உள்ளடக்கத்துக்குச் செல்

1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் (The Tamils 1800 Years Ago) என்பது யாழ்ப்பாணக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவரும் சென்னையில் பிறந்து வளர்ந்தவருமான வி. கனகசபை எழுதிய தமிழர் வரலாறு கூறும் நூல் ஆகும். இது ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தையும், அக்காலத்தில் பதிப்பிக்கப்படாமல் ஏடுகளில் கையெழுத்துப் படிகளாக இருந்த தமிழ் இலக்கிய நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்த நூலை அவர் எழுதினார். இது ஒரு சகாப்தம் உருவாக்கிய நூல் எனத் தமிழ் ஆய்வாளர் கமில் சுவெலபில் கூறுகிறார்[1]. இது முதலில் மதராசு ரிவியூ என்னும் ஆங்கில இதழில் 1895 ஆம் ஆண்டுக்கும் 1901 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டுரைகளாக வெளிவந்தது. பின்னர் இவைகளைத் தொகுத்து 1904 ஆம் ஆண்டில் நூலாக வெளியிட்டனர்.

தோற்றம்[தொகு]

1895 ஆம் ஆண்டில் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் என்னும் தலைப்பிலான தொடர் கட்டுரைகளில் முதலாவது கட்டுரை "மதராசு ரிவியூ"வில் வெளிவந்தது. முதற்கட்டுரையைப் பார்த்த சர். எஸ். சுப்பிரமணிய ஐயர், தமிழர் நாகரிகம் தொடர்பாக இலக்கியங்களில் உள்ள எல்லாத் தகவல்களையும் வெளிக்கொண்டு வரும்படி தன்னைக் கேட்டுக்கொண்டதாக கனகசபைப்பிள்ளை தனது முதல் பதிப்பின் முன்னுரையில் கூறியுள்ளார்[2]. இவ்வாறு ஆறு ஆண்டுகள் காலப்பகுதியில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடவேண்டும் என்று கனகசபைப்பிள்ளையின் நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு அமைய, கட்டுரைகளில் சில மாற்றங்களைச் செய்ததுடன் அவற்றைத் தொகுத்து வாசிப்பதற்கு இலகுவான முறையில் பிரிவுகளாகப் பிரித்து நூலாக்கினார். தலைப்பு குறிப்பிடுவதற்கு அமைய கிபி 50 ஆம் ஆண்டுக்கும் கிபி 150 ஆம் ஆண்டுக்கும் இடையில் அடங்காதவற்றை உள்ளடக்காமல் தவிர்த்ததாக நூலாசிரியர் கூறுகிறார்[2].

அமைப்பு[தொகு]

இந்நூல் மொத்தம் 16 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை:

 1. அறிமுகம்
 2. தமிழகப் புவியியல்
 3. வெளிநாட்டு வணிகம்
 4. தமிழ் இனமும் இனக்குழுக்களும்
 5. சோழர்
 6. பாண்டியர்
 7. சேரர்
 8. இளவரசர்களும் தலைவர்களும்
 9. சமூக வாழ்வு
 10. திருவள்ளுவரின் குறள்
 11. சிலப்பதிகாரத்தின் கதை
 12. மணிமேகலையின் கதை
 13. தமிழ் பாடல்களும் புலவர்களும்
 14. ஐந்து தத்துவ முறைமைகள்
 15. சமயம்
 16. முடிவுரை

மொழிபெயர்ப்பு[தொகு]

இந்நூலை கா. அப்பாத்துரை தமிழில் மொழிபெயர்த்ததுடன், பொருள் விளக்கங்களையும், புதிய செய்திகளையும் அடிக்குறிப்புகளாகச் சேர்த்தும் உள்ளார்[3]. இது 2001 ஆம் ஆண்டில் வசந்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

 1. சுவெலபில், கமில்., 1997. பக். 104
 2. 2.0 2.1 கனகசபைப்பிள்ளை, வி. 1904 முன்னுரை
 3. அப்பாத்துரையார் மொழிபெயர்ப்பு நூல் முன்னுரை

உசாத்துணைகள்[தொகு]

 • Kanagasabai, V., Tha Tamils 1800 years Ago, Asian Educational Services, Delhi. 1979 (first edition 1904)
 • கனகசபை, வி., அப்பாத்துரையார், கா. (தமிழாக்கம்), ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், வசந்தா பதிப்பகம். 2001.
 • சம்பந்தன், மா. சு., அச்சும் பதிப்பும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 1997.
 • சுவெலபில், கமில்., Companion studies to the history of Tamil literature, Brill Academic Publishers, நெதர்லாந்து. 1997

நூலகத்தில்[தொகு]

தளத்தில்
1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர் (நூல்)
நூல் உள்ளது.