24 மனை தெலுங்கு செட்டியார் வாழ்க்கைச் சடங்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை, ஏன் இறந்த பின்பு கூட நடைமுறைப்படுத்தப்படும் சடங்குகளை 'வாழ்க்கைச் சடங்குகள்' என்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் கருவுறுதல், பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என்று மனிதர்களின் வாழ்க்கைச் சுழற்சிகளில் செய்யப்படும் சடங்குகள் வாழ்க்கை வட்டச் சடங்குகள் எனப்படும். உதாரணமாக கருவுறுதல், பிறப்புச் சடங்குகள், பூப்புச் சடங்குகள், திருமணச்சடங்குகள், ஈமச்சடங்குகள் போன்ற பல தரப்பட்ட சடங்குகள் சமூகத்திற்கு சமூகம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. அவற்றில் 24 மனை தெலுங்குச்செட்டியார் பின்பற்றும் சடங்குகள் பின்வருமாறு:

வளைகாப்புச் சடங்கு[தொகு]

பெண் மணமாகி கருவுற்ற பின்பு அந்த பெண்ணுக்கு ஐந்து, ஏழு அல்லது ஒன்பதாவது மாதத்தில் தாய் வீட்டால் நடத்தப்படும் சடங்கு வளைகாப்புச் சடங்கு என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் பெண்ணின் புகுந்த வீட்டில் அல்லது மண்டபத்தில் வைத்து வளைகாப்புச் சடங்கு நடத்தப் படுகிறது. இந்தச் சடங்கு கட்டுச் சோறு கட்டுதல், சோறாக்கிப் போடுதல், சீமந்தம் செய்தல் என்று 24 மனையார் குடும்பங்களில் அழைக்கப்படுவதுண்டு. பெண்ணின் தாய் வீட்டார் தம் உறவுகளுடன் பல்வேறு சித்திராண்ண உணவு வகைகளைச் சமைத்து மாப்பிள்ளையின் வீட்டிற்கு எடுத்துச் சென்று பெண்ணுக்கு நலங்கு வைத்து வளையல் அணிவித்து வாழ்த்துவது வளைகாப்பு காப்புச் சடங்காகும். வளைகாப்பு நடத்திப் பிள்ளைப் பேற்றிற்காகப் பெண்ணைத் தாய் வீட்டிற்கு அழைத்து வருவர். பிள்ளைப் பேறு என்பது பெண்ணிற்கு மறுபிறவி என்பார்கள். கருவுற்ற பெண்ணுக்கு சுகப் பிரசமாகி, பிறக்கப் போகும் குழந்தை நோய் நொடியின்றி தாயும் சேயும் நலமுடன் புகுந்த வீடு திரும்ப வேண்டும் என்பதற்காக வளைகாப்புச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

பிறப்புச் சடங்குகள்[தொகு]

பிறப்புச் சடங்கில் 1. சேனை தொடுதல், 2.தொட்டில் கட்டுதல், 3. காது குத்துதல் என்பன 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தில் முக்கியத்துவம் பெறுபவையாகும்.

சேனை தொடுதல்[தொகு]

சேனை தொடுதல் என்பது சேய்+நெய்+தொடுதல் என்பதன் திரிபு ஆகும். இந்த இனத்தில் குழந்தை பிறந்தவுடன் வீட்டுப் பெரியவர்களை புடைசூழ எல்லோராலும் குறிப்பிட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் (பெரும்பாலும் குடும்பப் பெரியவர்கள்) குழந்தையின் நாவில் இனிப்புக் கலந்த பால் நெய் தொட்டு வைக்கும் சடங்கையே சேனை தொடுதல் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். சேனை என்பதன் பொருள் இனிப்பான பால் திரவம் ஆகும். இந்தச்சடங்கு ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் நிகழ்வதாகும். குழந்தைக்கு சேனைப்பால் வைப்பவரின் குணநலன்கள் அமையும் என்பது 24 மனைத் தெலுங்கு செட்டியார்களின் நம்பிக்கை.

தொட்டிலிடுதல்[தொகு]

பிறந்த குழந்தையை, தீட்டுக் கழித்த பிறகு, முதன்முதலில் தொட்டிலில் இடுவது இந்த இனத்தவரால் ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்படுகிறது. இதில் முக்கிய பங்கு வகிப்பவர் குழந்தையின் தாய் மாமன் ஆவார். இவர் தொட்டில் துணி, தொட்டில் கம்பு, தொட்டில் கயிறு, புத்தாடை ஆகியவற்றைக் தன சகோதரிக்காகக் கொண்டு வந்து தொட்டில் கட்டி அதில் குழந்தையைக் கிடத்தி மூன்று முறை ஆட்ட வேண்டும். தொட்டிலிடுதல் பெரும்பாலும் பெண் புகுந்த வீடுகளில் நடைபெறும். பெண் தாய் வீட்டில் பிரசவம் முடிந்து புகுந்த வீடு திரும்பியதும் இது நடப்பது உண்டு.

