2025 வரைவு விதைகள் சட்டம்
விதைத்துறை தொடர்பான விதிமுறைகளை சீரமைப்பதற்கான நவம்பர் 2025ஆம் ஆண்டில், இந்திய அரசின் இந்திய வேளாண்மைத் துறை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் முயற்சியில் 2025ஆம் ஆண்டுக்கான வரைவு விதை சட்ட முன்மொழிவானது, 1966 ஆம் ஆண்டு விதைச் சட்டம் மற்றும் 1983ஆம் ஆண்டு விதை கட்டுப்பாட்டு ஆணை ஆகியவற்றை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய சட்டம் தரமான விதைகளின் விநியோகத்தை மேம்படுத்தும், போலி விதைகளைத் தடுக்கும் மற்றும் விவசாயிகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.[1][2]
ஆனால் 2004 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகளைப் போலவே, இச்சட்ட முன்மொழிவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம், சாதாரண விவசாயிகளை விட, குறிப்பாக பாரம்பரிய, இரசாயனமற்ற விவசாயத்தை நம்பியிருப்பவர்களை விட, விதை நிறுவனங்களுக்கும், வேளாண் வணிகங்களுக்கும் மிகவும் உகந்தது என்று வேளாண்மைக் குழுக்கள், விதை வல்லுநர்கள் மற்றும் சமூக அமைப்புகள் வாதிடுகின்றது.
பாரத் பீஜ் ஸ்வராஜ் மஞ்ச் அமைப்பின் உறுப்பினரான விதை வல்லுநர் பாரத் மன்சதா, இந்த வரைவுச் சட்டம் "சாதாரண விவசாயிகளை விட, குறிப்பாக இரசாயன உள்ளீடுகள் இல்லாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்ய பாரம்பரிய விதைகளை விரும்பும் விவசாயிகளை விட, விதை நிறுவனங்கள் மற்றும் வேளாண் வணிகங்களின் நலனுக்காகவே அதிகம் இருப்பதாகத் தெரிகிறது" என்று எச்சரித்தார்
முக்கிய அம்சங்கள்
[தொகு]வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம், இந்த சட்ட முன்மொழிவு பெருகிவரும் சிக்கலான விதைச் சந்தைக்கும், தரம் குறைந்த விதைகளால் ஏற்படும் அதிகரித்து வரும் நிதி இழப்புகளுக்கும் ஒரு தீர்வாக அமையும் என்று கூறுகிறது. இது பல முக்கிய ஒழுங்குமுறை மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது:
- விதை வகைகளின் கட்டாயப் பதிவு: விவசாயிகளின் பாரம்பரிய விதை வகைகள் மற்றும் ஏற்றுமதிக்காக மட்டுமேயான விதைகள் தவிர, அனைத்து விதை வகைகளுக்கும் அரசிடம் பதிவு செய்வது கட்டாயமாகும். பதிவு பெறுவதற்கு முன்பு, விதை வகைகள் பல இடங்களில் சாகுபடி மற்றும் பயன்பாட்டிற்கான மதிப்பு (VCU) சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறைந்தபட்ச முளைப்புத்திறன் மற்றும் தூய்மைத் தரங்களை பூர்த்தி செய்பவை மட்டுமே விற்பனை செய்யப்படலாம்.
- வலுவான சந்தைக் கட்டுப்பாடுகள் மற்றும் கண்டறியும் வசதி: விதை வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் விதைகளை விற்க, இறக்குமதி செய்ய அல்லது ஏற்றுமதி செய்ய மாநில அரசுகளால் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழைப் பெற வேண்டும். ஒவ்வொரு விதை கொள்கலனிலும் மத்திய அரசின் விதை கண்டறியும் இணையதளம் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு QR குறியீடு இருக்க வேண்டும். இது முழுமையான கண்காணிப்பை செயல்படுத்தும்.
