அபனிந்திரநாத் தாகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபனிந்திரநாத் தாகூர்

அபனிந்திரநாத் தாகூர் (Abanindranath Tagore) (1871 ஆகத்து 7  -1951 திசம்பர் 5) இவர் "கிழக்கத்திய கலைகளின் இந்தியச்சங்க"த்தின் முதன்மை கலைஞரும் படைப்பாளருமாவார். இந்தியக் கலையில் சுதேசி மதிப்புகளின் முதல் பெரிய நிபுணராகவும் இருந்தார். இதன் மூலம் செல்வாக்குமிக்க வங்காள கலைப் பள்ளியை நிறுவினார். இது நவீன இந்திய ஓவியத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. [1] [2] இவர் குழந்தைகளுக்கான ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளராகவும் இருந்தார். 'அபான் தாகூர்' என்று பிரபலமாக அழைக்கப்படும் இவரது புத்தகங்களான ராஜ்காகினி, புடோ அங்லா, நாலக், மற்றும் கைரேர் புத்துல் ஆகியவை பெங்காலி மொழி குழந்தைகள் இலக்கியம் மற்றும் கலைகளில் அடையாளங்கள் ஆகும் .

பிரிட்டிசு இராச்சியத்தின் கீழ் கலைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டபடி, மேற்கத்திய கலை மாதிரிகளின் செல்வாக்கை எதிர்கொள்ள முகலாய மற்றும் ராஜபுத்ர பாணிகளை நவீனமயமாக்க தாகூர் முயன்றார். வங்காள கலைப் பள்ளியைச் சேர்ந்த மற்ற கலைஞர்களுடன், தாகூர் இந்திய கலை வரலாற்றிலிருந்து பெறப்பட்ட ஒரு தேசியவாத இந்திய கலைக்காக வாதிட்டார். மேலும், அஜந்தா குகைகளிலிருந்தும் உத்வேகம் பெற்றார். தாகூரின் பணி மிகவும் வெற்றிகரமாக இருந்தது. அது இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரிட்டிசு கலை நிறுவனங்களுக்குள் ஒரு தேசிய இந்திய பாணியாக உயர்த்தப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

அபனீந்திரநாத் தாகூர் பிரிட்டிசு இந்தியாவின் கொல்கத்தாவின் ஜோராசங்காவில் குனேந்திரநாத் தாகூர் மற்றும் சௌதாமினி ஆகியோருக்குப் பிறந்தார். இவரது தாத்தா "இளவரசர்" துவாரகநாத் தாகூரின் இரண்டாவது மகன் கிரிந்திரநாத் தாகூர் ஆவார். இவர் புகழ்பெற்ற தாகூர் குடும்பத்தில் உறுப்பினராகவும், கவிஞர் இரவீந்திரநாத் தாகூரின் மருமகனாகவும் இருந்தார். இவரது தாத்தா மற்றும் இவரது மூத்த சகோதரர் ககனேந்திரநாத் தாகூரும்கலைஞர்களாக இருந்தனர்.

1880 களில் கொல்கத்தாவின் சமசுகிருதக் கல்லூரியில் படிக்கும்போது தாகூர் ஓவியத்தினைக் கற்றார்.

1890ஆம் ஆண்டில், தனது இருபது வயதில், அபனீந்திரநாத் கொல்கத்தா கலைப் பள்ளியில் பயின்றார். அங்கு ஓ. கிலார்டி என்பவரிடமிருந்து வண்ணக் கலவைகளைப் பயன்படுத்தவும், அந்த நிறுவனத்தில் கற்பித்த ஐரோப்பிய ஓவியரான சி. பால்மரிடமிருந்து எண்ணெய் ஓவியம் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டார். [3]

1889ஆம் ஆண்டில், பிரசன்னா குமார் தாகூரின் வழித்தோன்றலான புஜகேந்திர பூசண் சாட்டர்ஜியின் மகள் சுகாசினி தேவி என்பவரை மணந்தார். இந்த காலக்கட்டத்தில் இவர் ஒன்பது வருட படிப்புக்குப் பிறகு சமசுகிருதக் கல்லூரியை விட்டு வெளியேறி புனித சேவியர் கல்லூரியில் சிறப்பு மாணவராக ஆங்கிலம் பயின்றார். அதில் இவர் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பயின்றார்.

