2018 சுண்டா நீரிணை ஆழிப்பேரலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2018 சுண்டா நீரிணை ஆழிப்பேரலை
நாள்22 திசம்பர் 2018
நேரம்~21:27 (14:27 ஒசநே)
அமைவிடம்சுண்டா நீரிணை, இந்தோனேசியா
இறப்புகள்426
காயமுற்றோர்7,202
காணாமல் போனோர்24

சுண்டா நீரிணை ஆழிப்பேரலை (Sunda Strait tsunami) 2018 திசம்பர் 22 ஆம் நாள் சுண்டா நீரிணைப் பகுதியில் உள்ள கிரக்கத்தோவா எரிமலையின் சீற்றத்தின் காரணமாக பான்டென், லாம்பங் மற்றும் இந்தோனேசியப் பகுதிகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய ஆழிப்பேரலையாகும். இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமை இந்த ஆழிப்பேரலையானது எரிமலை உமிழ்வினைத் தொடர்ந்து நீரினடியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறது.

பின்னணி[தொகு]

இந்தோனேசியா பசிபிக் எரிமலை வளையத்தோடு அமைந்திருப்பதோடு 127 செயல்மிகு எரிமலைகளின் இருப்பிடமாகவும் இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான நிலநடுக்கங்களைச் சந்தித்து வருகின்றது. இயங்கு நிலையிலுள்ள அந்த 127 எரிமலைகளுள் சுண்டா நீரிணைப் பகுதியில் 1883 ஆம் ஆண்டு கிரக்கத்தோவா எரிமலையின் உமிழ்வால் (வரலாற்றில் மிகத் தீவிரமான எரிமலை உமிழ்வுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது - 30,000 மக்களை ஆழிப்பேரலையாலும், எரிமலைக் குழம்புகளாலும் கொன்று தீர்த்தது) 1927 ஆம் ஆண்டு உருவான எரிமலையே குட்டி கிரக்கத்தோவா ஆகும்.[1]

சுனாமிக்கு முந்தைய மாதங்களில், குட்டி கிரக்கத்தோவா தனது செயல்நிலையை அதிகரித்து வந்தது. திசம்பர் 21 ம் தேதி 400 மீட்டர் (1,300 அடி) உயரத்திற்கு ஒரு சாம்பல் மேகத்துடனான தனது எரிமலைக் குழம்பை உமிழ்ந்தது.

ஆழிப்பேரலை[தொகு]

உள்ளூர் நேரப்படி 21:03 மற்றும் ஒசநே 14:03 அளவில் ஆனக் கிரக்கத்தோவா தனது எரிமலைக் குழம்பை உமிழ்ந்ததோடு அங்கிருந்த நிலநடுக்கவியல் கருவியை சேதப்படுத்தவும் செய்தது. இருப்பினும் அருகாமையில் உள்ள நிலநடுக்கவியல் நிலையம் தொடர்ச்சியான நடுக்கங்களை கண்டறிந்தது. இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமை உள்ளூர் நேரப்படி 21:27 அளவிலும் (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் 14:27)பான்டனின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ஒரு ஆழிப்பேரலையை கண்டறிந்தது. ஆனால், அதற்கு முன்னதாக இந்த முகமை எந்த ஒரு கண்டவியல் திட்டு நகர்வினையும் கண்டறியவில்லை.[2] இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமையின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ பர்வோ நுக்ரோக்கோ ஆனக் கிரக்கத்தோவாவின் எரிமலை உமிழ்வின் காரணமாக நீருக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் முழுநிலவு நாளன்றான விளைவு இரண்டின் கலவையான காரணத்தால் அளவிற்கு அதிகமான ஆழிப்பேரலைகள் உருவாகியிருக்கலாம் என்று அறிக்கை வெளியிட்டார்.[3]

பாதிப்புகள்[தொகு]

ஜாவா தீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டான்ஜங் லீசங் கடற்கரை உல்லாச விடுதி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் பலவும் உருக்குலைந்து போய் விட்டன.ஜாவா தீவில், கடற்கரைகளையும், தேசிய பூங்காவையும் கொண்டிருந்து சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிற பாண்டெக்லாங்கில் ஆழிப்பேரலைகளால் 160 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். சுமத்ரா தீவில் செராங் மாவட்டம், தெற்கு லாம்பங், டாங்கமஸ் ஆகிய இடங்களில் பெருத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. சுனாமியால் பலியானவர்கள் எண்ணிக்கை 426 ஆக உள்ளது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பில் 7,202 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Deaths as 'volcano tsunami' hits Indonesia". BBC News. 23 December 2018. https://www.bbc.co.uk/news/world-asia-46663158. பார்த்த நாள்: 23 December 2018. 
  2. Ramdhani, Jabbar (23 December 2018). "Update Terkini BMKG: Yang Terjadi di Anyer Bukan Tsunami karena Gempa" (in id). detiknews. https://news.detik.com/berita/4355647/update-terkini-bmkg-yang-terjadi-di-anyer-bukan-tsunami. பார்த்த நாள்: 23 December 2018. 
  3. "Tsunami in Banten, Lampung kills at least 20: Disaster agency" (in en). The Jakarta Post. 23 December 2018. https://www.thejakartapost.com/news/2018/12/23/tsunami-in-banten-lampung-kills-at-least-20-bmkg.html. பார்த்த நாள்: 23 December 2018. 
  4. "Indonesia tsunami: Death toll from Anak Krakatau volcano rises". BBC News. 25 திசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2018.