உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜா இராமண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜா இராமண்ணா
பிறப்பு(1925-01-28)28 சனவரி 1925
திப்தூர்,தும்கூர், கர்நாடகா, பிரித்தானிய இந்தியா
இறப்புசெப்டம்பர் 24, 2004(2004-09-24) (அகவை 79)
மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா
வாழிடம்மும்பை, இந்தியா
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்பாபா அணு ஆய்வு மையம்
Defence Research and Development Organisation
International Atomic Energy Agency
Ministry of Defence
National Institute of Advanced Studies
கல்வி கற்ற இடங்கள்Madras Christian College
King’s College London, United Kingdom
அறியப்படுவதுOperation Smiling Buddha
Operation Shakti
Indian nuclear programme
விருதுகள்Padma Shri (1968)
Padma Bhushan (1973)
Padma Vibhushan (1975)

இராஜா இராமண்ணா (Raja Ramanna:ஜனவரி 28, 1925 - செப்டம்பர் 24, 2004): இந்திய அணுஆற்றல் துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றிய அணுக்கரு அறிவியலறிஞர். இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாகப் பங்காற்றியவர். இந்திய அணுக்கரு உலையின் தந்தை எனப் போற்றப்படுபவர்;[1] எழுச்சியூட்டும் தலைவராகவும் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் விளங்கியவர்; இசைக்கலைஞர்; சமற்கிருத இலக்கியம் மற்றும் தத்துவங்களில் மேதையாக விளங்கிய பன்முகத்தன்மை கொண்ட ஓர் முழுமையான மனிதர் எனப்போற்றப்படுபவர்.[2] 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் இந்தியாவில் ராஜஸ்தான் பாலைவணத்தில் புவிக்கடியில் நடத்தப்பட்ட 'சிரிக்கும் புத்தர்' (Operation Smiling Budhdha)என்ற மறைமுகச் சொல்லைப்பயன்படுத்தி முதல் அமைதியான ஐதரசன் குண்டு வெடிப்பு ஆய்வினை நடத்தியவர்.[3]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இளமை

[தொகு]

1925 ஜனவரி 28 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் [Tumkur] பிறந்தார். தந்தையார் பெயர் பி. ராமண்ணா.இவர் நீதியரசாரப் பணியாற்றி வந்தார். தாயார் ருக்மணியம்மா. இவர் நல்ல அறிவாளியாகவும், கவிதை இயற்றுதல், மின்கருவிகளைப் பழுது பார்த்தல் ஆகியவற்றில் திறம் பெற்றவராகவும் இருந்தார்.[1][4] இராமண்ணாவின் வாழ்க்கையில் பெற்றோருக்கு அடுத்து இவரை ஈர்த்தவர் இவருடைய தாயின் சகோதரி இராஜம்மா ஆவார்.[4] பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய அவர் கதைகள் புராணக் கதைகள், காப்பியக் கதைகள் ஆகியவற்றை இராமண்ணாவுக்குச் சொல்லி அவரின் அறிவு வளர்ச்சிக்கும் வழிகோலினார். இராமண்ணாவின் பெயரிலுள்ள இராஜா என்பது இராஜம்மா என்ற பெயரின் பகுதியாகும்.[2]

கல்வி

[தொகு]

இராமண்ணாவின் தொடக்கக் கல்வி மைசூரில் அமைந்தது. இவரின் குடும்பம் பெங்களூருக்குக் குடிபெயர்ந்ததால் அங்கு பிஷப் காட்டன் பள்ளியில் சேர்ந்து கல்வியைத் தொடர்ந்தார். இது ஆதரவற்ற ஆங்கிலோ இந்தியக் குழந்தைகளுக்கான பள்ளியாகும். சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் காட்டியதுடன் அதை முறையாகவும் பயின்றார். ஆங்கில வழிப்பள்ளியில் பயின்றதால் மேலைநாட்டுச் சங்கீதமும் இவரை ஈர்த்தது. பள்ளிப்படிப்பு முடிந்ததும், பெங்களூருவில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இன்டர் மீடியட் படிப்பை முடித்தார். பின்னர்