- பெரிய நிறுவனங்களுக்கு எளிதான இணக்கம்: முன்மொழியப்பட்ட மத்திய அங்கீகார அமைப்பு, தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் அனைத்து மாநிலங்களிலும் தானியங்கி அங்கீகாரத்தைப் பெற அனுமதிக்கும் — இந்த நடவடிக்கை பெரிய நிறுவனங்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
- தண்டனைகள்: தரம் குறைந்த விதைகளை விற்பது அல்லது SATHI இணையதளத்தில் தகவல்களைப் புதுப்பிக்கத் தவறுவது போன்ற சிறிய குற்றங்களுக்கு ரூபாய். 1 இலட்சம் முதல் அபராதம் விதிக்கப்படும். போலியான அல்லது பதிவு செய்யப்படாத விதைகளை விற்பது உள்ளிட்ட பெரிய மீறல்களுக்கு, ரூபாய். 30 லட்சம் வரை அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
- விவசாயிகளின் உரிமைகள்: இந்த சட்ட முன்மொழிவு, ஒரு தனிப்பட்ட விவசாயிக்கு, பண்ணையில் சேமிக்கப்பட்ட விதைகளை "பயிரிட, விதைக்க, மீண்டும் விதைக்க, சேமிக்க, பயன்படுத்த, பரிமாறிக்கொள்ள, பகிர அல்லது விற்க" உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், அந்த விதைகளை ஒரு நிறுவனத்தின் வர்த்தகப் பெயரில் விற்க முடியாது என்ற நிபந்தனையும் உள்ளது. புதிய மத்திய மற்றும் மாநில விதைக் குழுக்கள் இதன் அமலாக்கத்தைக் கண்காணிக்கும்.
விமர்சனங்கள்
[தொகு]2025 விதைகள் சட்ட முன்மொழிவு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.[3]
- இழப்பீடு பெறுவதற்கு எளிய வழி இல்லை: குறைபாடுள்ள விதைகளால் பயிர் சேதம் ஏற்பட்டால், விவசாயிகள் இழப்பீடு கோரி நீதிமன்றங்கள் மூலம் தான் அணுக வேண்டியிருக்கும். இந்தச் செயல்முறையை மேற்கொள்வதற்கான வளங்கள் பல சிறு விவசாயிகளிடம் இல்லை. இந்த சட்ட முன்மொழிவு விவசாயிகள் நிவாரணம் பெறுவதற்கு எந்தவொரு நடைமுறைக்கு உகந்த அல்லது எளிதில் அணுகக்கூடிய வழிமுறையையும் வழங்கவில்லை வாதிடுகின்றனர்.
- சமூக விதை பாதுகாவலர்கள் விலக்கப்படுகிறார்கள்: தனிப்பட்ட விவசாயிகள் விதைகளைச் சேமித்து பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டாலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs), மகளிர் விதை சேகரிப்புக் குழுக்கள் மற்றும் பாரம்பரிய விதை சேமிப்பு வலையமைப்புகள் போன்ற சமூகக் குழுக்கள் வணிக நிறுவனங்களாக வகைப்படுத்தப்படும். பெரிய நிறுவனங்களுக்குப் பொருந்தும் அதே அதிகாரத்துவ மற்றும் டிஜிட்டல் இணக்கத் தேவைகளுக்கு அவர்களும் உட்படுத்தப்படுவார்கள். இது இந்தியாவின் மரபணு பாரம்பரியத்தை சுரண்டுவதற்கு வழிவகுக்கும் என்று விவசாய சங்கத் தலைவர் மன்சதா எச்சரிக்கிறார்
- பெருநிறுவனச் சார்பு மற்றும் டிஜிட்டல் சுமை: VCU சோதனைகள், பொதுவாகப் பெரிய நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் சீரான கலப்பின விதைகளுக்குச் சாதகமாக உள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். உள்நாட்டு, பன்முகத்தன்மை கொண்ட மற்றும் காலநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய ரகங்கள் தரப்படுத்தப்பட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய சிரமப்படக்கூடும். மேலும் அவை படிப்படியாக முறையான சந்தைகளில் இருந்து மறைந்து போகக்கூடும்.
இந்த சட்ட முன்மொழி விரிவான டிஜிட்டல் அறிக்கையிடலையும் கோருகிறது. QR குறியீடுகள், ஆன்லைன் சமர்ப்பிப்புகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவை குறைந்த இணைய அணுகல் அல்லது டிஜிட்டல் கல்வியறிவு கொண்ட கிராமப்புற சிறு விதை பாதுகாவலர்களுக்கு சவால்களை ஏற்படுத்தும்.
- வெளிநாட்டு விதைகளுக்கான ஓட்டை: VCU சோதனைக்காக வெளிநாட்டு நிறுவனங்களை அங்கீகரிக்க இந்த சட்ட முன்மொழிவு அனுமதிக்கிறது. வெளிநாட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் மட்டுமே மரபணு மாற்றப்பட்ட அல்லது காப்புரிமை பெற்ற விதைகள் இந்தியாவிற்குள் நுழைய இது வழிவகுக்கும் என்று விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.
- கடுமையான கண்காணிப்பு இல்லாமல் மரபணு மாற்றப்பட்ட அல்லது மரபணு திருத்தப்பட்ட விதைகள் அனுமதிக்கப்பட்டால், "மனித மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் அபாயங்கள் பெருமளவில் பெருகும்; மேலும் சிறு விவசாயிகள் இன்னும் லாபமற்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்" என்று மன்சதா வாதிடுகிறார்.