நசிருதீன் உமாயூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹுமாயூன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
உமாயூன்
நசிருதீன் உமாயூன்
Fictional flag of the Mughal Empire.svg இரண்டாம் முகலாயப் பேரரசர்
ஆட்சிக்காலம் 26 டிசம்பர் 1530 – 17 மே 1540
22 பிப்ரவரி 1555 – 27 சனவரி 1556
முடிசூடல் 30 டிசம்பர் 1530, ஆக்ரா
முன்னையவர் பாபர்
பின்னையவர் பேரரசர் அக்பர்
வாழ்க்கைத் துணை அமீதா பானு பேகம்
வாரிசு
பேரரசர் அக்பர், மகன்

மொகம்மத் ஹகீம், மகன்

தந்தை பாபர்
மரபு முகலாயப் பேரரசு
தாய் மகம் பேகம்
பிறப்பு மார்ச்சு 17, 1508(1508-03-17)
காபூல்
இறப்பு 27 சனவரி 1556(1556-01-27) (அகவை Error: Need valid year, month, day) invalid day
தில்லி
அடக்கம் உமாயூனின் சமாதி
சமயம் இசுலாம்

நசிருதீன் உமாயூன் (Nasir-ud-Din Muḥammad, பாரசீக மொழி: نصيرالدين همايون) நசிருதீன் ) (மார்ச் 6, 1508 - பெப்ரவரி 22, 1556) இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா ஆகியவற்றை ஆண்ட இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் இப்பகுதிகளை 1530-1540 வரையும் பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவரது தந்தை பாபர். இவருக்கு அடுத்து இவரது மகன் அக்பர் ஆட்சிக்கு வந்தார்.

பதவியேற்றம்[தொகு]

இவரது தந்தையான பாபர் தன் இறுதிக்காலங்களில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப்பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார்.

இக்கட்டான சூழலும் பொறுப்பிலா உமாயூனும்[தொகு]

இவர் பதவியேற்கும் பொது முகலாயப் பேரரசு பல இடர்களுக்குள் சிக்கியிருந்தது. பஞ்சாப்பும் அதற்கு கிழக்கே உள்ள சில பகுதிகளும் மட்டுமே இவர் ஆட்சியேற்ற போது முகலாயப் பேரரசின் கீழ் இருந்தன. வங்காளத்தில் முகமது லோடியும் செர்கானும் தங்கள் ஆப்கானிய இனத்தின் வல்லமையை அதிகப்படுத்தி இருந்தனர். குஜராத், மாளவம் போன்ற நாடுகளை ஆண்ட பகதூர் சா தில்லியை தாக்க தருணம் பார்த்திருந்தார். இராசபுத்திரபுத்திர மன்னர்களும் முகலாயப் பேரரசை எதிர்க்க தருணம் பார்த்திருந்தினர். மேலும் உமாயூனின் சகோதரரான கம்ரான் காபூலை கவர்ந்ததால் பஞ்சாப் பகுதியையும் உமாயூன் தன் சகோதரருக்கே கொடுத்து விட்டார். துரோகம் செய்த இளைய சகோதரர்களுக்கே ஆட்சியை கொடுத்ததாலும் போதை பழக்கத்துக்கு அடிமையானதாலும் இவரால் இவர் தந்தையான பாபர் போல் ஆட்சியை திறம்பட நடத்தவில்லை.

சிற்றரசர் நிலைக்கு தாழ்தல்[தொகு]

உமாயூன் செர்கானுடன் நட்புறவு செய்து கொண்டு முகமது லோடியை முதலில் தோற்கடித்தார். பகதூர் சாவை வென்று குஜராத்தையும் மாளுவத்தையும் கைப்பற்றினார். ஆனால் பகதூர் சா சில நாட்களுக்குப் பின் இப்பகுதிகளை மீண்டும் பிடித்துக் கொண்டார். செர்கான் அக்காலத்தில் பீகாரையும் வங்காளத்தையும் ஆண்டு வந்தார். அவருடன் முரண்பட்ட உமாயூன் அவரைத் தாக்கி சூனார் என்னும் கோட்டையையும் அதைச் சுற்றிய பகுதிகளையும் பிடித்துக் கொண்டார். சில காலம் கழித்து வங்காளத்தையும் பிடித்துக்கொண்டார். ஆனால் அதை சரிவர நிர்வகிக்காதலால் செர்கான் உமாயூன் மீது படை எடுத்தார். பீகார், காசி, சூணார்க்கு கோட்டை போன்ற முக்கிய நாடுகளையும் கோட்டைகளையும் செர்கான் கைப்பற்றினார். மேலும் சௌன்சாவிலும் கனோச்சியிலும் நடந்த போர்களில் செர்கான் உமாயூனை தோற்கடித்தார். அதனால் உமாயூன் ஆக்ராவுக்கு சென்று அங்கிருந்து இலாகூருக்கு தப்பினார். செர்கான் செர்சா என்ற புனைப் பெயருடன் வட இந்தியாவின் முக்கியப் பகுதிகளை ஆண்டார்.

