ஆல்ட்டா கலிபோர்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்ட்டா (மேல்) கலிபோர்னியாவின் அமைவிடம்

ஆல்ட்டா கலிபோர்னியா (Alta California, ஆங்கில மொழி: Upper California, மேல் கலிபோர்னியா) புதிய எசுப்பானியாவின் ஒரு மாகாணமாகவும் பின்னாளில் விடுதலை பெற்ற மெக்சிக்கோவின் மாகாணமாகவும் இருந்த நிலப்பகுதியாகும். 1769இல் இலாசு கலிபோர்னியாசு மாகாணத்தின் வட பகுதியை பிரிந்து இப்பகுதி உருவாக்கப்பட்டது. இதன் தலைநகரமாக மான்டெர்ரே இருந்தது. தற்போதைய அமெரிக்க மாநிலங்களான கலிபோர்னியா, நெவாடா, அரிசோனா, யூட்டா, மேற்கு கொலராடோ மற்றும் தென்மேற்கு வயோமிங்கை உள்ளடக்கி இருந்தது. இந்நிலப்பகுதி மெக்சிக்கோ-அமெரிக்கப் போருக்குப் பின்னர் அமெரிக்காவின் ஆளுகைக்கு வந்தது. 1850இல் கலிபோர்னியா மாநிலம் உருவாக்கப்பட்ட பின்னர் இல்லாமற் போனது.

எசுப்பானியாவின் குடியேற்றம்[தொகு]

16ம் நூற்றாண்டில் எசுப்பானியர்கள் மேல் கலிபோர்னியாவின் கடலோரமாக பயணித்து புதிய நிலப்பகுதிகளை கண்டறிந்து கொண்டிருந்தார்கள். இப்பகுதி எசுப்பானிய முடியாட்சிக்கு உரியது என்று கருதி இப்பகுதியில் குடியேற பல திட்டங்களை வகுத்தனர். செபாசிடின் (Sebastián Vizcaíno )குழுவின் குடியேற்ற திட்டம் 1608 ல் நீக்கிக்கொள்ளப்பட்டது. பாதிரியார் கினோ (Eusebio Kino) மதப்பரப்பலை பிமிரியா அல்டா (தற்கால தென் அரிசோனா, வடக்கு மெக்சிக்கோ) பகுதியில் தான் இறக்கும் வரை தொடர்ந்தார். யுவான் மானுவல் தே ஒலிவியன் ரிபெல்டோ (Juan Manuel de Oliván Rebolledo) 1715 தொடங்கிய திட்டத்தை 1716லும் தொடர்ந்தார் ஆனாலும் அதனால் பலன் ஏதும் விளையவில்லை.

முன்னர் வைக்கப்பட்ட பல குடியேற்ற திட்டங்களை கவனமாக ஆய்ந்த டான் பெர்னான்டோ சான்சசு சல்வடோர் (Don Fernando Sánchez Salvador) இங்கிலாந்து, பிரான்சு தாக்குதலை தடுக்கும் இயற்கை அரண்களாக கில்லா மற்றும் கொலராடோ ஆறுகள், மான்டெர்ரேவுக்கும் கர்மல் ஆற்று கழிமுகம் உள்ள கலிபோர்னியா கடற்கரையை ஆக்ரமிப்பதற்கும் இருக்கும் என்றார் [1][2].

