ஆனைச்சாத்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனைச்சாத்தன் என்பது பறவை இனங்களில் ஒன்று. இந்தப் பறவைகள் விடியலில் பேசிக்கொண்டது பற்றி கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பெண்புலவர் குறிப்பிடுகிறார்.[1]

இதனை வலியன்-குருவி எனப் பெரும்பாலோர் கூறுகின்றனர். வலியன் குருவிக்குப் பரத்துவாசப் பறவை என்னும் பெயரும் உண்டு என்பர். முனிவர் பரத்துவாசர் எண்ணம் பரத்திலே வாழ்ந்துகொண்டிருந்தது. அதனால் அவருக்கு அப்பெயர் அமைந்தது. இந்த முனிவர் இந்தப் பறவை உருவில் இருந்தவராம்.[2]

இது செம்போத்துப் பறவை என்பாரும் உளர்.[3] செம்போத்து என்பது காக்கையை விடச் சற்றே பெரிதாக இருக்கும். வால்-தோகை அகன்று பலவாக நீளமாக இருக்கும். இது விருந்துவரக் கரையும் காக்கை போலப் பேசும் என்பதை நாட்டுப்புறப் பழம்பாடல் ஒன்று தெரிவிக்கிறது.[4]

கேசவன் (நேர்த்தியான கேசம் கொண்டவன்) வருவதை முன்கூட்டியே ஆனைச்சாத்தன் பறவைகள் பேசிக்கொண்டன என்கிறார் புலவர் ஆண்டாள்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. கீசுகீசென் சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
    பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே - ஆண்டாள் திருப்பாவை 7
  2. வலியன் குருவியை பாரத்வாஜப் பறவை என்றும் அழைப்பர். ஒரு முறை, வலியன் குருவி வடிவில் பாரத்வாஜ முனிவர், பெருமாளை வணங்கி வழிபட்டதாக ஒரு பழங்கதை உண்டு. "ஆனைச் சாத்தன்" என்பது அடியவரின் (யானையின் வலிமைக்கு ஒப்பான) புலன் சார்ந்த உணர்வுகளை நெறிப்படுத்தி, தன் வசம் சேர்த்துக் கொள்ளும் பரந்தாமனை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது. "கீசுகீசென்று எங்கும் கலந்து பேசின பேச்சு" என்பது, பரமனுக்கும், திருமகளுக்கும் இடையே, (அடியவர்க்கு அருள் வழங்கும் நோக்கிலே) நடக்கும் சம்பாஷணையைக் குறிப்பதாகும்.
  3. ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை - கீசுகீசு – ஒலிக்குறிப்பு; அநக்ஷரரஸமாயிருக்கிறபடி ‘ஆனைச்சாத்தம்’ எனினும் ‘ஆனைச்சாத்தன்’ எனினும் ஒக்கும்; பரத்வாஜபக்ஷி-வலியனெனப்படுமென்ப “செம்போத்து” என்பாருமுளர். உணர்த்தவந்த ஆய்ச்சிகள் ஆனைச்சாத்தத்தினுடைய தொனி விடிவுக்கு அடையாளமன்றோ?’ என்ன; ‘ஒரு ஆனைச்சாத்தமுணர்ந்த விது விடிவுக்கு அடையாளமாகப் போருமோ?’ என்று அவள் கேட்க; இவர்கள் “எங்கும்” என்ன; ‘எங்கும் நீங்களில்லையோ அவற்றை உணர்த்துகைக்கு’ என்று அவள் சொல்ல; ‘அவை நாங்களுணர்த்த உணர்ந்தனவல்ல; கலந்துபேசின பேச்சுக் காண்’ என்று இவர்கள் சொல்ல; ‘இரவெல்லா முறங்கிப் பொழுதுவிடியும்போதோ கலப்பது?’ என்று அவள் கேட்க; ‘மரக்கலம் (கப்பல்) ஏறிப்போமவன் மீண்டுவருமளவும் ஜீவநமேற்றிக்கொண்டு போவதுபோல, இவையும் பிரிவுகாலமாகிய விடியற் காலத்திலே கலந்து பகல் முப்பது நாழிகைக்கும் விளைநீர் அடைத்துக்கொண்டு ‘அந்தோ! பிரிவு வருகின்றதே!’ என்னுந் தளர்த்தி தோற்றப் பேசுகிற பேச்சு விடிவுக்கு அடையாளமாகவற்றன்றோ என்கிறார்கள்.
  4. இரண்டு செம்மோத்துப் பறவைகள் பேசிக்கொள்கின்றன.
    செம்போத்து செம்போத்து
    யாரு வாரா செம்பாத்து
    மாமனார் வாரார் செம்மோத்து
    மாமனார்க்கு என்ன சாதம் கறி
    வரகுக் கஞ்சி குடிச்சுக்கிட்டு
    மாட்டுத் தொழுவம் காத்துக்கிட்டு,
    வந்திருங்க மாமனாரே
    செம்போத்து செம்போத்து
    யாரு வாரா செம்பாத்து
    அப்பா வாரார் செம்மோத்து
    அப்பாவுக்கு என்ன சாதம் கறி
    குத்துப் பருப்பிட்டு,
    குழிநிறைய நெய் ஊற்றி,
    தின்னுங்க அப்பா
    தின்னுப்புடேன் மகளே
    பட்டு மெத்தை மேலே
    படுத்துக்குங்க அப்பா.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனைச்சாத்தன்&oldid=3500449" இலிருந்து மீள்விக்கப்பட்டது