ஹிங்கிலிசு
ஹிங்கிலிசு என்பது இந்தியும் ஆங்கிலமும் கலந்து பயன்படுத்தப்படும் ஒரு கலப்பு மொழியாகும். ஆங்கிலச் சொற்றொடரில் இந்திச் சொற்கள் பெருமளவு கலந்துநிற்பது, ஆங்கிலச் சொற்கள் மிகுந்த இந்தி வாக்கியங்களைப் புழங்குவது அல்லது தேவநாகரியில் அன்றி ரோமன் எழுத்துருக்கள் கொண்டு இந்தியை எழுதுவது போன்றவை இக்கலப்பு மொழியின் இயல்புகள்.
தாராளமயமாக்கலுக்குப் பின் விளம்பரத் துறையினரால் கைக்கொள்ளப்பட்ட ஹிங்கிலிசு மொழியின் பயன்பாடு இன்று பன்மடங்கு வேகமெடுத்துள்ளது. இந்தியாவின் நாடளாவிய ஆங்கிலக் காட்சி ஊடகங்கள் இந்திக் கலப்பை முன்னெடுக்கின்றன. மேடைச் சிரிப்புரைக் கலைஞர்கள் இத்தகைய மொழியையே கைக்கொள்கின்றனர். ஆங்கில நாளிதழ்களையும்கூட ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழிகளும் தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும் என்ற நிலை ஏற்பட்டுவருவதாகக் கருதப்படுகிறது. இந்திய உயர்மட்ட வகுப்பினரின் மொழியாக ஆங்கிலத்தைப் பின்னுக்குத் தள்ளி ஹிங்கிலிசை வணிகச் செயல்பாடுகள் இன்று முன்னிறுத்திவருகின்றன. இது இந்தியாவின் பிற மொழிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகவும், அதன் சமூக, பண்பாட்டு, அரசியலின் திசைவழியை மாற்றியமைக்க வல்லமை கொண்டதாகவும் பார்க்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Daniyal, Shoaib. "The rise of Hinglish: How the media created a new lingua franca for India's elites". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 4 October 2022.