கலிலேயக் கடல்

ஆள்கூறுகள்: 32°50′N 35°35′E / 32.833°N 35.583°E / 32.833; 35.583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிலேயக் கடல்
ஆள்கூறுகள்32°50′N 35°35′E / 32.833°N 35.583°E / 32.833; 35.583
வகைசீர் வெப்பநிலை
முதன்மை வரத்துமேல் யோர்தான் ஆறும் வடிகால்களும் [1]
முதன்மை வெளியேற்றம்கீழ் யோர்தான் ஆறு, நீராவியாதல்
வடிநிலப் பரப்பு2,730 km2 (1,050 sq mi) [2]
வடிநில நாடுகள்இசுரயேல், சிரியா, லெபனான்
அதிகபட்ச நீளம்21 km (13 mi)
அதிகபட்ச அகலம்13 km (8.1 mi)
மேற்பரப்பளவு166 km2 (64 sq mi)
சராசரி ஆழம்25.6 m (84 அடி)
அதிகபட்ச ஆழம்43 m (141 அடி)
நீர்க் கனவளவு4 km3 (0.96 cu mi)
நீர்தங்கு நேரம்5 years
கரை நீளம்153 km (33 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்-214 m (702 அடி)
Islands2
மேற்கோள்கள்[1][2]
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

கலிலேயக் கடல் (Sea of Galilee) என்றும் கெனசரேத்து ஏரி (Lake of Gennesaret) என்றும் அழைக்கப்படுகின்ற பெரும் நீர்த்தேக்கம் இசுரயேல் நாட்டில் உள்ளது. மனித இதயம் போன்ற வடிவம் கொண்ட இந்த ஏரிப் பகுதியில்தான் இயேசு கிறித்துவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. விவிலிய வரலாற்றில் இந்த ஏரி சிறப்பான பங்கு வகிக்கிறது.[3][4]

ஏரியின் அளவுகள்[தொகு]

கெனசரேத்து ஏரி இசுரயேல் நாட்டில் நல்ல தண்ணீர் கொண்ட ஏரிகளுள் மிகப் பெரியதாகும்.[5] இதன் சுற்றளவு 53 கிலோமீட்டர் (33 மைல்); நீளம் சுமார் 21 கிமீ (13 மைல்); இதன் பரப்பளவு 166 சதுர கிமீ (64 சதுர மைல்). ஏரியின் மிக அதிக ஆழம் 43 மீ (141 அடி). கடல்மட்டத்திலிருந்து 214 மீட்டர் (702 அடி) தாழ்ந்துள்ள இந்த ஏரி உலகிலேயே நல்ல தண்ணீர் நீர்த்தேக்கங்களுள் மிகவும் தாழ்ந்த மட்டத்திலும், உப்புநீர் கொண்ட சாக்கடலுக்கு அடுத்தபடியாக உலக ஏரிகளுள் தாழ்ந்த மட்டத்திலுள்ள ஏரிகளுள் இரண்டாவதாகவும் உள்ளது. நீரடி ஊற்றுகளிலிருந்தும் யோர்தான் ஆற்றிலிருந்தும் இந்த ஏரிக்குத் தண்ணீர் கிடைக்கிறது.

புவியியல் அமைப்பு[தொகு]

கலிலேயக் கடல் வடக்கு இசுரயேலில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்க மற்றும் அராபிய நிலத்தட்டுகள் பிரிவதால் ஏற்பட்டுள்ள யோர்தான் பிளவுப் பள்ளத்தாக்கில் இந்த ஏரி உள்ளது. எனவே, அதில் நில நடுக்கம் ஏற்படுவது உண்டு; முற்காலத்தில் எரிமலைக் கொந்தளிப்பும் அங்கு நிகழ்ந்ததுண்டு.

பெயர் விளக்கம்: விவிலியப் பின்னணி[தொகு]

புதிய ஏற்பாட்டு நூல்களில் இந்த ஏரி ”கலிலேயக் கடல்” என்றும் ”திபேரியக் கடல்” என்றும் அழைக்கப்படுகிறது (காண்க: கலிலேயக் கடல்: மத்தேயு 4:18, மாற்கு 1:16, யோவான் 6:1; திபேரியக் கடல்: யோவான் 6:1; 21:1).

