எஸ்ரா பவுண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ்ரா வெஸ்டன் லூமிஸ் பவுண்ட் (Ezra Weston Loomis Pound, 30 அக்டோபர் 1885   - 1 நவம்பர் 1972) என்பவர் ஒரு புலம்பெயர் அமெரிக்க கவிஞரும், திறனாய்வாளரும் ஆவார். நவீனக் கவிதை இயக்கத்தின் துவக்கக்கால முக்கிய நபராகவும், பாசிச அனுதாபியாகவும் இருந்தார். [1] இவரது படைப்புகளில் ரிப்போஸ்டஸ் (1912), ஹக் செல்வின் மௌபர்லி (1920) மற்றும் முடிக்கப்படாத 120-பிரிவு காவியமான, தி கான்டோஸ் (1917-1969) ஆகியவை அடங்கும்.

பின்னணி[தொகு]

எஸ்ரா லூமிஸ் பவுண்ட் 1885 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் நாள் ஐக்கிய அமெரிக்காவில் இதாஹோ மாநிலத்தில் ஹெய்லி என்ற ஊரில் பிறந்தார். இவருடைய தாயார் அமெரிக்க கவிஞர் ஹென்றி வோர்ட்ஸ் வொர்த் லாங்ஃபெல்லோவின் உறவினர். தந்தை அரசாங்க அலுவலர்; ஹெய்லியில் முதன் முதலாகக் காரைக் கட்டிடம் கட்டியவர்.[2]

கல்வி[தொகு]

பவுண்ட் இளமையிலேயே ஓயாமல் படிக்கும் குணமுடையவராக இருந்தார். நியூயார்க் ஹேமில்டன் கல்லூரியில் ஒப்பிலக்கியத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் ஸ்பெயின் நாடகாசிரியர் லோப்-டி-வேகாவின் படைப்புக்களை ஆய்வு செய்வதற்காக ஓராண்டு ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மீண்டும் அமெரிக்கா திரும்பி இண்டியானாவில் ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். ஆனால் கல்லூரி மரபுகளுக்கு மாறாகவும், மனம் போன போக்கிலும் நடப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுப் பணியிலிருந்து விலக்கப்பட்டார்.[2]

அமெரிக்கவிலிருந்து வெளியேறுதல்[தொகு]

இந்நிலையில் பவுண்டுக்கு அமெரிக்காவையும், அமெரிக்க மக்களையும் பிடிக்காமல்போனது. அமெரிக்கா குடியேற்ற நாடு. அங்கு பலநாட்டு மக்களும் குடியேறி, நிலையான ஒரு பண்பாட்டு வளர்ச்சியை அடையாத நிலையில் இருந்தனர். அங்கிருப்பதை விடத் தொன்மைச் சிறப்பும், கலை இலக்கியப் பண்பாட்டுச் சிறப்பும் மிக்க ஐரோப்பிய நாடுகளில் சென்று வாழ்வது சிறந்தது என்று பவுண்ட் கருதினார். அமெரிக்காவை ‘அரைக் காட்டு மிராண்டி நாடு’ (half-savage country) என்று இகழ்ந்து கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

ஐரிஷ் கவிஞரான யேட்சைப் பவுண்ட் மிகவும் மதித்துப் போற்றினார். கடந்த ஒரு நூற்றாண்டில் யேட்சுக்கு இணையான கவிஞர்கள் யாருமில்லை என்ப்து இவர் கணிப்பு எனவே யேட்சைச் சந்தித்து அவரோடு பழகவேண்டும் என்ற ஆர்வத்தோடு பவுண்ட் இலண்டன் வந்து சேர்ந்தார். பவுண்டுடன் பழகிய யேட்ஸ் அவருடைய அறிவுநுட்பத்தை வியந்து பாராட்டினார். தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் இலண்டனில் உள்ள இளைய தலைமுறைக் கவிஞர்களுள் பவுண்ட் முதன்மையானவர்: தீவிர படைப்பாற்றல் மிக்கவர். இவர் பாலுணர்வற்ற ஓர் அமெரிக்கப் பேராசிரியர்; உணர்ச்சியை விட உழைப்புக்கு முதலிடம் கொடுப்பவர்; நினைத்தவுடன் பாடவல்ல சிறந்த ஆசு கவி; இவர் கவிதையில் உருவத்தை விட நடை நன்றாக இருக்கும்; அந்த நடையும் இடையிடையே உடைந்தும் தடைப்பட்டும் கொடுங்கனவாகவும், குழப்பம் மிக்க வலிப்பாகவும் முடிந்து விடும். அவருடைய சோதனை முயற்சிகள் தவறானவையாக இருக்கலாம். ஆனால் எழுச்சியில்லாத மரபைவிட, முன்னேற்றமான, தவறுகள் பரிசுக்குரியவை” என்று யேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.[2]

