6174 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

6174 என்பது ஒரு குறிப்பிடத்தக்க எண் ஆகும். இவ்வெண் இந்தியக் கணிதவியலர் டி. ஆர். கப்ரேக்கரின் நினைவாக கப்ரேக்கர் மாறிலி (Kaprekar Constant) என அழைக்கப்படுகிறது. பின்வரும் காரணங்களுக்காக இது குறிப்பிடத்தக்கது:

  • ஏதாவதொரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக 4295 என்ற எண்ணை பார்ப்போம்.
  • முதலில் இந்த 4,2,9,5 என்ற நான்கு இலக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்களை எழுதுவோம். அதாவது அவைகள் முறையே 9542 மற்றும் 2459 ஆகும். 9542-2459=7083.
  • இந்த 7,0,8,3 என்ற நான்கு இலக்கங்களைக் கொண்ட மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய எண்கள் முறையே 8730 மற்றும் 0378 ஆகும். 8730-0378=8352. இதே முறையைச் செய்தால் 8532-2358=6174 கிடைக்கும்.
  • எந்தவொரு நான்கு இலக்க எண்ணை எடுத்து மேலே கூறிய முறையை கடை பிடித்தால் எப்போதுமே அது 6174 என்ற எண்ணில் தான் முடியும்.

இந்த முறை கப்ரேகர் முறை எனப்படுகிறது. இதில் ஒரேயொரு கட்டுப்பாடு நான்கு எண்களும் ஒரே எண்ணாக இருக்கக் கூடாது. அதாவது 1111, 2222 போன்ற எண்களுக்கு இந்த முறை வேலை செய்யாது. 6174 என்ற எண் வந்தால் கப்ரேகர் முறையில் மீண்டும் அதே எண் 6174 வருகிறது. மேலும் ஒரு உதாரணமாக 2009 என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம். கப்ரேகர் முறையில்,

9200-0029 = 9171 9711-1179 = 8532 8532-2358 = 6174

நான்கு இலக்க எண்களுக்கான கப்ரேகர் முறை

நான்கு இலக்கங்களைக் கொண்டு, மிகப் பெரிய எண்ணை எழுதும் போது அந்த எண்களை இறங்கு வரிசையிலும், மிகச் சிறிய எண்ணாக எழுதும் போது ஏறு வரிசையிலும் எழுதுகிறோம். a,b,c,d என்ற நான்கு எண்களும்

9 ≥ a ≥ b ≥ c ≥ d ≥ 0

என்றும், நான்கும் ஒரே எண்ணாக இருக்காது. எனவே அதிகபட்ச எண் abcd ஆகவும்,குறைந்தபட்ச எண் dcba ஆகவும் இருக்கும். இப்போது கப்ரேகர் முறையை பயன்படுத்தினால், ,

a b c d -- d c b a


A B C D


.கிடைக்கும். மேலும்

D = 10 + d - a (as a > d)

C = 10 + c - 1 - b = 9 + c - b (as b > c - 1)

B = b - 1 - c (as b > c)

A = a - d

A,B,C,D என்ற நான்கு எண்களையும் a,b,c,d மூலம் எழுத முடிந்தால் அதே எண்ணே திரும்பவும் வருவதைக் காணலாம். நான்கு இலக்கங்களை வைத்து மொத்தம் 4!=24 எண்கள் எழுத முடியும். அதில் மேலே உள்ள சமன்பாடுகளை பூர்த்தி செய்யும் எண்களை சரி பார்த்தால் முழு எண் தீர்வாக ABCD=bdac என வருவதைக் காணலாம். இந்த நான்கு சமன்பாடுகளிலிருந்து A=6,B=1,C=7, D=4 என்பதைக் கண்டறியலாம் .இந்த ஒரே ஒரு நான்கு இலக்க எண்ணுக்குத் தான் இந்த பெருமை உள்ளது.எந்த ஒரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக் கொண்டாலும், அதிக பட்சமாக 7 தடவைகள் கப்ரேகர் முறையைப் பயன்படுத்தினால் 6174 என்ற எண்ணை அடைந்து விடலாம்.

மூன்று இலக்க எண்களுக்கு இதே போல் ஓர் எண் உள்ளது; அந்த எண் 495 ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=6174_(எண்)&oldid=3668530" இருந்து மீள்விக்கப்பட்டது