ஹரிஹர தேசிக பரமாச்சாரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிகர தேசிக பரமாச்சாரியர் (பிறப்பு: 25 மார்ச் 1954) மதுரை ஆதினத்தின் 293-வதும், தற்போதைய மடாதிபதியும் ஆவார். 292-வது மடாதிபதியாக இருந்த அருணகிரிநாதர் 2021 ஆகத்து 13 முக்தி அடைந்ததை அடுத்து, 2019 சூன் 19 முதல் ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக இருந்த இவர் 2021 ஆகத்து 23 அன்று மதுரை ஆதினத்தின் புதிய மடாதிபதியாக, ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் என்ற பெயரில் முடிசூடப்பட்டார்.[1][2][3][4]

வரலாறு[தொகு]

ஹரிஹர தேசிக பரமாச்சாரியாரின் இயற்பெயர் பெயர் பகவதி இலெட்சுமணன். இவர் 1954 மார்ச் 25 அன்று திருநெல்வேலியில் காந்திமதிநாதன் பிள்ளை, ஜானகி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவர் தனது 21-வது அகவையில் குன்றக்குடி ஆதீனத்தில் ஆறுமுகத் தம்பிரானாகவும், 1976 முதல் 1980 வரை தருமபுரம் ஆதீனத்தில் நெல்லையப்பத் தம்பிரானாகவும், 1980 முதல் 2019 வரை திருவாவடுதுறை ஆதீனத்தில் சுந்தரமூர்த்தி தம்பிரானாகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். அதன் பின்னர் மதுரை ஆதீனத்தின் மடாதிபதி அருணகிரிநாதரல் 2019 சூன் 6 அன்று மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டார்.[5]

சீர்திருத்தப் பணிகள்[தொகு]

  • 20 ஆண்டுகளாக முந்தைய ஆதீனம் நிறுத்தி வைத்திருந்த, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அன்றாடம் அதிகாலை நடைபெறும் முதல் பூஜையும், இரவு நடைபெறும் கடைசி பூஜையும் ஆதீன மடத்தின் சார்பில் நடத்தப் பணித்துள்ளார்.
  • ஆதீன மடத்தில் அன்றாடப் பூஜையின் போது மடத்திற்கு வரும் அடியவர்கள், வெளியூர் யாத்திரிகர்களுக்கு அன்னதானம் வழங்கும் பணியை மீண்டும் தொடரப் பணித்துள்ளார்.
  • வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மடத்தில் தேவார, திருவாசகம் நடத்தும் நிகழ்வுகளையும் தொடர உத்தரவிட்டுள்ளார்.
  • மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான 5 கோவில்களில் குடமுழுக்கு பணிகளை நிறைவேற்றுவதற்கும், தினசரி பூஜைகளை தவறாமல் தொடர்வதற்கும் உத்தரவிட்டுள்ளார்.
  • மதுரை ஆதீன மடத்திற்கு மதுரை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடைகள், வீடுகள் உள்ளன. மேலும், தூத்துக்குடி, பழனி, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள இந்த சொத்துக்கள் நெடுங்கால குத்தகை மற்றும் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதில், பெரும்பாலும் வாடகை தொகை கட்டப்படாமலும், குத்தகை இடங்களில் தனி நபர் ஆக்கிரமிப்பும் அதிகரித்து உள்ளன. மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை முறையாக நிர்வகிப்பதில் முந்தைய ஆதீனம் தவறிய நிலையில், புதிய ஆதீனம் அவைகளை கணக்குப் பார்த்து மீட்டு பத்திரபடுத்தும் நடவடிக்கைகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக முடிசூட்டப்பட்டார் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்
  2. "மதுரை புதிய ஆதீனம் இன்று பதவியேற்றார்". Archived from the original on 2022-01-09. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  3. Sri-la-Sri Harihara Sri Gnanasambanda Desika Swamigal becomes 293rd pontiff of Madurai Adheenam
  4. 293rd pontiff takes over at the Madurai Adheenam
  5. மதுரை ஆதீனம் மடத்தின் புதிய மடாதிபதியாக பொறுப்பேற்ற ஹரிஹர தேசிக பரமாச்சாரியர்