தொழு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி தானியங்கிஇணைப்பு category பாக்டீரிய நோய்கள்
வரிசை 88: வரிசை 88:


[[பகுப்பு:நோய்கள்]]
[[பகுப்பு:நோய்கள்]]
[[பகுப்பு:பாக்டீரிய நோய்கள்]]

07:10, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

தொழுநோய் ஆய்தலில் காந்தி

தொழு நோய் (ஆங்கிலம்-Leprosy or Hansen's disease (HD)) என்பது, மைக்கோபாக்டீரியம் இலெப்ரே[1] என்னும் நோய்க்காரணி/நோயுயிரியால் வரும், உயிர்க்கொல்லி நோயாகும். இதன் வரலாறு மிகவும் பிந்தையதாகும். இந்நோயைப் பற்றி, பல வரலாற்று நூல்களும், கிறித்துவ மதநூலான விவிலியத்திலும் இதன் குறிப்பு உள்ளது. இந்நோயை உண்டாக்கும் நோயுயிரியை, முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் கண்டறிந்தார். ஆதலால் இதற்கு ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.

தொழுநோயைக் கண்டறிந்தவர்

தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருண/குருமணி நோய்களாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விடின் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன் பாதிப்பால் உடலுறுப்புகளுக்கு உணர்ச்சியின்மையும் விரல்கள் மற்றும் பாதங்களில் கலக்கூட்டுக்கள் இழப்பு ஏற்படுதலால் இவை விரல்கள் உதிர்ந்த்து போலக்காட்சித் தரும். இவையே முற்றும் நிலையில் உயிர் துரக்கும் நிலையை அடைவதும் உண்டு. இது பெரும்பாலும் நோயெதிர்ப்பாற்றல் குன்றியவரையே இது தாக்குகிறது. இது தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டுள்ளது என்பதற்கு இதற்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டு அறியலாம். தொழுநோயை குட்டம், குச்டநோய், பெருவியாதி, மேகநீர், மேகநோய் எனப் பரவலாக அழைக்கப்படுகிறது.

நோய்ப்பண்பு

மைக்கோபாக்டீரியம் இலெப்ரே என்பது ஆக்டினோபாக்டீரியாவில் காணப்படும் மைக்கோபாக்டீரியம் என்னும் பேரினத்தினுள் உள்ள ஒரு நுண்ணுயிரி ஆகும். இவை கோலுயிரி வகை நுண்ணுயிரி. இந்நோய் உடலுக்குள் சென்றவுடன் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தொழுநோய் தாக்கியதற்கும், இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் சுமார் 3 ஆண்டு முதல் 5 ஆன்டு வரை ஆகும். இதை "அடைவுக்காலம்" என்று கூறுவர். ஏனெனில் இந்த நுண்ணுயிரி மிகவும் மெதுவாகவே எண்ணிக்கைப் பெருக்கம் செய்கின்றன.

ஆரம்ப நிலையில் சீழ், தேமல் கொப்பளங்கள் காணப்படும். இது நாட்பட்ட உணர்ச்சியின்மை, சுருக்கம், மடிப்பு தசைத் தொங்குதல் மிகுந்துக் காணப்படும். இதன் முதிர்ந்த நிலை சருமத்தில் மடிப்புகளும் உப்பிய கொப்புளங்களைப் போல் காணப்பட்டு சீழ்வடிதலும் இதன் முக்கியப் பண்புகளாகும். அதுவும் குறிப்பாக முகத்திலும் உடலின் கடைப் பாகங்களிலும் மிகுந்து காணப்படும். இதற்கு முக்கியக் காரணம் நோயுயிரி அதிகமாக வளர்வது தோல்களே ஆகும். அவ்விடத்தில் அவை மிகுந்தும் காணப்படும்.

இந்நோயை நோயின் பண்புகளை வைத்து இரு வகைப்படுத்துகின்றனர்.

