1943 மெட்ராஸ் பெருவெள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

1943 மெட்ராஸ் பெருவெள்ளம் அல்லது 1943 சென்னைப் பெருவெள்ளம் என்பது இந்தியாவில் தற்போது தமிழ்நாடு என்றழைக்கப்படும் மாநிலத் தலைநகரான சென்னையில் (மெட்ராஸ்) 1943 இல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளமாகும். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சென்னையில் பல்வேறு சேதங்களையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய நிகழ்வு இதுவாகும்.[1]

காரணம்[தொகு]

வங்காள விரிகுடா கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சென்னை வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் அதிக மழைப் பொழிவைப் பெறும். 1943 அக்டோபர் மாதம் சென்னையில் ஆறுநாட்கள் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக அன்றைய சென்னையின் கூவம் ஆறு, அடையாறு ஆறு ஆகிய ஆறுகளின் கரைகள் பெருகி குளங்கள், ஏரிகள் ஆகிய யாவும் நிறைந்து கரைகள் உடைந்து குடியிருப்புப் பகுதிகள் அனைத்தும் நீரால் சூழப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டையும், வாழ்க்கையையும் இழந்து தவித்தனர்.

பாதிப்புகள்[தொகு]

ஆறுநாட்கள் இடைவிடாது பெய்த மிக அதிக கனமழையின் காரணமாக கூவம் ஆறு அதன் துணையாறுகள், கால்வாய்கள் ஆகியன நீர் நிறைந்து கரைகள் உடைந்தன. இதனால் கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், பெரம்பூர், அண்ணா சாலை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை ஆகிய குடியிருப்புப்பகுதிகள் முற்றிலும் நீரால் சூழப்பட்டன. அடையாறு ஆற்றில் வெள்ளம் வந்த போதும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அதனைச் சுற்றியுள்ள பகுதி நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்டதாகும். அயனாவரம் மேடவாக்கத்தில் மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். லாக் சேரியில் (சூளைமேடு) மனநல மருத்துவ நிறுவனத்தில் மக்கள் தஞ்சமடைந்தனர். மக்கள், கால்நடைகள் ஆகியன அடித்துச் செல்லப்பட்டன. அன்றைய சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் பெருமளவு விவசாயம் நடைபெற்றுவந்த பகுதிகளில் விவசாயப் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அதைப் பார்த்த மக்கள் திகிலும் அச்சமும் அடைந்தனர். அக்காலத்தில் கட்டுமரங்களிலும், இரப்பர் படகுகளிலும் மீட்புப் பணிகள் நடைபெற்றன. வியாசர்பாடி காவல்நிலையம் ஆறடி நீரில் மூழ்கியது. பெரம்பூர், கொசப்பேட்டை, கொண்டித்தோப்பு, சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மோசமான பாதிப்புக்கு ஆளானார்கள். இவர்கள் அங்குள்ள அரசுக் கட்டிடங்கள், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை மக்கள் ரிப்பன் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மயிலாப்பூர், ஜார்ஜ் டவுன், ராயபுரம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகள் மட்டுமே அதிகமான பாதிப்புக்கு ஆளாகாத பகுதிகள் ஆகும்.[2]

உதவிகள்[தொகு]

இவ்வெள்ளம் ஏற்பட்ட காலத்தில் இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த காரணத்தால் மெட்ராஸ் மாகாணத்திற்குத் தற்காலிக உதவிகளே கிடைத்தன. பணப்பற்றாக்குறை காரணமாக நிரந்தர சீரமைப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நெருக்கடி நிலையில் மக்கள் தாமாகவே ஒருவருக்கொருவர் உதவிகள் செய்தனர். பல குழுக்கள் வீடற்றவர்களுக்கு உதவின. 1930 களில் தொடங்கப்பட்ட மேயர் நிவாரண நிதி புதுப்பிக்கப்பட்டது. மெட்ராஸ் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய்கள் (50,000) ஒதுக்கப்பட்டது. சென்னையை மீட்டெடுக்கும் முயற்சியில் மனிதநேய சேவைப்படை முக்கிய சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது.[1]

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 "Memories of Madras: Story of a submerged city". PRINCE FREDERICK. The Hindu (November 22, 2011). பார்த்த நாள் நவம்பர் 21, 2015.
  2. "வெள்ளத்தில் மூழ்கிய மெட்ராஸ்/article2650132.ece Memories of Madras: Story of a submerged city". நேயா. தி இந்து (November 21, 2015). பார்த்த நாள் நவம்பர் 21, 2015.

வெளியிணைப்புகள்[தொகு]