இவருக்கு சுனயானி தேவி என்ற சகோதரி இருந்தார். [4]

ஓவியத் தொழில்[தொகு]

அபனீந்திரநாத் தாகூர் வரைந்த "கணேஷ்-ஜனனி"

ஆரம்ப காலம்[தொகு]

1890களின் முற்பகுதியில் சாதனா என்ற இதழிலும், சித்ராங்கதாவிலும், இரவீந்திரநாத் தாகூரின் பிற படைப்புகளிலும் பல ஓவியங்கள் வெளியிடப்பட்டன. இவர் தனது சொந்த புத்தகங்களிலும் ஓவியங்களை வரைந்தார். சுமார் 1897 ஆம் ஆண்டில், இவர் அரசாங்க கலைப் பள்ளியின் துணை முதல்வரிடமிருந்து பாடப்பயிற்சியினைப் பெற்றார். பாரம்பரிய ஐரோப்பிய கல்வி முறையில் பயின்று, முழு அளவிலான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். இந்த காலகட்டத்தில் இவர் முகலாய கலையின் செல்வாக்கின் கீழ் வரத் தொடங்கினார். கிருட்டிணரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பல படைப்புகளை முகலாய செல்வாக்குமிக்க பாணியில் உருவாக்கினார். ஈ .பி . ஹேவல் என்பவரைச் சந்தித்தபின், தாகூர் அவருடன் கொல்ல்கத்தா கலைப்பள்ளியில் கலை போதனைகளை புத்துயிர் பெறவும் மறுவரையறை செய்யவும் பணியாற்றினார். இந்த திட்டத்தை கிழக்கத்திய கலையின் இந்தியப் பள்ளிச் சங்கத்தை அமைத்த இவரது சகோதரர் ககனேந்திரநாத் ஆதரித்தார்.

தாகூர் ஓவியத்தின் பாரம்பரிய இந்திய நுட்பங்களை நம்பினார். இவரது தத்துவம் மேற்கின் "பொருள்முதல்வாத" கலையை நிராகரித்து மீண்டும் இந்திய பாரம்பரிய கலை வடிவங்களுக்கு வந்தது. முகலாய ஓவியப் பள்ளி மற்றும் விஸ்லரின் அழகியல் ஆகியவற்றால் இவர் செல்வாக்கு பெற்றார். தாகூர் தனது பிற்கால படைப்புகளில், சீன மற்றும் ஜப்பானிய கைவேலை மரபுகளை தனது பாணியில் ஒருங்கிணைக்கத் தொடங்கினார்.

இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி ஆங்கிலத்தில் வெளியாகி தாகூர் குடும்பத்திற்கு சர்வதேச புகழ் அளித்தது, இது மேற்கில் அபனீந்திரநாத்தின் கலைத் திட்டங்களை நன்கு அறிய உதவியது.

அபனீந்திரநாத் 1942 இல் விஸ்வ பாரதியின் வேந்தராக இருந்தர். [5]

குறிப்புகள்[தொகு]

  1. John Onians (2004). Atlas of World Art. Laurence King Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1856693775. https://books.google.com/books?id=O3h2KfXoOPYC&pg=PA304&dq=Bengal+School+of+Art&hl=en&sa=X&ei=5uW0T8OdCZCJrAfJ4OWSDA&ved=0CD4Q6AEwAQ#v=onepage&q=Bengal%20School%20of%20Art&f=false. 
  2. Abanindranath Tagore, A Survey of the Master’s Life and Work by Mukul Dey பரணிடப்பட்டது 2010-03-04 at the வந்தவழி இயந்திரம், reprinted from "Abanindra Number," The Visva-Bharati Quarterly, May – Oct. 1942.
  3. Chaitanya, Krishna (1 January 1994). A history of Indian painting: the modern period. Abhinav Publications. பக். 145. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-310-6. https://books.google.com/books?id=McSbSMhArFgC. பார்த்த நாள்: 12 December 2011. 
  4. "Archived copy". Archived from the original on 29 November 2011. பார்க்கப்பட்ட நாள் 20 May 2009.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. Samsad Bangali Charitabhidhan (Biographical Dictionary), Chief Editor: Subodh Chandra Sengupta, Editor: Anjali Bose, 4th edition 1998, (in வங்காள மொழி), Vol I, page 23, ISBN 81-85626-65-0, Sishu Sahitya Samsad Pvt. Ltd., 32A Acharya Prafulla Chandra Road, Kolkata.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபனிந்திரநாத்_தாகூர்&oldid=3800155" இலிருந்து மீள்விக்கப்பட்டது