ஹோஜகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஹோஜகிரி என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் [1] பிரபலமாக இருக்கும் ஒரு நாட்டுப்புற நடனம் ஆகும். இது "புரூ (ரீங்)" இன மக்களால் நிகழ்த்தப்படுகிறது. [2] இதில், பெண்கள் மற்றும் இளம் பெண்கள், ஒரு அணியில் சுமார் 4 முதல் 6 உறுப்பினர்கள் வரை பங்கு பெறுவார்கள். இந்த வகை நடனத்தில் பாடுவது, ஒரு மண் குடத்தின் மீது சமநிலைப்படுத்துதல் மற்றும் தலையில் ஒரு புட்டி மற்றும் கையில் மண் விளக்கு போன்ற பிற பொருளை வைத்துக்கொண்டு, அவை தரையில் விழுந்துவிடாமல் நிர்வகிப்பது போன்றவை அடங்கும். [3] ஹோஜகிரி நடனம் ஆடுபவரின் உடலின் கீழ் பாதி மட்டுமே நகரும். இதுவே இந்த நடனத்தின் சிறப்பியல்பாக உள்ளது.

தொன்மம்[தொகு]

பொதுவாக, திரிபுராவில், துர்கா பூசையை அடுத்து வரும் பௌர்ணமி இரவில் நடைபெறும் ஹோஜகிரி திருவிழாக்கள் அல்லது லட்சுமி பூசையின் போது இந்த நடனம் பாரம்பரியமாக, நிகழ்த்தப்படுகிறது. மேலும், திரிபுராவில், தசரா பண்டிகை நடைபெறும் 10 நாட்களில், 3 வது நாளுக்குப் பிறகு, மைலுமா தேவி, (லக்ஷ்மி) வழிபடப்படுகின்ற நாட்களிலும் இந்த நடனம் நிகழ்த்தப்படுகிறது.

நடனத்திற்கு தேவையான பொருட்கள்[தொகு]

இந்த வகை நடனத்தில், ஆண் உறுப்பினர்கள் பாடல் பாடுவதில் பங்கேற்கிறார்கள். காம் மற்றும் சுமு (காற்றுக் கருவி) போன்ற இசைக்கருவிகளை வாசிப்பார்கள். பாடல் வரிகள் மிகவும் எளிமையானவையாக இருக்கும். இந்த நடனத்திற்குத் தேவையான பொருட்களாக, பெய்லிங் எனப்படுகின்ற அரிசியை சுத்தம் செய்வதற்கு உதவும் வட்ட வடிவத்தில் இருக்கும் ஒரு கலன்; ஒரு குடம்; ஒரு புட்டி; ஒரு பாரம்பரிய விளக்கு; மைராங் எனப்படும் ஒரு தட்டு மற்றும் ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு கைக்குட்டை போன்றவை உள்ளன.

நடன பாணி[தொகு]

இந்த நடனத்தில் காணப்படும், மெதுவான இடுப்பு அசைவு மற்றும் இடுப்பு சுழற்சிக்கு ஒருவர் விரிவான பயிற்சி மற்றும் ஒத்திகை செய்ய வேண்டும். இந்த நடனத்தில் பங்குபெறும் 4 அல்லது 6 நபர்கள், ஒரு வரிசையை முடிக்க சுமார் 30 நிமிடங்கள் ஆகும். இந்த நடனத்தின் மூலம் ஹுக் அல்லது ஜும் சாகுபடி முழுவதும் காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த நடனம் ஆடுபவர்கள் அதிக கவனத்துடன் ஆடுகின்றனர். இவர்கள் தலையில் புட்டியும் அதன் மேல் எரிகின்ற ஒரு சிறிய விளக்கையும் வைத்துள்ளனர். மேலும் ஆடுபவர்களின் இரு கைகளிலும் வட்ட வடிவ தட்டுகள் இருக்கின்றன. பாடலின் ஓசை மற்றும் தாள கதிக்கு ஏற்றவாறு இவர்களின் நடன அசைவுகள் இருக்கின்றது. அந்த வகையில், பார்ப்பதற்கு இது ஹுக்னி நடனம் போன்று உள்ளது. ஆனால் இதன் தாளமும் வரிசையும் முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கிறது. ஹோஜகிரி நடனக் காணொளி காட்சிகளின் தொகுப்பை யூடியூப்பில் காணலாம். [4]

சத்தியராம் இரியாங்கு[தொகு]

சத்தியராம் இரியாங்கு என்பவர், இந்த நடனத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டார். மேலும், திரிபுராவில் ஒரு நடனப் பள்ளியை நிறுவி, அங்கு இளைஞர்களுக்கு இந்த நடனத்தைக் கற்றுக் கொடுக்கிறார். சத்தியராம் இரியாங், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஹோஜகிரி நடனத்தை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் பெரு முயற்சி எடுத்துக்கொண்டார். அதனால், இரியாங்கிற்கு, இந்திய அரசு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கி கௌரவித்துள்ளது.[5]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோஜகிரி&oldid=2937875" இருந்து மீள்விக்கப்பட்டது