  1. பலக்கோலுயிரி அல்லது லெப்ரமேட்டசு வகைத் தொழுநோய்:- இதில் பெரும்பாலும் மை. லெப்ரேவே நோயுக்கு முக்கிய காரணியாகத் திகழ்கிறது. இவ்வகை நோயை முன்னறிதல் என்பது சற்று சிரமமான செயலாகும். இது தீவிரம் அடையும் போது வரையற்ற சீழ்வடிந்து கடை நரம்புகள் சேதம் அடைவதும் மேலும் நரம்புமண்டலக் கோளாறுகளும் ஏற்படுத்துகிறது. இது ஒருவரிடத்திலிருந்து இன்னொருவருக்குப் பரவும் வகையாகும். இதன் அறிகுறிகளாக பரவும் வகையின் அறிகுறிகளாக புருவ முடிகள் உதிர்ந்து போகுதல், தோலில் மினுமினுப்பு கூடுதல், காதின் பின் பகுதி (மடல்) தடித்து இருத்தல் மேலும் குதிக்காலில் பெரிய வெடிப்புகள் காணப்படுதல் ஆகியன.
  2. டியூபர்குலார் அல்லது அருகிகோலுயிரி வகைத் தொழுநோய்:- இதில் நோயாளிகள் குறைந்த அளவே சிழ்களை வெளியிட்டும் அவர்களிலிருந்து லெப்ரே நோயுயிரியைப் பிரித்தெடுத்தல்/பிரித்தறிவது என்பது சிரமமாகும். இது மிகைநிலை எட்டிய காலந்தாழ்ந்த மிகையுணர்வூக்கத்தால் வரக்கூடியது எனலாம். இதை முன்னறிதல்/கண்டறிதல் என்பது எளிமையான செயலாகும். மேலும் இதன் தாக்கத்தில் இருந்து உடனடி சிகிச்சை எடுப்பதின் மூலம் நோயிலிருந்து விடுதலை அடையமுடியும். இது பரவுவது குறைவே ஆகும். இதன் அறிகுறிகளாக் அரிப்பு இல்லாத சிவந்த அல்லது சற்று வெளிறிய உணர்ச்சியற்ற தேமல்கள் கை மற்றும் கால்களில் மதமதப்பு (உணர்ச்சி குறைந்து இருத்தல்) ஆகியன.

நோயுயிரியின் பண்புகள்

மைக்கோபக்டீரியம் லெப்ரே என்பது மைக்கோபாக்டீரியம் பேரினத்தில் உள்ள ஒரு நுண்ணுயிர்க் குழுவாகும். இது ஆக்டினோபாக்டீரியா குடும்பங்களுக்குள் அடங்கும். இது ஒரு கோலுயிரியாகும். இவை நுண்ணோக்கியில் காணும் போது சுருட்டு வடிவில் காணப்பெரும். இது வலுவில்லா காடிமாற்று கறையேற்றி (acid fast bacilli) வகை கோலவுயிர்களாகும். இது ஒன்றே மைக்கோபாக்டிரிய பேரினத்தில் வளரூடகத்தில் வளர்க்க முடியா நுண்ணுயிர்களாகும். இதை வளர்க்க ஆய்விலங்குகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இது ஆர்மடில்லோ என்னும் விலங்கில் வளர்ப்பதின் மூலம் தொழுநோய் போன்றே நோயை எற்படுத்துகிறது. இதன் கனுக்கால்களில் உள்ளத் தசைகளிலிருந்து பிரித்தெடுத்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.

நோய்க்காரணம்

உலக தொழுநோயாளிகள்-2003

"மைக்கோபாக்டீரியம் இலெப்பரே" என்ற நோய்க்காரணி அல்லது நோயுயிரியால் இந்நோய் வருகின்றன. இது பெரும்பாலும் காலம் தாழ்ந்த மிகையுணர்வூக்கத்தாலும் நோயுயிரி உட்புகுவதாலும் வருகிறது. இவை பெரும்பாலும் காற்றின் மூலமும் நோயுற்றவருடன் நேரடித்தொடர்பின் மூலமும் பரவுகிறது. நோயரும்புவதற்கு பல வாரங்கள் முதல் பல ஆண்டுகள் ஏன் பத்து வருடத்திற்கு மேலும் ஆகலாம்.

இந்நோய்க்கான நோயுயிரி இரத்த விழுக்கணுக்களான பெருவிழுங்கிகளுக்குள் வளர்ந்து கலங்களுக்குள் நோயை உண்டாக்குகிறது. இக்காரணமே இவை தோலுக்கடியில் அதிகப்படியாகப் பெருகுவதற்குக் காரணமாக அமைகிறது.

புறப்பரவியல்

உலகின் பலப்பகுதிகளில் நோயின் தாக்கம் குறைவாகவே காணப்படுகிறது. உலகில் அதிகப் படியான தாக்கத்தை தென்கிழக்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் மற்றும் மைய மற்றும் தெற்கு அமெரிக்காவிலும் காணலாம். இந்நோயால் உகத்தில் குறைந்தது 12 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஆண்டொன்றுக்கு 5 இலட்சம் மக்கள் நோய் தொற்று உள்ளாகுகின்றனர் எனவும் அறியப்படுகிறது. ஆனால் இந்நோய் தொற்றியுள்ளதை அறிந்தவர்களை விட நோய் தொற்றாமல் அறிந்தவரின் எண்ணிக்கையே மிகும் எனவும் குறைந்தது 1.2 கோடி மக்கள் நோய் தொற்றல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