உருசியப் பேரரசு அலாசுக்காவில் குடியேற்றத்தை நிறுவி கடல் வழியாக தோல் வணிகத்தில் ஈடுபடுவதாக கிடைத்த செய்தியால் மேல் கலிபோர்னியாவில் குடியேற்றத்தை உருவாக்கும் எசுப்பானியாவின் எண்ணம் அதிகமாகியது. குறிப்பாக 1768ல் உருசிச கடல் வழி நாடு காண் பயணிகள் பியோடர் ரென்டிட்சன் (Pyotr Krenitsyn) மிக்கேல் லவாசுக் (Mikhail Levashev) ஆகியோரின் பயணம் எசுப்பானிய அரசுக்கு கவலையை உண்டாக்கியது[3] . அதனால் உருசியர்களின் சவாலை சமாளிக்க பிசிபிக் வடமேற்கில் நிறைய கப்பல்களில் எசுப்பானிய நாடுகாண் பயணிகள் புறப்பட்டனர். ஆல்ட்டா கலிபோர்னியாவில் குடியேற்றத்தை துவக்க எசுப்பானிய அரசு பணம் கொடுத்தது. பிரான்சிசுக்கோ சமய மடத்தை சேர்ந்தவர்கள் அமெரிக்க தொல்குடிகளை கத்தோலிக கிறித்துவத்துக்கு மாற்ற பணிக்கப்பட்டனர். இம்முறை பாகா கலிபோர்னியாவில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுவது ஆகும். எசுப்பானிய அரசு கிறித்துவ மடங்கள் புதிய கட்டடங்கள் கட்ட பண உதவியும் மானியமும் அளித்தது. அவை அமெரிக்க தொல்குடிகளை கட்டாய மதமாற்றம் செய்யவேண்டும் அவர்களை மீள்குடியமர்த்தி அடிமைகளை போல் வேலை வாங்கி எசுப்பானிய அரசின் ஆட்சியை அங்கு நிருபிக்கவேண்டும் என்பதே நிபந்தனை. இதன்படியான முதல் கிறித்துவ மடம் 1769ல் சான் டியேகோவில் நிறுவப்பட்டது. 1773ல் பாகா கலிபோர்னியா டோமினிக்கன் குழுவுக்கு ஒதுக்கப்பட்டதால் பிரான்சிசுக்கோ குழுவுக்கு ஆல்ட்டா கலிபோர்னியா ஒதுக்கப்பட்டது. அவர்கள் நகர சபைகளையும் சுவர்களால் சூழப்பட்ட நகரங்களையும் உருவாக்கினார்கள். அவை எசுப்பானியர்களால் குடியேற்றப்பட்டு காக்கப்பட்டன. முதல் நகரசபை சான் ஒசே நகரில் 1769லிலும் இரண்டாவது 1781ல் இலாசு ஏஞ்சலசு நகரிலும் உருவாக்கப்பட்டன.

எசுப்பானிய ஆட்சி[தொகு]

புதிய எசுப்பானியாவின் ஆட்சியின் கீழ் இருத்த கலிபோர்னியா, 1789 காலத்து வரைபடம்

எசுப்பானிய ஆட்சிக்கு கீழ் அமெரிக்க தொல்குடிகள் வந்த பின் 10 ஆண்டுகள் கழித்து கிறித்துவ மடங்களின் நிலங்களையும் உடைமைகளையும் அவர்களுக்கு கைமாற்ற வேண்டும் என்று சட்டம் இருந்தது. அதனால் மடத்தின் நிலங்களுக்கும் உடைமைகளுக்கும் அமெரிக்க தொல்குடிகளுக்கு கைமாறும் வரை பிரான்சிசுக்கோ இடைக்கால பாதுகாப்பாளராக செயல்பட்டார். பிரான்சிசுக்கோ 60 ஆண்டுகளுக்கு மேல் மடத்தின் நிலத்தையும் உடைமைகளையும் வைத்திருந்தார், அதன்பிறகும் அவை அமெரிக்க தொல்குடிகளுக்கு கைமாறவே இல்லை.[4][5]

எசுப்பானியர்கள் ஆல்ட்டா கலிபோர்னியாவில் அதிக அளவில் குடியேறியதால் அவர்களின் உடைமைகளுக்கும் கிறித்துவ மடங்களின் உடைமைகளுக்கும் எல்லை சிக்கல் ஏற்பட்டது. அரசுக்கும் கிறித்துவ மடாலயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கும் இடையே கிறித்துவ மடாலயங்களுக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பது தொடர்பாக தருக்கம் ஏற்பட்டது. [6] 1782ல் சாந்தா கிளாரா தே அசிசு என்ற பிரான்சிய குழுவை சேர்ந்தவர்கள் அமெரிக்க தொல்குடிகளே நிலத்துக்கும் கால்நடைகளுக்கும் உரியவர்கள் என்றும் சான் ஒசேயில் உள்ள எசுப்பானிய குடியேறிகள் அல்ல என்றும் மாகாண ஆளுனருக்கு கடிதம் எழுதினார்கள் [7].

