2012 சிவகாசி தொழிற்சாலை வெடிவிபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2012 சிவகாசி தொழிற்சாலை வெடிவிபத்து
தேதி5 செப்டம்பர், 2012
இடம்சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா
Casualties
இறப்பு: 40 பேர்
காயமுற்றோர்: 70 க்கும் மேற்பட்டோர்

2012 சிவகாசி தொழிற்சாலை வெடிவிபத்து (The 2012 Sivakasi factory explosion) என்பது இந்தியாவிலுள்ள சிவகாசியில் அமைந்துள்ள ஓம்சக்தி பட்டாசுத் தொழிற்சாலையில் 2012 செப்டம்பர் 5 ஆம் நாள் நடந்த ஒரு கோர விபத்தாகும். இவ்விபத்தில் 40 பேர் இறந்தனர். 70 பேர்களுக்கு மேல் படுகாயமுற்றனர். இந்தத் துன்பியல் நிகழ்வு உரிய உரிமம் பெறாத பட்டாசுத் தொழிற்சாலையில் நடந்ததாகும்.

பின்புலம்[தொகு]

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள சிவகாசியானது இந்தியாவின் பட்டாசுத் தலைநகரம் (fireworks capital) என்றழைக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்தப் பட்டாசு உற்பத்தியில் 90% மேலாக இந்த நகரில் உற்பத்தியாகிறது. மேலும் சீனாவிற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய பட்டாசு உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது.[1] ஒவ்வொரு ஆண்டும் சிவகாசியிலுள்ள 700க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஏறக்குறைய $360 மில்லியன் மதிப்பிலான பட்டாசுகளைத் தயாரிக்கின்றன.[2]

ஓம்சக்தி பட்டாசுத் தொழிற்சாலை வளாகமானது ஒரு பெரிய தொழிற்சாலை அலகு மற்றும் 48 துணை அலகுகளையும் கொண்டதாகும். சில நாள்களுக்கு முன்பாக, தொழிலாளர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமைக்காக அத்தொழிற்சாலையின் பட்டாசு தயாரித்தலுக்கான உரிமம் இரத்து செய்யப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் உரிமம் இரத்தானதன் காரணமாக அத்தொழிற்சாலையானது மூடப்பட்டிருக்க வேண்டும் என உள்ளூர் காவல் துறையினர் குறிப்பிடுகின்றனர்.[3]பதிலாக, 300க்கும் அதிகமான மக்கள் வெடிவிபத்தின்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தனர்.[4] இந்துக்களின் திருவிழாவான தீபாவளிக்கு சில வாரங்களே இருந்த நிலையில், பட்டாசு தயாரிப்பாளர்கள் உற்பத்தியளவை அதிகரிக்க வேண்டிய அழுத்தத்தில் இருந்தனர்.[5][6]

வெடிவிபத்து[தொகு]

தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பதற்காக சில வேதிப்பொருள்களை ஒன்றாய்க் கலந்துகொண்டிருந்தபோது அந்த வெடிவிபத்து நடந்தது.[7] அங்குள்ள சூழலில் நிலவிய 390 சென்டிகிரேடு வரையிலான உயர்ந்த வெப்பநிலைதான் வெடிவிபத்திற்குக் காரணமாக இருக்கக் கூடும் என சில அறிக்கைகள் கூறுகின்றன.[5] முதலில் நிகழ்ந்த வெடிவிபத்தின் ஓசையையும் அதற்குப் பின் நிகழ்ந்த தொடர் வெடிவிபத்துகளின் ஓசையையும் இரண்டு கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் கேட்க முடிந்தது.[7] சுவாசக் கருவிகள் முதலான கருவிகள் இன்மையால் அந்தக் கட்டிடத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் நுழைவது தாமதமானது.[4] மேலும் விபத்தில் காயமுற்றோருக்கான சிகிச்சைகள் அளிப்பதற்கான முயற்சியும், உள்ளூர் மருத்துவமனைகளில் போதுமான வசதிகளின்மையால் தாமதமானது.[7]அங்கு ஏற்பட்டத் தீயினை அணைப்பதற்கு ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஆயிற்று.[3]

ஆரம்பக் கட்ட இறப்பு எண்ணிக்கை 37 ஆக இருந்தது.[8] சில வாரங்களுக்குப் பின்பான இறுதி அறிக்கையானது வெடிவிபத்தில் இறந்தவர் எண்ணிக்கை 40 என்றும் 70 பேர்களுக்கும் மேல் காயமடைந்தனர் என்றும் உறுதி செய்தது.[5]இங்கு நேர்ந்த இறப்புகளில் தொழிலாளர்களும், முதலில் நடந்த வெடிவிபத்தினைக் காண வந்த உள்ளூர் கிராமத்தினரும் அடங்குவர்.[3]

கெடுவிளைவுகள்[தொகு]

விபத்து நடந்தபின் அதிகாரிகள் உடனடியாக பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஆய்வுகளையும் சோதனைகளையும் மேற்கொண்டு, ஏற்கனவே அமலில் உள்ள ஒழுங்குமுறைகளை செயல்படுத்தத் தொடங்கினர். சில தொழிற்சாலைகளை மூட வற்புறுத்தியும் பல உரிமங்களை இரத்து செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக 150 பட்டாசு தயாரிப்பு அலகுகள் மூடப்பட்டன.[5] கொடூரமான கொலை புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தொழிற்சாலையின் மேலாளர் உள்ளிட்ட 12 பேர்கள் கைது செய்யப்பட்டனர். விபத்து நடந்ததும் ஓம்சக்தி பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் உடனடியாகத் தலைமறைவானார். அவரை காவல் துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளூர் அதிகாரிகள், நடந்த நிகழ்வுக்கு உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.[6] செப்டம்பர் 7 ஆம் நாள், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், உரிமம் இரத்து செய்யப்பட்டபின்பும் அந்தத் தொழிற்சாலை எவ்வாறு தொடர்ந்து செயல்பட்டது என்பது குறித்து விசாரிக்க குற்றவியல் நடுவர் கூர்ந்தாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sivakasi: India's dangerous fireworks capital (BBC News, 22 September 2012)
  2. Safety Problems Persist in India’s Firecracker Industry by Anupama Chandrasekaran (த நியூயார்க் டைம்ஸ், 8 September 2012)
  3. 3.0 3.1 3.2 Blaze at India fireworks factory "kills 34" (BBC News, 5 September 2012)
  4. 4.0 4.1 Sivakasi factory fire: 54 charred to death in the incident (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 5 September 2012)
  5. 5.0 5.1 5.2 5.3 Season arrives but the festive spirit is missing in Sivakasi by J Arockiaraj (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 5 November 2012)
  6. 6.0 6.1 Sivakasi fire: 12 arrested, hunt on for owner (Hindustan Times, 6 September 2012)
  7. 7.0 7.1 7.2 Sivakasi fire unit mishap: 36 killed; PM, Sonia express grief (Hindustan Times, 6 September 2012)
  8. Sivakasi: Major fire at fire-cracker factory, 37 dead by J Sam Daniel Stalin (NDTV, 6 September 2012)
  9. Death toll 39; Jayalalithaa orders probe into blaze (Hindustan Times, 7 September 2012)