தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almabotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Ethnic group|
[[இணைப்புத் தலைப்பு]]{{Ethnic group|
|group=தமிழர்
|group=தமிழர்
|image = [[படிமம்:Tamilsci.png|250px]]
[[படிமம்:Social reformers1.png|250px]]
[[படிமம்:Tamil Scholars 2.png|250px]]
[[படிமம்:Tamil women 1.JPG|250px]]

|image = [[படிமம்:Tamilsci.png|250px]]
[[படிமம்:Social reformers1.png|250px]]
[[படிமம்:Tamil Scholars 2.png|250px]]
[[படிமம்:Tamil women 1.JPG|250px]]

23:14, 3 பெப்பிரவரி 2010 இல் நிலவும் திருத்தம்

இணைப்புத் தலைப்பு

தமிழர்
படிமம்:Tamilsci.png
படிமம்:Social reformers1.png
படிமம்:Tamil Scholars 2.png

மொத்த மக்கள்தொகை
(77 மில்லியன் [1])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
இந்தியா: 61.5 மில்லியன் (6.32%)

இலங்கை: 2.7 மில்லியன் (18%)
மலேசியா: 1.06 மில்லியன்
தென்னாபிரிக்கா: 250 000
கனடா: 250 000
ஐக்கிய இராச்சியம்: 250 000 [4]
ஐக்கிய அமெரிக்கா: 100 000
பிரான்சு: 100 000
ரீயூனியன்: 120,000
சிங்கப்பூர்: 90,000

மொரிசியசு: 31,000
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து, கிறித்தவம், இசுலாம், சமணம், பெளத்தம், இறைமறுப்பு, அறியாமைக் கொள்கை, மனிதநேயம், உலகாயதம், சமய சார்பின்மை
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திராவிடர்

மலையாளிகள்
தெலுங்கர்கள்
கன்னடர்கள்
தமிழகப் பழங்குடிகள்

சிங்களவர்
படிமம்:Primary school smiles.jpg
தமிழ்ச் சிறுமிகள்

தமிழ் பேசும் மக்கள் தமிழர் (Tamils,Tamilians) ஆவர். தமிழர்கள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய திராவிட இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமே ஆகும். 1800 களில் பிரித்தானிய குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20 ம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950 களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். 1983 இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டு பெருமளவு ஈழத்தமிழர்கள் அசுத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, யேர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் சுமார் 77 மில்லியன் தமிழர்கள் வாழ்ந்து வருவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது.[1]

தமிழர் அடையாளம்

முதன்மைக் கட்டுரை: தமிழர் அடையாளம்

தமிழர் அடையாளம் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. தமிழ் மொழியை அறிந்திரா விட்டாலும் தமிழர் பண்பாடு, பின்புலத்தில் இருந்து வந்து தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்துவோரும் தமிழர் ஆவர். தமிழர் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு, தமிழீழம் ஆகியவற்றில் வசித்து, தமிழ் மொழி பேசி தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்தினால் அவர்களும் தமிழர் ஆவர்.

வேறு பல இனக் குழுக்களைப் போலன்றித் தமிழர் ஒருபோதும் ஒரே அரசியல் அலகின் கீழ் வாழ்ந்தது இல்லை. தமிழகம் எப்பொழுதுமே ஒன்றுக்கு மேற்பட்ட பேரரசுகள், ஆளுகைகளின் கீழேயே இருந்து வந்துள்ளது. இருந்த போதிலும், தமிழ் அடையாளம் எப்பொழுதும் வலுவாகவே இருந்து வருகிறது. தமிழர்கள் இன அடிப்படையிலும், மொழி, பண்பாட்டு அடிப்படையிலும் ஏனைய தென்னாசியத் திராவிட இன மக்களுடன் தொடர்பு உடையவர்கள்.

வரலாறு

முதன்மைக் கட்டுரை: தமிழர் வரலாறு, தமிழக வரலாறு

தமிழர் வரலாறு

தமிழர் அரசியல் வரலாறு

தொல்பழங்காலத்தில் தமிழர்
தலைச்சங்கம்
இடைச்சங்கம்
கடைச்சங்கம் - சங்க காலம்
சேரர்
முற்கால சோழர்
முற்கால பாண்டியர்
களப்பிரர்
பல்லவர்
பிற்கால சோழர்
பிற்கால பாண்டியர்
இசுலாமியர் ஆட்சி
நாயக்கர் ஆட்சி
மராத்தியர் ஆட்சி
ஆங்கிலேயர் ஆட்சி
தமிழ்நாடு
தமிழீழம்

தமிழர் சமூக வரலாறு

தொகு

தமிழர் தோற்றம் பற்றி மூன்று கருதுகோள்கள் உள்ளன. பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது ஒரு கருதுகோள். இரண்டாவது, சற்று வேறுபட்டு ஆதியில் ஆபிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாக தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே தமிழர் என்கிறது [2]. தமிழர் நடு ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்று.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஆதிச்ச நல்லூரில், அகழ்ந்தெடுக்கப்பட்ட கிமு 1000-ஆம் ஆண்டு காலத்து புதையுண்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கிமு 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும் [3].

