2007 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் (2007 Uttar Pradesh Legislative Assembly election) 2007 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்றது. இந்தியா உத்தரப்பிரதேச மாநிலத்திற்கான அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக இது நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 2007 மே 11 அன்று அறிவிக்கப்பட்டன.
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்களில் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளின் பங்கேற்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதற்கு முன் நடைபெற்ற 2002 சட்டமன்றத் தேர்தலில், குற்றப் பதிவுகள் கொண்ட வேட்பாளர்கள் 403 தொகுதிகளில் 206 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால், சாதாரண அரசியல்வாதிகளை விட குற்றப் பின்னணி கொண்டவர்கள் அதிகமாக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]
2007 தேர்தலில், குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களின் பங்கேற்பு மேலும் அதிகரித்தது. தேர்தலுக்கு முன்பு, முக்கிய அரசியல் கட்சிகள் முந்தைய தேர்தல்களை விட 74% அதிகமான குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு வேட்புமனு வழங்கியதாக, முன்னாள் டி.ஐ.ஜி. ஈஷ்வர் பி. திவேதி தலைமையிலான சுயாதீன அமைப்பான UP எலெக்சன் வாட்ச் தெரிவித்தது.[2]