திருமணமும் மகனும்[தொகு]

உமாயூனுக்கும் மனைவிகள் பலர் இருந்தனர். அதில் அமீதா பேகம் முக்கியமானவர். உமாயூனின் தந்தையின் இன்னொரு மனைவியான தில்தார் பேகம் அளித்த விருந்தொன்றில், அமீதா பேகம் முதன் முதலாக உமாயூனைச் சந்தித்தார். தொடக்கத்தில் உமாயூனைச் சந்திக்க அமீதா பேகம் மறுத்தாலும், தில்தார் பேகத்தின் வற்புறுத்தலினால் உமாயூனை மணந்து கொள்ள அவர் சம்மதித்தார். 1541 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு திங்கட்கிழமை நடுப்பகல் நேரத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் அமீதா பானு பேகம், உமாயூனின் இளைய மனைவி ஆனார். 1542 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் அதிகாலை அமீதா பேகம் அக்பரை பெற்றெடுத்தார்.

மீண்டும் பேரரசராதல்[தொகு]

செர்சா சில ஆண்டுகள் வட இந்தியாவை திறம்பட ஆட்சி செய்தார். காலிஞ்சர் கோட்டை முற்றுகையின் போது நடந்த குண்டு வெடிப்பினால் செர்சா இறந்தார். அவருக்கு பின் வந்தவர்கள் கீழ் பத்து ஆண்டுகளே வட இந்தியப் பகுதிகளை ஆண்டனர். அப்போது நடந்த குழப்பங்களை பயன்படுத்திக் கொண்ட உமாயூன் பாரசீகத்தில் படைபலத்தை பெருக்கிக் கொண்டு மீண்டும் செர்சா அரசின் மீது படையெடுத்து பழைய ஆட்சிப் பகுதிகளை பிடித்தார். செர்சா அரசின் கடைசி மன்னனான சிகந்தரை தோற்கடித்து மீண்டும் பேரரசர் ஆனார்.

இறப்பும் அக்பர் பதவியேற்பும்[தொகு]

இஸ்லாம் ஷாவின் (ஷெர் கான் சூரியின் மகன்) ஆட்சி ஏற்பை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் உமாயூன் டெல்லியை மீண்டும் 1555-ல் வெற்றி கொண்டார். அவர் ஷா தஹ்மாஸ்ப் தந்த பாரசீகப் படையினரில் ஒரு பகுதியை வழி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். சில மாதங்கள் கடந்து ஹுமாயுன் இறந்தார். பைராம் கான், அக்பர் ஆட்சி ஏற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக உமாயூனின் இறப்பைத் தந்திரமாகச் சில நாட்கள் மறைத்தார். அக்பர் தனது தந்தையை தொடர்ந்து பிப்ரவரி 14,1556 கிரகேரியன் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

உமாயூனின் சமாதி[தொகு]

உமாயூனின் சமாதி பல கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு தொகுதியாக உள்ளது. இது இந்தியாவின் தலை நகரமான தில்லியில், நிசாமுத்தீன் கிழக்குப் பகுதியில், 1533 ஆம் ஆண்டில் உமாயூன் கட்டுவித்த புராணா கிலா எனப்படும் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. கிபி 1562 ஆம் ஆண்டில் உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகம் இதனைக் கட்டுவிக்கத் தொடங்கினார். இதனை வடிவமைத்தவர் மிராக் மிர்சா கியாத் என்னும் பாரசீகக் கட்டிடக் கலைஞர். இவ்வளவு பெரிய கட்டிடத்தில் சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் தடவை ஆகும். இக் கட்டிடத் தொகுதி, முக்கியமான கட்டிடமாகிய பேரரசர் உமாயூனின் சமாதிக் கட்டிடத்தை உள்ளடக்கியுள்ளது. இங்கேயே அவரது மனைவியான அமீதா பேகம், பின்னாட் பேரரசரான சா சகானின் மகன் தாரா சிக்கோ ஆகியோரதும்; பேரரசர் சகாந்தர் சா, பரூக்சியார், ராஃபி உல்-தார்சத், ராஃபி உத்-தௌலத், இரண்டாம் ஆலம்கீர் போன்ற பல முகலாயர்களதும் சமாதிகளும் இங்கே உள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள இது முகலாயக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

மூலம்[தொகு]

  • இராசகணபதி (2008). கஜினி முதல் சிவாஜி வரை. தியாகராஜ நகர், சென்னை.: பாண்டியன் பாசறை. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசிருதீன்_உமாயூன்&oldid=2711736" இருந்து மீள்விக்கப்பட்டது