பெயர் சூட்டல்[தொகு]

குழந்தைக்குப் பெயர் வைத்தல்: குல தெய்வக் கோவில்களில் நடைபெறும். சடங்கு எனலாம். குழந்தைக்கு ஜாதகப்படி குறித்த பெயரை குலதெய்வக் கோவிலில் எல்லா நெருங்கிய உறவுகளையும் அழைத்து அவர்கள் முன்னிலையில் இடுகிறார்கள். சில குடும்பங்களில் ஒரு ஆண்டு முடிந்ததைக் குலதெய்வக் கோவில்களில் பொங்கலிட்டும் கொண்டாடுகிறார்கள்.

சோறு ஊட்டல்[தொகு]

முதன்முதலாக குழந்தைக்குச் சோறு ஊட்டல் சடங்கு கூட குலதெய்வக் கோவிலிலோ அல்லது இஷ்ட தெய்வக் கோவிலிலோ நடைபெறுவதுண்டு.

முடிஎடுத்துக் காது குத்துதல்[தொகு]

குலதெய்வக் கோவில்களில் பிறந்த குழந்தைக்கு முதல் முடி எடுத்துக் காது குத்தும் சடங்கு இந்த இனத்தவரிடையே சிறப்பிடம்பெறும் சடங்காகும். 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தில் அவரவர் குலதெய்வக் கோவில்களில் நடைபெறும் சடங்கு இது. குலதெய்வக் கோவில்களில் பெரிய கும்பிடு என்ற திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும். முடி எடுத்தல் மற்றும் காத்து குத்தல் சடங்குகள் இந்த திருவிழாவின் போதுதான் நடைபெற வேண்டும் என்பது விதி. ஆனால் பல காரணங்களை முன்னிட்டு இவ்விதி தளர்த்தப்பட்டு வருகிறது. காது குத்துதல் என்பது கருவில் உண்டான பாரம்பரியக் குறைகளை நீக்குவதற்காக இச்சடங்கு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. தீமை தரும் ஆவிகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கக் காதில் துளையிட்டு தங்க ஆபரணம் அணிவிப்பதாக நம்பப்படுகிறது.

தாய் மாமன் இந்த சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கிறார். தன சகோதரி குடும்பத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இவர் மடியில் அமர வைத்து முடிஎடுத்துக் காத்து குத்துவது மாற்ற முடியாத விதி எனலாம். தாய் மாமன் புத்தாடை மற்றும் சீர்செனத்திகளுடன் வந்திருந்து காதுகுத்து விழாவை சிறப்பிப்பார்.

பூப்புச் சடங்கு[தொகு]

பெண் குழந்தைகளின் பூப்பெய்தும் நிகழ்வு 24 மனையாரிடையே மிகவும் மகிழ்வுடனும் சீர் வரிசையோடும் நடைபெறும் சடங்காகும். பெண் உடல் ரீதியாக (தாய்மைக்கு உரிய) கன்னித் தன்மையை அடையும் நிகழ்வே பூப்படைதல் ஆகும். பெண் பூப்பெய்திய உடன் பெண்ணிற்கு நிகழ்த்தப்படும் சடங்கே பூப்புனித நீராட்டு சடங்கு என்று அறியப்படுகிறது. கிராமங்களில் சடங்கு என்னும் சொல் பூப்புச் சடங்கையே சுட்டும்.

இந்தச் சடங்கிலும் பூப்படைந்த பெண்ணின் தாய்மாமன் பூப்புச் சடங்கில் தாய் மாமன் தன சகோதரியின் பெண்ணிற்குப் பச்சை ஓலை பந்தல் கொண்டு குச்சில் கட்டுதல் அல்லது குடிசை கட்டுதல் என்பது மரபு. வீட்டை விட்டு ஒதுக்கி வைத்த பின் இந்தப் பெண் இக்குடிசையில் பதினாறு நாட்கள் தங்க வேண்டும். பெண் குடிசையில் தங்கியிருக்கும் நாட்களில் வருங்காலத்தில் அவள் மணமுடித்து கருவுற்ற பின் குழந்தையைத் தாங்கும் வலிமையைப் பெறவேண்டும் என்பதற்காக ஊட்டச் சத்தான உணவு வகைகளை உறவினர்கள் கொடுத்து வலுச்சேர்ப்பதுண்டு. தங்கள் பெண் இல்வாழ்க்கைக்கு உரிய தகுதியைப் பெற்ற நிலையை உறவினர்களுக்கு தெரிவிப்பதே பூப்புச் சடங்கின் குறிக்கோள் எனலாம். பதினாறு நாட்கள் கழித்து அப்பெண் திருமபவும் வீட்டுக்கு அழைக்கப்படுவாள். குறிப்பிட்ட நல்ல நாளில் வீட்டில் அல்லது மண்டபத்தில் சுமங்கலிப் பெண்கள் ஒன்று கூடி மஞ்சள் கலந்த நீரால் பூப்படைந்த பெண்ணைக் குலவை இட்டுப் புனித நீராட்டுவது பூப்புனித நீராட்டுச் சடங்காகும்.

மேலும் பார்க்க[தொகு]