இலண்டன் செயல்பாடுகளும் தாக்கங்களும்[தொகு]

இலண்டனில் பவுண்ட் வாழ்ந்த காலத்தில், எழுத்தில் தீவிரப் புரட்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துடைய இளைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்குத் தலைமை தாங்கினார். அங்கு வாழ்ந்த காலத்தில், அமெரிக்க அறிஞர் எர்னெஸ்ட் ஃபென்னலோசாவின் (Ernest Fennelosa) கையெழுத்துப் படிகளை ஆய்ந்து சீன, ஜப்பானியக் கவிதைகளையும், நோ நாடகங்களையும் ஆங்கிலத்தில்மொழியாக்கம் செய்து பதிப்பித்ததுதான். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் பண்புகளையும், சிறப்புக்களையும் மேலை நாடுகளில் விளம்பரப்படுத்திய பெருமையும் இவரையே சாரும்.

பவுண்டுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர்களின் தாக்கமும், பிரவென்கல் பாடகர்களின் (Provencal Singers) தாக்கமும் மிக அதிகமாக இருந்தது, ஆங்கிலக் கவிஞர்களுள் பிரௌனிங்கை இவருக்கு மிகவும் பிடிக்கும். பிரெளனிங் கவிதைகளில் காணப்பட்ட கலைநுட்பம் இவரைப் பெரிதும் கவர்ந்தது. கிட்டத்தட்ட இருவருடைய கவிதை உத்திகளும் ஒன்றே. உருசிய இலக்கியங்கள் இவரைக் கவரவில்லை.

பவுண்டின் நட்பால் அதிகப்பயன் பெற்றவர் கவிஞர் தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட். அவர் பவுண்டின் திறனாய்வினை ஏற்றுப் ‘பாழ்நிலம்’ என்ற தமது கவிதையைப் பாதியாகச் சுருக்கிக் கொண்டார். அதுவே அக்கவிதையின் வெற்றியாக அமைந்து அவருக்கு நோபெல் பரிசையும் பெற்றுக் கொடுத்தது. இந் நன்றிக்காகவே சிறந்த தொழில் வல்லுநருக்கு (the better Craftsman) என்று சொல்லி அக்கவிதையைக் பவுண்டுக்குப் படைத்திருக்கிறார். எலியட்டின் வெற்றிப் படைப்புக்களான ‘ஒரு பெண்ணின் வரலாறு’ (Portrait of a Lady), ப்ருஃப்ராக் (Prufrock) ஆகிய இரண்டுமே பவுண்டின் படைப்புக்களைப் படித்த தாக்கத்தால் உருவானவை.[2]

சம காலக் கவிதைகளில் காணப்பட்ட மிகுபுனைவியக் (Romantic Excess) கொள்கையைத் தீவிரமாக எதிர்த்த இளங்கவிஞர்களை எல்லாம் ஒன்றுதிரட்டி ஓர் அமைப்பை நிறுவினார். மற்ற கவிஞர்களிடமிருந்து அவர்களை வேறு பிரித்துக் காட்டுவதற்காக அவர்களுக்குப் படிமக்கவிஞர்கள் (imagists) என்று பெயர் சூட்டினார். பிறகு படிமக்கவிஞர்களின் கொள்கை அறிக்கை (the manifesto of imagists) ஒன்றையும் வெளியிட்டார்.

இந்த அறிக்கையில் இடம்பெற்ற கருத்துக்களுக்குக் கடும் எதிர்ப்பு ஏறபட்டது. போராட்டக் குணம் மிக்க அமி லோவல் (Amy Lowell) என்ற பெண்மணி இவருக்கு எதிராகக் கிளம்பி, இளங்கவிஞர்களைத் தம் பக்கம் ஈர்த்துக் கொண்டு படிம இயக்கத்துக்குத் தலைமை ஏற்றார். இதனால் வெறுப்பும் சலிப்பும் அடைந்த பவுண்ட் இலண்டனை விட்டு வெளியேறிப் பாரிசு நகரம் வந்து சேர்ந்தார்.[2]

பாரிசு வாழ்கை[தொகு]