சென்னையில் உள்ள தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் மேற்படிப்பிற்காகச் சேர்ந்தார். அங்கு இயற்பியல் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். விஞ்ஞானப் பட்டம் பெற்ற பின்,டாடா கல்வி உதவித் தொகை பெற்று இங்கிலாந்து சென்று லண்டனிலுள்ள அரசர் கல்லூரியில் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார். அணுக்கரு இயற்பியல் [Nuclear Physics], அணுவுலை இயற்பியல் [Reactor Physics], வடிவமைப்பு, மேற்கத்திய இசை, வேதாந்தம் ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்றார். 1948 இல் முனைவர் பட்டத்தையும் [Ph.D.], ராயல் இசைப் பள்ளியின் L.R.S.M பட்டயப் படிப்பையும் [Licentiate in Royal School of Music] பெற்றுக் கொண்டு இந்தியா வந்து சேர்ந்தார். அவரது மனைவியார் பெயர் மாலதி இராமண்ணா. அவருக்கு ஒரு மகனும், இரு புதல்விகளும் உள்ளனர்.

பணிகள்

[தொகு]

இராமண்ணா கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே இந்திய அணுவியலறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா மீது மதிப்பு கொண்டிருந்தார். 1944 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் விளைவாக இந்தியாவில் தங்கியிருந்த திரித்துவ இசைக்கல்லூரியின் தேர்வாளர் முனைவர் ஆல்பிரெட் மிஸ்டோவ்ஸ்கி என்பவர் மூலம் பாபாவைச் சந்திக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. மற்றொரு முறை பாபா லண்டன் சென்றிருந்த போது அங்கு கல்வி பயின்றுகொண்டிருந்த இராமண்ணா அவரை மீண்டும் சந்தித்தார். அப்போது பாபா இந்திய அணு ஆற்றல் நிகழ்வுகளுக்குத் தொட்டிலாய் விளங்கிய அடிப்படை ஆய்வுக்கான டாடா பயிற்சி நிறுவனத்தில் (TIFR-Tata Institute of Fundamental Research) சேர்ந்து பணியாற்ற இவருக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார்.[1] 1949, டிசம்பர் 1 இல் இராமண்ணா அப்பணியில் அமர்ந்தார்.[4] மும்பையில் கும்பாலா குன்று என்ற இடத்தில் அமைந்திருந்த அந்நிறுவனம் அப்போதுதான் யாட்கிளப் பகுதிக்கு மாறி, புதிய கட்டடப் பணிகள் நடைபெற்று வந்தன.

இசையில் இவருக்கிருந்த ஆர்வத்தை உணர்ந்த பாபா தங்கும் விடுதியில் இவருக்கு என்று ஓர் அறை இவருடைய பியானோ இசைக்கருவியை வைக்க ஓர் அறை என இரண்டு அடுத்தடுத்த அறையை ஒதுக்கித் தந்தார். விடுதியில் தரைதளம் இவர் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஆய்வறையாக அமைந்தது.

இங்கு அணுக்கருப் பிளவு மற்றும்ம் சிதறல் பற்றிய ஆய்வுகளை இவர் மேற்கொண்டார். இவர் சேரும்போது இந்நிறுவனம் தொடங்கி ஐந்தாண்டுகள் ஆகியிருந்தது. அப்பொழுது பாபாவின் காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகள் உலகப் புகழ் பெற்றிருந்தன. பாபாவின் தூண்டுதலால் தொடங்கப்பட்ட அணுக்கரு ஆய்வுக்குழு குறிப்பிடதக்க வகையில் பணியாற்றிய பெருமையுடையதாகும். தொழில்நுட்ப நடவடிக்கைகளும், அணுஆற்றல் திட்டங்களும் இந்தியாவில் தழைத்தோங்கி வளர இக்குழு மிகவும் கடுமையாக உழைத்தது. இதன் செயல்பாடுகளுக்கு மின்னணுவியல் துறையின் தலைவரான 'ஏ. எஸ். ராவ்' அவர்களும் ஒரு காரணமாக விளங்கினார். பல்வேறு இன்னல்களுக்கிடையேயும் இக்குழுவின் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வந்தன.