புவியில் தமிழ் மக்களின் பரம்பல்

இதையும் பார்க்க: புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை

இந்தியத் தமிழர்கள்

முதன்மைக் கட்டுரை இந்தியத் தமிழர்

பெரும்பாலான இந்தியத்தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர். மேலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். அவற்றில் பெரும்பாலான குடியேற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டவையாகும். எனினும் தென்கர்நாடகத்திலுள்ள மாண்டியா, ஹெப்பார் பகுதிகளிலும் கேரளத்திலுள்ள பாலக்காட்டிலும் மகாராட்டிரத்திலுள்ள புனே பகுதிகளிலும் தமிழர்கள் இடைக்காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கைத் தமிழ்பேசும் மக்கள்

முதன்மைக் கட்டுரை இலங்கைத் தமிழ்பேசும் மக்கள்

இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் ஆவர். இவர்களை இலங்கைத் தமிழர், இலங்கைத் தமிழ் முசுலீம்கள், மலையகத் தமிழர் என மூன்று வகையினராக அடையாளப்படுத்தலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையைத் தமது தாயகமாகக் கொண்டோர் இலங்கைத் தமிழர் ஆவர். நீண்ட காலமாக இலங்கையில் வசித்து, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, இசுலாம் மதத்தைப் பின்வற்றுவோர் இலங்கைத் தமிழ் முசுலீம்கள் ஆவர். 1800 களில் பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இலங்கை மலைநாட்டுத் தேயிலை, இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு என வருவிக்கப்பட்ட தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள் மலையகத் தமிழர் எனப்படுகிறார்கள். இலங்கையில் அனைத்துத் தமிழர்களினதும் மனித உரிமைகளை சிங்களப் பேரினவாத அரசு மறுத்து, அவர்க்ளை வன்முறைக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்தே ஈழப்போராட்டம் வெடித்தது.

தென்கிழக்கு ஆசியாவில் தமிழர்

தென்கிழக்கு ஆசியாவுடன் தமிழர் அரசியல், வணிக, பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணியும், அங்கு பரவலாக வசித்தும் வருகின்றார்கள். குறிப்பாக, சோழப் பேரரசு சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது அதிகாரம் கொண்டிருந்ததால், பல தமிழர் இங்கு குடியமர்ந்து பின்னர் இனக்கலப்புக்கு உள்ளாகி இன்று அந்நாட்டு மக்களாகவே வாழ்கின்றார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தமிழர் இந்நாடுகள் சிலவற்றில் கூலிகளாக குடியமர்த்தப்பட்டனர். மலேசியா (கடாரம்), சிங்கப்பூர், பர்மா (அருமணதேயம்), தாய்லாந்து, இந்தோனேசியா (ஜாவா (சாவகம்), சுமத்ரா), கம்போடியா ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழர் வசிக்கின்றனர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் தங்கள் மொழி, பண்பாட்டைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான குழந்தைகள் தமிழ்ப் பள்ளிகளில் பயிலுவதே இதற்குச் சான்றாகும். அனைத்துக்கும் மேலாக தனது மக்கள் தொகையில் 10% குறைவான தமிழர்களைக் கொண்ட சிங்கப்பூர், தமிழைத் தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் தமிழர்

முதன்மைக் கட்டுரை: ஆபிரிக்காவில் தமிழர்

ஆப்பிரிக்காவில் தமிழர் 19-ஆம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே வசித்து வருக்கின்றார்கள். குறிப்பாக 1850 களில் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் தமிழர்கள் தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, மடகாஸ்கர், ரீயூனியன் ஆகிய நாடுகளுக்கு தமிழர்கள் வரவழைக்கப்பட்டனர். இங்கு தமிழர்களிடேயே தமிழ்மொழி பரவலாகப் பேசப்படாவிட்டாலும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளும் உணர்வும் உயிர்ப்புடன் இருக்கிறது. மொரிசியசு நாட்டு நாணயத்தில் தமிழ் எழுத்துகளும், எண்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டில் நைஜீரியா, கென்யா, சிம்பாப்வே போன்ற நாடுகளுக்குத் தமிழர்கள் ஆசிரியர்களாகவும், பிற தொழில் வல்லுனர்களாகவும் சென்றனர். பலர் தமது பணிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் தாயகத்துக்கோ வேறு நாடுகளுக்கோ சென்று விடுவர்.

ஐரோப்பாவில் தமிழர்

முதன்மைக் கட்டுரை: ஐரோப்பியத் தமிழர்

இந்தியா, இலங்கை சுதந்திரமடைந்து, 1950 களின் பின்னரே தமிழர்கள் தொழில் துறை வல்லுனர்களாக பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரங்களுக்குப் பின்னர் பெருந்தொகையினரான ஈழத்தமிழர்கள் அகதிகளாக ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்வோரும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஐரோப்பியத் தமிழர் எனப்படுகிறார்கள். இன்று இவர்களில் கணிசமானோர் குடியுரிமை பெற்று, அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்று, பொருளாதார வளர்ச்சியடைந்து வாழ்கின்றனர். பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, சுவிற்சர்லாந்து, நோர்டிக் நாடுகள், பிற நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். மொத்தமாக ஏறக்குறைய 400 000 - 500,000 அளவுக்கு ஐரோப்பாவில் தமிழர்கள் வசிக்கின்றனர்.

ஓசியானியாவில் தமிழர்

முதன்மைக் கட்டுரை: ஓசியானியாவில் தமிழர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி ஆகிய ஓசானிய நாடுகளில் கணிசமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். பிஜி தீவுகளில் தமிழர்கள் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். இவர்களில் பலர் தமது அடையாளங்களை அங்கு அதிகமாக இருக்கும் இந்தி பேசும் மக்களுடன் கலந்துவிட்டார்கள். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பொருளாதார வாய்ப்புக்கள் தேடி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் சென்றார்கள்.