பாரிசு நகர நண்பர்களையும், இளைஞர்களையும், இலக்கியவாதிகளையும் பவுண்ட் தன் பேச்சாலும், கருத்தாலும், புலமையாலும், படைப்பு வேகத்தாலும், வக்கர புத்தியினாலும், முரட்டுத்தனத்தாலும் எரிச்சலூட்டிக் கொண்டும் திகைக்க வைத்துக் கொண்டுமிருந்தார். நாளாக ஆக இவர் கண்டிப்புமிக்க முரட்டு ஆசிரியராக மாறித் தம் அறிவுரைகளை எல்லாருக்கும் வழங்கிக் கொண்டிருந்தார். அதேசமயத்தில் புதுவிதமான படைப்பாற்றல் ஒன்று அவரிடம் கால்கொள்ளத் தொடங்கியது. குத்தலும் கிண்டலும் கூடிய உரையாடல் பாணியில் அவர் கவிதை எழுதத் தொடங்கினர். மொழிபெயர்ப்புகள் தனித்தனிச் சிறிய கவிதைத் தொடர்ச்சிகள் என்ற நிலையிலிருந்துமாறிச் சிக்கலான வடிவமைப்பையுடைய நீண்ட கவிதை முறைக்கு மாறினார்.[2]

இத்தாலி வாழ்கை[தொகு]

பவுண்ட் பாரிசை விட்டு 1924- ஆம் ஆண்டு இத்தாலி நாட்டு ரிவைராவில் சற்று வெதுவெதுப்பான ரேபல்லோ என்ற இடத்துக்குக் குடிபெயர்ந்தார். 1939-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று கொஞ்சநாள் தங்கினார். அப்போது பாசிசத்தைப் புகழ்ந்தும், அமெரிக்க ஜனாதிபதி ஜெஃபர்சனை முசோலினியோடு ஒப்பிட்டுப் பேசியும் அமெரிக்க மக்களின் எதிர்ப்புக்கு ஆளானார். இவரை ஆதரித்த நண்பர்களும் செய்வதறியாது திகைத்தனர். ‘டக்ளஸ் ணமுதாயக்கடன் திட்டத்தை’ (Douglas Social Credit System)ij பற்றிப் பேசி யூதர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டார். அமெரிக்காவை விட்டு வெளியேறி நீண்டநாள் நாடோடியாகத் திரிந்த தனிமை வெறுப்பு அவரை அவ்வாறு பேச வைத்துவிட்டது என்று எல்லாரும் எண்ணினர். தம்மைக் குறை கூறி விமர்சிப்பதைப் பவுண்ட் எப்போதும் தாங்கிக் கொள்ளமாட்டார். மீண்டும் இத்தாலிக்கே திரும்பிவிட்டார்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. பாசிஸவாதிகளுக்கு ஆதரவாகவும், அமெரிக்கர்களுக்கு எதிராகவும் ரோம் நகர வானொலியில் வாரம் இரு முறை பிரசாரத்தில் ஈடுபட்டார் பவுண்ட். அமெரிக்க நாட்டையும், அதன் மக்களாட்சி முறையையும், ஆட்சித்தலைவர் ரூஸ்வெல்ட்டையும் கடுமையாக விமர்சித்து வசைமாரி பொழிந்தார். அவர் பேச்சில் யூதவெறுப்பு கொப்பளித்தது; இவர் கவிதைகளிலும் இவ்வெறுப்புக்கள் பொங்கி வழிந்தன.[2]

சிறை வாழ்கை[தொகு]

இரண்டாம் உலகப்போரில் நேசநாடுகள் வெற்றி பெற்றதும், 1945 இல் பவுண்ட் தேசத்துரோகக்குற்றத்துக்காக அமெரிக்கப்படையினரால் கைது செய்யப்பட்டு, பைசா நகருக்கு அருகில் இருந்த இராணுவச் சிறைச்சாலைக்குக் (Army Disciplinary Barracks) கொண்டு செல்லப்பட்டார். அங்கே கடும் குற்றவாளிகளுக்கெனப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட எஃகு வலைக் கூண்டில் அடைக்கப்பட்டார். அப்போது பவுண்டுக்கு வயது அறுபது. ஆறு திங்கள் இக்கூண்டில் அடைக்கப்பட்ட பவுண்டின் உடலும், உள்ளமும் பாதிக்கப்பட்டன. மறதியாலும், தனிமை நோயாலும் (Claustro phobia) மிக வருந்தினார். என்றாலும் சிறைக் கூண்டிலும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. சிறையிலிருந்து எழுதிய காண்டங்களில் சிறையனுபவம், தனிமைத்துன்பம், ஆன்மத்தேடல் ஆகியவற்றைப்பதிவு செய்கிறார்.