அணு ஆய்வுகள்

[தொகு]

நியூட்ரான், அணுக்கரு, அணுக்கரு உலை இயற்பியல் ஆகிய துறைகளில் இராமண்ணாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. பாபா அணு ஆய்வு மையத்தில் ஹோமி பாபாவின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுகளின் போது இராமண்ணா ஓரு இளைய ஆய்வாளராகப் பணியாற்றினார். 1956 ஆம் ஆண்டு ஆகஸ் 4 ஆம் நாள் முதல் அணுக்கரு உலையான 'அப்சரா' இக்குழுவினரால் உருவாக்கப்பட்டது. இதில் நியூட்ரான் பற்றிய ஆய்வுகளை இராமண்ணாவும், கோட்பாட்டு இயற்பியலில் கே. எஸ். சிங்வியும், மின்னணுத் துறையில் கருவிகள் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவற்றில் ஏ. எஸ். ராவும் பங்களித்தனர். அணுக்கரு உலையில் அமைக்கப்படும் எரிபொருளுக்கான துளைகள் அமைப்பு உருவாக்கத்திற்கு எந்திரப் பொறியாளர் வி. டி. கிருஷ்ணன் என்பர் பொறுப்பேற்றார்.

இராமண்ணா துடிப்புமிக்க நியூட்ரான் மூலத்தைப் பயன்படுத்தி நீர் மற்றும் பெரிலியம் ஆக்சைடில் அதன் வேகத்தை மட்டுப்படுத்தி நியூட்ரான் விரலைத் திர்மாணித்தார். நியூட்ரான் வெப்பமேற்றலை நவீன முறைகளில் பல்வேறு ஆய்வுகள் மூலம் மேற்கொண்டார். அவ்வாறு செயல்படும்போது உருவாகும் நியூட்ரான் நிறமாலை பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டார். இதில் கிடைத்த வெப்ப நியூட்ரான்கள் கற்றை அடிப்படை ஆய்வுகளுக்கு உதவியது. யுரேனியம்-235 இல் அணுக்கருப்பிளவினால் உருவாகும் துணைக்கதிர்வீச்சுகளைப் பற்ரிய ஆய்வுகளை மேற்கொண்டார். அவற்றின் ஆற்றல் மற்றும் கோணங்கள் ஆகியவற்றை அளந்தார். இந்த அளவீடுகள், இக்கதிர்கள். நியூட்ரான்களின் வெளிப்பாடு, பிளவுத்துகள்களின் சராசரி சுழற்சி போன்றாவற்றைப் பற்றிப் பல தகவல்களை அறிய உதவின. வெப்ப மற்றும் வேக நியூட்ரான்களினால் தூண்டப்பட்ட அணுக்கருப் பிளவில் வெளிவரும் மின்னேற்றம் குறாஇந்த துகள்கள் அவற்றின் வெளியேற்றம் பற்றிய முக்கியத் தகவல்களை அறிய உதவின.

அணுக்கரு ஆய்வுகளில் ஈடுபட்ட இராமண்ணா, இந்த ஆய்ய்வுகளில் தொடர்ந்து ஈடுபட பல இளம் அறிவியலறிஞர்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டினார். அதற்காக 1975 இல் இவர் தலைமையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பயிற்சிப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தது இவர் எடுத்த முதல் முக்கியமான முயற்சியாகும். இங்கு பல அறிவியல் அறிஞர்கள் உருவாக்கப்பட்டனர். அவர்கள் அணு ஆற்றல் மற்ரும் விண்வெளி ஆய்வு மையங்கள், பாதுகாப்பு அமைச்சக ஆலோசகர், பல்வேறு ஆய்வகங்களின் இயக்குநர்கள், இந்திய அரசாங்கத்தின் அறிவியல் துறைச் செயலர்கள் என்று இந்திய நாட்டிற்குள் பல்வேறு வகைகளில் பணியாற்றி வந்துள்ளனர்.[5]

பதவிகள்

[தொகு]