வட அமெரிக்காவில் தமிழர்

முதன்மைக் கட்டுரை: வட அமெரிக்காவில் தமிழர்

வட அமெரிக்காவில் கணிசமான தமிழர் வாழ்கின்றனர். 1950 களுக்கு பின்னர் வேலைவாய்ப்பு, பொருளாதார விருத்தி தேடி தமிழர் வட அமெரிக்காவுக்கு வரத் தொடங்கினர். 1983 இலங்கையில் வெடித்த கறுப்பு யூலை இனக்கலவரங்களான் பாதிக்கப்பட்ட பெருந்தொகை ஈழத்தமிழர்கள் கனடா, ஐக்கிய அமெரிக்காவுக்கு வந்தனர். இன்று கனடாவில் 250,000 மேற்பட்ட தமிழர்களும், ஐக்கிய அமெரிக்காவில் 50,000 மேற்பட்ட தமிழர்கள் உள்ளார்கள்.

சமூக அமைப்பு

முதன்மைக் கட்டுரை: தமிழர் சமூக அமைப்பு

தமிழர் சமூக அமைப்பு சாதிய படிநிலை அடுக்கமைவையும், ஆண் ஆதிக்க மரபையும் கொண்டது. தமிழர் சமூக அமைப்பில் சமயத்தின் பங்கும் முக்கியம். தற்காலத்தில் சமூக எதிர்ப்புபோராட்டங்கள், சாதியத்துக்கு எதிரான அரசியல் சட்ட நிலைப்பாடுகள், நகரமயமாதல், பொருளாதார விருத்தி, நவீனமயமாதல் போன்ற பல காரணிகள் சாதிய கட்டமைப்பை தளர்த்தி உள்ளன. பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புக்கள் பல மடங்கு பெருகி உள்ளன. அரசியல் சட்ட உரிமைகளும் கோட்பாட்டு நோக்கில் சமமாக உள்ளன. திராவிட இயக்கத்தின் இறைமறுப்பு கொள்கை, அறிவியல் வளர்ச்சி ஆகியவை சமயம் மீதான தீவர நம்பிக்கையை குறைத்துள்ளன.

மொழியும் இலக்கியமும்

முதன்மைக் கட்டுரைகள்: தமிழ், தமிழ் இலக்கியம்

மதுரை தமுக்கம் திடலின் வாயிலில் உள்ள "தமிழன்னை" சிற்பம்

தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள். தமிழ், சமஸ்கிரதத்துக்கு இணையாக இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக 2005 ம் ஆண்டு தமிழே முதலாவதாக செம்மொழி என ஏற்கப்பட்டது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் அரச அலுவல் மொழியாகவும் இருக்கிறது.

சங்க இலக்கியம்

தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் உரைக்கின்றது. கி.மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும், அறிவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்க இலக்கியத்தில் செடிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று தொகை நூற்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் எழுந்த அற நூல் திருக்குறள், இன்றும் அனைத்துத் தமிழர்களாலும் போற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. திருவள்ளுவர் ஆண்டு முறை இவரின் பெயர் தாங்கிய தமிழர் ஆண்டு முறை.

சங்கம் மருவிய கால இலக்கியம்

கி.பி 300 இருந்து கி.பி 700 தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே பெளத்த தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி ஆகியவையும், சமண தமிழ் காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, மற்றும் ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றின.

பக்தி கால இலக்கியம்

கி.பி 700 - கி.பி 1200 காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் தமிழ்ப் பக்தி இயக்கம் வலுப்பெற்றதது. சைவமும் வைணவமும் ஆதரவு பெற்றன. சைவ நாயன்மார்கள் பல ஆயிரம் தேவாரங்களைப் பாடினர். வைணவ ஆழ்வார்களால் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடப்பெற்றன. இக்காலத்தில் திருமந்திரம் சிவஞானபோதம் உட்பட பதினான்கு சைவ சிந்தாத நூற்களும் இயற்றப்பட்டன. கலிங்கத்துப்பரணி, கம்ப இராமாயணம் ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. 850ஆம் ஆண்டில் இருந்து 1250ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசு சிறப்புற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடைக் கால இலக்கியம்

கி.பி 1200 - கி.பி 1800 காலப்பகுதி இடைக் காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகலாயர், நாயக்கர், மாராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழகப் பகுதிகளை ஆண்டனர். இக்காலமே தமிழ் இசுலாமிய இலக்கியம், தமிழ் கிறித்தவ இலக்கியம் ஆகியவற்றின் தோற்றக்காலம். முதல் தமிழ் அகரமுதலி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான கான்ஸ்டன்ஷியுஸ் பெஸ்கி என்னும் கிறித்தவ மத ஆசிரியரால் 1732 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெரும்பாலான நிகண்டுகள் இயற்றப்பட்டதும் இக்காலத்திலேயே.

தற்கால இலக்கியம்

18 ம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களை தேடிப் பதிப்பித்து பாதுகாத்தனர். 1916 ம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமஸ்கிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர்.

தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராக சுப்பிரமணிய பாரதியார் கருதப்படுகிறார். இக்காலத்தில் புதுக் கவிதை பிறந்தது. உரைநடை வீச்சு பெற்றது. புதினம், சிறுகதை, கட்டுரை ஆகிய எழுத்து வடிவங்கள் தமிழில் வளர்ச்சி பெற்றன. 1954-1968 காலப்பகுதிகளில் தமிழ்க் கலைக்களஞ்சியம் பல அறிஞர்களின் கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் மரபு, மார்க்சிய, முற்போக்கு, நற்போக்குப் போக்குகள் இனங்காணப்பட்டன. திராவிட இயக்கத்தினர் தமிழைக் கருவியாக பயன்படுத்தித் தமது கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச்செல்வதில் பெரும் வெற்றி கண்டனர். தற்கலாத்தில் பெண்ணிய கருத்துகளையும் எடுத்துரைத்த அம்பை, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி, உமாமகேஸ்வரி, இளம்பிறை, சல்மா, வெண்ணிலா, ரிஷி, மாலதி (சதாரா), வைகைச்செல்வி, தாமரை உட்பட தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளும் வலுப்பெற்று இருக்கின்றன. உலகத்தமிழர்களின் எழுத்துகளும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளன. நாளிதழ், இதழ், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் வேரூன்றிப் பரவி நிற்கின்றது. அறிவியல் தமிழின் அவசியம் அறிந்து தமிழ்நாடு அரசும் பிற அமைப்புகளும் அதை வளர்ப்பதைக் குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அதே வேளை தமிழ்நாட்டில் பரவலாகப் புழங்கும் தமிங்கிலம் தமிழ் மொழிப் பேணலை சரவலுக்கு உட்படுத்தியிருக்கிறது.

பண்பாடு

முதன்மைக் கட்டுரை: தமிழர் பண்பாடு

திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவில் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள்

தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.

தமிழர் பண்பாடு பல காலமாக பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட கூறுகளைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒர் இயங்கியல் பண்பாடே.

கட்டடக்கலை

முதன்மைக் கட்டுரை: தமிழர் கட்டிடக்கலை

தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்து வருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறிஸ்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள். இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டடங்கள் பலவும் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை.

ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ் நாட்டில் கற்களால் கட்டடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின் உயர் மரபைச் சாந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது. ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டடக்கலை எனப்படுகின்ற கட்டடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

சிற்பக்கலை

முதன்மைக் கட்டுரை: தமிழர் சிற்பக்கலை

படிமம்:Mamallapuram sculptures.jpg
மாமல்லபுரச் சிற்பங்கள்

சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.

ஓவியக்கலை

முதன்மைக் கட்டுரை: தமிழர் ஓவியம்

ஓவியம் ஒரு கவின் கலை. தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில், தமிழர்களால் ஆக்கப்படும் ஓவியங்களை தமிழர் ஓவியம் எனலாம். ஓவியத்தைச் சித்திரம் என்றும் குறிப்பிடுவர்.

சங்க காலத்தில் இருந்தே தமிழரிடையே ஓவியக்கலை வளர்ச்சி இருந்தது.[4] இருப்பினும் தமிழ் ஓவியங்களுக்கு ஒரு தொடர்ச்சியான மரபு இல்லை. "சற்று முந்தியது என்று நாயக்கர் கால சுவரோவியங்கள், அதற்கு முன், மறைந்திருந்து வெளித்தெரிந்த தஞ்சை கோயில் ஓவியங்கள் அதற்கு முன் சித்தன்ன வாசல் என்று பல நூற்றாண்டுகள் இடைவெளி கொண்ட ஒன்றைப் பார்க்கலாம்."[5] தற்காலத்தில் ஓவியக்கலையில் ஒரு புதிய ஈடுபாடு இருக்கிறது. வரைகதை, வரைகலை, இயங்குபடங்கள் என்று பல்வேறு வடிவங்களில் இந்த ஆக்க ஊற்றுகளைக் காணமுடியும்.

நாடகக்கலை

முதன்மைக் கட்டுரை தமிழர் நாடகக்கலை

இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ்களில் ஒன்றாக நாடகத்தை முன்னிறுத்தித் தொன்று தொட்டு தமிழர் நாடகக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றி பல குறிப்புகள் உண்டு. தமிழர் நாடகங்கள் தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இசைக்கலை

முதன்மைக் கட்டுரை தமிழிசை

படிமம்:Carnatic music.jpg
கருநாடக இசை

தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு தமிழிசையாக செம்மை பெற்றது. தமிழிசை மிகப் பழமையானது. தொல்காப்பியர் இயற்றிய 'தொல்காப்பியம்' என்னும் நூலில் இசையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாகக் காணலாம். சிலப்பதிகாரத்திலும், சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் கலித்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களில் இசை நயத்துடன் பாடல்களைப் பார்க்கலாம்.

ஆடற்கலை

முதன்மைக் கட்டுரை தமிழர் ஆடற்கலை

படிமம்:Karakattam.jpg
கரகாட்டம்

ஆடலைக் கூத்து என்றும் நாடகத்தை 'கதை தழுவி வரும் கூத்து' என்றும் கூறுவர்.[6] தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உண்டு.

பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.

தற்காப்புக் கலைகள்

முதன்மைக் கட்டுரை: தமிழர் தற்காப்புக் கலைகள்

படிமம்:Silambam.JPG
சிலம்பம்

நடனம், இசை, மொழி போன்றே ஒவ்வொரு இன, மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபை கொண்டிருக்கின்றது. தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு கூறாக தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழர் தற்காப்புக் கலைகள் பல்லவ, சேர, சோழ, பாண்டிய நாட்டுப் போர் சாதிகளின் மரபில் தோன்றிய சண்டை, தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றது எனலாம். சிலம்பம், வர்மக்கலை, குத்துவரிசை, அடிதட, மல்லாடல் ஆகியவை இன்றும் பயிலப்படும் தமிழர் தற்காப்புக் கலைகள் ஆகும்.

