ஹாஜி முகமது மெளலானா சாகிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹாஜி முகமது மெளலானா சாகிப்
பிறப்பு1886
இறப்பு1957

ஹாஜி முகமது மெளலானா சாகிப் என்ற மதுரை மௌலானா சாகிப் (1886 - 1957) இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இசுலாமியர். சிறந்த பேச்சாளர்.

பிறப்பும் இளமையும்[தொகு]

மதுரை முனிச்சாலையில் வாழ்ந்த ஹாஜி முகம்மது அசனுதீன் - மாஜான் பீவி இணையருக்கு 1886 ஆம் ஆண்டு மகனாக ஹாஜிமுகம்மது பிறந்தார். தனது தொடக்கக் கல்வியை ஆங்கிலவழிக்கல்வி மூலம் பெற்ற ஹாஜிமுகம்மது பின்னர், பார்ஸி மொழியும், உருது மொழியும் கற்றார். சௌராட்டிர மொழியில் பேசும் திறமையும் பெற்றார். ஹாஜியின் தந்தை இறைப்பற்றுடன் நாட்டுப்பற்றும் மிக்க காரணத்தால் சுதேசமித்திரன் நாளிதழை வாங்கி வந்தார். அதனை ஹாஜிமுகம்மது படித்து அன்றாடம் தேச நிகழ்ச்சிகளை ஊன்றிக்கவனித்து வந்தார். ஆங்கிலேயக் கப்பல் கம்பனிக்கு எதிராக வ. உ. சி, கப்பல் கம்பனி தொடங்கியதும் அதனால் கைது செய்யப்பட்டதும், நெல்லையில் இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பும் மௌலானாவின் தேசப்பற்று ஆர்வத்தை அதிகமாக்கின.

1908- மார்ச் 13-ஆம் நாள் விபின் சந்திரபாலரின் பிறந்தநாள் விழா நெல்லையில் கொண்டாடப்பட்ட போது பிரித்தானியரின் அடக்குமுறையும், அதனைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் முகம்மது யாசீன் என்ற இளைஞர் இறந்ததும் மௌலானாவைப் பெரிதும் கவலைக்குள் ஆழ்த்தியது. அடக்குமுறையில் ஆத்திரம் கொண்டார். .அன்னிபெசண்ட் துவக்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்டவர். 1921-இல் நிலக்கோட்டையில் நடந்த கள்ளுக்கடை மறியல், 1932- இல் மதுரையில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டம் ஆகியவற்றில் கலந்துகொண்டு சிறை சென்றவர். இவர் மதுரை நகராட்சியின் முனிசிபல் சேர்மனாகவும், துணை சேர்மனாகவும் பதவி வகித்தவர். மத ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். இவரின் மனைவி சுல்தான் பீவி ஆவார்.