செட்டிநாட்டு வீடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Arularasan. G பக்கம் செட்டிநாடு வீடு என்பதை செட்டிநாட்டு வீடுகள் என்பதற்கு நகர்த்தினார்: பேச்சுப்பக்கத்தில் குறிப்பிட்டபடி
(வேறுபாடு ஏதுமில்லை)

14:08, 11 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

செட்டிநாட்டு அரண்மனை

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடியைச் சுற்றியுள்ள மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகள் உள்ள 76 ஊர்கள் செட்டிநாடு என்றழைக்கப்படும் பகுதியாகும், இப்பகுதியில் உள்ள பாரம்பரியமான வீடுகள் செட்டிநாட்டு வீடுகள் ஆகும் [1]

18ஆம் நூற்றாண்டு, 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை கட்டப்பெற்ற இந்த செட்டிநாட்டு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை. ஆயிரம் சன்னல்கள் வைத்த வீடுகளும் இங்கு உண்டு. நகரத்தார் தங்கள் வீட்டு விழாக்களை வீட்டிலேயே நடத்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள். அதனால் இவர்களின் வீடே பெரிய மண்டபம்போல் இருக்கும். இந்தக் கட்டிடக் கலை குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள், வல்லுனர்கள், ஆய்வாளர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர்.[2]

வீடுகளின் அமைப்பு

செட்டிநாட்டு அரண்மனைத் தூண்கள்
செட்டிநாட்டு அரண்மனையொன்றில் காணப்படும் தூண்கள்

இந்த வீடுகள் வசீகரிக்கும் வண்ணங்களான பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணங்களைக் கூடுதலாகப் பயன்படுத்தி வண்ணம் தீட்டியிருப்பார்கள். வீடுகளில் குறைந்தது முப்பது அறைகள் வரை இருக்கும். கானாடுகாத்தான் அரண்மனை போன்ற சில வீடுகளில் அதைவிட கூடுதலாக அறைகள் இருக்கும். இந்த செட்டிநாட்டு வீடுகள் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கட்டப்பட்டுள்ளன. வீட்டுக்கு முன்புற வாசல் ஒரு தெருவிலும் பின்புற வாசல் இன்னொரு தெருவிலும் இருக்குமாறு மிகப்பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளன. வீடுகளின் தரைப்பகுதி தெருவைவிட ஐந்து அடி உயரம்வரை கொண்டதாக கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் நடுவே பெரிய வானவெளி முற்ற அமைப்பு உள்ளது. வீட்டுக்குள் காற்றையும் வெளிச்சத்தையும் இந்த வானவெளி கொண்டு வருகிறது. வீட்டின் முன்வாசலும் பின்வாசலும் வீட்டில் உள்ள மற்ற அறைகளும் இந்த வானவெளியில் வந்து சேர்வதாக இருக்கும். பின்வாசலில் இருந்து பார்த்தால் முன்வாசலில் யார் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும் வகையில். இரு வாசல்களும் நேர்க் கோட்டில் உள்ளன. வீடு முழுதும் பல தூண்கள் உள்ளன இந்தத் தூண்கள் பர்மா தேக்கைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளன.[3] இந்த நீளமான தேக்குமரங்களை நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பர்மாவில் இருந்தகாலத்தில் சங்கிலியால் கப்பல்களில் கட்டி கடலில் மிதக்கவிட்டு நாகப்பட்டிணம் துறைமுகம் வழியாக கொண்டு வந்த‍தாக கூறுகின்றனர். வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் கலையம்சத்துடன் அமைந்திருக்கும். வீட்டின் நுழைவு வாசலின் இருபுறமும் விசாலானமான திண்ணை இருக்கும். அதில் கம்பீரமான மரத் தூண்கள் இருக்கும். முன் வாசல் கதவும் நிலையும் நுட்பமான மர வேலைப்பாடுகள் கொண்டவையாக இருக்கும். இந்த நிலை ஒரு பண்பாட்டு அடையாளமாகவே மாறியுள்ளது. தெய்வச் சிலைகளை நிலையின் மேல்புறத்தில் செதுக்கியிருப்பார்கள். வீட்டின் முகப்பு பட்டாலை (திண்ணை) என அழைக்கப்படுகின்றது. பட்டாலையைத் தாண்டினால் வருவது வளவு (முற்றம்) ஆகும். வீட்டில் தேக்குமரத்தால் ஆன பெரிய பெரிய கதவுகள், மர பீரோக்கள், ஊஞ்சல் என மரவேலைப்பாடு நிறைந்த பொருள்கள் கொண்டதாக உள்ளது. ஆங்காங்கு உள்ள நிலைகளில், இராமாயண, மகாபாரதக் காட்சிகளை வரிசையாகச் செதுக்கி உள்ளனர். தற்காலத்தில் சில வீடுகளை சற்று மாற்றியமைத்து நட்சத்திர விடுதிகளாக பயன்படுத்துகின்றனர். குடும்பத்தினர் பாகப்பிரிவினைப் பிரச்சினைகள உறவினர்களைக் கொண்டு பேசி தீர்த்துக் கொள்ளப்படுகின்றன. பத்திர அலுவலகங்களுக்குச் சென்று பத்திரம் பதிவது இல்லை. அவர்களுக்குள் உள்பத்திரம்ங்களை எழுதி வைத்துக் கொள்ளப்படுகின்றன. அதன்படி, ஒரு வீட்டின் தரைத்தளத்தில் உள்ள ஒரு அறை ஒருவருக்கும். அதற்கு நேராக மேலே மாடியில் உள்ள அறையை வேருவர் என உடன்பிறந்தோர் பிரித்துக்கொள்கின்றனர். அறைகள், சமையல் அறைகளில் மட்டும்தான் இந்தப் பிரிவினை. நடுமுற்றம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கும்.

திரைப்படங்களில்

கானாடுகாத்தானில் உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் வீடு செட்டிநாட்டு அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. இந்த வீட்டில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ் ஆகிய திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சின்ன ஜமீன், ராஜகுமாரன், அரண்மனைக்கிளி, சாமி, சிங்கம், பெரியார், தவமாய் தவமிருந்து, வேங்கை, திருப்பதி, திருப்பாச்சி ஆகிய படங்களில் செட்டிநாட்டு வீடுகளில் காட்சிகளை அமைத்து இருக்கின்றார்கள். பிரிவோம் சந்திப்போம் திரைப்படத்தின் பெரும்பகுதி கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு செட்டிநாட்டு வீட்டில்தான் படமாக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

  1. "அழகு குறையாத பாரம்பரியம் மாறாத செட்டிநாடு வீடுகள்". கட்டுரை. விகடன். 2015 சூலை 22. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. பாரதி.வி (2017 மே 20). "சினிமா வீடு: கானாடுகாத்தான் அரண்மனை - கட்டிடக் கலையின் அடையாளச் சின்னம்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "யுனெஸ்கோ மேப்பில் இடம்பிடித்த செட்டிநாடு வீடுகள்". கட்டுரை. நக்கீரன் சுற்றுலா. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2017.
  4. அருணகிரி (2012 சனவரி 24). "செட்டிநாட்டு வீடுகள்". கட்டுரை. கீற்று. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டிநாட்டு_வீடுகள்&oldid=2997973" இலிருந்து மீள்விக்கப்பட்டது