யோகக்கலை

யோகாசனம்

முதன்மைக் கட்டுரை: யோகக் கலை

இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது "யோகாசனம்" ஆகும். இந்தக் கலையை நீண்ட காலமாக தமிழர் பயின்றும், அதற்குப் பங்களித்தும் வந்துள்ளார்கள். யோகக்கலை பற்றியும் அதன் இதர பாகங்களைபற்றியும் தமிழ் நூலான திருமந்திரம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. திருமந்திரம் நூலை எழுதியவர் திருமூலர் எனும் சிவயோகி ஆவார். அண்மையில் தமிழ்நாடு அரசு அனைத்து மாணவர்களுக்கும் யோகக்கலையை ஒரு கட்டாய பாடமாக அறிவித்துள்ளது[7]. சுவாமி சிவானந்தா, யாழ்ப்பாணம் யோகர் சுவாமியின் சீடரான சத்யகுரு சிவாய சுப்ரமணியசுவாமி, சுவாமி சச்சிதானந்தா, வேதாத்திரி மகரிஷி போன்றோர் யோகக்கலையை மேற்கு நாடுகளில் பயிற்றுவிக்க பெரும் பங்களிப்பு செய்துள்ளார்கள்.

திரைப்படக்கலை

முக்கிய கட்டுரைகள்: தமிழ்த் திரைப்படத்துறை, தமிழ்நாடு திரைப்படத் தொழிற்துறை

பருத்திவீரன் திரைப்பட சுவரொட்டி

தமிழ்த் திரைக்கலை அல்லது தமிழ்ச் சினிமா தற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் அதிமிக்க செல்வாக்கு செலுத்தும் ஒரு கலைத்துறை ஆகும். தமிழ்ச் சினிமாவே இந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழித் திரைப்பட செல்வாக்கை தமிழர் மத்தியில் தவிர்த்தது. நாடகம், இசை, ஆடல், சிலம்பம் என பல்வேறு மரபுக் கலைகளையும் தமிழ்த் திரைக்கலை பயன்படுத்திக்கொண்டது. சிவாஜி, எம். ஜி. ஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கே. பி. சுந்தராம்பாள், மனோராமா ஆகிய நடிகர்களும் கே. பாலச்சந்தர், மணிரத்னம், பாரதிராஜா ஆகிய இயக்குனர்களும் தமிழ்த் திரைப்படத்துறையில் புகழ் மிக்க சிலர். தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் புகழ்பெற்ற சிலர். தமிழ்த் திரைப்படங்கள் "வாழ்க்கையைச் சிதைத்துப் பிரதி பலிக்கின்றது. பொய்மைகளைப் தீர்வுகளாகப் புலப்படுத்துகின்றன"[8] போன்ற பல விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது.

நகைச்சுவை

முதன்மைக் கட்டுரை: நகைச்சுவை

நகைச்சுவை தமிழர் வாழ்வில் இழையோடிய ஓர் அம்சம். வில்லுப்பாட்டு, பட்டிமன்றம், இலக்கியம், இதழ்கள், திரைப்படம், தொலைக்காட்சி என பல வழிகள் மூலம் நகைச்சுவை பகிரப்படுகிறது. வடிவழகன், லியோனி, விவேக், வடிவேலு, பாண்டியராஜன் ஆகியோர் புகழ் பெற்ற இன்றைய நகைச்சுவை விண்ணர்களில் சிலர். கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் வழங்கப்பட்ட மேடைச் சிரிப்புரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஈரோடு மகேஸ், மதுரை முத்து ஆகியோர் நல்ல மேடைச் சிரிப்புரையாளர்கள்.

பேச்சுக்கலை

அரசியல் மேடையில், கோயிலில், பட்டிமன்றத்தில், நீதிமன்றத்தில், நாடகத்தில், திரைப்படத்தில், ஒலிபரப்பில், என பல துறைகளில் தமிழில் பேசுதல் ஒரு பயன்மிகு கலையாகும். அண்ணாத்துரை, பெரியார், ம. பொ. சிவஞானம், கிருபானந்த வாரியார் போன்றோர் சிறந்த மறைந்த பேச்சாளர்கள். திரைப்படத்தில் வசனம் பேசுவதில் சிவாஜி கணேசன் புகழ் பெற்றவர். இன்று கருணாநிதி, வைகோ, சீமான், சுகிசிவம் ஆகியோர் சிறந்த பேச்சாளர்காளர்களில் சிலர். தமிழகத்தில் சிறந்த பேச்சாளரைத் தேர்தெடுப்பதெற்கனக் கூறி நடாத்தப்பட்ட தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு நிகழ்ச்சியில் விசயன் வெற்றி பெற்றார்.

நாட்டாரியல்

முதன்மைக் கட்டுரை: தமிழர் நாட்டாரியல்

ஒப்பாரி - மகனை பலிகொடுத்த தாய் [9]

நீ போருக்கு போனடத்தை
போராடி மாண்டாய் ஐயா மகனே பாரத்துவக்கெடுத்தோ உங்களுக்கு பயந்தவெடி வச்சானோ உங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோ உங்கள பேசாமல் சுட்டெறிந்தான் மகனார் உன்ன சந்தியல கண்டடத்தை உன்னைபெத்த கறுமி தலைவெடித்துப் போறனையா

