சகாந்தர் சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகாந்தர் சா
முகலாயப் பேரரசின் பேரரசர்
ஆட்சி1712 - 1713
முன்னிருந்தவர்முதலாம் பகதூர் சா
பின்வந்தவர்பரூக்சியார்
மனைவி
அரச குலம்தைமூரிய வம்சம்
தந்தைமுதலாம் பகதூர் சா

சகாந்தர் சா (Jahandar Shah - 1661-1713) கிபி 1712 ஆம் ஆண்டு முதல் 1713 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆண்ட முகலாயப் பேரரசர் ஆவார். முதலாம் பகதூர் சாவின் மகனான இவர் 1661 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி பிறந்தார். 1712 பெப்ரவரி 27 ஆம் தேதி இவரது தந்தையார் இறந்ததும், இவரும், இவரது உடன்பிறந்தாரான ஆசிம்-உசு-சான் என்பவரும் தனித்தனியே தங்களைப் பேரரசர்களாக அறிவித்துப் பதவிப் போட்டியில் ஈடுபட்டனர். 1712 மார்ச் 17 ஆம் நாள் ஆசிம்-உசு-சான் கொல்லப்பட்டார். சகாந்தர் சா அதன் பின்னர் 11 மாதங்கள் ஆட்சியில் இருந்தார். இக் காலத்தில் அரசு பெரும் சீர்கேடுகளுக்கு உள்ளாகியிருந்தது. சகாந்தர் சா தனது விருப்பத்துக்குரிய மனைவியான லால் குன்வார் என்பவரின் கைப்பாவையாகவே செயல்பட்டு வந்தார். லால் குன்வார், அரசியாக உயருமுன் ஒரு நாட்டியப் பெண்ணாகவே இருந்தார். அவருடைய பிள்ளைகள் பேரரசில் மிக உயர்ந்த பதவிகளில் அமர்த்தப்பட்டனர். 1713 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் நாளில் கொல்லப்பட்ட ஆசிம்-உசு-சானின் இரண்டாவது மகன் பரூக்சியார், சையித் சகோதரர்களின் உதவியுடன், ஆக்ராவில் நடந்த போரில் "சகாந்தர் சா"வைத் தோற்கடித்தார். தில்லிக்குத் தப்பியோடிய சகாந்தர் சா அங்கு பிடிக்கப்பட்டுப் புதிய பேரரசரிடம் ஒப்படைக்கப்பட்டார். சகாந்தர் சாவும், லால் குன்வாரும் ஒரு மாதம் வரை அடைத்து வைக்கப்பட்டனர். 11 பெப்ரவரி 11 ஆம் தேதி கொலையாளிகளை அனுப்பிச் சகாந்தர் சாவின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டனர். கொலையாளிகள் பின்னர் அவரது தலையைத் துண்டித்து பேரரசர் பரூக்சியார்முன் கொண்டு சென்றனர். அவரது உடல் உமாயூனின் சமாதிக் கட்டிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அரியணை ஏறுமுன், சகாந்தர் சா இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கப்பலோட்டி வணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டினார். இவருக்கு மூன்று ஆண் மக்கள் இருந்தனர். 1754 முதல் 1759 வரை பேரரசராக இருந்த இரண்டாம் ஆலம்கீரும் இவர்களுள் ஒருவராவார்.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாந்தர்_சா&oldid=3281534" இலிருந்து மீள்விக்கப்பட்டது