இதன் பிறகு பவுண்ட் விசாரணையின் நிமித்தம் வாஷிங்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு இவரைச் சோதித்த மருத்துவர்கள், இவரை ஒரு மனநோயாளி என்று முடிவு செய்தனர். அதனால் விசாரணையிலிருந்தும், மரண தண்டனையிலிருந்தும் விடுபட்டு, செயிண்ட் எலிசபெத் மன நோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இவர் இருந்தபோது இவருடைய சிறைக் கவிதைகளுக்கு (Pisan cantos) அமெரிக்க நூலகப் பேராயத்தால் (Fellows of library) போலிங்கன் பரிசு (Bollingan prize) வழங்கப்பட்டது. அப்போது இவருக்கு எதிரான அரசியல்வாதிகளும இலக்கியவாதிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்தப் போராட்டம் பல மாதங்கள் நீடித்தது.[2]

விடுதலை[தொகு]

பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, இவருடைய தள்ளாமை கருதி, மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இவர் மீது சாட்டப்ப்ட்ட குற்றங்கள், இவருடைய புத்தி பேதலிப்பின் விளைவு என்று கருதி அமெரிக்க அரசாங்கம் இவர் மீதிருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. மருத்துவ மனையை விட்டு வெளியேறியதும் பவுண்ட் மீண்டும் இத்தாலிக்கே திரும்பிவிட்டார். இதன்பிறகு “சுதந்திர பூமி என்று சொல்லப்படும் அந்த நாட்டிலிருந்து விடுதலை பெற்றதற்காக நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்; அமெரிக்கா ஒரு பயித்தியக்கார விடுதி” என்று அறிவித்தார் பவுண்ட்.[2]

தனிபட்ட வாழ்கை[தொகு]

பவுண்ட் தமது 29 ஆம் வயதில் ‘டோரதி ஷேக்ஸ்பியர்’ என்ற பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது.[2]

இலக்கியப் பணிகள்[தொகு]

பவுண்ட் தமது 27 ஆம் வயதிற்குள் ஐந்து படைப்புக்களை வெளியிட்டார். இவருடைய துவக்ககாலக் கவிதைகள், பழமையான பிரெஞ்சுக்கவிதை மற்றும் ஆங்கிலப் புதுக்கவிதைகளின் கலவையாக அமைந்திருந்தன. 35 ஆவது வயதில் இவர் எழுதி வெளியிட்ட ஹக்கில்வின் மாபெர்லி (Hug Selwyn Mauberly) என்ற கவிதைத் தொடர் இவர் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைநதது.

பவுண்டின் படைப்புக்களில் எல்லாராலும் அதிகம் பேசப்படுவதும், திறனாய்வுக்கும், கண்டனத்துக்கும், பாராட்டுதலுக்கும் உட்படுத்தப்படுவதும் இவருடைய காண்டங்கள் (Cantos) ஆகும். இக்காண்டங்கள் பவுண்டின் ஆழ்ந்த சிந்தனையில் முளைத்த தனிமொழிகள் (Monologues). இவற்றை எழுதிமுடிக்கப் பவுண்டுக்குக் கால் நூற்றாண்டுகள் பிடித்தன. முதல் பதினாறு காண்டங்கள் 1925-ஆம் ஆண்டிலும், மற்ற காண்டங்கள் அடுத்த இருபது ஆண்டுகளிலும் வெளியிடப்பட்டன. பைசா நகருக்கு அருகில் சிறை வைக்கப்பட்டபோது, இவர் பத்துக் காண்டங்கள் எழுதினார். அவை பைசா காண்டங்கள் (Pisan Cantos) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன. எல்லாமாகச் சேர்த்து எண்பத்தைந்து காண்டங்கள் இந்நூலுள் அடங்கும்.

பவுண்ட் கவிதைப் புனைவுகள் மட்டுமல்லாது, பிரெஞ்சுக் கவிஞர் வில்லன் பற்றி இசை நாடகம் ஒன்றும் (Opera), பல கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார். அளவிறந்த மொழி பெயர்ப்புகளும் செய்திருக்கிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kindley, Evan. "The Insanity Defense: Coming to terms with Ezra Pound's politics". The Nation. The Nation. Archived from the original on 29 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 கவிஞர் முருகு சுந்தரம் (1993). "புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்". நூல். அன்னம் (பி)லிட். pp. 55–65. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்ரா_பவுண்ட்&oldid=3546434" இலிருந்து மீள்விக்கப்பட்டது