தமிழர் பண்பாடு இலக்கியம், நுண்கலைகள், நுட்பம் ஆகிய பெரும் மரபுகளையும், பொது மக்கள் பங்களித்து எளிமையாக ஆக்கி பகிர்ந்த நாட்டாரியலையும் கொண்டிருக்கிறது. இரண்டும் ஒரு சமூகத்தின் வெவ்வேறு வேட்கைகளை நிவர்த்தி செய்கிறது. மக்களின் பழக்க வழக்கங்கள், மொழி, வாய்மொழி இலக்கியங்கள், பாட்டு, இசை, ஆடல்கள், உணவு, உடை, உறையுள், நம்பிக்கைகள் முதலானவற்றை நாட்டாரியல் குறிக்கிறது.[10] பெரும்பாலான தமிழர்கள் கிராமத்தில் (எ.கா: 2008 - தமிழ்நாடு 53%) வாழ்வதால் நாட்டாரியல் கிராமத்து கூறுகளைச் சிறப்பாக சுட்டி நிற்கிறது. எனினும் இது நகரச்சூழலிலும் வெளிப்படுகின்றது. சென்னை நகரப்புற சேரிகளில் இருந்து தோன்றிய கானா பாடல்கள், ஈழத்தில் போராளி மகளை/மகனை இழந்த தாயின் ஒப்பாரிப் பாடல்களையும் இவ்வாறு சுட்டலாம். சினிமா போன்ற பெரும் ஊடகங்கள் நாட்டார்கலைகளை நலிவடைய செய்திருந்தாலும், இணையம் போன்ற சில நவீன தொழில்நுட்பங்கள் அனைவரும் பங்களித்து பயன் பெறும் ஆக்க முறைகளை ஊக்குவிக்கின்றன.

சித்தரியல்

முதனமைக் கட்டுரைகள்: சித்தர்கள், சித்த மருத்துவம்

தமிழ்ச் சூழலில் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒரு முரண்பாடான, ஆக்கபூர்வமான உறவை சித்தர்கள் வைத்திருந்தார்கள். இவர்கள் பெரும் சமய மரபுகளின் குறைகளை எடுத்துகூறினார்கள். மரபுவழிப் புலவர்கள் பலர் இன்ப அல்லது போற்றி இலக்கியங்களில் மட்டும் ஈட்பட்டிருக்க சித்தர்கள் மருத்துவம், கணிதம், வேதியியல், தத்துவம், ஆத்மீகம் ஆகியவற்றில் ஈட்பாடு கொண்டு தமிழர் சிந்தனைச் சூழலை பலப்படுத்தினார்கள்.

சமயம்

முதன்மைக் கட்டுரை: தமிழர் சமயம்

அய்யனார்

தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் உலகாயுத போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அறிஞர் சிலர் வாதிட்டாலும், தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை அறிந்தும் பின்பற்றியும் வந்து உள்ளார்கள். பெளத்தம், சமணம், இந்து, இசுலாம், கிறிஸ்தவம் ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். தமிழர் இடையே முருகன், அய்யனார், மதுரை வீரன், கண்ணகி (கடவுள்), இசக்கி அம்மன், கறுப்புசாமி, சுடலை மாடன் ஆகிய காவல் தமிழ்க் கடவுள்கள் வழிபாடும் பரவலாக இருக்கின்றது. நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளைப் பின்பற்றிய மனிதநேய இயக்கம், அய்யாவழி ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றி சிறப்புற்றவைதான்.

இன்று திருக்குறளைப் பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள் அமைகின்றன. அதே வேளை, இறைமறுப்பு (நாத்திகம்), அறியாமைக் கொள்கை (Agnosticism), உலகாயதக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள்.

மெய்யியல்

முதன்மைக் கட்டுரை: தமிழர் மெய்யியல்

தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்கின்றார்கள் என்பதை 'தமிழர் மெய்யியல் எனலாம். தமிழர் மெய்யியலை அறநூற்களில் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழர் மெய்யியல் மருபி வந்திருக்கிறது. எடுத்துக்காட்டக அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என தமிழ் மகளிர் கட்டுப்படுத்தப்பட்டனர். இன்று துணிவு, அறிவு, திறமை என்று நவீனப் பெண்களாக தம்மை வளர்த்துக்கொண்டனர்.

தமிழர் மெய்யியல் உலகின் தன்மை (அகம், புறம்), வாழ்வின் நோக்கம் (அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு), வாழ்தலில் ஒழுக்கம் (அறக் கோட்பாடு) ஆகியவற்றை விளக்குகின்றது. தமிழரின் பண்டைய வாழ்வியலை திணைக் கோட்பாடு விளக்குகிறது. இன்றைய உந்தலை திராவிடம் எடுத்துரைக்கிறது.[11]

வாழ்வியல்

உணவு

முதன்மைக் கட்டுரை: தமிழர் சமையல்

தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு நாட்டுப்புறச் சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளை சுவையுடன் சமைக்க விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது.

பல்வகை மரக்கறிகள், சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன. சோறும் கறியும் தமிழரின் முதன்மை உணவாகும். கறிகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, மரக்கறிக் குழம்பு, பருப்பு, கீரை, வறை, மசியல், மீன் கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி உட்பட பல்வகை பலசரக்குகள் கறிகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம்.

உடை

முதன்மைக் கட்டுரை: தமிழர் உடை

தமிழர் உடைகள் காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமயம் ஆகிய காரணிகளால் வேறுபடுகின்றது. அனைத்துத் தமிழர்களுக்கும் இதுதான் உடை என்று ஏதும் இல்லை. எனினும், வேட்டி, சேலை, தாவணி, பாவாடை போன்றவை தமிழரின் மரபார்ந்த உடைகளாகக் கருதப்படுகின்றன. நகர்ப்புறங்களில் சல்வார் கமீஸ், சுரிதார், முழுக்காற்சட்டை, ஜீன்ஸ் போன்ற உடைகள் அணியும் போக்கு கூடி வருகிறது.