இலாசு கலிபோர்னியா மாகாணத்தில் எசுப்பானியர்களின் எண்ணிக்கை அதிகமானதால் 1804ல் இம்மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டு மேல் (வட) பகுதி ஆல்ட்டா கலிபோர்னியாவாகவும். கீழ் (தென்) பகுதி பாகா கலிபோர்னியாவாக உருவாக்கப்பட்டது. பாகா கலிபோர்னியா மூவலந்தீவு (தீபகற்பம்) பாகா கலிபோர்னியா எனப்பட்டது. பாகா கலிபோர்னியாவில் தற்காலத்தைய மெக்சிக்கோவின் பாகா கலிபோர்னியா, பாகா கலிபோர்னியா சர் மாகாணங்கள் அடக்கம். பாகா கலிபோர்னியாவை பழைய கலிபோர்னியா என்றும் ஆல்ட்டா கலிபோர்னியாவை புதிய கலிபோர்னியா என்றும் அழைப்பர். இலாசு கலிபோர்னியாவின் கிழக்கு எல்லை முறையாக வரையறுக்கப்படாததால் அனைத்து வரைபடங்களும் ஒரே மாதிரியான எல்லையை காட்டவில்லை. .[8]

பண்ணை[தொகு]

எசுப்பானிய மற்றும் பின் உருவான மெக்சிக்கோ அரசுகள் படையில் இருந்து ஓய்வு பெறும் இராணுவ வீரர்களுக்கு பொருளுதவி செய்து அவர்கள் கலிபோர்னியா பகுதியில் பண்ணைகள் அமைத்து கால்நடைகளை வளர்க்க உதவியது. 19ம் நூற்றாண்டில் இறைச்சியே கலிபோர்னியாவின் முதன்மையான ஏற்றுமதியாக இருந்தது. அமெரிக்க தொல்குடிகள் பண்ணைகள் அமைப்பது, அதில் வேலை செய்வது போன்றவற்றவற்றை செய்தனர். நாளடைவில் அவர்கள் குதிரையேற்றத்தையும் எசுப்பானிய மொழியையும் கற்றுக்கொண்டார்கள். பெரும்பாலான அமெரிக்க தொல்குடிகள் ஐரோப்பியர்களின் நோய்களுக்கு மரணமடைந்தார்கள். எசுப்பானியர்கள் மற்றும் மெக்சிகர்களின் ஆட்சியின் கீழ் பண்ணைகள் நன்றாக வளர்ச்சியுற்றன. தனித்துவமான கலிபோர்னிய பண்பாடு உருவானதில் இப்பண்ணைகளின் பங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Plans for the Occupation of Upper California: A New Look at the "Dark Age" from 1602 to 1769 பரணிடப்பட்டது 2016-04-06 at the வந்தவழி இயந்திரம், The Journal of San Diego History, San Diego Historical Society Quarterly, Winter 1978, Volume 24, Number 1
  2. The elusive West and the contest for empire, 1713–1763, Paul W. Mapp, Omohundro Institute of Early American History & Culture
  3. Haycox, Stephen W. (2002). Alaska: An American Colony. University of Washington Press. பக். 59–60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-295-98249-6. http://books.google.com/books?id=8yu3pYpzLdUC&pg=PA59. 
  4. Beebe, 2001, page 71
  5. Fink, 1972, pages 63–64.
  6. Milliken, 1995, page 2 footnote.
  7. Milliken, 1995, page 72–73
  8. José Bandini, in a note to either Governor Echeandía or to his son, Juan Bandini, a member of the Territorial Deputation (legislature), noted that California was bounded "on the east, where the Government has not yet established the border line, by either the Colorado River or the great Sierra (Sierra Nevadas)." A Description of California in 1828 by José Bandini (Berkeley, Friends of the Bancroft Library, 1951), 3. Reprinted in Mexican California (New York, Arno Press, 1976). ISBN 0-405-09538-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்ட்டா_கலிபோர்னியா&oldid=3626900" இலிருந்து மீள்விக்கப்பட்டது