1967- 68 இல் சான்ட பார்பராவில், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பட்டதாரி மாணவர்களுக்கு உதவி ஆசிரியராகவும், 1971-73 இல் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர்களுக்கு ஆசிரியராகவும் 1984 இல் ஆம்ஸ்டர்டாமில் பயிற்சி ஆசிரியராகவும், 1987 இல் சாந்திநிகேதனில் நடைபெற்ற உயர் ஆற்றல் இயற்பியல் குறித்த கோடைக்கலப் பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியராகவும், கணித அறிவியல் பயிற்சி நிறுவனத்தில் வகையீட்டு வடிவஇயல், குவைய எந்திரவியல், குவைய புலக்கோட்பாடு, அடிப்படைத் துகள் இயற்பியல் ஆகியவற்றில் பல வகுப்புகளையும் நடத்தியுள்ளார். சென்னையில் கணிதப் பயிற்சி நிறுவனத்திலும் அவ்வப்போது ஆசிரியராகப் பணிபுரிந்து வகுப்புகள் நடத்தியிருக்கிறார். இந்தியாவிலும் உலகில் உள்ள பலகைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

நேரிடையாகவோ அல்லதுமறைமுகமாகவோ நமது நாட்டில் பல பயிற்சிக் கல்வி நிறுவனங்கள் உருவாக இவர் காரணமாக இருந்துள்ளார். இந்தூரில் முன்னேறிய தொழில்நுட்பமையம் (முன்னேற்றம் பெற்ற முடுக்கிகளை உருவாக்கும் பணி), முன்னேறிய படிப்புகளுக்கான தேசியப் பயிற்சி சிறுவனம் ஆகியவற்றை டாடாவின் உதவியால் தொடங்கி அதன் இயக்குநராகப் பெங்களூருவில் பொறுப்பேற்றார்.

1972 முதல் 1978 வரை இந்தியத் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும், 1977-78 களில் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராகவும், அனைத்துலக அணுஆற்றல் நிறுவனத்தில் பொது இயக்குநருக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் பின்னர் தலைவராகவும், 1986 இல் அதன் முப்பதாவது பொது மாநாட்டின் தலைவராகவும் செயல்பட்டார். 1977-79 இல் இந்திய அறிவியல் கழகத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டார். பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் பொது இயக்குநராகவும் பணியாற்றினார். மும்பை பாபா அணுசக்சி ஆய்வு மையத்தின் இயக்குநராக 10 ஆண்டுகளுக்கும்[1972-1978, 1981-1983] மேலாகப் பணியாற்றினார்.[6]

முதல் ஆறாண்டுகளை இராமண்ணாவின் அணுக்கரு விஞ்ஞானச் சாதனைகளின் பொற்காலம் என்று கூறலாம்! அப்போதுதான் குறிமொழிப் பெயர் பூண்ட 'சிரிக்கும் புத்தர் ' [Code Name, Smiling Buddha] என்னும் முதல் அணுகுண்டு, ரகசிய அணு ஆயுதத் திட்டம் அவரது நேரடிக் கண்காணிப்பில் உருவானது! 1974 மே மாதம் 18 ஆம் தேதி இராஜஸ்தானிலுள்ள பொக்ரான் பாலைவனத்தில் நிலத்தடி குண்டு வெடிப்பை இந்தியா நிகழ்த்தி உலக நாடுகளை பேரதிர்ச்சியிலும், பெரு வியப்பிலும் ஆழ்த்தியது. டாக்டர் ஹோமி ஜெ. பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் ஹோமி என். சேத்னா ஆகியோருக்குப் பின்பு அதிபராக, அணுசக்திப் பேரவைக்குத் [Chairman, Atomic Energy Commission] டாக்டர் ராஜா ராமண்ணா 1983 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.

1990 இல் வி. பி. சிங் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[1] 1997-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகப் பணிபுரிந்தார். பெங்களூருவில் உள்ள முன்னேறிய படிப்புகளுக்கான பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராகவும் செயல்பட்டார். ஜவஹர்லால் நேரு முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம் [Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research], இந்திய விஞ்ஞானப் பள்ளித் துறை [Indian Academy of Sciences (1977)], மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம் [Indian Institute of Technology, Bombay (1972)] ஆகியவற்றின் அதிபராகவும் இராமண்ணா பணியாற்றினார்.