பழக்கவழக்கங்கள்

முதன்மைக் கட்டுரை: தமிழர் பழக்கவழக்கங்கள்

பாலியல் வழக்கங்கள்

முதன்மைக் கட்டுரை: தமிழர் பாலியல் வழக்கங்கள்

மூடநம்பிக்கைகள்

முதன்மைக் கட்டுரை: தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை

வாழ்வோட்ட சடங்குகள்

முதன்மைக் கட்டுரை: தமிழர் வாழ்வோட்ட சடங்குகள்

கொண்டாட்டங்கள்

முதன்மைக் கட்டுரை: தமிழர் கொண்டாட்டங்கள்

கிளித்தட்டு

பொங்கல், தமிழ் புத்தாண்டுப் பிறப்பு ஆகியன சமய சார்பற்று அனைத்து தமிழர்களும் கொண்டாடும் விழாக்கள் ஆகும். தைப்பூசமும் தீபாவளியும் இந்து சமயத் தமிழர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகள் ஆகும்.

விளையாட்டுக்கள்

முதன்மைக் கட்டுரை: தமிழர் விளையாட்டுக்கள்

அறிவியல்

முதன்மைக் கட்டுரை: தமிழர் அறிவியல்

படிமம்:Tamil engineering 2.JPG
பொறியியல்

கப்பற்கலை

முதன்மைக் கட்டுரை: தமிழர் கப்பற்கலை

தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடற் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர் ஈடுபட்டனர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.

அரசியல்

முதன்மைக் கட்டுரை: தமிழர் அரசியல்

தமிழர்களின் முடிவெடுக்கும், நிர்வாகம் செய்யும், வெளி உறவுகளைப் பேணும் முறைகளையும் நடத்தைகளையும் தமிழர் அரசியல் குறிக்கின்றது. தமது சுதந்திரத்தை நிலைநாட்டி, உரிமைகளைப் பேணி, சமத்துவத்துடன், பொருளாதார வசதியுடன், பண்பாட்டுச் சிறப்புடன் அனைத்து தமிழர்களும் மனிதர்களும் வாழ வழிசெய்வதே தமிழர் அரசியலின் கருத்தியல் இலக்கு. தமிழர் அரசியல் பன்முகம் கொண்டது; வெவ்வேறு செல்வாக்கு அதிகார வட்டங்களுக்கு உட்பட்டது.

என்றும் இன்றும் தமிழர் அனைவரும் ஒரே அரசியல் அலகின் கீழ் இயங்கியது இல்லை. இன்று தமிழர்களுக்கு அவரவர் வாழும் நாடுகளின் அரசியலே முதன்மை பெறுகின்றது. எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், இலங்கை அரசியல், மலேசிய அரசியல், சிங்கப்பூர் அரசியல், மொரிசியஸ் அரசியல் என்று அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த நாட்டு அரசியல்களே முக்கியம் பெறுகின்றன. உலகத் தமிழர்களுக்கென ஒரு வலுவான அமைப்போ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமைத்துவமோ இல்லை. இருப்பினும் உலகத்தமிழர் தமிழர் பிரச்சினைகளுக்கு குரல்கொடுத்தும், தமிழர் நலன்களின் மீது அக்கறை காட்டியும் செயற்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக மலேசியத் தமிழர் உரிமைகள் பாதிக்கப்பட்ட போது தமிழக முதல்வர் மு. கருணாநிதி கண்டனம் தெரிவித்து நியாயம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்று வேண்டினார்.[12] ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கிய இராணுவ உதவியைக் கண்டித்தும் தென்னாபிரிக்கத் தமிழர் நடாத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் உலகத்தமிழர் ஒரு நாட்டின் தமிழர் அரசியலில் அக்கறையுடன் செயற்படுவதை எடுத்துகாட்டுகின்றன.[13]

பொருளாதாரம்

முதன்மைக் கட்டுரை: தமிழர் பொருளாதாரம்

அமைப்புகள்

முதன்மைக் கட்டுரை: தமிழர் அமைப்புகள்

படிமம்:Tamil-flag.gif
உலகத்தமிழர் பேரமைப்புக் கொடி

தமிழர்கள் பல்வேறு குறிக்கோள்களுக்காக அமைப்பு முறையில் ஒருங்கிணைந்து செயற்படுகிறார்கள். மொழி, அரசியல், வணிகம், தொழில், சமயம், ஈடுபாடுகள் என பல நோக்கங்களை மையமாக வைத்து தமிழர் அமைப்புகள் இயங்குகின்றன. சங்கம் (தற்கால தமிழ்ச் சங்கம்), கோயில், இயக்கம் (தமிழீழ விடுதலைப் புலிகள், திராவிடர் கழகம், தலித் இயக்கங்கள்), மன்றம் (சாதி மன்றங்கள்), ஒன்றியம் (புகலிட ஊர் ஒன்றியங்கள்), இணைய அமைப்புகள், கட்சி, அறக்கட்டளை, அவை, பேரவை, கூட்டுறவுகள், சமூகக் கூடங்கள், நூலகங்கள், ஊராட்சி, ஊரவை ஆகியவை தமிழச் சூழலில் காணப்படும் அமைப்புகள் ஆகும்.

தமிழரசுகள்

படிமம்:TN-GVT.jpg
தமிழ்நாடு அரசு சின்னம்

தமிழர்களின் முக்கிய அரசு அமைப்புகளாக விளங்கி வருவன தமிழ் நாடு அரசும் இலங்கை அரசும் ஆகும். இவ்விரு அரசுகளும் 1950கள் முதற்கொண்டு அறிவியல் தொழில் நுட்பக் கலைச் சொல் உருவாக்கத்திலும் அதைப் பரவலாக்குவதிலும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இயக்கங்கள்

பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம், தமிழ் நாட்டு அரசியலில் முக்கியப் பங்காற்றுகிறது. இவ்வியக்கம் தன்மானத்தையும் பகுத்தறிவையும் ஊக்குவிக்கவும் சாதிகளுக்கு எதிராகப் போராடவும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான ஒடுக்கு முறையை எதிர்க்கவும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளின் கொள்கைகள் யாவும் திராவிட இயக்க கொள்கைகளைப் பின்பற்றியே உள்ளன. தமிழ் நாட்டு அரசியலில் தேசியக் கட்சிகளின் தாக்கம் குறைவாகவே உள்ளது.

