home Affairs: 116th Report on The State Emblem Of India (Prohibition Of Improper Use) Bill, 2004" (PDF). Archived from the original (PDF) on 8 மார்ச்சு 2013.

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Emblem of India
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_தேசிய_இலச்சினை&oldid=3922305" இலிருந்து மீள்விக்கப்பட்டது