நோய் பரவும் முறை

காற்றின் மூலமே அதிகம் பரவும் இந்நோய் நோயுற்றவருடன் ஏற்படும் நேரடித்தொடர்பின் மூலமும் நோய்யுயிரி சுவாசக் குழாய் வழியாக உட்செல்வதின் மூலமும் இவை பரவுகிறது. நோய்த்தொற்று உள்ள நபர் தும்பும் போதும் இரும்பும் போதும் கோடிக்கணக்கான தொழுநோய் நுண்ணுயிர்கள் காற்றில் பரவுகிறது. இது நாசி வழியாக உள் சென்று நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவரைத் தாக்குகிறது. மேலும் இவை நோயுற்றவரின் உடலில் வழியும் சீழ்களில் தொடர்பு ஏற்படுவதாலும் இவை பரவுகிறது.

முக்கிய அறிகுறிகள்

கீழ்க்கண்ட மூன்று அறிகுறிகளில் ஏதேனும் இரண்டைத் திட்டவட்டமாகக் கூற முடியுமானால் அதைத் தொழுநோய் என்று உறுதி செய்யலாம்.

  1. உணர்ச்சியற்ற தேமல்
  2. நரம்புகள் தடித்துக் காணப்படுதல்
  3. தோல் பரிசோதனையில் மைக்கோ பேக்டீரியம் லெப்ரே கிருமிகள் காணப்படுதல்.

மேலும் சில அறிகுறிகள்

மேலேக் கூறப்பட்ட முக்கிய அறிகுறிகள் அல்லாது சில அறிகுறிகளும் பொதுவாக காணப்படும். அவை

  • உணர்ச்சியற்ற அல்லது உணர்ச்சி குறைந்த , வெளிர்ந்த அல்லது சிவந்த தேமல் மற்றும் அதன் மீது முடி உதிர்ந்து காணப்படுதல்
  • கை, கால்களில் மதமதப்பு அல்லது ஊசி குத்துவது போன்ற உணர்வு இருத்தல்.
  • தோல் தடித்தும் அதிக மினுமினுப்புடன் எண்ணெய் பூசியது போன்ற காணப்படுதல்
  • உடலிலே ஏதாவது ஒரு பகுதியில் வியர்க்காமலும் அதே சமயம் உடலின் மற்ற பகுதிகளில் வியர்வை பெருகியும் காணப்படுதல்
  • காது மடல் தடித்திருத்தல் மற்றும் கண் புருவமயிர்கள் உதிர்தல்
  • கன்னங்கள் தொங்குவது போன்ற நிலை.
  • சிங்க முகம் போன்ற தோற்றம் (இது தற்போது சாதாரணமாகக் காணப்படுவதில்லை)
  • பாதங்களில் சாம்பல் பூசியது போல் காணப்படுதல், பாதங்களில் பெரிய வெடிப்பு இருத்தல்
  • உள்ளங்கையில் சதை மேடுகள் சூம்பியிருத்தல்
  • கை, கால் விரல்கள் மடங்கியிருத்தல், குறைந்திருத்தல், விரல்கள் திரும்பியிருத்தல்
  • கண்ணிமை மூட முடியாமலிருத்தல், கருவிழியிலே புண் இருத்தல்
  • முகத்தின் பாதி பாகம் (வலது அல்லது இடது) செயல் இழத்தல்
  • மணிக்கட்டு தொங்கி விடுதல்
  • கணுக்கால் செயலிழந்து போதல்
  • ஆறாத, உணர்ச்சியற்ற நீண்டநாள் புண்
  • சட்டையில் பொத்தான் போட முடியாமை, பேனாவைப் பிடித்து எழுத இயலாமை.

நோயறிதல்

இந்நோயின் அறிகுறி தோன்ற வெகுகாலம் பிடிக்கும். இதன் பற்றிய ஐயமுள்ள நபரின் மடிந்த தோல் பகுதிகளாலான நெற்றியில் உள்ள தோல் மடிப்பு மற்றும் வயிறு மடிப்புகளிலும், தோல்களிலிருந்து வடியும் சீழ்களை எடுத்து ஆய்வரையில் ஆராய்வதின் மூலமும் இந்நோய் தொற்றை அறியலாம். இந்நோயை முன்னறிதல் என்பது சற்றே சிரமமான செயலாகும். காசநோயைக் கண்டறியும் முறைப்போல் இதன் சீழ்களைக் கார்பால் பிக்சின் என்னும் கறையைப் பயன்படுத்தி கறையேற்றும் பொழுது கருஞ்சிவப்பு நிறத்தை ஏற்கிறது. இதுவே இந்நோயை அறிய உதவும் முக்கிய முறையாகும்.