கெனசரேத்து ஏரி என்னும் பெயர் லூக்கா 5:1இல் வருகிறது. மேலும், பழைய ஏற்பாட்டின் பல பகுதிகளிலும் இப்பெயர் கினரேத்துக் கடல் (Kinnereth/Chinnereth) என்றுள்ளது (காண்க: எண்ணிக்கை 34:11, யோசுவா 13:27).

கின்னர் என்னும் எபிரேயச் சொல்லுக்கு யாழ் என்று பொருள். இந்த ஏரி யாழ் வடிவில் உள்ளதால் அப்பெயர் பெற்றிருக்கலாம்.


இயற்கைச் சூழல்[தொகு]

அழகிய நீல நிறத்துடன் தோன்றும் இந்த ஏரியின் கரையில் பல பழவகை மரங்களும், வண்ண மலர்ச்செடிகளும் அமைந்து இதற்கு அழகூட்டுகிறன. இதன் கரையில் சிறு மலைகள் இருக்கின்றன. இப்பகுதி மிகவும் செழிப்பான இடம். கண்ணைப் பறிக்கும் வண்ண மலர்களும், பசுமையான செடி கொடிகளும் பார்ப்பவர்களுக்குப் பரவசமூட்டுகின்றன. மிதமான வெப்பமுடைய நீர் இந்த ஏரியிலுள்ளதும் இதற்குக் காரணம்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரியில் மீன்பிடிக்கும் தொழில் செழித்தோங்கி வந்துள்ளது. 230 படகுகள் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்ததாக முதல் நூற்றாண்டு வரலாற்றாசிரியர் ஃபிளாவியுஸ் ஜொசிஃபஸ் என்பவர் கூறுகிறார். இந்த ஏரியில் காணப்படும் திலாப்பியா மீனுக்கு தூய பேதுரு மீன் (St. Peter's Fish) என்னும் சிறப்புப் பெயர் உண்டு.

அமைதியே உருவான அழகிய கடல் இது. ஆனால், எர்மோன் மலையிலிருந்து வரும் குளிர்ந்த காற்று, திடீரென இதன் அலைகளைப் படைகளாகத் திரட்டி, பேரொலிகளையும் பேரலைகளையும் எழுப்பிப் புயலாக மாற்றிவிடுகிறது.

இயேசுவும் சீடர்களும்: கலிலேயக் கடலில் அதிசய மீன்பாடு. ஓவியர்: ரஃபயேல் (1483-1520). காப்பிடம்: இலண்டன்.

இயேசுவும் கலிலேயக் கடலும்[தொகு]

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு பணிசெய்த காலத்திலேயே கலிலேயக் கடல் மிகவும் பேர்போன இடமாக இருந்தது. ”கடலோர நெடுஞ்சாலை” (Via Maris) என்னும் பெயர்கொண்ட வணிகப் பாதை அவ்வழியே சென்று, எகிப்து நாட்டையும் வடக்கு அரசுகளையும் இணைத்தது. அந்த ஏரிக்கரையில் உரோமையர் பல நகர்களை நிறுவினர். கதாரா (Gadara), ஹிப்போஸ் (Hippos), திபேரியாஸ் (Tiberias) என்னும் அந்நகரங்களில் வாணிகம் செழித்தது.

இயேசு பலமுறை இக்கடலுக்கு வந்துள்ளார். இந்த ஏரிக்கரையில் மீனவர் குடியிருப்புகள் பல இருந்தன. அங்கு வாணிகம் சிறப்பாக நடைபெற்றது.

இயேசு தமது முதல் திருத்தூதர்களை அழைத்தபோது, இக்கடலில்தான் அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர் (மத்தேயு 4:18-22; மாற்கு 1:14-20; லூக்கா 5:1-11). இவ்வாறு, மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப் பின்சென்றவர்கள் திருத்தூதர்கள் பேதுருவும் அவர்தம் உடன்பிறப்பு அந்திரேயாவும், மற்றும் யோவான், அவர்தம் உடன்பிறப்பு யாக்கோபு என்பவரும் ஆவர்.

கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாக மத்தேயு நற்செய்தியாளர் குறித்துள்ளார் (காண்க: மத்தேயு 5:1-7:28). இது மலைப்பொழிவு என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது.

அதிசய மீன்பாடு புதுமை[தொகு]

இயேசு தம் அதிசய வல்லமையைப் பயன்படுத்தி இருமுறை பெருமளவில் மீன்பாடு நிகழச் செய்தார் என்று நூல்கள் கூறுகின்றன. முதல் புதுமையை லூக்காவும் இரண்டாம் புதுமையை யோவானும் குறித்துள்ளனர்.

லூக்கா 5:1-11: ஒருநாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவர் போதித்ததைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பின்னர், சீமோன் என்பவரின் படகில் இயேசு ஏறி அமர்ந்து அதில் அமர்ந்தவாறே கற்பித்துக்கொண்டிருந்தார். படகை ஏரியின் ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய் மீன்பிடிக்க வலைகளைப் போடுமாறு இயேசு சீமோனிடம் கூறினார். இரவு முழுதும் வலைவீசியும் மீனொன்றும் அகப்படவில்லை என்று சீமோன் கூறிப்பார்த்தார். என்றாலும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் என்று சொல்லி, அவரும் அவரோடுகூட இருந்தவர்களும் ஏரியில் வலைகளை வீசினார்கள். அதிசயமான விதத்தில் பெருந்திரளான மீன்கள் வலைகளில் அகப்பட்டன; வலைகளும் கிழியத் தொடங்கின. வேறு மீனவர்களும் துணைக்கு அழைக்கப்பட்டனர். படகு மூழ்கும் அளவுக்கு மீன்கள் கிடைத்தன. வியப்பும் அச்சமும் மேலிட, சீமோனும் அவர்தம் உடனுழைப்பாளரும் இயேசுவின் கால்களில் விழுந்தார்கள். இவ்வாறு இயேசு அவர்களைக் கெனசரேத்து ஏரிக்கரையில் தம் சீடர்களாகச் சேர்த்துக்கொண்டார்.

யோவான் 21:1-14: சாவினின்று உயிர்பெற்றெழுந்த இயேசு திபேரியக் கடல் அருகே தம் சீடருக்குத் தோன்றியதை யோவான் பதிவுசெய்துள்ளார். இரவு முழுதும் வலைவீசியும் மீன் அகப்படாமல் இருந்தது. ஏரிக் கரையில் நின்ற இயேசு படகிலிருந்த சீமோனையும் மற்றவர்களையும் நோக்கி, படகின் வலப்பக்கத்தில் வலைவீசுங்கள்; மீன் கிடைக்கும் என்றார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. வலையில் 153 மீன்கள் இருந்தன.

அதிசய மீன்பாடு நிகழ்ந்தது இரு தடவை குறிப்பிடப்பட்டாலும் ஒரே நிகழ்ச்சியைத்தான் விவரிக்கின்றன என்று விவிலிய அறிஞர் கருதுகின்றனர். இயேசுவின் பணிக்காலத்தின் தொடக்கத்திலும் அவர் உயிர்த்தெழுந்த பின்னும் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதன் வழியாக இயேசுவிடம் கடவுளின் வல்லமை துலங்கியது என்றும், இயேசுவின் பணியை அவர்தம் சீடர்கள் தொடர்ந்து ஆற்றி, உலக மக்கள் எல்லாரையும் (153 மீன்கள்) கடவுளின் ஆட்சியில் கொண்டுசேர்க்க வேண்டும் என்றும் இயேசு அப்பொறுப்பைச் சீடர்களுக்கு அளித்தார் என்றும் புதிய ஏற்பாடு கூறுகின்றது. இதையே லூக்காவும் யோவானும் வெவ்வேறு விதங்களில் பதிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.

