2019 ஆங்காங் உள்ளாட்சி தேர்தல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2019 ஆங்காங் மாவட்ட கவுன்சில் தேர்தல்கள் ஆங்காங்கின் அனைத்து 18 மாவட்ட கவுன்சில்களுக்கும் 2019 நவம்பர் 24 அன்று நடைபெற்றது. 1997 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்ததற்குப் பின்னர் நடைபெற்ற ஆறாவது தேர்தல் இதுவாகும்.[1] மொத்தமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 479 இடங்களில், நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தொகுதிகளிலிருந்தும் 452 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஏறக்குறைய மூன்று மில்லியன் மக்கள் வாக்களித்தனர். இது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 71 சதவீதத்திற்கு சமமானதாகும். இந்த வாக்குப்பதிவு அளவு ஆங்காங்கின் தேர்தல் வரலாற்றில் சாதனை வாக்குப்பதிவு ஆகும். இந்தத் தேர்தல் 2019 ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள் குறித்த உண்மையான வாக்கெடுப்பாக பரவலாகக் கருதப்பட்டது. இந்த தேர்தல் முடிவுகள் நிர்வாக தலைவர் கேரி லாமுக்கான கடும் கண்டனமாகவும், போராட்டத்துக்கான ஆதரவாகவும் பார்க்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்தேர்தலில் 18 மாவட்டங்களில் உள்ள 452 மாவட்ட கவுன்சில் இடங்களுக்கு 1090 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சனநாயக ஆதரவு வேட்பாளர்கள் ஆங்காங்கில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளனர். இது ஆங்காங்கின் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும். 18 மாவட்ட கவுன்சில்களில் 17 மாவட்ட கவுன்சில்களின் கட்டுப்பாட்டைப் பெற்றது மற்றும் முன்னதாக தங்கள் கைவசமிருந்த124 இடங்களிலிருந்து 388 இடங்கள் வரை பெற்று தங்கள் இடங்களை மூன்று மடங்காக உயர்த்தியது போன்றவை மக்களாட்சி ஆதரவு அணியின் மகத்தான வெற்றியாகும். 1,200 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் குழுவில் 117 மாவட்ட கவுன்சில் துணைப்பிரிவு இடங்களையும் மக்களாட்சி ஆதரவு அணியினரால் கைப்பற்ற முடிந்துள்ளது. இது ஹாங்காங்கின் தலைமை நிர்வாகியைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புள்ள உறுப்பினர் பதவியாகும். பெய்ஜிங் சார்பு கட்சிகளும் சுயேட்சைகளும் 62 இடங்களை மட்டுமே வென்றுள்ளனர். அந்த அணியினருக்கு 242 இடங்களுக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.[2][3]

பெய்ஜிங் சார்பு கட்சிகள் அனைத்தும் பெரும் பின்னடைவுகளையும் இழப்புகளையும் சந்தித்தன. இதில் முதன்மையான பெய்ஜிங் சார்பு கட்சி ஹாங்காங்கின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான ஜனநாயகக் கூட்டணி (டிஏபி) , வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட நூறு இடங்களை இழந்தது. நிர்வாக கவுன்சிலர் ரெஜினா இப்பினின் புதிய மக்கள் கட்சி ஒரு இடத்தைக் கூடப் பெறத் தவறிவிட்டது, இதன் விளைவாக அனைத்து மாவட்ட கவுன்சில்களிலிருந்தும் முற்றிலுமாக நீக்கப்பட்டது.[3]

எல்லை மாற்றங்கள்[தொகு]

ஜூலை 2017 இல், உள்ளூர் மக்கள்தொகை கணிப்புகளைப் பொறுத்து ஒவ்வொரு மாவட்ட கவுன்சிலுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, தேர்தல் விவகார ஆணையம் (ஈஏசி) 10 மாவட்ட கவுன்சில்களில் 21 புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களை உருவாக்க முன்மொழிந்தது:[1]

  1. கவுலூன் நகரம், யாவ் சிம் மோங் மற்றும் சூன் வான் மாவட்ட கவுன்சில்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு புதிய இடம்;
  2. ஷாம் சுய் போ, குவாய் சிங், டுவென் முன் மற்றும் சாய் குங் மாவட்ட கவுன்சில்கள் ஒவ்வொன்றிற்கும் இரண்டு புதிய இடங்கள்;
  3. குன் டோங் மற்றும் ஷா டின் மாவட்ட கவுன்சில்கள் ஒவ்வொன்றிற்கும் மூன்று புதிய இடங்கள்; மற்றும்
  4. யுயென் லாங் மாவட்ட கவுன்சிலுக்கு நான்கு புதிய இடங்கள்.[1]

அதன்படி, 2019 தேர்தலுக்கான மொத்த தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 21 எண்ணிக்கை அதிகரித்து 431 லிருந்து 452 ஆக உயர்த்தப்பட்டது.

கெர்ரிமாண்டரிங் சார்ந்த கவலைகள்[தொகு]

சில மக்களாட்சி ஆதரவு மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தல் விவகார ஆணையத்தால் செய்யப்பட்ட கெர்ரிமாண்டரிங் குறித்து பின்வரும் சில கவலைகளைத தெரிவித்தனர். அவர்களனின் கூற்றுப்படி தங்கள் தொகுதிகளின் எல்லைகள் காரணமின்றி மாற்றம் செய்தது தங்கள் கட்சிகளின் தேர்தல் வாய்ப்புகளை மோசமாக பாதித்துள்ளதாக கூறியுள்ளனர். தேர்தல் விவகார ஆணையத்தின் தலைவர் பர்னபாஸ் பங் இதற்குப் பதிலளிக்கையில் தொகுதியின் எல்லை மாற்றங்களானவை முற்றிலுமாக புறவய அடிப்படையில் செய்யப்பட்டதாகவும், அரசியல் தாக்கங்களின் காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]