சிறப்புகளும் விருதுகளும்

[தொகு]

இவருடைய பணிகளைப் பாராட்டி

  • 1963இல் சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது
  • 1968 இல் குடியரசுத் தலைவரின் பத்மஸ்ரீ விருது
  • 1973இல் பத்ம விபூஷண் விருது
  • 1984 இல் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் மேக்நாத் சாகா பதக்கம்
  • 1985 இல் ஓம்பிரகாஷ் பாசின் விருது
  • 1985-86 இல் ஆர். டி. பிர்லா நினைவு விருது
  • 1996 இல் அசுதோஷ் முகர்ஜி தங்கப்பதக்கம்

ஆகியவை வழங்கப்பட்டன. பல்வேறு பல்கலைக் கழகங்கள் இவரைச் சிறப்பிக்கும் வகையில் மதிப்பியல் முனைவர் பட்டம் வழங்கின.

ஈடுபாடுகள்

[தொகு]

இராமண்ணா தனது வாழ்நாளில் இசையில் கொண்ட ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. மிகச்சிறந்த பியானோ இசைக்கலைஞராக பொது நிகழ்ச்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியத் தத்துவ இயலிலும் ஆர்வம் செலுத்தினார்.

நூல்கள்

[தொகு]

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இராமண்ணாவின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகி யுள்ளன. அத்துடன் அவரது சுயசரிதையான, 'யாத்திரை ஆண்டுகள் ' [Years of Pilgrimage (1991)], இராகம் மற்றும் மேலைநாட்டு முறைகளில் இசையமைப்பு [The Structure of Music in Raga & Western Systems (1993)] என்னும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

மறைவு

[தொகு]

இராமண்ணா 2004 செப்டம்பர் மாதம் 24 ஆம் நாள் மும்பையில் மாரடைப்பால் காலமானார்.[7]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Raggi Mudde (November 16, 2011). "Of Equations and Ragas – Raja Ramanna". Karnataka. com. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.
  2. 2.0 2.1 Dr Subodh Mahanti. "Raja Ramanna India's Most Eminent Nuclear Physicist". Vigyan Prasar. Vigyan Prasar Science Portal. Archived from the original on 2012-03-13. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.
  3. "Dr. Ramanna". BARC. BARC: GOVERNMENT OF INDIA, DEPARTMENT OF ATOMIC ENERGY, BABHA ATOMIC RESEARCH CENTRE. Archived from the original on 2013-05-23. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.
  4. 4.0 4.1 4.2 "Raja Ramanna Biography". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2012.
  5. NSC (January 2010). "Ariviyal aringargal.". Ariviyal oli.: 31-33. 
  6. "Raja_Ramanna". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 13, 2012.
  7. "Dr. Raja Ramanna's death news". Government of India- Deportment of Atomic Energy. Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 13, 2012.

வெளியிணைப்புகள்

[தொகு]

மேலதிக வாசிப்பிற்கு

[தொகு]
  1. Ramanna, Raja. Years of Pilgrimage: An Autobiography. New Delhi: Viking, 1991.
  2. Srinivasan, M. R. From Fission to Fusion: The Story of India’s Atomic Energy Programme. New Delhi: Viking, 2002.
  3. Singh, Jagjit. Some Eminent Indian Scientists. New Delhi: Publications Division, Govt. of India.
  4. Sundaram, C.V., L. V. Krishnan, and T. S. Iyengar. Atomic Energy in India: 50 Years. Mumbai: Department of Atomic Energy, 1998.
  5. Parthasarathy, K. S. Ramanna: a doyen among scientists, The Hindu, September 30, 2004.
  6. Srinivasan, M. R. Ramanna & the nuclear programme, The Hindu, September 28, 2004.
  7. Sreekantan, B.V. Raja Ramanna–Down the Memory Lane. Current Science, Vol. 87, No. 8, pp. 1150–51, 2004.
  8. Rao, K. R. Raja Ramanna-A Personal Tribute. Current Science, Vol. 87, No. 8, pp. 1152–54, 2004.
  9. Profiles in Scientific Research: Contributions of the Fellows. Vol.1. pp. 460–62. New Delhi: Indian National Science Academy, 1995.
  10. Iyengar, P.K. Remembering Ramanna. The Hindu, September 25, 2004.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜா_இராமண்ணா&oldid=4007557" இலிருந்து மீள்விக்கப்பட்டது