1987 இட ஒதுக்கீட்டுப் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(1987 இடஒதுக்கீடு போராட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
1987 இட ஒதுக்கீட்டுப் போராட்டம்
நாள்செப்டம்பர் 17, 1987 (1987-09-17) – முதல்
செப்டம்பர் 23, 1987 (1987-09-23)
இடம்தமிழ்நாடு, இந்தியா
காரணம்வன்னியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கிய நிலையில் இருத்தல்
இலக்குவன்னியர்களுக்கு, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
முறைமறியல் போராட்டம், முழக்கமிடல், ஆர்ப்பாட்டம்,
முடிவுஇடஒதுக்கீடு வழங்கப்பட்டது
எண்ணிக்கை
இழப்புகள்
இறப்பு(கள்)21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்[1]

1987 இடஒதுக்கீடு போராட்டம் (1987 Reservation Protest, 1987 வன்னியர் போராட்டம்) என்பது தமிழ்நாட்டில், வன்னிய சமுதாய மக்களால் செப்டம்பர் மாதம், 1987 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு மாபெரும் போராட்டம் ஆகும்.[2][3] வன்னியர் சாதியினருக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரி வன்னியர் சாதி சங்கத்தினரால் (பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி) நடத்தப்பட்ட போராட்டமாகும். தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடும், மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் மரு. இராமதாசின் தலைமையில் நடைபெற்றது. இந்த இட ஒதுக்கீடு போராட்டகாரர்களை அடக்குவதற்கு தமிழக காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[3][1][4]

காரணம்[தொகு]

1987 ஆம் ஆண்டுகளில் வன்னிய சமுதாயத்தினர் தமிழக அரசின் இடஒதுக்கீடு பட்டியலில், பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்தனர். இதனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்துள்ளனர். அந்தக் காலகட்டத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மரு. இராமதாஸ் ஊர், ஊராகச் சென்று வன்னியர் மக்களின் வாழ்வாதாரத்தை எடுத்துக் கூறி, வன்னிய சமுதாய மக்களை ஒன்றிணைத்தார்.

போராட்டம்[தொகு]

இதன் விளைவாக தமிழ்நாடு முழுவதும் வன்னியர்களால், குறிப்பாக வடதமிழகத்தில் போராட்டம் வலுப்பெற்றது. இப்போராட்டம் மரு. இராமதாசின் தலைமையில் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போது தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் சாலைகளின் இரு கரையிலும் இருந்த மரங்களை வெட்டி சாலைகளின் குறுக்கே போட்டு போக்குவரத்து மறிக்கப்பட்டது. இப்போராட்டம் தொடர்ச்சியாக 7 நாட்கள் வன்னியர்களால் தொடர்சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டது.[4]

பின்விளைவு[தொகு]

இப்போராட்டத்தில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த 21 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் 18,000 பேர் இராமதாஸ் உட்பட சிறையில் அடைக்கப்பட்டனர்.

எம். ஜி. ஆர் அழைப்பு[தொகு]

அப்போதைய தமிழக முதல்வரான ம. கோ. இராமச்சந்திரன் இப்போராட்டத்தின் போது, உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். இப்போராட்டத்தை அறிந்த எம். ஜி. ஆர் சிகிச்சை பெற்று தமிழகம் திரும்பிய உடன் நவம்பர் 25, 1987 அன்று அனைத்து சமுதாயத்தினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சு வார்த்தையில் வன்னிய சமுதாய சார்ப்பில் இராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது வன்னிய மக்களின் நிலை குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. பின்னர் எம். ஜி. ஆர் இதுக்குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் சில நாட்களிலேயே எம். ஜி. ஆர் காலமானார்.

இடஒதுக்கீடு வழங்கல்[தொகு]

அதன் பிறகு 1989 ஆம் ஆண்டுகளில் மு. கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு மீண்டும் வன்னியர் சங்கம் சார்பில் இடஒதுக்கீடு வேண்டி வலியுறுத்தப்பட்டது. பின்பு மு. கருணாநிதியால் வன்னியர் சமுதாயத்துடன் சேர்த்து மொத்தம் 108 சமுதாயத்தை, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இணைத்தார். அதன் விளைவாகவே தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர் சமுதாயம் உட்பட மொத்தம் 108 சமுதாயத்திற்கு 20 விழுக்காடு வழங்கப்படுகிறது.[5][6][7][8]

நினைவு நாள்[தொகு]

இப்போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை அடக்குவதற்கு தமிழக காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவு நாளான செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ஒவ்வொறு வருடமும் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக, இராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வீர வணக்க நாள் ஆக கடைப்பிடிக்கப்படுகிறது.[9][1]

மணிமண்டபம்[தொகு]

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 21 பேருக்கு, ரூ.4 கோடியில் விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின், 02 செப்டம்பர் 2021 அன்று சட்டசபையில் அறிவித்தார்.[10]

மேற்கோள்கள்[தொகு]