அடிவளிமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலைத்த இறக்கை வானூர்தியில் இருந்து அடிவளிமண்டலத்தின் தோற்றம்.

அடிவளிமண்டலம் (Troposphere) என்பது புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத் திணிவின் 75 வீதமும்; நீராவி, தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில் வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது.

நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடிவளிமண்டலத்தின் சராசரித் தடிப்பு சுமார் 17 கிலோமீட்டர் (10 மைல்கள்) ஆகும். வெப்பவலயப் பகுதிகளில் இதன் தடிப்பு 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) அளவுக்குப் பரந்துள்ளது. துருவப் பகுதிகளில் கோடையில் 7 கிலோமீட்டர் (4 மைல்கள்) அளவாகக் காணப்படும் இதன் தடிப்பு மாரி காலங்களில் தெளிவற்றதாக உள்ளது. புவிமேற்பரப்புடன் உள்ள உராய்வினால் காற்றோட்டத்தில் தாக்கத்தை விளைவிக்கும் அடிவளிமண்டலத்தின் கீழ்ப்பகுதி கோள்சார் எல்லைப் படலம் (planetary boundary layer) எனப்படும். நில அமைப்பு, நேரம் ஆகியவற்றைப் பொறுத்து இப் படலத்தின் தடிப்பு சில நூறு மீட்டர்களில் இருந்து 2 கிலோமீட்டர்கள் வரை இருக்கும்.[1][2][3]

அமுக்கத்தினதும், வெப்பநிலையினதும் அமைப்பு[தொகு]

அடிவளிமண்டலத்தின் வேதியியல் அமைப்பு சீரானது. எனினும் நீராவியின் பரம்பல் சீராகக் காணப்படுவதில்லை. ஆவியாதல் மூலம் நீராவி உருவாதல் மேற்பரப்பிலேயே நடைபெறுகிறது. அத்துடன், உயரம் கூடும்போது அடிவளிமண்டலத்தில் வெப்பநிலை குறைந்து செல்வதுடன், வெப்பநிலை குறையும்போது நிரம்பல்நிலை ஆவியமுக்கமும் குறைகிறது. இதனால் வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய நீராவியின் அளவு, உயரம் கூடும்போது குறைந்து செல்கிறது. ஆகவே நில மேற்பரப்புக்கு அருகில் கூடிய நீராவி காணப்படுகின்றது.

அழுத்தம்[தொகு]

வளிமண்டலத்தின் அழுத்தம் கடல் மட்டத்திலேயே கூடுதலாக இருக்கும். உயரத்துடன் வளிமண்டலத்தின் அழுத்தமும் குறைகிறது. வளிமண்டலம் ஏறத்தாழ நீர்நிலையியல் சமநிலையில் உள்ளதனால், ஒரு குறிப்பிட்ட புள்ளியில் உள்ள அழுத்தம் அதன் மேலிருக்கும் வளியின் நிறைக்குச் சமமாக இருப்பதனாலேயே உயரம் கூடும்போது அழுத்தமும் குறைகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Concise Encyclopedia of Science & Technology. McGraw-Hill. 1984. "It [the troposphere] contains about four-fifths of the mass of the whole atmosphere." 
  2. Landau and Lifshitz, Fluid Mechanics, Pergamon, 1979
  3. Lydolph, Paul E. (1985). The Climate of the Earth. Rowman and Littlefield Publishers Inc.. பக். 12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிவளிமண்டலம்&oldid=3752092" இலிருந்து மீள்விக்கப்பட்டது