பிற புதுமைகள்[தொகு]

இயேசு கலிலேயக் கடல்மீது நடந்தார் என்னும் செய்தியை நற்செய்தியாளர் பதிவுசெய்துள்ளனர் (காண்க: மத்தேயு 14:26-33, மாற்கு 4:45-52, யோவான் 6:16-21).

கலிலேயக் கடலில் ஏற்பட்ட புயலை இயேசு அடக்கிய நிகழ்ச்சியையும் நற்செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் (காண்க: மத்தேயு 8:23-27, மாற்கு 4:35-41, லூக்கா 8:22-25).

இயேசு கலிலேயக் கடலில் புயலை அடக்குகிறார். ஓவியர்: ரெம்ப்ராண்ட். ஆண்டு: 1633.
திபேரியாஸ் உணவகத்தில் பரிமாறப்படும் திலேப்பியா (புனித பேதுரு மீன்).

கலிலேயக் கடலருகில் பாலைநிலத்தில் இயேசு ஐயாயிரம் பேருக்கு அதிசயமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தியும் நற்செய்தியில் காணப்படுகிறது (காண்க: மத்தேயு 14:13-21, மாற்கு 6:30-44, லூக்கா 9:10-17, யோவான் 6:1-14).

இயேசுவின் காலத்திற்குப் பிந்திய வரலாறு[தொகு]

கி.பி. 153இல் யூதர்கள் உரோமை ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபோது உரோமையர் எருசலேமைத் தாக்கினர். யூத சமய வழிபாடுகள் அங்கே தடைசெய்யப்பட்டன. எனவே, யூத மக்கள் எருசலேமை விட்டு கலிலேயப் பகுதிகளுக்குச் சென்றனர். இவ்வாறு கலிலேலயக் கடலும் கடற்பகுதியும், குறிப்பாக திபேரியாஸ் நகரும் முதன்மை பெறலாயின. அக்காலத்தில் யூத சமய இலக்கியங்கள் பல திபேரியாசில் உருவாக்கப்பட்டன.

கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டுவரை கலிலேயக் கடல் பகுதி கிறித்தவர்களின் திருத்தலமாகப் போற்றப்பட்டது. பல திருப்பயணியர் இயேசு வாழ்ந்த இடங்களைத் தரிசிக்கச் சென்றனர். பின்னர் 12ஆம் நூற்றாண்டுவரை இசுலாமிய ஆதிக்கம் ஏற்பட்டது.

இருபதாம் நூற்றாண்டில் யோர்தான் ஆறு, கலிலேயக் கடல் ஆகியவற்றின் நீரைப் பங்கிடுவது பற்றி இசுரயேல் நாட்டிற்கும் சிரியா நாட்டுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.[6].

சுற்றுலா விரிவாக்கம்[தொகு]

கலிலேயக் கடல் பகுதியில் இன்று சுற்றுலா முதன்மை பெற்றுள்ளது. திபேரியாஸ் நகரத்தையும், இயேசுவின் வாழ்க்கையோடு தொடர்புடைய இடங்களையும் சந்திப்பதற்குப் பல திருப்பயணிகளும் அங்கு செல்கிறார்கள். மீன்பிடித்தல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஏரிக் கரையில் வாழைத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கலிலேயக் கடலிலிருந்து தண்ணீர் யோர்தான் ஆற்றில் பாயும் இடம் தனிச் சிறப்பு வாய்ந்தது. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றார் என்னும் வரலாற்று நிகழ்வின் அடிப்படையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் யோர்தான் ஆற்றில் மூழ்கித் திருமுழுக்குப் பெறச் செல்கிறார்கள். சுற்றுலாப் பயணிகள் தம் கைகளாலே கட்டுமரம் போன்ற ஒரு தட்டைப் படகு (Rafsodia) கட்டி அதில் ஏறி ஏரியைக் கடப்பது ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக உள்ளது.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிலேயக்_கடல்&oldid=2243013" இலிருந்து மீள்விக்கப்பட்டது