ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்ரீ சுப்பிரமணியக்கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ் என்ற இந்நூல்பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் சிதம்பர முனிவர் ஆவார். காலம் 19 ஆம் நூற்றாண்டு.

நூலாசிரியர்[தொகு]

இப்பிள்ளைதமிழ் நூலின் ஆசிரியர் திருமுருகன் மேல் பேரன்பு கொண்டு ஒழுகிய சிதம்பர முனிவராவார். இவர் காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர். திராவிட மாபாடியகாரராகிய ஸ்ரீ மாதவச் சிவஞான யோகிகளின் மாணாக்கர் பன்னிருவருள் இவரும் ஒருவர். முருகன் மட்டுமன்றி அவர் தம் அடியவர்கள் மீதும் பேரன்பு கொண்டவர். வடமொழி, தமிழ் ஆகிய இரு மொழிப் புலமை வாய்ந்தவர். இவர் திருவாடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்தவர். தருமபுரம், திருப்பனந்தாள் முதலிய ஆதீனப் பெருமக்களிடம் அன்பு கொண்டவர். தல வரலாறுகளை நன்கறிந்து சிறப்பாகப் பாடும் வல்லமை உடையவர். இவர் இப்பிள்ளைத் தமிழே அன்றி காஞ்சி காமாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற நூலையும் பாடியுள்ளார்.

நூலமைபு[தொகு]

விநாயகர் வணக்கம் முதல் பருவத்திற்குப் 10 பாடல்கள் வீதம் 100 பாடல்கள் பாடப்பட்டுள்ளன காப்புப் பருவத்தில் முதற்கண் திருமால், சிவன், ஆகிய முழு முதற்கடவுளர்களைப் போற்றிய பின் நக்கீரர் திருமுருகாற்றுப்படை என்ற நூலில் பாடிய முறைப்படி முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோராடல், பழமுதிர்ச் சோலை என்பவற்றையும் போற்றுகிறார்.

நூல் கூறும் செய்திகள்[தொகு]

இந்நூல் முருகப்பெருமான் கோயில் கொண்டுள்ள திருத்தலங்களைக் கோவைப்படுத்திச் சிறப்பிக்கின்றது. ஒரு நூறு திருத்தலங்கள் இங்கு பாடப்பட்டுள்ளன. அத்திருத்தலங்களின் தன்மையையும் முருகனின் திரு நாமங்களையும் கற்றோரும் மற்றொரும் போற்ற வேண்டும் என்பது இந்நூலின் நோக்கமாகும்.

உசாத்துணை[தொகு]

கு. முத்துராசன் அவர்கள் எழுதிய பிள்ளைத்தமிழ் இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம். -1984