ஐயமுள்ளவர் அறியும் முறை

  1. தொடு உணர்ச்சியை இறகு, பஞ்சு, நைலான் கயிறு போன்றவற்றின் மூலம் அறியலாம்.
  2. வலி உணர்ச்சியை குண்டூசி, பந்துமுனை மையெழுதி ஆகியவற்றால் அறியலாம்.
  3. பாதிக்கப்பட்ட பகுதி, பாதிக்கப்படாத பகுதி இவற்றில் பரிசோதனைகள் செய்து இவ்விரண்டு பகுதிகளில் ஏற்படுகிற தொடு உணர்வு, வலியுணர்வு மாறுதல்களை வைத்து அறியலாம்.

தொழுநோய் என்ற சந்தேகம் வந்து விட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனைப் பெறவேண்டும். நோய்த்தொற்று உறுதியானால் தவறாமல் சிகிச்சை எடுக்கவேண்டும்.

பாதிப்புகள்

முகம்: மூக்கு சப்பையாகுதல், கண் இமைகள் மூடமுடியாத நிலை. கை: விரல்கள் மடங்கிப்போதல், விரல்கள் குறைந்த அளவில் காணப்படுதல், மணிக்கட்டு துவண்டுவிடுதல். கால்:விரல்கள் மடங்கி போதல், விரல்கள் மழுங்கி விடுதல், பாதம் துவண்டு விடுதல், பாதத்தில் உணர்ச்சி போய் குழிப்புண்கள் ஏற்படுதல். தாக்கம் அதிகமாயின் உயிரும் இழக்க நேரிடும்.

சிகிச்சை மற்றும் மருந்துகள்

தொழுநோயைக் கட்டுப்படுத்த பன்மருந்து முறைப் பயன்படுத்தப் படுகிறது (Multiple drug protocol). இதில் டாப்சோன் (dapsone), [4,4’ - கந்தகயிருபென்சின் அமைன்கள் (4,4’-sulfonylbisnenzeneamine)], ரிபாம்பிசின் (Rifampicin) மற்றும் க்லோஃபாசிமைன் (Clofazimine) ஆகிய மூன்று மருந்துகளின் கூட்டு கொடுக்கப் படுகிறது. ஒரு மருந்தோ அல்லது போதுமான சிகிச்சை அளிக்காமல் விடின் நோயின் தீவிரம் கூடுவதற்கும் மருந்திற்கு எதிர்ப்பாற்றல் கொண்ட நோயுயிரி (Pathogen) பெருகுதல் மற்றும் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. பல உயிர்ப்பகை கூட்டுகள் கொண்ட பன்மருத்துவ சிகிச்சை முறையைக் கொண்டு குறைந்தது ஓராண்டாவது சிகிச்சையைத் தொடர்வதின் மூலம் நாம் நோயுயிரியைக் கட்டுப்படுத்தி அழிக்கமுடியும். இது எந்த நிலையிலும் தொடர் சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். இதனால் ஏற்படும் ஊனங்களைச் சீர்மை செய்ய இயலும். சில ஊனங்களை அறுவை சிகிச்சை மூலமும் சிலவற்றை இயண் மருத்துவமுறையிலும் சீர் செய்யலாம்.

தடுப்பூசி

தற்பொழுது இந்தியாவில் தயாரிக்கப்படும் தொழுநோய்க்கானத் தடுப்பூசி முதன்முதலாக பீகார், குசராத்து மாநிலங்களிலுள்ள ஐந்து மாவட்டங்களில் முன்னோட்ட அடிப்படையில் அளிக்கப்படவுள்ளது[2].

இந்து மத நம்பிக்கை

திருக்கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில் வழிபாடு தொழுநோய்க்கு பரிகாரத் தலமாகக் கூறப்படுகிறது.[3][4]

Multidrug therapy(MDT)மருந்துகள்

மேற்கோள்கள்

  1. மைக்கோபக்டீரியம் லெப்ரே =en:Mycobacterium leprae
  2. "Made-in-India leprosy vaccine to be launched". The Hindu. 23 ஆகத்து 2016. http://www.thehindu.com/news/national/tamil-nadu/madeinindia-leprosy-vaccine-to-be-launched/article9020012.ece?ref=tpnews. பார்த்த நாள்: 24 ஆகத்து 2016. 
  3. http://temple.dinamalar.com/New.php?id=352
  4. http://www.shivatemples.com/sofct/sct069.php
  • தமிழக அரசு வெளியிட்ட தொழுநோய்க்கான சுகாதாரப் பணியாளர்கள் கையேடு.
  • Madigan MT, Martinko JM and J Parker, 2000, Brock Biology of Microorganisms, Prentice Hall Publication, 9th edition, p:933
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழு_நோய்&oldid=2221049" இலிருந்து மீள்விக்கப்பட்டது