படிமம்:Tamil-elam.gif
தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ தேசியக்கொடி

ஊடகங்கள்

முதன்மைக் கட்டுரை: தமிழ் ஊடகம்

தமிழ் ஊடகங்கள் ஊடாக தமிழர்களிடையே தொடர்பாடல் நடைபெறுகிறது. நாளிதழ், சிற்றிதழ், இதழ், நூல்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் ஆகிய வடிவங்கள் ஊடாகத் தமிழ் தொடர்பாடல் இடம் பெறுகிறது.

உலகமயமாதலும் தமிழரும்

உலகமயமாதல் பல்வேறு பண்பாடுகளை உள்வாங்கி ஒரு உலகப் பண்பாட்டை உருவாக்குவதாக கூறப்படுகிறது. இந்த உலகப் பண்பாடு இன்றைய ஆங்கில, மேற்கத்தைய ஆதிக்க ஈடுபாடுகளையே பெரிதும் எதிரொளிக்கும். இத்தகைய நிலையில் தமிழ் மொழி, பண்பாடு, சூழல், அறிவு சிதைந்து போக வாய்ப்புள்ளது. அதே வேளை தமது அடிப்படைக் கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையும் ஏற்று மேம்பட முடியும். அதாவது இருப்பதை அழிக்காமல் மேலதிகமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்தலாகவும் உலகமயமாதலைப் பார்க்கலாம்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

1. 1.0 1.1 "Top 30 Languages by Number of Native Speakers: sourced from Ethnologue: Languages of the World, 15th ed. (2005)". Vistawide - World Languages & Cultures. பார்க்கப்பட்ட நாள் 2007-04-03.
2. The story of India
3. இந்து நாளிதழ், 2005)
4. மாத்தளை சோமு. (2005). வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம் 113
5. http://www.geotamil.com/pathivukal/vesa_on_tamilarts.htm தமிழ் நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் - இன்றைய சித்திரம்! - வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்
6. ஆறு. அழகப்பன். (2001). தமிழ்ப் பேழை. சென்னை: திருவரசு புத்தக நிலையம். பக்கம் 276.
7. தமிழ்நாடு பள்ளிகளில் யோகக்கலை கட்டாய பாடமாக்கப்பட்டது
8. இன்குலாப். (2004). ஆனால். தஞ்சாவூர்: அகரம்.
9. அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம். கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக்கங்கள் 51 - 52
10. கி. விசாகரூபன். (2004). நாட்டார் வழக்காற்றியல். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகாம்.
11. திராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம் - ஏ.எஸ்.பன்னீர்செல்வன் - கீற்று (இணையத்தளம்) நேர்காணல் - [1]
12. Protect Tamils in Malaysia, Karunanidhi urges PM. AOL Indo Asian News Service. November 27, 2007.[2]
13. South African Indians oppose Indian Arms to Sri Lanka. தமிழ்நெற் Friday, 21 March 2008. [3]

உசாத்துணைகள்

தமிழ்

ஆங்கிலம்

• Hart, G.L. (1979). "The Nature of Tamil Devotion." In M.M. Deshpande and P.E. Hook (eds.), Aryan and Non-Aryan in India, pp. 11-33. Michigan: Ann Arbor. ISBN 0-89148-014-5
• Hart, G.L. (1987). "Early Evidence for Caste in South India." In P. Hockings (ed.), Dimesions of Social Life: Essays in honor of David B. Mandelbaum. Berlin: Mouton Gruyter.
• Mahadevan, Iravatham (2003). Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. Cambridge, Harvard University Press. ISBN 0-674-01227-5.
• Pillai, Suresh B. (1976). Introduction to the study of temple art. Thanjavur : Equator and Meridian.
• Ramaswamy, Sumathi. (1998). Passions of the Tongue: language devotion in Tamil India 1891-1970. Delhi: Munshiram. ISBN 81-215-0851-7.
• Sastri, K.S. Ramaswamy. (2002). The Tamils : the people, their history and culture. Vol. 1 : An introduction to Tamil history and society. New Delhi : Cosmo Publications. ISBN 81-7755-406-9.
• Sharma, Manorama. (2004). Folk India : a comprehensive study of Indian folk music and culture. Vol. 11: Tamil Nadu and Kerala. New Delhi : Sundeep Prakashan. ISBN 81-7574-141-4.
• Suryanarayan, V. (2001). "In search of a new identity", Frontline 18(2).
• Swaminatha Iyer, S.S. (1910). A brief history of the Tamil country. Part 1: The Cholas. Tanjore : G.S. Maniya.

மக்கள் தொகை

மக்கள் தொகை குறித்த தகவல்கள் அனைத்தும் (இலங்கை தொடர்புடையவை தவிர்த்து) Ethnologue தளத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. இலங்கை தொடர்புடைய தகவல்கள் சி. ஐ. ஏ உலகத் தகவல் புத்தக இலங்கை பக்கத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது .

வெளி இணைப்புகள்

நிகழ்ப்படங்கள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்&oldid=478626" இலிருந்து மீள்விக்கப்பட்டது